மலையாள மனோரமா விழா – 1 கருத்துரிமைக்கு ஓர் கரும்புள்ளி

You are currently viewing மலையாள மனோரமா விழா – 1  கருத்துரிமைக்கு ஓர் கரும்புள்ளி

 

 

 

2024, நவம்பர் 1,2,3 ஆகிய நாட்களில் கேரளம், கோழிக்கோடு நகரில்  ‘மலையாள மனோரமா’ நடத்திய கலை இலக்கியத் திருவிழாவில் பங்கேற்றேன். நூற்றாண்டுக்கும் மேற்பட்ட வரலாறு கொண்ட அச்சு ஊடகம் மனோரமா. 1888ஆம் ஆண்டிலிருந்து அதன் வரலாறு தொடங்குகிறது. இது 136ஆவது ஆண்டு. இலக்கியத்திற்கும் மனோரமாவுக்கும் உள்ள தொடர்பும் நெடியது. மலையாளத்தின் முதல் இலக்கிய இதழாகக் கருதப்படும் ‘பாஷாபோஷினி’ மனோரமா குழுமத்திலிருந்து 1892இல் வெளியானது. இப்போது ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளிலும் இதழ்களை நடத்துகிறது. The Week ஆங்கில வார இதழ் மனோரமா குழுமத்திலிருந்து வருவதுதான்.

மலையாள மனோரமா நாளிதழ் மூலம் கேரளக் கலாச்சாரத்தில் தவிர்க்க இயலாத ஊடகமாக நிலைபெற்றிருக்கும் அக்குழுமம் இவ்வாண்டு ‘மனோரமா ஹோர்டஸ் (Manorama Hortus)’ என்னும் தலைப்பில் இந்தத் திருவிழாவை நடத்தியது. பதினேழாம் நூற்றாண்டில் கேரளப் பகுதியின் செடிகொடிகள் பற்றிப் பன்னிரண்டு தொகுதிகளாக வெளியான தொகுப்பு நூல் ‘Hortus Malabaricus.’ அதை நினைவுபடுத்தும் வகையில் ‘Hortus’ இவ்விழாவின் பெயரோடு இணைந்திருக்கிறது.

கோழிக்கோடு நகரக் கடற்கரை கலை இலக்கிய விழாக்களுக்கு என்றே அர்ப்பணிக்கப்பட்டது. அதற்கேற்ற வகையில் அரசாங்கம் சில நிரந்தரக் கட்டமைப்புகளை உருவாக்கி வைத்திருக்கிறது. அத்துடன் அவரவர் தேவைக்கேற்பத் தற்காலிகக் கட்டமைப்புகளையும் மேற்கொள்ளலாம். அகலம் குறைவான கடற்கரை எனினும் பண்பாட்டு நிகழ்வுகளால் பெரும்பெயரைப் பெற்றுத் திகழ்கிறது. அங்கே தான் இவ்விழாவும் நடைபெற்றது. ஆறு அரங்குகளில் நிகழ்வுகள். கடலோரப் பேச்சு, உணவகம் என மொத்தம் பதினான்கு மையங்கள். கேரளத்தில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும்  உலக நாடுகளில் இருந்தும் எழுத்தாளர்கள் பலர் பங்கேற்றனர். அமர்வுக் கருத்துரையாளர்களாகப் பங்கேற்ற எழுத்தாளர்கள் மட்டும் ஏறத்தாழ 400 பேர்.

கேரளத்தில் எவ்வளவு பெரிய நிறுவனம் நிகழ்வு நடத்தினாலும் அதன் தலைமைப் பொறுப்பில் எழுத்தாளர்களுக்கு இடம் உண்டு. இவ்விழாவின் இயக்குநர் மூத்த எழுத்தாளர் என்.எஸ்.மாதவன். இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாகப் பணியாற்றிய அவர் சிறுகதை, நாவல்கள் எழுதிப் புகழ் பெற்றவர். சில நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.  ‘பெருமரங்கள் விழும்போது’ என்னும் சிறுகதைத் தொகுப்பு நிர்மால்யா மொழிபெயர்ப்பில் காலச்சுவடு வெளியீடாக வந்துள்ளது. சர்மிஷ்டா, பிறகு ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் கே.வி.ஷைலஜாவின் மொழிபெயர்ப்பில் வம்சி வெளியீடாக வந்துள்ளன. இரா.முருகன் மொழிபெயர்த்த இவரது நாவல் ‘பீரங்கிப் பாடல்கள்.’ எழுத்துப் பிரசுரம்.

இத்தகைய பின்னணி கொண்ட விழாவின் ஒரு அமர்வில் பங்கேற்க எனக்கு அழைப்பு வந்தது. நவம்பர் 2 அன்றைய நிகழ்வில் பங்கேற்க ஒப்புதல் கொடுத்திருந்தேன். அன்று மாலை எழுத்தாளர்கள் கூடும் ஒரு நிகழ்விலும் கலந்துகொண்டால் நல்லது என்று கேட்டதால் அடுத்த நாளும் சேர்த்து இருநாள் அங்கிருக்க வேண்டியானது. விழாவுக்குச் செல்வதற்கு இரண்டு நாள் முன்னர் வந்த செய்தி என்னைச் சங்கடத்தில் ஆழ்த்தியது. வரலாற்றுப் பின்புலம் கொண்ட மிகப் பெரிய நிறுவனம் நடத்தும் விழாவுக்கு ஒரு கரும்புள்ளி போன்றது அது.

இவ்விழாவின் இரண்டாம் நாள் பிற்பகல் அமர்வு ஒன்றில் பங்கேற்குமாறு  காஞ்சா அய்லய்யாவை அழைத்திருந்தனர். பிற்பகல் 1.30 முதல் 2.15வரை முக்கால் மணி நேரம். அவருடைய தனிப்பேச்சு. தலைப்பு: Challenging Dominant Narratives: Kancha Ilaiah’s writings and activism. நிகழ்ச்சி நிரலில் இவ்வமர்வு இடம்பெற்றிருந்தது. விருந்தினர்கள் விவரம் அடங்கிய விழா புத்தகத்திலும் அவர் இடம்பெற்றிருந்தார்.  ஆனால் அக்டோபர் 29ஆம் நாள் திடுமென  அழைப்பைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாக அவருக்குத் தகவல் தெரிவித்தனர்.

மலையாள மனோரமா விழா - 1 கருத்துரிமைக்கு ஓர் கரும்புள்ளி

காஞ்சா அய்லய்யா தமிழ் அறிவுலகிற்கு நன்கு அறிமுகம் ஆனவர். உஸ்மானியப் பல்கலைக்கழகப் பேராசிரியர். ஆங்கிலத்திலும் தெலுங்கிலும் எழுதுபவர். ‘நான் ஏன் இந்து அல்ல’ என்னும் நூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு (அடையாளம் வெளியீடு) பெரிதும் கவனம் பெற்றது. எருமைத் தேசியம், இந்து ஆன்மீகமே பாசிசம்தான், அரசியல் சிந்தனையாளர் புத்தர், பானை செய்வோம் பயிர் செய்வோம், சூத்திரர் – ஒரு புதிய பார்வை முதலிய நூல்களும் தமிழில் வந்திருக்கின்றன. சாதியம் தொடர்பாகத் தொடர்ந்து எழுதி வருபவர்.

சமீபத்தில் இஸ்ரேல் – பாலஸ்தீனப் பிரச்சினை பற்றித் தெலுங்கில் அவர் எழுதிய கட்டுரை ஒன்று விவாதத்திற்கு உள்ளாகியிருக்கிறது. இஸ்ரேலை ஆதரிக்கும் தொனி அக்கட்டுரையில் இருப்பதாகக் கூறுகின்றனர். என்ன எழுதியிருக்கிறார் என்று தெளிவாகத் தெரியவில்லை. கோழிக்கோட்டுக்கு அவர் வந்தால் எதிர்த்துப் போராட்டம் நடத்துவோம் என்று கேரள இஸ்லாமிய அமைப்புகள் எச்சரித்துள்ளனர். அதன் காரணமாக மனோரமா விழாவிற்கான அழைப்பு திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டது. கோழிக்கோடு பகுதியில் பெருவாரியான இஸ்லாமியர்கள் வசிப்பதால் போராட்டம் பெரிதாக இருக்கலாம் என்னும் அச்சத்தின் அடிப்படையில் இது நடந்திருக்கிறது. இது பற்றிக் கருத்துத் தெரிவித்திருக்கும் அய்லய்யா, ‘ஏற்கனவே இங்கு நிலவும் சகிப்பின்மையால் மன அழுத்தத்தில் இருக்கும் சிறுபான்மைச் சமூகம் இப்படிச் சகிப்புத்தன்மையற்ற முறையில் நடந்து கொண்டால் அது அவர்களுக்கு மட்டும் தீங்கானது அல்ல. ஜனநாயகத்தில் இதுபோன்ற சகிப்பின்மையைக் கண்டிக்கிறேன். விழாவுக்கு வரவேண்டாம் என்று என்னிடம் சொல்வதற்குப் பதிலாக, ஏற்பாட்டாளர்கள் பாதுகாப்பு கேட்டு என்னைப் பேச அனுமதித்திருக்க வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார்.

மலையாள மனோரமா விழா - 1 கருத்துரிமைக்கு ஓர் கரும்புள்ளி

அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டம் நடத்துவது தவறில்லை. போராட்டக்காரர்களின் கருத்தும் அவர்கள் தம் எதிர்ப்பைப் பதிவு செய்வதும் அவசியம். அதற்கு அரசு அனுமதி வழங்கியிருக்கலாம். அதேசமயம் அய்லய்யாவின் கருத்துரிமைக்கும் உரிய மதிப்பளித்திருக்க வேண்டும். அவர் கருத்து எதுவாகவும் இருக்கட்டும். ஒருகருத்து எல்லோருக்கும் ஏற்புடையதாக ஒருபோதும் இருக்க முடியாது. ஒன்றுபடுவோரும் வேறுபடுவோரும் இருக்கத்தான் செய்வர். ஆகவே சரியான பாதுகாப்போடு அவரை நிகழ்வில் கலந்துகொள்ளச் செய்திருக்கலாம். அரசும் மனோரமா குழுவினரும் அதற்கு முக்கியத்துவம் அளித்திருக்க வேண்டும். மிகப் பெரிய ஊடகம் எழுத்தாளர் பக்கம் நின்றிருக்க வேண்டும்.

இந்தியாவில் கருத்துரிமைக்குப் பெரிதும் மதிப்பளிக்கும் மாநிலம் எனக் கேரளத்தைக் கருதிக் கொண்டிருக்கிறோம். அங்கேயே இப்படி  வருந்தத்தக்க விஷயம் நடந்திருக்கிறது. இந்துத்துவம் பற்றி அய்லய்யா கடுமையாக எழுதியிருக்கிறார். சாதியமைப்பு பற்றித் தொடர்ந்து விரிவான ஆய்வுகளைச் செய்து வருகிறார். இந்துத்துவம் சார்ந்த அமைப்புகள் அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தாலும் இவ்வாறு அழைப்பு திரும்பப் பெறப்பட்டிருக்குமா என்று தெரியவில்லை.

காஞ்சா அய்லய்யாவை வர வேண்டாம் என்று சொன்ன விஷயம் பற்றிக் கேரள ஊடகங்கள் கவனம் செலுத்தவில்லை. விழாவில் பங்கேற்ற எழுத்தாளர்களும் அறிவுலகத்தினரும் கண்டனம் தெரிவிக்கவும் இல்லை. மூன்று நாள் விழாவில் இது பற்றிய எந்தக் குரலும் எழவில்லை என்பது எனக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. இந்துத்துவ அமைப்புகளாக இருப்பினும் இசுலாமிய அமைப்புகளாக இருப்பினும் வேறு எந்த அமைப்பாக இருப்பினும் கருத்துரிமையின் பக்கம் அரசும் ஊடகங்களும் நிற்க வேண்டும்.

‘மாதொருபாகன்’ வழக்கில் கருத்துரிமைப் பிரச்சினையைச் சட்டம் ஒழுங்கு சார்ந்ததாக மட்டும் அரசு காணக் கூடாது என்று நீதிமன்றம் கூறியது. ‘…நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அரசு முயற்சி செய்யலாம்; ஆனால் அதற்காக நூலாசிரியர்கள், கலைஞர்கள், இதில் எந்தப் பிரிவைச் சேர்ந்தவராக இருப்பினும் சுற்றியிருக்கும் சூழ்நிலையின் காரணமாக அவர்களின் கருத்துரிமையின் மீது நெருக்கடி தருவதை அது அனுமதிக்கக் கூடாது. மாறாக, கருத்துரிமையை வேறு வழிகளில் காப்பதற்கான முயற்சி செய்யப்பட்டிருக்க வேண்டும்’ (ப.150) என்பது தீர்ப்பு வாசகம்.

நிகழ்வில் அவர் பங்கேற்பார் என்பதை உறுதிப்படுத்திப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டும் என்று மனோரமா குழுமம் அரசை நிர்ப்பந்தம் செய்திருக்க வேண்டும். சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி அவரை அழைக்க வேண்டாம் என்று ஒருவேளை அரசு அறிவுறுத்தியிருந்தாலும்கூட மனோரமா குழுமம் அதற்கு இணங்கியிருக்கக் கூடாது. கருத்துரிமையின் பக்கமே அது நின்றிருக்க வேண்டும். அய்லய்யாவின் அமர்வையே கூட அவர் எழுதிய கட்டுரை சார்ந்து அமைத்திருக்கலாம். அவ்வமர்வில் பாலஸ்தீனப் பிரச்சினை பற்றிக் கேள்வி கேட்கவும் அனுமதித்திருக்கலாம்.

நீண்ட பாரம்பரியம் கொண்ட மனோரமா குழுமம் மத அடிப்படைவாதத்தின் மிரட்டலுக்கு பணிந்ததும் அரசும் அமைதி காத்ததும் சரியல்ல. பின்புலம் உள்ள மாபெரும் ஊடகம் ஒன்றே இப்படியிருந்தால் எந்தப் பின்புலமும் அற்ற எழுத்தாளர் எதிர்ப்புகளை எவ்வாறு எதிர்கொள்ள முடியும்? இன்றைய காலத்தில் எதற்குப் பிரச்சினை என்று ஒதுங்கிப் போதலும் பின்வாங்குதலும் எல்லாத் தரப்பிலும் பரவி விட்டன. அடிப்படைவாதத்தின் இருப்பை எந்தக் கேள்வியும் இல்லாமல் ஏற்றுக்கொள்ளும் போக்கு இது. கேரள மாநிலத்திலும் இப்படி நடந்திருப்பது வருத்தத்திற்கும் கண்டனத்திற்கும் உரியது.

—–   07-11-24.

Add your first comment to this post