நவீன  இலக்கிய வரலாற்றுக் குறிப்புகள் – 4

You are currently viewing நவீன  இலக்கிய வரலாற்றுக் குறிப்புகள் – 4

பழைய மொந்தை புதிய கள்

ஆதியூர் அவதானி சரிதம் உருவான பத்தொன்பதாம் நூற்றாண்டில் செல்வாக்குப் பெற்றிருந்த மரபிலக்கிய வகைகளுள்  ‘அம்மானைப் பாட்டு’ முக்கியமானது.  அம்மானை என்பது பெண்களின் விளையாட்டு. விளையாடும்போது பாடும் பாடல்கள் இலக்கியத்தில் இடம்பெறத் தொடங்கிய காலம் மிகத் தொன்மையானது. சிலப்பதிகாரத்திலேயே அம்மானைப் பாடல் பதிவாகியிருக்கிறது. பின்னர் பிள்ளைத்தமிழ் என்னும் சிற்றிலக்கியத்தில் பெண்பாற் பிள்ளைத்தமிழில்  ‘அம்மானைப் பருவம்’ என்று ஒரு பகுதி இடம்பெற்றது.  பதினேழாம் நூற்றாண்டில்  தனி இலக்கிய வகையாக ‘அம்மானைப் பாட்டு’ உருவாயிற்று.

புராண இதிகாசக் கதைகளையும் வரலாற்றுக் கதைகளையும் வாய்மொழிப் பாடல் வடிவில் எடுத்துச் சொல்வதே இவ்விலக்கியம்.  ஓசையுடன் வாசிக்கவும் வாய்விட்டுப் பாடவும் ஏற்றதாக இதன் அமைப்பு இருந்தது. கள்ளழகர் அம்மானை, இராமப்பய்யன் அம்மானை என இறுதியில் அம்மானை என்று முடிபவையும் அல்லி அரசாணி மாலை, புலந்திரன் களவு மாலை  என  ‘மாலை’ என்பதைக் கொண்டு முடிபவையும் நல்லதங்காள் கதை, சித்திர புத்திர நயினார் கதை என ‘கதை’ என்னும் சொல்லால் முடிபவையும் ஆகிய இத்தகைய நூல்கள் அனைத்தும் ‘அம்மானைப் பாட்டு’ என்னும் இலக்கிய வகையிலேயே சேரும்.

புகழேந்திப் புலவர் பெயரால் பல்வேறு அம்மானை நூல்கள் வழங்கியுள்ளன. ‘தரவுக் கொச்சகக் கலிப்பா’ என்னும் பாவகையோடு அம்மானைப் பாட்டு வடிவம் ஓசையளவில் பொருந்துவதாகவும் கூறுவர். பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் ஏராளமான அம்மானை நூல்கள் உருவாயின என்பதற்கும் அவை மக்களிடையே பெரும் செல்வாக்குப் பெற்றிந்தன என்பதற்கும் நிறையச் சான்றுகள் உண்டு. வீரமாமுனிவர்  ‘கித்தேரியம்மாள் அம்மானை’ என்று ஒருநூல் எழுதியிருப்பதும் முக்கியமான செய்தி. இவ்விலக்கிய வகை மக்கள் மத்தியில் பிரபலமாக விளங்கிய காரணத்தாலேயே வீரமாமுனிவர் போன்றவர்களும் இதில் ஆர்வம் காட்டியுள்ளனர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் அம்மானை நூல்கள் பல அச்சாகியிருக்கின்றன. தொடர்ந்து அவை விற்பனையில் இருந்துள்ளன. தனி வாசிப்புக்கு மட்டுமல்லாமல் கூட்டு வாசிப்புக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன.  ஒருவகையில் பத்தொன்பதாம் நூற்றாண்டு வெகுஜன இலக்கியம் இது என்றுகூடச் சொல்லலாம்.

சமூகத்தில் புதிய மாற்றங்கள் தோன்றும்போது பழையவை முற்றிலுமாக அழிந்துவிடுவதில்லை. பதற்றத்தோடும் தன் விழுமியங்கள் சார்ந்தும் புதியதைக் கடுமையாக மரபு எதிர்க்கிறது. அதனால் பயனில்லை என்பதை உணர்ந்ததும் புதியதைத் தன்னியல்பில் உள்வாங்கிக் கொள்ள மரபு முயல்கிறது. ஆனால் மரபின் ஆற்றல் அதற்குப் போதுமானதாக இல்லை என்னும் நிலையில் மெல்லப் பின்வாங்குகிறது. படிப்படியாக மரபுக் குரல் தேய்ந்து எங்கோ ஒரு மூலைக்குள் ஒடுங்கிவிடுகிறது. புதியது  காலத்திற்கு ஏற்றது என்பதால் வீச்சோடு மேலோங்குகிறது. நவீன வருகைகளை மரபு உள்வாங்கிக் கொள்ள முயன்றமைக்கு இலக்கியச் சான்றுகள் பல உள்ளன. பணவிடு தூது, புகையிலை விடு தூது என்னும் நூல்களை எல்லாம் இத்தகைய கண்கொண்டு பார்க்க வேண்டும். புதியவை பற்றிய எள்ளல்களையும் இந்நூல்களில் காணலாம்.

புதியவற்றை உள்வாங்கிக்கொள்ள முயன்ற காலத்தின் இலக்கிய வெளிப்பாடாக ‘ஆதியூர் அவதானி சரிதம்’ நூலை மதிப்பிட முடியும். அக்காலத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த அம்மானைப் பாட்டு வடிவத்திலானது இந்நூல்.  நூலின் ஆங்கில் முன்னுரையில்  ‘ஐரோப்பிய நாவலாசிரியர்களைப் போல உரைநடையில் இந்நூலை எழுதவில்லை. ஆனால் பொதுவாக மக்களை ஈர்த்துப் பிரபலமாக விளங்கிவரும் பாடல் வடிவத்தில் எழுதப்பட்டுள்ளது’ என்கிறார் சேஷையங்கார்.  தமிழ் முன்னுரையில் ‘பழம்பண்டிதர் மனதில் புதுக்கருத்துக் கொள்ளாது. புதுக்கலையில் தேர்ந்தோர்க்குப் பழம்பாஷை விள்ளாது. ஆதலால் யாவர்க்கும் பொருளும் புணர்ப்பும் எளிதில் விளங்கும்படி இந்நூலைச் செய்தனன்’ என்று கூறுகிறார்.

பிணமறுத்துக் கற்றுக்கொள்ள வேண்டிய தொழிலாகிய மருத்துவத்தைப் பார்ப்பனர்கள் கற்றுக்கொள்வது, அக்காலப் பால்ய விவாகத்தில் இருந்த பிரச்சினைகள், உறவுச் சிக்கல்கள், கைம்பெண் மறுமணம், கலப்பு மணம் எனப் பல்வேறு புதிய நோக்கிலான நடைமுறைகளை முன்வைத்து ஆதியூர் அவதானி சரிதத்தை  எழுதியுள்ள ஆசிரியருக்கு இதை என்ன வடிவத்தில் எழுதுவது என்னும் குழப்பம் இருந்துள்ளது. ‘நாவல்’, ‘நவீனமாக இயற்றிய கட்டுரைக் கதை’ என்றெல்லாம் தன் நூலைப் பற்றிச் சொல்லும் அவர் ‘அம்மானை’ வடிவத்தையே தான் கையில் எடுத்திருப்பத்தாக ஒத்துக்கொள்கிறார். எல்லாரும் படிக்க வேண்டும் என்பதால் மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்த வடிவம் ஒன்றை அவர் கையில் எடுக்கிறார்.  ‘வழக்கத் தமிழாலே மாந்தர் படித்தறிய பழக்கத்தால் அம்மானைப் பாட்டாகத் தாம்பகர’ முடிவு செய்துள்ளார்.

நவீன  இலக்கிய வரலாற்றுக் குறிப்புகள் - 4

புதியவற்றை மரபு உள்வாங்கிக் கொள்ள முயன்ற காலத்தின் உச்சகட்ட வெளிப்பாடு இந்நூல் எனலாம். வடிவம் பழையது. பொருள் புதிது. பழைய வடிவம் எனினும் மக்கள் வழக்கு, நடைமுறைகளைப் பேசுவதற்கு ஓரளவு தோதான வாய்மொழிப் பாட்டு வடிவம்.  ஆனால் நவீன மாற்றங்களை உள்வாங்கி முழுமையாக வெளிப்படுத்தும் ஆற்றல் இந்தப் பாட்டு வடிவத்திற்கு இல்லை. அந்த ஆற்றலைப் பெற இலக்கியம் உரைநடையைக் கைக்கொள்ளும் நிர்ப்பந்தம் உருவாகியிருந்த காலம்.

அம்மானைப் பாட்டு என்னும் பழைய மொந்தையில் நவீன வாழ்க்கை என்னும் புதிய கள்ளைப் பெய்திருக்கிறார் சேஷையங்கார். வடிவம் அம்மானைப் பாட்டு. விஷயம் நாவலுக்குரியது.  என்றால் இதை எவ்விடத்தில் வைப்பது? வடிவத்தைக் கொண்டே இலக்கியத்தை வகைப்படுத்துவது வழக்கம். ஆகவே நவீன வாழ்வைக் கையாண்ட அம்மானை இலக்கியம் என்றே இதைக் கொள்ளலாம்.

—–   24-03-25

Latest comments (2)

பாரத் தமிழ்

சிறப்பு ஐயா. வாசித்தேன். வழக்கம் போல புதிய தகவல்கள் நிறைய கிடைத்தன.