அப்பேர்ப்பட்ட ஆசிரியர் – 1

You are currently viewing அப்பேர்ப்பட்ட ஆசிரியர் – 1

என் உயர்நிலைப் பள்ளிப் படிப்புக் காலத்தில் பல ஆசிரியர்கள் நன்றாகப் பாடம் நடத்தியிருக்கிறார்கள். ஆனால் மாணவர்களை நன்றாக நடத்தினார்கள் என்று சொல்ல முடியாது. சிலரை நினைத்தால் கடுகடு முகங்களே முன்னால் வருகின்றன. சிலர் எதிரில் வந்தால் ஓடி ஒளிந்து கொள்வோம். பள்ளிக்கு வெளியில் எங்காவது காண நேர்ந்தால் யாரென்று தெரியாதது போல ஒதுங்கி ஓடுவோம். பட்டப்பெயர் இல்லாத ஆசிரியர் அரிது. ஒருவருக்குச் ‘சிங்கம்’ என்று பெயர்; ஒருவருக்குப் ‘பூதம்’ என்று பெயர். பெருமீசை வைத்திருந்த ஒருவருக்குக் ‘கிடா மீசை’ என்று பெயர். அவர்கள் மீதான அச்சத்தின் வெளிப்பாடு இந்தப் பெயர்கள்.

ஆசிரியர்கள்  ஏன் அப்படி இருந்தார்கள்? ஆசிரியர் என்றால் அப்படித்தான் இருக்க வேண்டும் என்பது நம் மரபின் தொடர்ச்சியாக இருக்கலாம். அக்காலத் தொடக்கக் கல்வி ஆசிரியர்களைப் பற்றி உ.வே.சாமிநாதையர் தம் என் சரித்திரம் நூலில் எழுதியிருப்பது நினைவுக்கு வருகிறது. அதில் ஒரு பகுதி இது:

‘பள்ளிக்கூடத்தில் உபாத்தியாயர் செய்விக்கும் தண்டனைகள் மிகவும் கடுமையானவை. அவரது பிரம்படி ஒன்றினாலேயே மாணாக்கர்கள் கதிகலங்குவார்கள். விட்டத்தில் கயிற்றைக் கட்டி அதைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு சில நேரம் இருக்கும்படி செய்வது ஒரு தண்டனை. அதைக் கோதண்டம் என்று கூறுவர். அப்படிப் பையன் தொங்கும்போது கீழிருந்து உபாத்தியாயர் அவனது காலில் அடிப்பதும் உண்டு… பாடம் நன்றாய்ச் சொன்னவனைச் சொல்லாதவன் முதுகில் ஏறச் செய்து பிற்பகலில் பிள்ளைகளைச் சுற்றி வரச் செய்வது வழக்கம். அதற்குக் குதிரையேற்றம் என்று பெயர்.’ (ப.64)

‘ஒன்பது மணிக்குப் பிள்ளைகளைப் பழையது (பழைய அமுது) சாப்பிட விடுவது வழக்கம். அப்பொழுது உபாத்தியாயர் ஒருபக்கத்தில் வீற்றிருந்து ஒவ்வொரு பிள்ளையின் கையிலும் பிரம்பால் அடித்து அனுப்புவார். பழைய சோற்று ருசியில் பள்ளிக்கூட ஞாபகம் மறக்கக் கூடாதென்பதற்காக அங்ஙனம் செய்வார் போலும்!’ (ப.60)

‘முதலில் வந்தவன் கையில் பிரம்பினால் தடவி விடுவார். இரண்டாம் பையனை மெல்ல அடிப்பார். வரவர அடி அதிகமாகும்; பலமாகவும் விழும். இதனால் முதல் நாள் பலமான அடி வாங்கினவன் அதற்குப் பயந்து மறுநாள் எல்லோருக்கும் முன்பே வந்துவிடுவான்’ (ப.61).

இந்தப் பிரம்படிப் பண்புகளுக்கு மாறான ஆசிரியர் இயல்பாகவே நினைவில் பதிந்துவிடுவார். ‘மாணாக்கர் மனத்தில் அச்சத்தை உண்டாக்கிக் கல்வி புகட்டும் இந்த வழக்கம் இக்காலத்தில் யாவராலும் கண்டிக்கப்படுகிறது’ (ப.64) என உ.வே.சா. 1940களிலேயே எழுதுகிறார். எனினும் பிரம்படி சமீப காலம் வரைக்கும் வழக்கிலிருந்து சில ஆண்டுகளுக்கு முன்தான் தடை செய்யப்பட்டிருக்கிறது. நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போதெல்லாம் பிரம்பைக் கையிலெடுக்காத ஆசிரியர் இல்லை. உயர்நிலைப் பள்ளி வகுப்புகளில் கடுமையாக அடிப்பார்கள்.  ‘கண்ணையும் காதையும் விட்டுவிட்டு வேறு எங்கு வேண்டுமானாலும் அடியுங்கள்’ என்று பெற்றோர் சொன்னதெல்லாம் உண்மைதான்.

இன்று பள்ளி மாணவர் தொடர்பாக ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் பழைய நினைவில்  ‘ஆசிரியர் கையிலிருந்து பிரம்பைப் பிடுங்கியதுதான் இதற்கெல்லாம் காரணம்’ என்று பலரும் சொல்வதைக் காண்கிறோம். உண்மையில் ஆசிரியர் கையிலிருந்து பிரம்பைப் பிடுங்கியதே நம் கல்விமுறையில் ஏற்பட்ட புரட்சி என்று சொல்வேன். என் அண்ணன் நன்றாகப் படிப்பான். ஏழாம் வகுப்பில் இரண்டு மாதம் பள்ளிக்கே போகாமல் திருச்செங்கோடு மலையடிவாரத்தில் கோலிக்குண்டு விளையாடித் திரிந்தான். வீட்டில் வழக்கம் போலக் கிளம்பிப் போய்விடுவான். பள்ளி விடும் நேரத்திற்குத் திரும்பி வந்துவிடுவான். இரண்டு மாதம் கழித்தே அவன் குட்டு வெளிப்பட்டது. காரணம் கண்மண் தெரியாமல் பிரம்படி போடும் ஆசிரியர் ஒருவர். பேய் பிசாசைக் கண்டால்கூட அப்படி நடுங்க மாட்டார்கள்.

ஒன்பதாம் வகுப்பில் அவன் தேர்ச்சி பெறாமல் போனதற்கும் ஓர் ஆசிரியரால் ஏற்பட்ட அச்சமே காரணம். அத்துடன் அவன் படிப்பும் நின்று போயிற்று. உயர்கல்வி, வேலைவாய்ப்பு எல்லாம் பெற்று வாழ்வில் உயர்ந்தவர்கள்  ‘அன்று ஆசிரியர் அடித்துச் சொல்லிக் கொடுத்ததுதான் காரணம்’ என்று மடத்தனமாகச் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். அடிக்குப் பயந்து கல்வியை விட்டு ஓடியவர்கள் அனேகம். கல்வியின்   மீது வெறுப்படைந்தவர்கள் பலர். கணக்காசிரியர் என்றாலே கடுமையாக அடிப்பவர் என்று அர்த்தம். அடுத்து அடியில் புகழ் பெற்றவர்கள் அறிவியல் ஆசிரியர்கள்; ஆங்கில ஆசிரியர்களுக்கு மூன்றாம் இடம். இந்த மூவரில் யாராவது ஒருவரிடம் வசமாகச் சிக்கிக் கொள்ளாத மாணவர் இல்லை. மூன்று கண்டத்தை ஒருசேரக் கடக்கத் துன்பப்பட்டவர்களும் உண்டு.

அப்பேர்ப்பட்ட ஆசிரியர் - 1

நான் எட்டாம் வகுப்புப் படித்த போது வகுப்பாசிரியராக ஒருவர் இருந்தார். அறிவியல் அவருடைய பாடம். தொடர் வகுப்புகளில் அறிவியல் பாடத்தைப் பிரச்சினை இல்லாமல் கடந்து செல்வதற்கு அவரது கற்பித்தலும் அணுகுமுறையுமே காரணம் என்று சொல்வேன். மேசையில் பிரம்பு இருக்கும். வகுப்பை அமைதிப்படுத்தத் தட்டுவாரே தவிர ஒருவரையும் அடித்ததில்லை. அவரிடம் அடி வாங்கிய ஒரே மாணவர் அவருடைய மகன்தான். நான் எட்டாம் வகுப்பு படித்தபோது அவர் மகன் பன்னிரண்டாம் வகுப்பு படித்தார். மகனை எங்கள் வகுப்புக்கு வரவைத்து ஏதேதோ கேட்பார். திருப்பி அனுப்பும்போது கையை நீட்டச் சொல்லி இரண்டு அடி கொடுப்பார். நாங்கள் அதைப் பார்த்துச் சிரிப்போம். இருளடைந்த முகத்துடன் அவர் மகன் வெளியேறிச் செல்லும் காட்சி இன்னும் என் மனதில் அழியாமல் இருக்கிறது.

பதின்பருவ இளைஞர் அவர். நல்ல உயரம். கறுத்த முகத்தில் கண்ணுக்குத் தெரியும்படியான மீசை. சிறுபையன்கள் முன்னால் கை நீட்டி அடிவாங்குவது அவமானமாகத்தான் இருந்திருக்கும். வீட்டில் அடிக்காமல் ஏன் பள்ளிக்கு அழைத்து அடிக்கிறார் என்னும் கேள்வி எங்களுக்கு இருந்தது. அவருக்கு இருமனைவியர் என்றும் முதல் மனைவியையும் பிள்ளைகளையும் தனியாக விட்டுவிட்டு இரண்டாம் மனைவியோடு வசிக்கிறார் என்றும் எங்கள் வகுப்பு நண்பர்கள் தகவல் கொண்டு வந்தனர். அடிவாங்குபவர் முதல் மனைவியின் மகன்.  வீட்டுக்கே அவர் செல்வதில்லை, மகன் நன்றாகப் படிக்க வேண்டும் என்பதற்காகப் பள்ளியில் அழைத்து விசாரித்து அடித்து அனுப்புகிறார் என்றெல்லாம் சொன்னார்கள். அவரைப் பற்றி எண்ணும் போதெல்லாம் மகனை அழைத்து அடிப்பதைத் தவிர்த்திருக்கலாமே என்று தோன்றாமல் இருந்ததில்லை.

அவரது சொந்த வாழ்க்கைப் பிரச்சினைகள் எப்படியோ இருக்கட்டும். அது கற்பித்தலில் எந்தக் குறையையும் உண்டாக்கவில்லை.

(தொடர்ச்சி நாளை)

—–  27-02-25

Latest comments (1)

வணக்கம் ஐயா.
“ஆசிரியர்களின் கையிலிருந்து பிரம்பைப் பிடிங்கியதே கல்விமுறையில் ஏற்பட்ட புரட்சி” என்பதை மனதார ஏற்கிறேன். அண்மைக் காலங்களில் மாணவர்கள் சீர்கெட்டுப் போய்விட்டார்கள். அதற்குக் அடிக்ககூடாது திட்டக்கூடாது என்பதுதான் முதல் காரணம் என்ற மனநிலை பெரும்பான்மையோருக்கு இன்னும் உள்ளது. இம்மனநிலை மாற இன்னும் ஆண்டுகள் பல ஆகலாம். கண்டிப்பு, மாணவர்களைக் கல்வியில் விருப்பத்தை ஏற்படுத்த வேண்டுமே ஒழிய மாணவர்களைக் கல்வி அமைப்புகளிலிருந்து வெளியேறச் செய்யக்கூடாது. என் உயர்நிலைக் கல்வியும் அவ்வளவு மகிழ்ச்சியாக அமையவில்லை. தற்போதுவரை படித்த பள்ளியின் மீதான வெறுப்பு நீங்கவில்லை. அந்தளவுக்குச் கசப்பான அனுபவங்கள். அத்தகைய அனுபவங்கள் தற்போது என் பிள்ளைகளுக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகக் கவனமாகப் பணியாற்றுகிறேன். தங்கள் கருத்துகள் என் மன உறுதியை மேலும் கூட்டுகிறது.
நன்றியுடன்….