நாமக்கல் 1 : நின்றவண்ணம் கிடந்த வண்ணம்

You are currently viewing நாமக்கல் 1 : நின்றவண்ணம் கிடந்த வண்ணம்

 

 

இம்மாதம் நாமக்கல் வந்த தமிழ்நாடு முதல்வர் புதிய பேருந்து நிலையத்தைத் திறந்து வைத்தார். நவம்பர் 10ஆம் நாள் முதல் நிலையம் பயன்பாட்டுக்கும் வந்துவிட்டது. பழைய பேருந்து நிலையத்திற்கும் புதியதிற்கும் கிட்டத்தட்ட நான்கு கிலோ மீட்டர் தூரம் இருக்கும். சேலத்திலிருந்து மதுரை முதலிய தென்பகுதிகளுக்குச் செல்லும் புறவழிச்சாலையை ஒட்டிப் புதிய நிலையம் அமைந்துள்ளது. பொருத்தமான இடம்தான். மக்களுக்குச் சிரமம் நேராத வகையில் இருநிலையங்களுக்கும் இடையே பத்து நிமிடத்திற்கு ஒரு பேருந்து என இயக்குகின்றனர். ஆட்டோக்கள் இருக்கின்றன.

பேருந்துகள் இங்கிருந்தே புறப்படும் அளவு நாமக்கல் பெருநகரம் அல்ல. சேலத்திலிருந்து கரூர், திண்டுக்கல் வழியாக மதுரை, திருநெல்வேலி எனத் தென்பகுதி நகரங்களுக்குச் செல்லும் பேருந்துகளுக்கு முதல் வழிநகரம் இது. அப்பேருந்துகள் வந்து ஓரிரு நிமிடங்கள் நின்று செல்லும். திருச்சி செல்லும் பேருந்துகளும் அப்படியே. இங்கிருந்தே புறப்படுபவை என்றால் துறையூர், ஈரோடு ஆகிய ஊர்களுக்குத்தான்.

மற்றபடி நகரப் பேருந்துகள் செல்லும் மோகனூர், ராசிபுரம், வேலூர், சேந்தமங்கலம் முதலிய சிறுநகரங்கள்தான் சுற்றிலும் இருக்கின்றன. கிராமப்புறங்கள் மிகுந்திருக்கும் மாவட்டம் நாமக்கல். கரூர் வழியாகச் செல்பவையும் ஈரோடு செல்பவையும் இனி நகரத்திற்குள் வர வேண்டியதில்லை. புறவழிச்சாலை வழியாகவே சென்றுவிடலாம். திருச்சிக்குச் சுற்றுவட்டச் சாலை போட்டுக் கொண்டுள்ளனர். அது முடிந்தால் திருச்சி, துறையூர் பேருந்துகளும் நகரத்திற்குள் நுழைய வேண்டியிராது.

புதிய நிலையம் கிட்டத்தட்ட அறுபது பேருந்துகள் நிற்கும் அளவுடையது. நாமக்கல் பொதுப்போக்குவரத்து நிலைக்குப் போதுமானதுதான். நிலையத்தைச் சுற்றிலும் உழவு நிலங்கள் இப்பருவத்தில் பசுமையாகத் தெரிகின்றன. இத்தனை பேருந்துகள் வந்து செல்வதை ஆடுமாடுகள் மேய்த்துக்கொண்டே மக்கள் வேடிக்கை பார்க்கிறார்கள். இந்தக் காட்சிகள் எல்லாம் இன்னும் சில ஆண்டுகளில் மாறிவிடும். மக்கள் நடமாட்டம் கூடக்கூட இந்நிலங்களில் பெருங்கடைகளும் வீடுகளும் ஏற்பட்டுவிடும். இனி இதைச் சுற்றித்தான் நகரம் வளரும்.

நிலையத்திற்குள் இருக்கும் கடைகளில் பல இன்னும் திறக்கவில்லை. பெருந்தொகைக்கு ஏலம் போயிருப்பதாகக் கூறுகின்றனர். ஏலம் எடுத்தவர்கள் தாம் கடை நடத்தாமல் கூடுதல் தொகைக்கு உள்ஏலம் விடுகிறார்களாம். அதனால் கடைகள் திறக்கத் தாமதம் ஆவதாகக் கேள்விப்பட்டேன். இந்த உள்ஏலத்தைத் தவிர்க்க வழியில்லை போலும். ஏலம் எடுத்தவர்கள் பெரும்பாலும் அரசியல் தொடர்புடையவர்களாக இருப்பர். கடைகள் மட்டுமல்ல, வாகன நிறுத்துமிடம், கழிப்பிடம் ஆகியவையும் அப்படித்தான். அவர்களோ அவருகளுடைய பினாமிகளோ ஏலம் எடுப்பர். உள்ளூர் அரசியல்வாதிகளுக்கு வருமானம் வரும் வழிகள் இவை. அரசியல் என்பது பெரும்பணம் சம்பாதிக்கும் தொழில் தானே.

1998ஆம் ஆண்டு நாமக்கல் தனி மாவட்டம் ஆயிற்று. இந்நகரத்திற்கு நான் வந்து இருபத்தைந்து ஆண்டுகள் ஆகின்றன. அப்போது எல்லாச் சாலைகளிலும் புளிய மரங்கள் நின்றன. இப்போது ஒன்றுகூட இல்லை. அதுவே நகரப் பெருக்கத்திற்குச் சான்று. எனினும் வெகுவேகமாக இந்நகரம் வளர்ச்சி அடையவில்லை. மெதுவளர்ச்சிதான். மருத்துவக் கல்லூரி வந்திருக்கிறது. அரசு மருத்துவமனையும் அக்கல்லூரிக்குச் சென்றுவிட்டது. அதுவும் நகரத்திற்கு வெளியேதான். சட்டக்கல்லூரி வந்திருக்கிறது. ஏராளமான உணவகங்கள். நகைக்கடைகள். துணிக்கடைகள். என்னென்னவோ இருக்கின்றன. இந்நகரவாசியாக இருந்தாலும் நான் அறிந்தவை கொஞ்சம்தான் என்று உணர்கிறேன்.

நகரத்தின் மெதுவளர்ச்சிக்குக் காரணங்கள் பல. முதலில் இது கோயில் ஊர். கோயிலை மையமாகக் கொண்டிருக்கும் ஊர்கள் பெரும்பாலும் பழமைப் பிசுக்குப் பிடித்தவையாக இருக்கும். அதிலிருந்து மீண்டு வருவது அபூர்வம். நாமக்கல் நகரத்தின் நடுவில் ஒரேஒரு மொட்டைக் கரடு. கரட்டின் மீது கோட்டைச்சுவர். கோட்டை கிடையாது. போர் வீரர்கள் தற்காலிகமாகத் தங்கித் தூரத்தில் வரும் படையைக் காண்பதற்கும் பீரங்கியால் தாக்குவதற்குமான ஏற்பாடு போலும்.

கோட்டை என்றிருந்தால் உடனே அது திப்புசுல்தான் கட்டியது என்பது வழக்கம். இதையும் திப்புசுல்தான் கோட்டை என்பர். இராமச்சந்திர நாயக்கர் என்னும் குறுநில மன்னர் கட்டியது என வரலாறு சொல்கிறது. அங்கே ஒரு பெருமாள் கோயிலும் மசூதியும் உள்ளன. போர் வீரர்கள் வழிபாட்டுக்காகக் கட்டியிருக்கலாம். பார்ப்பதற்கு ஒன்றும் இல்லை. உட்காரப் போதுமான நிழலும் இல்லை. அதையும் தாங்கிக்கொண்டு காதலர்கள் கரடேறிச் செல்வதுண்டு. காதலுக்கு எதிரான சமூகத்தில் காதலர்கள் சந்திக்கப் பொதுவெளிகள்  ஏது?

நாமக்கல் 1 : நின்றவண்ணம் கிடந்த வண்ணம்

கரட்டின் கீழ்ப்பகுதியில் ஒருபுறம் நரசிம்மசுவாமி கோயில். இன்னொரு புறம் நூறுபடி ஏறும் உயரத்தில் அரங்கநாதர் கோயில். நரசிம்மர் ஆக்ரோசமாக நிற்கிறார். அரங்கநாதர் கார்க்கோடகப் படுக்கையில் ஆனந்தமாகத் துயில்கிறார். நின்ற வண்ணமும் கிடந்த வண்ணமும் ஒருசேரக் கொண்டது நாமக்கல். இரண்டும் குடைவரைக் கோயில்கள். கணிதமேதை இராமானுஜத்திற்குக் கணக்குப் புதிர்களை விடுவித்த நாமகிரித்தாயார்  நரசிம்மசுவாமி கோயிலில் இருக்கிறார். இவை இரண்டும் கிட்டத்தட்ட ஆயிரம் வருடப் பழமை கொண்டவை.

ஆயினும் மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருப்பதும் வருமானம் ஈட்டுவதும் சேட்டைக்கார ஆஞ்சநேயர் கோயில்தான். இது உருவாகி இருநூறு ஆண்டுகள் இருக்கலாம் என்கின்றனர். வருவோர் எல்லாம் ஆஞ்சநேயரையே முதலில் நாடிச் செல்வர். ஆஞ்சநேயரின் கண்கள் எதிரே நூறடி தூரத்தில் உள்ள நரசிம்மரின் அடிகளில் பதிகின்றன என்று கதை சொல்வர். யாரும் அப்படி வைத்துப் பார்த்து உறுதி செய்யவில்லை. யார் பார்க்க முடியும்? ஆஞ்சநேயரே வந்து சொன்னால்தான் உண்டு. எதிரில் இருப்பதால் நரசிம்மரைச் சந்திக்கவும் கூட்டம் போகும். கரட்டின் எதிர்ப்புறத்தில் இருக்கும் அரங்கநாதரை உள்ளூர்க்காரர்களே பெரும்பாலும் தரிசிப்பர்.

இக்கோயில்களை நாடி வெகுதூரத்திலிருந்து வரும் பக்தர்கள் இல்லை.  இவ்வழியாகச் செல்வோர் கொஞ்ச நேரம் ஒதுக்கி திறந்தவெளியில் நின்றிருக்கும் ஆஞ்சநேயரைத் தரிசித்துவிட்டு உடனே சென்றுவிடுவர். அதனால் வணிக வருமானம் பெரிதாக இல்லை. முருகன் கோயில் என்றாலோ அம்மன் கோயில் என்றாலோ அப்படி மாறியிருக்க வாய்ப்புள்ளது. பெருமாள் கோயில்களுக்கு மவுசு குறைவுதான் போல.

—–  23-11-24

Latest comments (3)

சக்திவேல் பொ

நரசிம்மர் சன்னதிக்கு எதிரில் உள்ள கருடன் சிலைக்கு பின்புறம் ஒரு துவாரம் வழியாக பார்க்கும் பொழுது ஆஞ்சநேயரின் முகம் தெரிந்ததை நானே 25-30 வருடங்களுக்கு முன் பார்த்திருக்கிறேன். அனேகமாக ஆஞ்சநேயரின் கண்களும் நரசிம்மர் அடிகளும் ஒரே நேர்கோட்டில் இருக்கக்கூடும். இப்பொழுதெல்லாம் அந்த கருடன் சன்னதிக்கு பின்புறம் பார்க்க முடியாததாலும், ஆஞ்சநேயர் சன்னதிக்கும் நரசிம்மருக்கும் இடையில் கட்டிடங்கள் வந்துவிட்டதால் பார்க்க முடியுமா என்று உறுதியாக தெரியவில்லை.

எல் கோபாலகிருஷ்ணன்

பெருமாள் கோவில்களுக்கு பொதுவாக மவுசு இருப்பதில்லை என்று கட்டுரையை முடித்து இருக்கிறீர்கள். அதே சமயம் முருக கடவுள் என்றால் மக்கள் ஆதரவு கிட்டும் என்றும் சொல்லி இருக்கிறீர்கள் .

எங்கள் பொள்ளாச்சி பக்கம் மேற்குத் தொடர்ச்சி மலை தொடரிலும் உள்பகுதியில் இருக்கும் சில ஒற்றை குன்று மலைகளிலும் பெருமாள் சுவாமிகள் வாசம் செய்கிறார்.

எங்கள் பக்கம் அர்த்தனாரி பாளையம் என்றொரு ஊர். அந்த ஊரிலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு பெருமாள் மலை உள்ளது. சனிக்கிழமை தோறும் உள்ளூர் மக்களோடு சுற்றுப்பட்டு கிராமத்தார்களும் பெருமாளை தரிசிக்க செல்வதுண்டு .

அதேபோல பொள்ளாச்சியில் இருந்து வால்பாறை செல்லும் வழியில் இடது கை பக்கமாக மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக ஒரு மலை உண்டு. அதற்கு கோபால சுவாமி மலை என்று நாமம். இந்த மலைக்கு ஒவ்வொரு சனிக்கிழமையிலும் மக்கள், கூட்டம் கூட்டமாக சென்று வருவர். மலை அடிவாரத்தில் காலை முதல் மாலை வரை அருமையான அன்னதான வசதி செய்யப்பட்டிருக்கிறது.ஒவ்வொரு வாரமும் ஒரு செல்வந்தர் பொறுப்பேற்றுக் கொள்வார் .

இப்பொழுது ஆனைமலைக்கு வருவோம். இங்கும் இந்த நகரத்திலிருந்து மேற்கு திசையில் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு குன்று காணப்படுகிறது. அதுவும் பெருமாள் மலை குன்றுதான்! ஆனால் பக்தர்கள் வரவேற்பு என்ற கண்ணோட்டத்தில் இருந்து பார்த்தால் மிகவும் சோடை போன மலை என்று தான் சொல்ல வேண்டும். இந்த மலை,மலைத்தொடரில் இருந்து மிகவும் உள்பக்கமாக இருந்தபோதிலும் இயற்கை வளத்திற்கு கொஞ்சமும் பங்கம் இல்லை. ஒரு முறை கிரானைட் கல் மாஃபியா மலையை மேற்கு பக்கம் இருந்து குடையத் தொடங்கி இருக்கிறது. கணிசமான மலை காணாமல் போன பின்பு தான் உள்ளூர் மக்களின் பெரும் போராட்டத்திற்கு பிறகு அரசு தலையிட்டு மீதம் இருந்த மலை காப்பாற்றப்பட்டிருக்கிறது. மலையை ஒட்டி வால் மாதிரி பாறை(கல்) கல் குவாரி நீண்டு செல்வதை மலை மீது இருந்து பார்க்க முடியும். முந்தைய காலங்களில் மலைச் சரிவுகளில் கள்ளச்சாராய உற்பத்தி அமோகமாக நடந்து கொண்டிருந்ததாம். இந்த மலைக்கு பிரதி வருடங்களில் புரட்டாசி மாதத்தில் மட்டும் பக்தர்கள் சிறப்பு கவனம் எடுத்து ஒவ்வொரு சனிக்கிழமை என்றும் வாகன நெரிசல்களுக்கு இடையே மலையேற்றமும் தெய்வ தரிசனமும் அனுஷ்டித்து வரும்படி நிலைமை இருந்து வரும் .

மேலும் பொள்ளாச்சி -கோவை மார்க்கத்தில் ஒருமுறை ஒரு அரசு பேருந்துக்கு பதிலாக பழனி -கொடைக்கானல் மார்க்கம் வழி செல்லும் ஒரு பச்சை நிற பேருந்தை இங்கு விட்டிருந்தார்கள். அந்தப் பேருந்தில் கொடைக்கானல் என்ற வார்த்தைக்கு பக்கத்திலேயே பெருமாள் மலை என்ற ஒரு இடத்தையும் குறிப்பிட்டு இருந்தது இப்பொழுது தங்கள் கட்டுரையை படித்த போது நினைவுக்கு வந்தது !எங்கள் ஊர் பெருமாள் மலைகளை எல்லாம் நான் அவ்வப்பொழுது கண்டு களித்தாயிற்று. இன்னும் கொடைக்கானல் பெருமாள்தான் பாக்கி. அதுபோக இப்பொழுது தாங்கள் சொல்லி இருக்கும் நாமக்கல் பெருமாள் சுவாமிகள்….

“முருகன் கோயில் என்றாலோ அம்மன் கோயில் என்றாலோ அப்படி மாறியிருக்க வாய்ப்புள்ளது. பெருமாள் கோயில்களுக்கு மவுசு குறைவுதான் போல”
அதுவும் சரி தான்.

ஆனால் பெருமாள் முருகன் சன்னதிக்கு என்றுமே மவுசு குறைந்ததில்லை.