ஒரே நாடு ஒரே ரயில்

You are currently viewing ஒரே நாடு ஒரே ரயில்

சமீபமாகத் தென்னக ரயில்வேவுக்குக் கணிசமான தொகை கொடுத்துக் கொண்டிருக்கிறேன். முன்பதிவு செய்து பயணம் செய்வது மட்டுமல்ல; ரத்து செய்வதும் மிகுதி. பெரும்பாலும் திட்டமில்லாமல் பயணம் செய்வதுதான் வழக்கம். சில ஆண்டுகளாகத் திட்டமிட்டே பயணம் செய்கிறேன். திட்டமிட்டாலும் நிறைவேற்றி வைப்பது ஆண்டவன் கையில் அல்லவா இருக்கிறது? அதனால் ரத்து செய்பவையும் அதிகம். ஏசி பதிவை ரத்து செய்தால் சில நூறு ரூபாய்களைப் பிடித்தம் செய்கிறார்கள். ரத்துப் பிடித்தம் மூலமாகவே கணிசமான வருமானத்தைப் பெறும் துறை ரயில்வேதான்.

இலக்கிய நிகழ்ச்சிகள், குடும்பக் கடமைகள் எனப் பயணம் செய்யக் காரணங்கள் பல. பொதுவாக ரயில் பயணமே எனக்கு விருப்பமானது. ஒருமணி நேரத்திற்கு மேல் பேருந்தில் பயணம் செய்வது கடினம். ஜன்னல் வழியாகப் பரவும் தூசும் ஒத்துக்கொள்ளாது. மூடிய ஏசி பேருந்தாக இருந்தாலும் ஆகாது. கார்ப் பயணம் விரைவில் சோர்வாக்கி விடும். அடைசலுக்குள் போட்டு அழுத்தி வைத்தது போலிருக்கும். சரியான நேரத்தில், சரியான இடத்தில் வண்டி அமைந்து விட்டால் ரயில் பயணம் குதி போடும் அளவு உற்சாகம் தரும். படுக்கை வகுப்பில் கழிப்பறை ஓரம் மட்டும் இருக்கை அமையாமல் இருக்க வேண்டும். எல்லா வகை நாற்றத்திற்கும் மூக்கு பழகுவது அங்கேதான்.

நாமக்கல்லுக்கு ரயில் நிலையம் ஏற்பட்டுப் (2013) பத்தாண்டுகளுக்கு மேலாகிறது. சரக்கு ரயில்கள் பல வருகின்றன. கோழிப்பண்ணைத் தீவன மூலப் பொருட்கள் வந்து இறங்குகின்றன. லாரிகள் வரிசை கட்டி அவற்றை ஏற்றிச் செல்கின்றன. இங்கு நிலையம் வரும் முன் ரயில் ஏறச் சேலத்திற்கோ கரூருக்கோ செல்ல வேண்டும். இப்போதும் இங்கிருந்து புறப்படும் பயணிகள் ரயில் ஏதுமில்லை. எங்கோ புறப்பட்டு எங்கோ செல்லும் ரயில்கள் இடையில் கடக்கும் நிலையமாகவே நாமக்கல் இருக்கிறது. அன்றாடம் நாமக்கல் வழியாகச் செல்லும் ரயில்கள் நான்கு. சென்னையில் இருந்து பாலக்காடு செல்லும் ரயில் ஒன்று. அது பழனி வழியாகச் செல்வதால் எங்கள் ஊரார் எளிதாக மொட்டை அடிக்க முடிகிறது.

அந்த ரயிலில் சென்னை செல்லக் குறைவான இடங்களே நாமக்கல்லுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதால் இருக்கை கிடைப்பது கடினம். இரண்டு மாதங்களுக்கு முன்னால் பயணத்தைத் திட்டமிட்டால் இருக்கை கிடைக்கலாம். அன்றாடம் பெங்களூருவிலிருந்து நாகர்கோவில் செல்லும் ரயில் ஒன்று. இதே வழித்தடத்தில் திரும்பும் ரயில்களும் உள்ளன. ஆக நான்கு. இப்படி இடைவழியில் இருக்கும் நிலைய ஊர்களில் வாழ்வோர் பயணத் தூக்கத்தை மறந்துவிட வேண்டும். பயணத்தில் எனக்குத் தூக்கம் வராது என்று சொல்லிக் கொள்ளும் அளவுக்கு மாறிவிடுவோம். இடைவழியில் இருக்கும் நிலையத்திற்கு அகாலத்தில் ரயில் வரும். ஆழ்ந்து உறங்கும் நேரத்தில் ஏற வேண்டும் அல்லது இறங்க வேண்டும். சென்னை ரயில் மட்டும் இரவு 9.25க்கு வருகிறது. ஏற வசதி. அதே ரயில் திரும்பி வரும்போது விடிகாலை மூன்று மணிக்கு வந்து சேர்கிறது. நாகர்கோவில் ரயில் வருவதும் போவதும் அகாலம்தான்.

இடைநிலையத்தில் இறங்க வேண்டும் என்றால் சரியாகத் தூக்கம் வராது. எங்கே நிலையத்தைத் தவற விட்டுவிடுவோமோ என்னும் பயத்தில் அவ்வப்போது பதற்றத்தோடு விழிக்க நேரும். அலாரம் வைத்துக் கொண்டாலும் மனம் அதை நம்பாது.  சென்னைக்கேனும் இங்கிருந்தே கிளம்பும் ரயில் ஒன்றிருந்தால் வசதி. அது எப்போது நடக்குமோ. ரயில் நிலையம் வேண்டும் என 1979ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் வைத்த கோரிக்கை நிறைவேற முப்பத்தைந்து ஆண்டுகள் ஆயின. சென்னைக்குச் செல்ல இங்கிருந்தே கிளம்பும் ரயில் வேண்டும் என்னும் கோரிக்கையை மக்கள் வைத்துக் கொண்டுதான் இருக்கின்றனர். எத்தனை ஆண்டுகள் ஆகுமோ தெரியவில்லை.

சேலத்திலிருந்து விருத்தாசலம் வழியாகச் சென்னை செல்லும் ‘சேலம் எக்ஸ்பிரஸ்’ ரயிலின் இரண்டு பெட்டிகளை மட்டும் நாமக்கல்லுக்கு என ஒதுக்கலாம். இரவு ஒன்பது மணிவாக்கில் கரூரிலிருந்து சேலம் செல்லும் பயணிகள் ரயில் ஒன்றிருக்கிறது. அதில் இந்த இரண்டு பெட்டிகளை இணைத்துவிட்டால் சேலம் எக்ஸ்பிரஸில் சேர்த்துவிடும். நாமக்கல்லில் இருந்து கிட்டத்தட்ட நூற்றம்பைது பேர் அன்றாடம் எளிதாகப் பயணம் செய்யலாம். சுலபமானது என்றாலும் சொல்வது எளிது; நடப்பது கடினம். மக்கள் நோக்கிலிருந்து யோசித்தால் இதைச் செயல்படுத்துவது சுலபம். ரயில்வேயின் முடிவுகளை எல்லாம் தில்லியிருந்து எடுத்தால் சிறிய விஷயம்கூட செயலுக்கு வருவது கடினம்.

நான்கு ரயில்கள் போக வாராந்திர ரயில்கள் சில வந்து செல்கின்றன. அவை இந்தியாவின் பாதிப் பரப்பளவைச் சுற்றுபவை. இத்தகையவை  பெரும்பாலும் தாமதமாக வரும். முன்னெல்லாம்  அரைநாள், ஒருநாள் கூடத் தாமதமாகும். அவற்றை நம்பிப் பயணத்தைத் திட்டமிட முடியாது. இப்போது அவற்றிலும் சில ரயில்களின் தாமத நேரம் குறைந்திருப்பதாகச் சொல்கிறார்கள். எனினும் நம்பிப் பயனில்லை.

ஒரே நாடு ஒரே ரயில்

இப்போது ‘ஒரே நாடு ஒரே ரயில்’ திட்டம் மூலம் ‘வந்தே பாரத்’ ரயில் ஒன்று நாமக்கல்லுக்கும் வந்திருக்கிறது. மதுரையில் இருந்து பெங்களூரு; பெங்களூருவில் இருந்து மதுரை. இது பகல் நேர ரயில். விடிகாலை ஐந்து மணிக்கு மதுரையில் புறப்பட்டு பெங்களூரு சென்று திரும்பி இரவு பத்து மணிக்கு மீண்டும் மதுரை வந்தடைகிறது. நாமக்கல்லிலும் ஒருநிமிடம் நின்று செல்கிறது. நாமக்கல்லுக்கு வரும் நேரம் காலை 8.30 மணி. பெங்களூருவில் மதியம் 1.30க்குப் புறப்பட்டு மாலை 5.30க்கு நாமக்கல் வருகிறது.

சென்னை – கோயம்புத்தூர், சென்னை – நாகர்கோவில் ஆகிய இரு வழித்தட வந்தே பாரத் ரயில்களுக்கு அடுத்துத் தமிழ்நாட்டுக்குக் கிடைத்திருக்கும் வந்தே பாரத் இந்த மதுரை – பெங்களூரு ரயில். மூன்று ரயில்களிலும் பயணம் செய்துவிட்டேன். நாமக்கல் வழி செல்லும் ரயிலில் பலமுறை. குறைவான நிலையங்களில் மட்டுமே நிற்கிறது.  ‘துஷ்டனைக் கண்டால் தூர விலகு’ என்பது போலப் பிற ரயில்கள் இதற்கு வழி விட்டு ஒதுங்கிக் கொள்கின்றன. பெரும்பாலும் தாமதம் இல்லை. இருந்தால் ஒருநிமிடம்; அதிகபட்சம் பத்து நிமிடம். இதை நம்பி நேரத்தையும் வேலைகளையும் திட்டமிடலாம்.

முதலில் உணவுக்கும் சேர்த்துப் பதிவு செய்வது கட்டாயமாக இருந்தது போல. அதனால் கட்டணம் மிகுதி. இப்போது உணவைத் தவிர்த்துப் பதிவு செய்யலாம். இருவேளை உணவு என்றால் கிட்டத்தட்ட முந்நூறிலிருந்து நானூறு ரூபாய் வரைக்கும் குறைகிறது. சென்னை – நாகர்கோவில் வந்தே பாரத்தில் உணவுக்குப் பதிவு செய்யாத குடும்பம் ஒன்று பயண நேரம் முழுக்கப் (கிட்டத்தட்ட ஒன்பது மணி நேரம்) பட்டினியாகவே இருந்ததாகச் செய்தி வந்தது. அதன்பின் வேண்டுமானால் பணம் கொடுத்துப் பெற்றுக் கொள்ளலாம் என முறை மாறியிருக்கிறது. தேநீரோ காபியோ வேண்டுமானால் இருபது ரூபாய்க்கு உடனடித் தயாரிப்பு கிடைக்கிறது. உணவும் வாங்கிக் கொள்ளலாம்.

இரவு நேர ரயிலில் இரண்டாம் ஏசி வகுப்பில் பயணம் செய்யும் அளவு கட்டணம். சாய்ந்து கொள்ளவும் கால் வைத்துக் கொள்ளவும் வசதியான இருக்கைகள். அளவான இருக்கைகள் கொண்ட பெட்டி என்பதால் எழுந்து நடக்கலாம். இருக்கையின் கீழ்ப்பகுதியில் செல்பேசிக்கு மின்னூட்டம் ஏற்றிக் கொள்ள வசதி இருக்கிறது. விமானங்களில் இருப்பது போல ஓர் இருக்கையின் பின்பகுதியில் சிறு மடிப்புமேசை உள்ளது. அதை எடுத்து நிறுத்தினால் மடிக்கணினி வைத்துக்கொள்ளலாம்; உணவை வைத்து உண்ணலாம்.

கழிப்பறை விஸ்தாரமாகவும் சுத்தமாகவும் இருக்கிறது. பெட்டியையும் சுத்தமாகப் பராமரிக்கிறார்கள். கொஞ்ச நேரத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்ய ஆள் வருகிறார். இருக்கையின் பின்னால் செருகி வைத்திருக்கும் குப்பைகளை வாங்கிக் கொள்வதோடு மக்கள் கீழே வீசுபவற்றைப் பெருக்கி எடுத்துச் செல்கிறார். பிஸ்கட் காகிதங்களை எல்லாம் மக்கள் கண்டபடி தூக்கி வீசுகிறார்கள். அது நமக்கு வழக்கம். அத்தனை எளிதாக மாற்றிவிட முடியாது. கையில் வாங்கிக்கொள்ள ஆள் வந்தாலும் ஏன் தூக்கி வீசுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

கழிப்பறையையும் அவ்வப்போது சுத்தம் செய்கிறார்கள். பொத்தானை அமுக்கினால் தண்ணீர் கொட்டுகிறது. என்றாலும் நம் மக்களுக்குப் பொத்தான் எது எனத் தெரியவில்லை போல. யாராவது வந்து அமுக்கிவிட வேண்டியிருக்கிறது. உள்ளே போய்ப் புகை பிடிக்கவும் முயல்கிறார்கள். அதற்கு அனுமதி கிடையாது. அதனால் மாட்டிக்கொண்டு தண்டம் செலுத்தியவர்களும் உண்டு. எங்கே புகை பிடித்தாலும் கண்டுபிடிக்கும் வகையில் கருவிகள் பொருத்தியிருக்கிறார்களாம்.

தானியங்கிக் கதவுகள். இருக்கை வரை வந்து வழியனுப்பித்தான் நமக்குப் பழக்கம். வீட்டிலிருந்த நேரத்திலும் நிலையத்தில் காத்திருந்த போதும் பேசாத பேச்சுக்களை எல்லாம் பேருந்து புறப்படும் போதும் ரயில் கிளம்பும் போதும் பேசுவோம். பிறகு ஓடி இறங்கி ஜன்னல் வழியாகப் பேசுவோம். ரயில் கிளம்பக் கிளம்ப ஜன்னல் கம்பியைப் பிடித்துக் கொண்டு பேசியபடியே கொஞ்ச தூரம் ஓடுவோம். ரயிலோடு ஓட முடியாமல் மூச்சிரைத்துக் கால்களும் துவண்டால்தான் நடைமேடையில் நிற்போம். ‘போனதும் லட்டர் போடு’ என்று கத்துவது அந்தக் காலம். ‘போனதும் போன் பண்ணு’ என்று கத்துவது இந்தக் காலம்.

அந்த வித்தை எல்லாம் வந்தே பாரத் ரயிலில் நடக்காது. நிமிடத்தில் மூடும் கதவு அடுத்த நிலையத்தில் தான் திறக்கும். இந்த விவரம் அறியாத ஒருவர் இருக்கை வரைக்கும் வந்துதான் மகளை வழயனுப்புவேன் என்று ஏறிவிட்டார். பெட்டியைப் பரணில் தூக்கி வைக்கக் கூடிய அளவு மகள் நல்ல உயரமும் வலுவும் கொண்டவர்தான். எனினும் தானே தான் வைப்பேன் என்று அந்தப் பாசக்காரத் தந்தை அடம் பிடித்துத் தூக்கி வைத்தார். மகளுடைய இருக்கை சரியானதா என்று பரிசோதித்தார். பரபரத்த மகள் பேச்சைக் கேட்கவில்லை. கதவு மூடிக் கொண்டது. இறங்க முடியவில்லை. மாட்டிக் கொண்டவர் பயணச் சீட்டு இல்லாமல் ஏறியதற்கான தண்டம் கட்டி அடுத்த நிலையத்தில் இறங்க வேண்டியானது.

நிலைய ஒலிபெருக்கி மூலம் எந்தப் பெட்டி எந்த இடத்தில் நிற்கும் என்று அரைமணி நேரத்திற்கு முன்னிருந்து அறிவிக்கிறார்கள். அதைக் கேட்கக் காது கொடுக்காமல் வழியனுப்ப வந்தவர்களுடன் குடும்பப் பஞ்சாயத்து ஒன்றை ஆவேசமாகப் பேசிக் கொண்டிருந்தார் ஒருவர். ரயில் வந்துவிட்டது. தன்னுடையது எந்தப் பெட்டி என்பது மறந்திருந்தது. செல்பேசியை எடுத்துப் பார்த்துத் தம் பெட்டிக்கு ஓடுவதற்குள் கதவு மூடிக் கொண்டது. நல்லவேளையாக அவருக்கு முதல் பெட்டியில் இருக்கை. நடைமேடையில் தடுமாறுவதைக் கண்ட ரயில் ஓட்டுநர் அழைத்துத் தம் பெட்டியில் ஏற்றிக் கொண்டார். அடுத்த ரயில் நிலையம் வரைக்கும் அவருக்குப் பேச்சுத் துணைக்கு ஓர் ஆள் கிடைத்தது சந்தோசமாகத்தான் இருந்திருக்கும்.

அன்றாடச் செய்திகளை வாசித்தால் வந்தே பாரத் கதைகள் இப்படி நிறையக் கிடைக்கின்றன. எனக்கு ‘வந்தே பாரத்’ என்னும் பெயர் பிடிக்கவில்லை. ஆனால் ‘ஒரே நாடு ஒரே ரயில்’ முழக்க ஆட்சியில் வேறெதுவும் செய்ய முடியாது. ‘வந்தே பாரத்’ என்று பொதுப்பெயர் ஒன்றை வைத்துவிட்டு அந்தந்த ஊருக்குத் தகுந்த மாதிரி துணைப் பெயர் ஒன்றையும் வைத்திருக்கலாம். ‘வைகை எக்ஸ்பிரஸ்’,  ‘ஏற்காடு எக்ஸ்பிரஸ்’, ‘மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ்’ என்பவை போல அந்தந்த ஊர்ச் சிறப்பைக் குறிக்கும் வகையில் ரயில்களின் பெயர்கள் இருக்கின்றன. அப்படி ‘வந்தே பாரத் – மதுரை எக்ஸ்பிரஸ்’, ‘வந்தே பாரத் – சிறுவாணி எக்ஸ்பிரஸ்’ என்றாவது இருந்திருக்கலாம். வட்டாரச் சிறப்புகளை எல்லாம் ஒழித்தால் தானே ‘ஒரே நாட்டை’ உருவாக்க முடியும்?

வந்தே பாரத் பணியாளர்கள் எல்லோரும் வட இந்தியர்கள். அவர்கள் இந்தி பேசுகிறார்களா, போஜ்புரி பேசுகிறார்களா, ஒடியா பேசுகிறார்களா என்றே தெரியவில்லை. பேசிப் புரிய வைக்க முடியாது. முப்பாட்டன் மொழியாகிய சைகையே உதவுகிறது. ‘ஒரே நாடு ஒரே மொழி’ திட்டம் வந்தே பாரத் மூலம் அமலாகிறது போலும். தமிழ்நாட்டில் இத்தகைய வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லையா, யாரையும் எடுப்பதில்லையா? உணவு வழங்கும் ஒப்பந்ததாரர் வட மாநிலத்தவரோ? எல்லா வந்தே பாரத் ரயில்களுக்கும் உணவு வழங்கும் ஒப்பந்தம் அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்டிருக்கலாமோ என்னவோ!

ஒரு நிலையத்தில் ஏறுவோர் இருக்கை எண்ணும் உணவுக்குப் பதிவு செய்திருக்கிறார்களா என்னும் விவரப்பட்டியலும் கையில் இருப்பதால் அந்தந்த நேரத்திற்குக் கொடுக்க வேண்டியவற்றை இருக்கைக்கே கொண்டு வந்து விடுகிறார்கள். தேநீரும் நொறுக்குகளும் வருகின்றன. காலை என்றால் அதற்குரிய உணவு. மதியம் வேறுவகை உணவு. அந்த உணவுகள் பெரும்பாலும் எல்லாம் வட இந்திய முறையில் இருக்கின்றன. கிராம்பு வாடையடிக்கும் தால், மிளகாய்த் தூளில் ஆழ்ந்த சிக்கன், சப்பாத்தி, பாதி வெந்த சோறு. சைவம், அசைவம், சர்க்கை நோயாளிகளுக்கான பத்திய உணவு என்றெல்லாம் நான்கைந்து வகைகளில் பயணச்சீட்டு பதியும் போதே தேர்வு செய்து கொள்ளலாம். எதிலுமே நம் உணவு இல்லை. வெளியிடத்தில் போய் அவர்கள் உணவை உண்பது வேறு. தமிழ்நாட்டில் ஓடும் ரயிலில் வட இந்திய உணவை உண்ணுவது கொடுமை.  ‘ஒரே நாடு ஒரே உணவு’ திட்டமும் நடைமுறையில் இருக்கிறது போலும்.

ஒவ்வொரு இருக்கைக்கும் தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிச் செய்தித்தாள்களை வழங்குகின்றனர். எந்தச் சந்தேகமும் பட வேண்டியதில்லை, தமிழ்ச் செய்தித்தாள் தினமலர் தான். ‘இந்து தமிழ் திசை’ போட்டியிட்டால் அந்த இடத்தைப் பிடிக்க வாய்ப்பிருக்கிறது. ஆங்கிலத்தில் ‘Times of India.’ இந்தி மொழிச் செய்தித்தாளை ஏன் விட்டார்கள் எனத் தெரியவில்லை. ‘ஒரே நாடு ஒரே செய்தித்தாள்’ திட்டம் இன்னும் உதிக்கவில்லையோ? கொடுத்தால் இருக்கைக்குப் பின்னிருக்கும் உணவு மேசையைத் துடைக்கவாவது இப்போதைக்குப் பயன்படுத்தலாம். அப்படியே ஒன்றிரண்டு எழுத்துக்களை வாசிக்க முயன்று இந்தி மொழியைக் கற்றுக் கொள்வார்கள் அல்லவா? ரயில்வே அறிவிப்புகளில் மும்மொழி இடம்பெறுகையில் செய்தித்தாளை ஏன் விட வேண்டும்?

—– 20-01-25

Latest comments (3)

விரைவில் நாமக்கலில் இருந்து சென்னை செல்ல ரயில் வந்துவிடும். வந்தே பாரத் பதில் பெயர் மாற்றப்படும். ரயில் பயணம் குறித்தான அனுபவமும் பொதுமக்களுக்கான விழிப்புணர்வும் அருமை.

தமிழ்நாட்டில் உள்ள கோவை கடவுசீட்டு அலுவலகத்தின் பெயர் பலகை இந்தி, ஆங்கிலம், தமிழ் என்ற வரிசையில் உள்ளது கொடுமை. பயன்படுத்துவோர் தமிழ் மொழி பேசுவோர் என்றான பின் தமிழை கடைசியில் வைத்திருப்பது வரும் கேடிற்கான முன்னோட்டம் தான்.