1
பரத்ராஜ் ரவிதாஸ் எழுதிய ‘பட்டறை’ நாவல் வெளியீட்டு நிகழ்வு இன்று (08-01-26) நடைபெறவுள்ளது. அதில் பங்கேற்கிறேன். அந்நாவலுக்கு நான் எழுதிய பிற்குறிப்பு இது:
சிறுதொழிற்கூடம் ஒன்றைக் களமாகக் கொண்ட நாவல் ‘பட்டறை.’ சில இயந்திரங்களினூடே இயங்கும் விரல் விட்டு எண்ணத்தக்க மனிதர்கள். ஆனால் அங்கே விரியும் கதைகள் ஏராளம். பசி, காதல், காமம், நட்பு, துரோகம், அன்பு, வன்மம், சுரண்டல் என எல்லாம் கலந்த சமூகச் சிற்றலகு பட்டறை. தாம் புழங்கும் இடம் நாற்சுவர் எனினும் அதற்குள் எல்லாவற்றையும் அவிழ்த்துப் பரப்பி விடும் இயல்பு இந்த மனிதருக்கு எங்கிருந்து தான் கிடைத்ததோ? ஒவ்வொரு மாந்தருக்கும் தனி அடையாளம் கிடைக்கும் வகையில் உருவாக்கியிருக்கிறார் பரத்ராஜ் ரவிதாஸ். மாந்தர்கள் இயைந்தும் முரண்பட்டும் வாழ்வதை அப்பட்டமாக விவரித்திருக்கிறார். பாவனை வாழ்வில் இருக்கிறது; பரத்ராஜின் எழுத்தில் இல்லை. பட்டறைக்குள் மூச்சு முட்ட உழன்று தப்பித்தால் போதும் என்று வெளியே ஓடிவரும் மனநிலையை உருவாக்கியிருக்கும் எழுத்து. பரத்ராஜ் வாழ்க!

2
குவளைக்கண்ணன் கவிதைகள்
04-01-26 ஞாயிறு அன்று சேலத்தில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றேன். கவிதை, மொழிபெயர்ப்பு, கட்டுரை என்று தொடர்ந்து எழுதிய நண்பர் குவளைக்கண்ணன் 2015இல் உடல்நலம் இல்லாமையால் அகால மரணம் அடைந்தார். அவர் கவிதைகள் மாயாபஜார், பிள்ளை விளையாட்டு, கண்ணுக்குத் தெரியாததன் காதலன் என மூன்று தொகுப்புகளாக வந்திருந்தன. அவற்றில் உள்ள கவிதைகளுடன் கூடுதலாகக் கண்டடைந்த மூன்றையும் சேர்த்து மொத்தம் 108 கவிதைகள் கொண்ட மொத்தத் தொகுப்பாகக் ‘குவளைக்கண்ணன் கவிதைகள்’ நூல் வெளியாகியுள்ளது. இதை உருவாக்கியவர் சேலத்தைச் சேர்ந்த ஜெயந்தி. இத்தொகுப்புக்கெனச் சிறுமுன்னுரை எழுதியிருக்கிறார். ஏற்கனவே ஆனந்த், ரா.ஸ்ரீனிவாசன் ஆகியோர் எழுதிய அணிந்துரைகளைப் பின்னிணைப்பில் சேர்த்துள்ளார். குவளைக்கண்ணனே எழுதிய முன்னுரை ஒன்றும் உள்ளது.

இந்நூல் வெளியீட்டு நிகழ்வுக்குத் தலைமையேற்று விரிவாக உரையாற்றினேன். குவளைக்கண்ணனின் ‘தலையாலங்கானம்’ என்னும் கவிதையைப் பற்றி நான் எழுதிய கட்டுரை ஒன்று ‘கவிதை மாமருந்து’ நூலில் இடம்பெற்றுள்ளது. அவர் கவிதைகளில் ‘தலை’ பெறும் இடம் பற்றி விரிவான கட்டுரை எழுதலாம். இருபதாம் நூற்றாண்டு அல்லது இருபத்தொன்றாம் நூற்றாண்டுக் கவிதைகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்தால் அதில் குவளைக்கண்ணன் கட்டாயம் இடம்பெறுவார். நேர்த்தியும் சுயபார்வையும் உடைய பல கவிதைகளை எழுதியிருக்கிறார். கவிதை வாசகர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய தொகுப்பு இது.

அவர் கவிதை ஒன்று:
அவள்
இக்கரையில் ஒருகாலும்
மறுகரையில் மறுகாலுமென
வைத்து
எதிர்வரும் வாகனங்களும்
மனிதர்களும் பொருட்டல்லவென்று
வானுக்கும் பூமிக்குமாக
துள்ளி நடக்கிறாள்
இவள்தான் வெகுமுன்னர்
தலைக்கூடையில் இடித்ததென
சூரியனைப் புறங்கையாலும்
இன்பப் புணர்ச்சியில்
கண்களைக் கூச வைத்த
நிலவினைக் காலாலும்
அப்பாலுக்கு அப்பால்
தள்ளியவளாக இருக்க வேண்டும்
இவளது அருளால்தான் சகலமும் நடக்கிறது
பற்ற முலைகளும்
பொருந்த இடமுமே
பெண்ணென்று இருப்பவர்க்கு
இவள் தெரிவதில்லை.
—–
3
காபி ஆறுவதற்கு முன்

முனவர்கான் எழுதிய ‘காபி ஆறுவதற்கு முன்’ என்னும் கட்டுரைத் தொகுப்பு நூலும் அதே நிகழ்வில் வெளியிடப்பட்டது. வெகுகாலமாக வாசகராகவே இருந்த கான் தம் வாசிப்பு அனுபவத்தை நூல் அறிமுகமாக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். பதினைந்து கட்டுரைகள். குவளைக்கண்ணன் கவிதைகள், ஆர்.சிவகுமார் எழுதிய ‘கற்றதால்’ நாவல், சுகுமாரனின் ‘பெருவலி’ நாவல் ஆகிய மூன்று தமிழ் நூல்களும் பிறமொழி நூல்கள் பதின்மூன்றும் இத்தொகுப்பின் வழி நமக்கு அறிமுகம் ஆகின்றன. சூபிக் கவிதைகள் பற்றி எழுதியுள்ள இரு கட்டுரைகள் மிகவும் முக்கியமானவை. சான்றுக் கவிதைகளை அவரே மொழிபெயர்த்துள்ளார். இணக்கமும் செறிவும் கொண்ட மொழிபெயர்ப்பு. வாசிக்க வேண்டிய நூல். இதில் உள்ள கவிதை ஒன்று:
இன்றிரவு நான் துக்கத்திலிருந்தும்
பயத்திலிருந்தும் விடுபட்டேன்
என் அன்பின் அருகில் அமர்ந்து
ஆர்வத்துடன் சொல்கிறேன்
என் காதல் இன்றிரவு
இங்கே இருக்கிறது
கடவுளிடம் வேண்டுகிறேன்
கடவுளே,
காலைக்கான திறவுகோலை மறையச் செய்திடு.
இக்கவிதை எனக்குக் குறுந்தொகைப் பாடல் ஒன்றை நினைவுபடுத்தியது. அது:
குக்கூ என்றது கோழி; அதனெதிர்
துட்கென் றதென்றன் தூஉ நெஞ்சம்;
தோள்தோய்க் காதலர் பிரிக்கும்
வாள்போல் வைகறை வந்தன்றால் எனவே. (157)
000
நூல் விவரம்:
- பரத்ராஜ் ரவிதாஸ், பட்டறை (நாவல்), பரிசல் வெளியீடு, சென்னை.
- ஜெ.ஜெயந்தி (தொ.ஆ.), குவளைக்கண்ணன் கவிதைகள், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.
- முனவர்கான், காபி ஆறுவதற்கு முன், சொற்கள் வெளியீடு, சேலம். தொடர்புக்கு: 9566651567.
—– 08-01-26


Add your first comment to this post