திட்டமிட்ட வகையில் என் எழுத்துப்பணியை இவ்வாண்டு (2025) அமைத்துக்கொள்ள முடியவில்லை. தொடர்பயணங்கள், இலக்கிய நிகழ்ச்சிப் பங்கேற்பு, குடும்பப் பொறுப்புகள் என நேரத்தைப் பிரித்துக் கொடுக்க வேண்டியாயிற்று. வாசிப்புக்கும் நினைத்த அளவு நேரம் கிடைக்கவில்லை. தேவையை ஒட்டிய வாசிப்பு என்றானது. ‘நீர்வழிப் படூஉம் புணை போல’ வாழ்வை எதிர்கொள்ளும் மனநிலை வாய்க்கப் பெற்றிருப்பதால் நடந்தவற்றை எண்ணி நிறைவு கொள்கிறேன். சிலவற்றை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த அல்லது நினைவுபடுத்த விரும்புகிறேன்.
இவ்வாண்டு மூன்று நூல்கள் புதிதாக வெளியாகியுள்ளன. அவற்றையும் வேறு சில நூல்களையும் பற்றிய விவரம் தருகிறேன்.
1
கவிதை மாமருந்து:

நவீன கவிதை குறித்து நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். ஏற்கனவே எழுதியவற்றைத் தொகுத்து நூலாக்கம் செய்தேன். நவீன கவிதையைப் புரிந்துகொள்ள விரும்புவோருக்கும் கல்வித்துறையினருக்கும் உதவும் வகையில் எழுதியவை.
காலச்சுவடு வெளியீடு. விலை ரூ.250/-
2
உ.வே.சாமிநாதையரை ஒதுக்கலாமா?

உ.வே.சாமிநாதையரின் பதிப்புப் பணிகள், செயல்பாடுகள் குறித்துக் கடந்த சில ஆண்டுகளில் நான் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். நான் எழுதிய அல்புனைவு நூல்களில் இதை மிக முக்கியமானதாகக் கருதுகிறேன். இன்றைய அரசியல் சூழலில், இலக்கிய ஆய்வுலகில் கவனம் பெற வேண்டிய நூல். அனைவரும் வாசிக்கும் வகையில் எளிமையாகத்தான் எழுதியிருக்கிறேன்.
காலச்சுவடு வெளியீடு. விலை ரூ.350/-
3
சந்தைக்கடை
2025இல் எழுதிய பதினொரு சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். தலைப்புக் கதையான ‘சந்தைக்கடை’ மிகுந்த கவனம் பெற்ற கதை. நூலாகும் முன்னரே இக்கதை ஆங்கிலம், இந்தி, மலையாளம் ஆகிய கதைகளில் மொழிபெயர்ப்பாயிற்று. சென்னைப் புத்தகத் திருவிழாவில் நன்றாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.
காலச்சுவடு வெளியீடு. விலை ரூ.220/-
4
சகாயம் செய்த சகாயம்

2011இல் எழுதிச் சிறுவெளியீடாக வந்ததை விரித்து எழுதி 2014இல் மலைகள் பதிப்பகம் மூலமாக வெளியான இந்நூல் பத்தாண்டுகள் கழித்து ‘அலர் வெளியீடு’ மூலம் மறுபதிப்பாக வெளியாகியுள்ளது.
விலை ரூ.150/- சென்னைப் புத்தகத் திருவிழாவில் பனுவல், வான்கோ, கலப்பை, யாப்பு, ஸ்ரீஹரிணி, புத்தகப் பூங்கா, அந்திமழை முதலிய கடைகளில் கிடைக்கும்.
5
உயிர் எழுத்து, 2025, அக்டோபர்.

என் அறுபதாம் வயது பிறப்பை ஒட்டி நண்பர் சுதீர் செந்தில் சிறப்பிதழ் ஒன்றை வெளியிட்டார். என் மதிப்புக்கும் அன்புக்கும் உரிய பலர் எழுதிய கட்டுரைகள் இடம்பெற்றன. உயிர் எழுத்து வரலாற்றில் பக்க அளவை கூட்டி வெளியிட்ட ஒரே இதழ் இது. 85 பக்கங்களை எனக்காக ஒதுக்கியிருந்தார். புகைப்படங்களை ரசனையுடன் தேர்வு செய்து அழகான வடிவமைப்புடன் இதழ் வெளியாயிற்று.
இதழ் விலை ரூ.50/-. சென்னைப் புத்தகத் திருவிழாவில் உயிர் எழுத்து கடையில் இதழ் கிடைக்கும்.
6
பேசத் துணிந்த எழுத்துக்கள்

‘பெருமாள்முருகன் படைப்புலகம்’ என்னும் துணைத்தலைப்பைக் கொண்ட இந்நூல் என் படைப்புகள் குறித்துக் கடந்த ஆண்டு திருச்சி, தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இருநாள் கருத்தரங்கக் கட்டுரைகளின் தொகுப்பு. இளைய தலைமுறை ஆய்வாளர்கள் பலர் எழுதிய பொருட்படுத்தத்தக்க கட்டுரைகள் இதில் உள்ளன. பேராசிரியர்கள் க.காசிமாரியப்பன், அ.செல்வராசு ஆகியோர் இதன் பதிப்பாசிரியர்கள்.
காலச்சுவடு வெளியீடு. விலை ரூ.290/-.
7
எருமைச் சீமாட்டி

ஆண்டுச் சந்தா செலுத்திய கிட்டத்தட்ட ஆயிரம் வாசகர்களைக் கொண்ட கோவை, சிறுவாணி வாசகர் மையம் வெளியிட்ட தேர்ந்தெடுத்த சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். இது சென்னைப் புத்தகத் திருவிழாவில் கிடைக்காது. அவர்களைத் தொடர்பு கொண்டு பெறலாம்.
தொடர்பு எண்: 8778924880. விலை ரூ.250.
000
இவை தவிர என் நாவல்கள், சிறுகதைகள், அல்புனைவு உள்ளிட்ட அனைத்து நூல்களும் காலச்சுவடு அரங்கில் கிடைக்கும். இன்று (18-01-26, ஞாயிறு) பிற்பகல் தொடங்கி புத்தகக் காட்சி நிறைவுறும் நேரம் வரை காலச்சுவடு கடையில் இருப்பேன். ‘வேல்’ சிறுகதைத் தொகுப்பின் மலையாள மொழிபெயர்ப்பு பூர்ணா பப்ளிகேஷன்ஸ் மூலம் வெளியாகிறது. அதன் வெளியீட்டு நிகழ்வு இன்று காலச்சுவடு அரங்கில் நடக்கும். வாசகர்களைச் சந்தித்து உரையாடவும் நூல்களில் கையொப்பம் இடவும் காலச்சுவடு ஏற்பாடு செய்திருக்கிறது.
அனைவரும் வருக!
—– 18-01-26


Add your first comment to this post