பேசவும் பழகவும் மிகவும் சுவாரசியமான மனிதர் ஆசி கந்தராஜா. ‘கள்ளக்கணக்கு’ என்னும் அவருடைய சிறுகதை நூலை 2018இல் வெளியிட்டுப் பேசி இருக்கிறேன். அவர் எழுதிய சுவையான அனுபவக் கட்டுரைகளைக் கொண்ட நூல் ‘மண் அளக்கும் சொல்.’ அதற்கு மதிப்புரை எழுதியுள்ளேன். இரண்டையும் வாசித்தபோது புனைவுக்கும் அல்புனைவுக்கும் உள்ள இடைவெளியைப் பெரிதும் குறைப்பவை அவர் எழுத்துக்கள் என்று தோன்றியது. ஆஸ்திரேலியப் பயணத்தின் போது சிட்னியில் அவருடன் சில நாட்கள் தங்கிப் பழகும் வாய்ப்பும் கிடைத்தது. ’உண்ணீர் உண்ணீர் என்று ஊட்டும்’ விருந்தோம்பல் அவருடையது. அவர் மனைவியின் கைச்சமையல் பிரசித்தி பெற்றது. அதைப் பற்றிய பெருமையும் கொண்டவர். இரண்டையும் ஒருசேர அனுபவிக்கும் பேறு பெற்றேன். எதைப் பற்றியும் மனம் கொள்ளும் வகையில் உரையாடும் ஆற்றல் உடையவர். எழுத்தில் காணும் நகைச்சுவையும் பகடியும் அவருக்கு இயல்பாக அமைந்தவை.
பேராசிரியராக, பயிரியல் துறை சார்ந்த அறிவியல் அறிஞராக அவர் ஆற்றிய பணிகள் பல. துறைசார் புலமையின் தெறிப்புகள் கொண்ட இலக்கிய எழுத்து அவரது ஒருமுகம். ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் நிலைகொண்டு பணியாற்றியவர். கருத்தரங்கு, பயிலரங்கு எனக் கல்வித்துறை சார்ந்து பல நாடுகளுக்குப் பயணம் செய்தவர். உலகம் சுற்றிய பெரும் அனுபவத்துக்குச் சொந்தக்காரர். பலவகை நிலவியலையும் மனிதர்களையும் பண்பாடுகளையும் காணும் வாய்ப்பு பெற்றவர். ஓர் எழுத்தாளருக்கு உரிய வகையில் அவற்றைத் தம் பார்வைக்கு உட்படுத்துபவர்.
எத்தனை நாடுகள் சுற்றினாலும் அவரது கால்கள் ஈழத்து மண்ணில், தம் சொந்த ஊரில் எப்போதும் நிலை கொண்டிருக்கின்றன. அவர் தலை எவ்வளவு உயர்ந்தாலும் கால்கள் அசைவதில்லை. சில சமயம் குதிகாலை லேசாக உயர்த்துகிறார். அவ்வளவுதான். இந்நிலை அவரது பலமா பலவீனமா என்று தீர்ப்பு சொல்ல முடியாது. இரண்டும் தான் என்று சொன்னால் அதை நழுவலாகவும் கருத இயலாது. அவர் எழுதியுள்ள கட்டுரைகளிலும் சிறுகதைகளிலும் இதை வெளிப்படையாகவும் துலக்கமாகவும் காணலாம்.
அவர் ஏற்கனவே எழுதித் தொகுப்புகளில் வெளியானவற்றில் இருந்து தேர்வு செய்த ஐந்து சிறுகதைகள் இந்நூலில் உள்ளன. முதல் கதை ‘பாவனை பேசலன்றி’ சிட்னியில் நேர்ந்த ஒருசாவு பற்றியது. ஈழ மண்ணில் பெருமதிப்போடு திகழ்ந்த ஆசிரியர் ஓய்வுக்குப் பின் நிர்ப்பந்தம் காரணமாகச் சிட்னிக்கு வந்து தம் மகன் வீட்டில் சிறிதும் ஒட்டாமல் வசித்துச் சிலகாலம் முதியோர் காப்பகத்தில் இருந்து இறந்து போகிறார். அவர் இறப்புச் சடங்குகளை வெற்றுப் பாவனையோடு மேற்கொள்ளும் குடும்பத்தாரை எள்ளி நகையாடும் கதை. அதுவும் அனைத்தையும் பொறுப்பெடுத்துச் செய்யும் அக்குடும்பப் பெண்களைப் பற்றிய பகடி அளவற்றது. அதேசமயம் தம் வாழ்நாள் முழுதும் பணியாற்றி மதிப்புடன் வாழ்ந்த ஊரையும் நாட்டையும் விட்டு வந்து அயற்சூழலில் அவ்வாசிரியர் கொள்ளும் ஒவ்வாமையை, அவரது இறுதி நாட்களின் பெருந்துயரைக் கரிசனத்தோடு அணுகி விவரிக்கிறது. மாணவராகிய கதைசொல்லி மட்டுமே அவருக்கு ஆறுதலாகச் சிலவற்றைச் செய்கிறார்.
இரண்டாம் கதை ‘அடிவானம்’ ஜெர்மனியைக் களமாகக் கொண்டது. ஜெர்மனித் தம்பதியர், புலம் பெயர்ந்து சென்ற ஈழத் தம்பதியர் என இருவேறு பண்பாட்டுப் பின்னணி கொண்ட குடும்பங்களை இணைகோடாக வைத்து எழுதிய கதை. இரண்டிலும் தொடர்புடைய பெண்கள் எடுக்கும் முடிவுகளே முக்கியமானவை. சமாதானத் தூதுவராகிய கதைசொல்லி வீரசிங்கம் அவற்றை ஆதரிக்கவில்லை. அதைப் பற்றி வீரசிங்கத்தின் மனைவி அவரை விமர்சிக்கும் முடிவு நன்று. இரண்டு குடும்பங்களையும் அவரவர் பின்னணியில் இருந்து அணுகிப் பார்ப்பதே சரி என்கிறது கதை. ஆனால் ஒரு குடும்பத்தைத் தொடர்புடைய பெண் நோக்கிலிருந்தும் இன்னொரு குடும்பத்தைத் தொடர்புடைய ஆண் நோக்கிலிருந்தும் வீரசிங்கம் காண்பதையும் கருதிப் பார்க்க வேண்டும்.
மூன்றாம் கதை ‘உயரப் பறக்கும் காகங்கள்’ ஈழத்திலும் ஆஸ்திரேலியாவிலுமாக நடக்கும் கதை. ‘உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது’ என்னும் பழமொழியை நினைவூட்டும் கதை. காகம் உயரப் பறக்க விரும்பினால் வீழ்ச்சி, தன் உயரத்தை அறிந்து பறந்தால் மகிழ்ச்சி என்பதை இருநண்பர்களின் வாழ்வை விவரிப்பதன் மூலம் காட்டுகிறார். மு. வரதராசனார் எழுதிக் கல்விப் புலத்தில் பிரபலமாக இருந்த ‘அகல்விளக்கு’ நாவல் என் நினைவுக்கு வந்தது. பேராற்றல் கொண்ட ஒருவன் ஒழுக்கமின்மையால் வீழ்வதும் ஆற்றல் குறைந்த ஒருவன் ஒழுக்கத்தால் வாழ்வதும் அந்நாவலின் கதை.
நான்காம் கதை ‘திரிவேணி சங்கமம்’ ஆஸ்திரேலியாவைக் களமாகக் கொண்டு மூன்று இளைஞர்கள் சிறைப்பட்ட சம்பவங்களை இணைத்துப் பேசுகிறது. ஒருவர் ஆஸ்திரேலியர்; இன்னொருவர் ஈரானியர்; மூன்றாமவர் ஈழத்தமிழர். மூன்று நாடு. மூன்று வகைப் பண்பாடு. ஆனால் கதை நடக்கும் களம் ஒன்று. மூவரும் தண்டனைக் கைதிகள். மூவரும் பாதிக்கப்பட்ட பொதுக்காரணம் பெண். பிரச்சினையில் சிக்கித் தண்டனை பெற்றாலும் ஆஸ்திரேலியருக்கும் ஈரானியருக்கும் குடும்ப ஆதரவு கிடைக்கிறது. அவர்கள் மேலெழுந்து வர அது உதவுகிறது. ஆனால் ஈழத்து இளைஞர் ஏமாற்றப்படுகிறார்; நிராதரவாக நிற்கிறார். தமிழர் சுயநல புத்தியைச் சிறை அதிகாரி யோசப் குத்திக் காட்டிக் கேட்கும் கேள்வியும் அதைத் தொடர்ந்த விசாரமுமாகக் கதை நிறைவடைகிறது. பல கோணங்களில் பிரித்தும் உடைத்தும் பார்க்க வேண்டிய கதையிது.
இறுதியாக இருப்பது ‘கீதையடி நீ எனக்கு’ கதை. ஈழக் குடும்பக் கதையிது. செல்வ மிதப்பில் அழிவைத் தேடும் குடும்பம்; ஏழ்மை வலியில் உழைத்து மேலேறும் குடும்பம் என்னும் முரண். 1950, 60களில் கண்ட தமிழ்த் திரைப்படக் கதைகள் நினைவுக்கு வந்தன. விழுமியங்களிலும் வாழ்முறையிலும் தமிழ்ச் சமூகத்தின் நிலை பற்றிய ஆதங்கம் ஏற்பட்டது.

பொதுவாக ஆசி கந்தராஜாவின் மொழியும் ஆற்றொழுக்குடன் கதை சொல்லும் முறையும் வாசிப்புக்குப் பெரிதும் உகந்தவையாக இருக்கின்றன. எல்லாக் கதைகளிலும் கதைசொல்லி ஒரு பார்வையாளராகவே இருக்கிறார். வளமாக வாழும் ஈழத்தவர் மீது வெறுப்பும் துயருறும் ஈழத்தவர் மீது கரிசனமும் வெளிப்படுகின்றன. பெண்கள் மீது அத்தனை உயர்ந்த அபிப்பிராயம் இல்லை. இவற்றை எல்லாம் கடந்து தான் இவர் கதைகளில் இருந்து அயல்நாடுகளில் அகதிகளாக அவதியுறும் ஈழத்தவர் பாடுகளை, துயரத்தை உணர்ந்து கொள்ள முடிகிறது.
உலகம் சுற்றினாலும் ஆசி கந்தராஜாவின் கால்கள் சொந்த மண்ணில் வேர் பிடித்து நிற்கின்றன என்னும் அனுமானத்திற்கு ஒரு சான்றைக் காணலாம்.. ‘கீதையடி நீ எனக்கு’ கதையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இரு பாத்திரங்கள் வருகின்றன. ஈழத்தைச் சேர்ந்த சந்திரன் தன் அத்தை மகளாகிய டாக்டர் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை. அதற்குப் பதிலியாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த டாக்டர் வாணியைத் திருமணம் செய்து கொள்கிறான். வாணியும் அவள் தம்பி கலைச்செல்வனும் சேர்ந்து சந்திரனை ஏமாற்றி அவன் சேர்த்திருந்த செல்வத்தை எல்லாம் திருடிக் கொண்டு ஓடி விடுகிறார்கள். வாணியைப் பற்றி வரும் சித்திரம் இது:
‘வாணி எம்ஜிஆர் மருத்துவக் கல்லூரியில் படிக்கவில்லையாம். ஆதி திராவிடர்களுக்கான கோட்டாவில் உதவிப் பணம் பெற்றுக் குறைந்த புள்ளிகளுடனேயே தனியார் மருத்துவக் கல்லூரியில் படித்தவளாம். ஐந்து வருடப் படிப்பை எட்டு வருடங்களில் முடித்து, தட்டுத் தடுமாறி டாக்டரானவளாம்.’
ஆகவே ஆசி கந்தராஜாவின் கால்கள் கொஞ்சம் அசைய வேண்டும். குதிகாலை எம்புவது மட்டுமல்ல, சில அடிகள் எடுத்து வைக்கலாம். ஈழத்தில் ஒரு காலையும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட அயலகங்களில் ஒரு காலையும் வைக்க முடிந்தால் நல்லது. தம் சொந்த மண்ணிலிருந்து இரு கால்களையும் பிடுங்கி எடுப்பது மிகவும் நல்லது.
ஒவ்வொரு கதையும் வாசிப்பில் வாமனனாகத் தோற்றம் தரினும் பிறகான யோசிப்பில் விஸ்வரூப தரிசனம் தருகின்றன. அதன் மேலோட்டக் காட்சியில் அணிகலன்கள் ஜொலிக்கின்றன ஆழ்ந்து நோக்கினால் விழுமிய ஆயுதங்கள் மின்னுகின்றன. இடையே இருட்துணுக்குகளும் பொதிந்திருக்கின்றன. எல்லாம் கலந்த இவற்றை ஆசி கந்தராஜாவின் புனைவுலகத்தையும் பார்வைகளையும் காட்டும் பிரதிநிதித்துவ கதைகள் எனலாம்.
—– 31-10-25
(ஆசி கந்தராஜாவின் ‘திரிவேணி சங்கமம்’ சிறுகதை நூலுக்கு எழுதிய முன்னுரை. காலச்சுவடு வெளியீடு.)
—– 09-01-26


Add your first comment to this post