கூர் தீட்டிய புலன்

You are currently viewing கூர் தீட்டிய புலன்

 

சமூக வலைத்தளத்தால் வெளியீட்டு வாய்ப்பு பெருகிய பிறகு எழுதுவோர் எண்ணிக்கை கணிசமாகக் கூடியிருக்கிறது. இருபத்தோராம் நூற்றாண்டு தொடங்கிய போது சிறுகதையில் ஒருவகைத் தேக்கம் நிலவுவதான தோற்றம் இருந்தது. அதைத் தகர்த்தது சமூக வலைத்தளம். ஒருவர் தம் கதையை வெளியிட  அச்சிதழைச் சார்ந்திருக்கும் நிலையை அது மாற்றியது. எழுதிப் பிரசுரித்த பிறகு அதைப் பற்றிய வாசகப் பார்வையை அறிந்துகொள்ளக் காத்துக் கிடக்கும் சூழலும் மாறிற்று. அதுவும் கடந்த பத்தாண்டுகளில் நேர்ந்திருக்கும் மாற்றம் பெரிது. இரவு கதையை அனுப்பி விட்டு அதிகாலையில் எழுந்து பார்த்தால் இணைய இதழ் ஒன்றில் அது படத்துடன் பிரசுரமாகியிருக்கிறது. எத்தனை பேர் வாசித்திருக்கிறார்கள் என்று அறிய முடிகிறது. சில பின்னூட்டங்களும் கிடைக்கின்றன.

கதை எழுதியதும் உடனே வெளியிட விரும்பினால் தம் வலைத்தளத்திலோ முகநூல் உள்ளிட்ட தளங்களிலோ சில நொடிகளில் பதிவாக்கி  விடலாம். வாசிக்கிறார்களோ இல்லையோ பதிவான நொடியிலிருந்து விருப்பக் குறியீடுகள் வர ஆரம்பிக்கின்றன. சிலர் சட்டென வாசித்துக் கருத்தும் சொல்கிறார்கள். இதன் சாதக பாதகங்கள் பற்றி நிறையப் பேசலாம். கதை எழுதி அனுப்பிவிட்டு அது வெளியாக மாதக் கணக்கில் காத்திருக்கும் அவஸ்தையை அனுபவித்த என் தலைமுறையினருக்கு இது வியப்பாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. வெளிப்படச் சொன்னால் இப்போதைய தலைமுறையினர் மேல் பொறாமையாகவும் இருக்கிறது. ஒரு நேர்காணலில்  ‘முப்பது ஆண்டுகள் கழித்துப் பிறந்திருக்கக் கூடாதா என்னும் ஏக்கம் எனக்கு உண்டு’ என்று சொன்னேன்.

வெளியீட்டு வாய்ப்புகள் கூடுகையில் எதிர்பார்ப்பும் மிகத்தான் செய்யும். ஏற்கனவே எழுதிய களங்கள், எழுத்து முறை, உரிப்பொருள் எல்லாம் பழமைப் பிசுக்கு படிந்தவை ஆகிவிடுகின்றன. அவற்றின் அழுகல் நெடி மூக்கைத் துளைக்கிறது. புதிய களங்கள், புதிய சொல்முறை, புதுப்புது உரிப்பொருள் என வாசிப்புச் சமூகம் எதிர்பார்க்கிறது. ‘பேசாப் பொருள்’ என்று பாரதி சொன்னது இக்காலத்திற்கும் பெரிதும் பொருந்தும். ‘சமூகப் பிரச்சினைகளைக் காத்திருந்துதான் இலக்கியம் பேசும்’ என்பது பூமர்களின் கருத்தாகிப் போயிற்று. இன்றைய பிரச்சினைகளை இன்றே இலக்கியம் பேச வேண்டும், மாறும் விழுமியங்களை உடனடியாகக் கதையாக்க வேண்டும் என்று எண்ணும் மனோபாவம் கூடியிருக்கிறது.

ஓர் இணைய இதழ் ஒரே நாளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கதைகளை வெளியிட்ட போது நான் தடுமாறிப் போனேன். எந்தக் கதையை முதலில் வாசிப்பது? வெளியிட்டிருக்கும் வரிசையில் வாசிக்கலாமா? ஏற்கனவே அறிந்த பெயர்கள் எழுதியவற்றை வாசிக்கலாமா? ஈர்க்கும் தலைப்புக் கதைகளை வாசிக்கலாமா? ஓவியத்தை அளவுகோலாகக் கொள்ளலாமா? மேலும் கீழும் தள்ளித் தள்ளிப் பார்க்கிறேன். தேர்வுக் குழப்பம் தீரவில்லை. சில நிமிடங்கள் எடுத்து நிதானமாக யோசித்து  ‘ஒருகதையின் தொடக்க வரிகளை வாசித்துப் பார்க்கலாம். வித்தியாசமான களமாக இருந்தால் தொடர்ந்து வாசிக்கலாம்’ என்று முடிவு செய்தேன். நானே இப்படி என்றால் புதிது போற்றும் ஆர்வமுள்ள இன்றைய தலைமுறையின் தேர்வு எப்படி இருக்கும்?

புதிய களங்களில் நிகழும் வாழ்வைச் சித்திரிக்கும் எழுத்துக்கு உடனடிக் கவனம் கிடைக்கும் வாய்ப்பு உலகளவிலேயே மிகுதி. அதற்காக மெனக்கெடும் எழுத்தாளர்கள் பலர். ஓரிடத்தில் சில மாதங்கள் தங்கி அந்நிலத்தையும் வாழ்வையும் உற்றுநோக்கி நாவல்கள் எழுதியவர் ராஜம் கிருஷ்ணன். ஒவ்வொரு நாவலும் ஒவ்வொரு களத்தில் நிகழும். அப்போதைய இலக்கியவாணர்கள் ராஜம் கிருஷ்ணனை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் உலகளவில் பிரபலமான எழுத்தாளர்கள் பலர் தம் நாவலுக்காக ஓரிடத்தில் சென்று தங்கி அவ்வாழ்வை உள்வாங்குகிறார்கள், ஆய்வு செய்து தகவல்களைச் சேகரிக்கிறார்கள் என்னும் தகவல்கள் இன்று பரவலாகத் தெரிய வருகின்றன. அப்படி எழுதும் எழுத்தாளர்களின் படைப்புகளை மொழிபெயர்த்துப் போற்றும் போக்கு தமிழில் வந்துவிட்டது. இப்போது ஒருவர் எழுதுவது சொந்த அனுபவத்தையா கண்டு கேட்டதையா சென்று இருந்து பார்த்ததையா என்பனவெல்லாம் இன்று பிரச்சினை இல்லை. இலக்கிய மதிப்பீடுகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களும் பலப்பல.

எழுதாத களங்கள் அல்லது எழுதித் தீராத களங்கள் எனத் தமிழில் பல உள்ளன. அதில் ஒன்று தமிழ்நாட்டுக் கிறித்தவர் வாழ்வு. அக்களத்தில் இயங்கியோர் அதிகமில்லை. ஐசக் அருமைராஜன், ஹெப்சிபா ஜேசுதாசன் என ஓரிரு பெயர்களே நினைவுக்கு வருகின்றன. அவர்கள் நாவல் எழுதியவர்கள். சிறுகதை, குறுநாவல் என்றால் சட்டென என் மனதில் தோன்றும் பெயர் அ.எக்பர்ட் சச்சிதானந்தம். நான் வாசிக்கத் தொடங்கிய 1980களில் ‘கணையாழி’ இதழில் அவர் எழுத்துக்கள் வெளியாகி ஈர்த்தன. மிகக் குறைவாக எழுதியவர். அவரை அடையாளம் கண்டு தமிழினி வசந்தகுமார் ‘நுகம்’ தொகுப்பை வெளியிட்ட போது மிகவும் மகிழ்ந்தேன். அதிகம் பேர் கால் பதிக்காத கமுக்கப் பெருவெளியாகத் தமிழ்நாட்டுக் கிறித்தவ வாழ்க்கை இருக்கிறது என்று தோன்றும். இப்போது அவ்வெளியைத் தமதாக்கிக் கொண்டு ஜார்ஜ் ஜோசப் வந்திருக்கிறார்.

அடுத்தடுத்து எமரால்ட், பெருநெஞ்சன் ஆகிய இரு தொகுப்புகளை வெளியிட்டிருக்கும் ஜார்ஜ் ஜோசப் இவ்வாண்டு இன்னொரு சிறுகதை நூலையும் குறுநாவல் தொகுப்பையும் எழுதியிருக்கிறார்.  அவர் எழுத்தின் முதல் பலம் கிறித்தவ வாழ்க்கை என்னும் அதிகம் பேசாத களம். இத்தொகுப்பில் உள்ள ‘சப்பரம்’ குறுநாவலுக்கு அதன் களமே பிரதானம். வாழ்ந்து ஓய்ந்த ஒருவரின் மரணம் வாழும் மனிதர்களிடையே எத்தகைய சலனங்களை உருவாக்குகின்றன என்பதுதான் உரிப்பொருள். எல்லோரும் ஒருகூட்டுப் பறவைகள்தான். எனினும் சூழல் சில மனங்களை இளக்குகிறது. சிலவற்றை இறுகச் செய்கிறது. குழப்பங்களும் சண்டைகளும் உருவாகின்றன.  ‘ஒரு புளியமரத்தின் கதை’ நாவலில் ஏதும் செய்ய இயலவில்லை என்றாலும் எல்லாவற்றுக்கும் சாட்சியாகப் புளியமரம் நிற்பதைப் போல இதில் ‘சப்பரம்’ இருக்கிறது.

சப்பரத்தைச் சுற்றிய இயக்கத்தில் அரசியல், சாதி, காதல், கௌரவம், உடைமை, அகங்காரம் அனைத்தும் மேலெழுகின்றன. சமகாலப் பண்புகள் எல்லாம் இருக்கின்றன. இல்லாததே இல்லை என்று சொல்லிவிடலாம். சப்பரம், தேவாலயம் என்னும் சூழலை நீக்கிவிட்டு வேறொன்றில் பொருத்தி இக்கதையை எழுதிவிடச் சிறிதும் வாய்ப்பில்லை. பொதுவாசகருக்கு அந்தக் களமும் புதிது; களத்தில் நடக்கும் அனைத்தும் புதிது.  அந்தக் களம் தான் அனைத்தையும் கட்டிச் சேர்க்கிறது. அதை நம்பகத்தன்மையோடும் உயிர்ப்போடும் ஜார்ஜ் சித்திரிக்கிறார். கூர் தீட்டிய புலன் கொண்ட எழுத்தாளருக்கே இது சாத்தியம்.

இத்தகைய களம் இயற்கையாக அமைந்தாலும் கதைக்கலை கைவர வேண்டுமே. கதை சொல்லும் திறம் ஜார்ஜின் இயல்பிலேயே பொதிந்திருக்கிறது. அவ்வகையில் இவர் தேர்ந்தெடுக்கும் சம்பவங்கள் அடுத்த பலமாக விளங்குகின்றன. சம்பவ வலு கொண்ட கதைகள் என்று இவரது எழுத்துக்கள் அனைத்தையும் சொல்லிவிடலாம். இந்நூலில் உள்ள மூன்றுமே அத்தகையவை. பெரிய சம்பவங்கள் என்றில்லை, சிறுசிறு சம்பவங்களையும் கவனத்துடன் தேர்ந்தெடுத்து உரிய இடத்தில் எழுதுகிறார். ஆகவே இக்கதைகள் மனதில் நீங்காமல் பதிந்துவிடுகின்றன.

மூன்றாவதாகக் கதைமாந்தர் அனைவருக்கும் உரிய முக்கியத்துவம் கொடுத்து எல்லோர் கோணத்தையும் கதைக்குள் கொண்டு வருவதை இவர் பலமாகச் சொல்லலாம். சமகாலக் கதை சொல்லலின் முக்கியக் கூறு இது. யாரையும் குறைத்து மதிப்பிடாமல் அவரவர் நோக்கிலிருந்து ஒன்றை அணுகுதல். சப்பரம், பேதலிப்பு ஆகியவற்றில் இதைச் செய்வது ஓரளவு எளிது. ஆனால்  ‘புளித்த அப்பம்’ என்னும் வரலாற்றுக் கதையிலும் இதைச் செய்திருக்கிறார். உண்மையில் சாதித்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

கூர் தீட்டிய புலன்

கவிஞர்கள் ஒருமுறையாவது பைபிளை வாசிக்க வேண்டும், அப்போதுதான் அவர்களுக்குக் கவிமொழி கைகூடும் என்று சொல்வதுண்டு. ஜார்ஜுக்கு அந்தக் கொடுப்பினை வாய்த்திருக்கிறது. ஒன்றைச் சொல்ல முயலும் போது சொற்கள் ததும்பி மேலெழுகின்றன. ‘புளித்த அப்பம்’ அப்படி என்னைக் கவர்ந்தது. அவர் எழுதிச் செல்லும் சில தொடர்களை இரண்டு மூன்று முறை வாசிக்கத் தோன்றுகிறது. இன்றைய தலைமுறையினர் மேல் எனக்கிருக்கும் விமர்சனம் மொழிக் குறைபாடுதான். பொருட்குழப்பம் தரும் தொடர்களைச் சிறுகவனமும் இன்றி எழுதிச் செல்கிறார்கள். ஜார்ஜின் எழுதும் தொடர்களை மீண்டும் வாசிக்கத் தோன்றக் காரணம் பொருட்குழப்பம் அல்ல; சொற்கள் இயைந்து பொருந்தியிருக்கும் அழகுதான்.

இவை எல்லாவற்றையும் விட ஜார்ஜின் பெரும்பலம் என்று தோன்றுவது சுயபார்வை. எந்தத் தாழையும் கையில் பற்றிக்கொண்டு எதையும் உள்ளே விடாமல் அல்லது சிலவற்றை அனுமதித்துச் சிலவற்றைப் புறந்தள்ளும் தளையுண்ட பார்வை இவரிடம் இல்லை. எல்லாவற்றுக்கும் வரவேற்பளித்துப் பரிசீலனைக்கு உட்படுத்தும் பார்வை கொண்டிருக்கிறார். மதமோ சாதியோ நிலமோ குடும்பமோ திணிக்கும் அல்லது நயமாகச் செலுத்தும் எதையும் அப்படியே ஏற்றுக் கொள்வதில்லை. எல்லாவற்றையும் பரப்பி வைக்கிறார். எதற்கு எந்த இடம் என்பதில் சுயபார்வை துலங்குகிறது.

சமகாலத்தில் ஆர்வத்துடனும் வேகமாகவும் எழுதும் ஒருவரது படைப்பை அதிகம் பகுத்துப் பார்த்து ‘இவ்வளவுதான், இப்படித்தான்’ என்று முத்திரை குத்திவிடுவது சரியல்ல. அவருக்கு உகந்த வெளியில் சுதந்திரமாக உலவ வாய்க்க வேண்டும். அதற்கு என் அனுமானம் தடையாக இருந்துவிடக் கூடாது, இந்தக் கட்டுக்குள்ளேயே அவரை இருத்திவிடக் கூடாது என்னும் எச்சரிக்கையோடு இந்த அளவில் நிறுத்திக் கொள்கிறேன். இத்தொகுப்பில் உள்ள குறுநாவல்கள் மூன்றும் வாசிப்பு அனுபவத்தைப் பரிமளிக்கச் செய்பவை. பல அறிதல்களையும் வழங்குபவை. ஜார்ஜுக்கு என் வாழ்த்துக்கள்.

28-11-25

நாமக்கல்                                                                                            பெருமாள்முருகன். 

(ஜார்ஜ் ஜோசப்பின் குறுநாவல் தொகுப்பான ‘புளித்த அப்பம்’ நூலுக்கு எழுதிய அணிந்துரை.)

10-01-26

 

Add your first comment to this post