எல்லா இலக்கிய வடிவங்களும் மொழியின் பல்வேறு சாத்தியங்களை முயன்று பார்க்கும் களமாக விளங்குகின்றன. குறிப்பான சிலவற்றைச் சான்றாதாரமாகக் காட்டி அவையே அந்த வடிவத்தின் உச்சம் என்று போற்றும் ‘நவீன மரபுப் பார்வை’ இப்போது செல்லுபடியாவதில்லை. ஒருவடிவம் நூறாண்டுகளைக் கடந்தும் செல்வாக்குப் பெற்றிருக்கிறது என்றால் அது தன்னை முடக்கும் முயற்சிகளை எல்லாம் முறியடித்து நிலைபெற்றிருக்கிறது என்று பொருள். மேலும் தன்னை நிலைப்படுத்திக் கொள்ள அது இடைவிடாது சல்லிவேர்களைப் பரப்பிச் செல்கிறது என்றும் பொருள்.
சிறுகதை வடிவம் இன்றும் புதிதாக விளங்குகிறது. அதற்குக் காரணம் அவ்வடிவத்தில் நிறைய எழுதுகிறார்கள் என்பதல்ல. அதன் சாத்திய எல்லைகள் விரிவாகிக் கொண்டிருக்கின்றன. இப்போது குறுங்கதைகள், நுண்கதைகள் என்றெல்லாம் பரிசோதனை முயற்சிகள் நடக்கின்றன. ‘குறுங்கதை’ என்பது மிகச் சிறிய கதை என்று எடுத்துக் கொண்டால் முன்னோடிகளாகிய புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன் ஆகியோரே அவ்வாறு சில கதைகளை எழுதியுள்ளனர். ஒவ்வொரு எழுத்தாளரும் அப்படி ஒரு கதையாவது எழுதியிருப்பார். அதுவே ஒருவகையாக உருப் பெறும்போது அதற்கென தனித்த சில கூறுகள் உண்டாகும். அவற்றைத் தொகுத்துப் பார்க்கக் கால அவகாசம் தேவை. 2019இல் வெளியான ‘மாயம்’ தொகுப்பை என்னளவில் குறுங்கதைகள் என்றுதான் சொல்வேன். ஐந்நூறு சொற்களுக்குள் அமையும்படி ஒருகதையை எழுதும் எண்ணம் கொண்டிருந்தாலும் கிட்டத்தட்ட ஆயிரம் சொற்கள் எனக்குத் தேவைப்பட்டன. அதன் பிறகு என் போக்கு மாறிவிட்டது.
ஏன் சிறுகதை ‘செறிவு’ கொண்டிருக்க வேண்டும்? அது ஏன் அளவில் குறுக வேண்டும்? இன்றைய சமூக ஊடகம் அதற்குக் காரணமோ? இருநூறு முந்நூறு சொற்களுக்குள் எழுதினால் தான் வாசிப்பார்கள் என்பதால் இந்தக் குறுகலோ? இத்தகைய கேள்விகள் எனக்குள் வந்தன. பொதுவியல்பில் இருந்து சற்றே பிறழ்வது எனக்குப் பிடித்தமான விஷயம். குறுகலுக்குள் செல்ல வேண்டாம், விரிவுக்குள் நுழைவோம் என்று என் மனம் விழைந்தது. ஒரு வலுவான சம்பவத்தை நிதானமான முறையில் விவரித்துப் பார்ப்போம் என்று எழுத ஆரம்பித்தேன். வேல்!, போண்டு ஆகிய தொகுப்புக் கதைகள் அப்படியானவை. அவற்றின் கதைகளுக்கும் பொருட்தொடர்ச்சி உண்டு. பிறகு அந்த விவரணை முறையை மட்டும் எடுத்துக் கொண்டு கதைகளை எழுதினேன்.
‘சந்தைக்கடை’ என்னும் இந்நூல் அப்படி எழுதிய பதினொரு சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு. இக்கதைகள் அனைத்தும் இவ்வாண்டில் (2025) எழுதியவை. இந்த விவரிப்பு முறையில் இருக்கும் ஆபத்து எழுதிச் செல்லும் போக்கில் ‘மற்றொன்று விரிக்கும்’ குற்றத்திற்கு ஆளாகிவிடுவோம் என்பதுதான். அந்த உணர்வு இருந்ததால் குற்றத்திற்கு ஆளாகாமல் தப்பித்திருக்கிறேன். இந்த முறையில் சம்பவத்தை விவரிப்பதோடு அதன் களத்தைக் கட்டி எழுப்புவதில் நல்ல கவனம் செலுத்த முடிந்திருக்கிறது. கதைமாந்தர் ஒவ்வொருவர் மீதும் முழுஅக்கறை சென்றிருக்கிறது.
செறிவில்தான் நுட்பம் பொதிந்திருக்கிறது என்பதல்ல. விவரிப்பில் நுட்பங்களைக் கூட்ட முடியும் என்பதைக் கண்டடைந்திருக்கிறேன். இக்கதைகளை எழுதும் போது அந்திமாலை நேரத்தில் யாருமற்ற மைதானத்தில் பேருலாப் போகும் மகிழ்ச்சியை அனுபவித்தேன். சில இடங்களில் வேகமாக நடந்தேன். சில நேரம் மெதுநடை பயின்றேன். கொஞ்சம் உட்கார்ந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். காட்சிகளில் திளைத்துச் சிலநேரம் அப்படியே சமைந்து நின்றுவிட்டேன். பேருலாவில் எல்லாம் வாய்க்கும் தானே?
இக்கதைகள் இதழ்களில் வெளியான போது வந்த எதிர்வினைகளால் கதை முடிவுகளில் வாசக மனம் குவிவதை அறிந்தேன். ஏதேனும் ஒற்றைக்குள் முடிவைச் சுருக்குவதில் எனக்கு ஈடுபாடில்லை. முடிவுக் குறிப்பைக் கொண்டு வெவ்வேறு சாத்தியங்களைச் சிந்தித்துப் பார்க்கலாம். அவற்றில் தம் மனதிற்கு உவப்பானதை எடுத்துக் கொள்ளலாம். தமக்குப் பிடித்ததையே எழுத்தாளரும் கருதியிருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியல்ல. அதற்குப் பின் என்ன நடந்திருக்கும் என்னும் எளிமையான கேள்விக்கு நாம் முயன்றால் எத்தனையோ பதில்கள். ‘இப்படித்தான் நடந்திருக்கும்’ என்று தம் மனம் ஏற்பதைக் கொள்ளலாமே.
இதுவரை குறுநாவல் வகைக்குள் நான் எதுவும் எழுதியதில்லை. அப்படி முயன்று நாவலாகவே எழுதி முடித்திருக்கிறேன். இந்தக் கதைகளை எழுதிய அனுபவம் அடுத்துக் குறுநாவலுக்கு இட்டுச் செல்லும் போல. சிலவற்றை அப்படி எழுதிப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. மகிழ்ச்சி தரும் அனுபவம் படைப்புணர்வை மிகுவிக்கும். அதை விடாமல் பற்றிக்கொள்ள விழைகிறேன். பார்க்கலாம்.
இக்கதைகள் காலச்சுவடு, உயிர்மை, உயிர் எழுத்து, மணல் வீடு, அந்திமழை ஆகிய அச்சிதழ்களிலும் வல்லினம், அகழ் ஆகிய இணைய இதழ்களிலும் வெளியாயின. ஆனந்த விகடன் தீபாவளி மலரில் ஒருகதை வெளியாயிற்று. அவ்விதழ்களுக்கு நன்றி. இந்நூலைக் காலச்சுவடு பதிப்பகம் வெளியிடுகிறது. நண்பர்கள் கண்ணன், அரவிந்தன் ஆகியோருக்கு நன்றி. என் மேல் எப்போதும் அன்பு பாராட்டும் உரையாடல் வல்லவர் நண்பர் பழ.அதியமான் அவர்களுக்கு இந்நூலைக் காணிக்கையாக்கி மகிழ்கிறேன்.
19-11-25
சென்னை பெருமாள்முருகன்.
(சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளியாகியுள்ள என் சிறுகதைத் தொகுப்புக்கு எழுதிய முன்னுரை.)
—— 11-01-26


Add your first comment to this post