08-10-24 அன்று ஒரே நாள் சென்னையில் மூன்று கூட்டங்களில் பங்கேற்றுப் பேச வேண்டியதாயிற்று. சிலசமயம் இப்படி நெருக்கடி நேர்ந்துவிடும். மூன்றும் கல்வி நிறுவனங்களில் நடந்தன.
புதுக் கல்லூரியில் பணியாற்றும் நண்பர் முரளி அரூபன் பல்லாண்டு கால நண்பர். 1990களில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வாளராக நான் இருந்தபோது புதுக்கல்லூரியில் அவர் முதுகலை மாணவர். அரூபன் என்பதையும் தன் பெயரோடு சேர்த்துக் கொண்டு நவீன இலக்கிய வாடை வீசப் பல்கலைக்கழகத்திற்கு வருவார். டி.எஸ்.எலியட்டின் கட்டுரைகளை மொழிபெயர்த்து நூலாக்கிக் கவனம் பெற்றார். அத்துடன் நவீன இலக்கியத்தை மூட்டை கட்டி விட்டுப் பட்டம், வேலை என்று தீவிரமாகி உழைத்து வாழ்வில் நிலைபெற்றார்.
தான் படித்த புதுக் கல்லூரியிலேயே ஆசிரியராகி இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றிக் கொண்டுள்ளார். இஸ்லாமிய இலக்கியங்களைத் தேடிப் பதிப்பித்து வருகிறார். கவி கா.மு.ஷெரீப் எழுதிய சிலப்பதிகார உரையைப் பதிப்பித்திருக்கிறார். சீறா வசன காவியம், உமறுபாஷா யுத்த சரித்திரம் உள்ளிட்ட சில நூல்களும் அவர் பதிப்புப் பங்களிப்பு. அவ்வளவாகக் கவனம் பெறாத நூல்களைத் தேடிப் பதிப்பிக்கும் ஆர்வம் கொண்டவர். மரபுக் கவிதைகள் எழுதுவதிலும் வல்லவர். கொரானோ காலத்தில் அவர் எழுதிய ‘காம வெண்பாக்கள்’ பலரது மனம் கவர்ந்தவை. அவற்றை ஓவியங்களோடு நூலாக்க முயன்று வருகிறார். தனிப்பாடல்கள் தாக்கத்தில் அவர் எழுதும் வெண்பாக்கள் ரசனையானவை. சான்றுக்கு ஒன்று:
அண்டம் வெளிப்பட ஆவென்று வாய்திறந்தாய்
கண்டைக்கால் வானளாவக் காட்டிநின்றாய் – வண்டுவிழிப்
பெண்டுகளை வம்பிழுத்தாய் பட்டரிட்ட பொங்கலை
உண்ட தினவோ உனக்கு?
முப்பது ஆண்டுகளுக்கு மேலாக நண்பரான அவர் ஒரு நிகழ்ச்சிக்கு அழைக்கும் போது மறுக்க முடியுமா? புதுக் கல்லூரியில் செயல்படும் உமறுப் புலவர் தமிழ் மன்றத்தின் துணைத் தலைவர் அவர். அதன் தொடக்க விழாவில் மாணவர் கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றத்தான் அழைப்பு. அக்கல்லூரியில் அவர் ஆசிரியர் பணியேற்ற தொடக்கத்தில் மாணவர் கவிதைகளைத் தொகுத்து ‘வருகை’ என்னும் தலைப்பில் நூலாக்கினார். அதன் மறுபதிப்பு இப்போது வெளிவருகிறது. அக்கல்லூரியில் முதுகலை பயிலும் மாணவர் முகில் வேந்தன் எழுதிய கவிதைத் தொகுப்பு ‘வாகை’ என நூலாகியிருக்கிறது. விழாவில் அவ்விரண்டு நூல்களும் வெளியீடு காண்கின்றன என்று சொன்னார். ஜெகத் கஸ்பரும் இன்னொரு சிறப்புரையாளர் என்றார். ஒப்புதல் தந்தேன்.
பத்து மணிக்கு விழா என்றது அழைப்பிதழ். 9.50க்கு அங்கே சென்று விட்டேன். துறை ஆசிரியர்களை அறிமுகம் கொண்ட பிறகு துறைத்தலைவர் கீழை.அப்துல் காதரிடம் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தேன்; அல்ல, அவர் பேசக் கேட்டிருந்தேன். என்னவோ தெரியவில்லை, என்னைப் பார்த்ததும் அரசியல் பற்றி அவருக்கிருக்கும் ஆதங்கங்களை எல்லாம் கொட்ட ஆரம்பித்துவிட்டார். எனக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. கேட்டுக் கொண்டேயிருந்தேன். கிட்டத்தட்டப் பதினொரு மணிவாக்கில் விழா நடக்கும் அரங்குக்கு நடந்தோம். துறைத்தலைவர் பேசிக் கொண்டே வந்தார். ‘எழுத்தாளர்கள் சமூக நோக்கோடு எழுத வேண்டும் ஐயா’ என்பதை வலியுறுத்திக் கொண்டே வந்தார். எனக்குச் சமூக நோக்கு இல்லையோ என்ற குற்றவுணர்வு பீடிக்க மெல்ல அவருடன் நடந்தேன்.
திடுமென்று ‘கைம்பெண்கள் கஷ்டத்தைப் பற்றி இப்போது யாருங்கய்யா எழுதறாங்க?’ என்றார். அதிர்ச்சி நீங்காமல் என்னவோ பதில் சொன்னேன்.
தொடர்ந்து ‘வரதட்சிணைப் பிரச்சினை பற்றிக்கூட எழுதவதில்லையே ஐயா’ என்றார்.
‘நா.காமராசன், மு.மேத்தா காலத்திலிருந்து நீங்கள் மீண்டு வரவேயில்லையா ஐயா’ என்றேன் மெதுவாக.
‘அப்ப இதெல்லாம் பிரச்சினை இல்லையா? கிராமங்களில் இன்னும் எத்தனை பெண்கள் வரதட்சிணைப் பிரச்சினையால் பாதிக்கப்படுகிறார்கள் தெரியுமா?’ என்றார்.
அதிர்ச்சியிலிருந்து மீளாமல் என் ‘கங்கணம்’ நாவலைப் படித்துப் பார்க்கும்படி பரிந்துரை செய்தேன். பேராசிரியருக்குப் பரிந்துரை செய்ய நாம் யார்? வேறு வழியில்லாத போது என்னதான் செய்வது? அதற்குள் அரங்கம் வந்துவிட்டது. அங்கு வந்து அரைமணி நேரம் காத்திருப்பு. அப்போது சிலர் வந்து பேசினர். நிம்மதியாக உட்கார்ந்திருந்தேன். மாணவர்கள் வந்து சேரவில்லை, முதல்வர் வந்து கொண்டிருக்கிறார் என்னும் காரணங்களால் கிட்டத்தட்ட 11.20 மணிக்குத்தான் மேடைக்கு அழைத்தனர்.
பத்து மணிக்கு என்றால் பத்தரை மணிக்கேனும் தொடங்கிவிடும் என்று நினைத்திருந்தேன். 12 மணிக்குப் புறப்பட்டு மாநிலக் கல்லூரிக்குச் செல்ல வேண்டியிருந்தது. ஆனால் பன்னிரண்டு மணிக்குக்கூட பேசும் வாய்ப்பு எனக்கு வரவில்லை. தமிழர் மேடைக் கலாச்சாரம் அப்படி. மாநிலக் கல்லூரி முதல்வர் என்னை அழைத்துச் செல்ல வந்து வெளியே காத்திருந்தார். என்ன செய்வது? முக்கால் மணி நேரம் பேசத் தயாரித்திருந்த உரையை அப்படியே வைத்துவிட்டு ஐந்தே ஐந்து நிமிடம் மட்டும் பேசினேன். மாணவர்களிடம் பேச முடியாமல் அங்கிருந்து விடைபெற நேர்ந்த வருத்தம் தீரவில்லை.
000
நான் சென்னை வருவது தெரிந்தால் மாநிலக் கல்லூரி முதல்வரும் எழுத்தாளருமாகிய இரா.இராமன் என்னும் கல்யாணராமன் என்னை விடமாட்டார். அங்கே ஏதேனும் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து ஒருமணி நேரம் பேசச் செய்துவிடுவார். இந்த முறையும் அப்படித்தான். என் வருகையை அவருக்குக் கடைசி நிமிடத்தில்தான் சொன்னேன். கூட்டம் எதுவும் வேண்டாம் என்றும் சொன்னேன். சரி, மதிய உணவு சேர்ந்து சாப்பிடுவோம் என்று அழைத்தார். அதற்கு ஒத்துக்கொண்டேன்.
ஆனால் அன்று காலையில் ‘புள்ளியியல் துறை மாணவர்களோடு ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்திருக்கிறேன். கொஞ்ச நேரம் வந்து பேசுங்கள்’ என்றார். 12 மணிக்குப் புதுக்கல்லூரிக்கு வந்து அழைத்து வருகிறோம், 12.30க்கு நீங்கள் பேசலாம் என்றும் சொன்னார். புதுக்கல்லூரி நிகழ்ச்சி முடிந்துவிடும் என்னும் எண்ணத்தில் சரி என்று ஒத்துக்கொண்டேன். அங்கே பேச வாய்க்காத வருத்தத்தோடு மாநிலக் கல்லூரிக்கு வந்தேன். புள்ளியியல் மாணவர்கள் காத்திருந்தனர். தமிழ்த்துறை மாணவர்கள் சிலரும் இருந்தனர்.
‘சமூகத்தில் ஒரு மனிதனாக வாழ்வது எப்படி?’ என்று பொதுவான தலைப்பு கொடுத்திருந்தனர். கால்மணி நேரம் பேசினேன். பிறகு மாணவர்களுடன் கலந்துரையாடல். தொடக்கத் தயக்கம் நீங்கியதும் மாணவர்கள் கேள்விகளை எய்ய ஆரம்பித்தனர். ஒருமணி நேரம் உரையாடல் நீண்டது. சாதி பற்றிய பேச்சில் ‘எல்லாரும் நம்மாளுங்கதான்னு தோனனும்னா என்ன பண்ணனுங்கையா?’ என்று மாணவர் ஒருவர் கேட்டார். ‘எல்லாரும் சமம் தானே டீச்சர்?’ என்று கேட்ட பள்ளி மாணவர் நினைவு வந்தது. இப்படி எண்ணம் தோன்றுவதுதான் முதல்படி என்று சொல்லி அவரைப் பாராட்டிவிட்டுச் சிலவற்றைப் பேசினேன். பெண்கள் பலர் ஆர்வத்துடன் கேட்டது மகிழ்ச்சியளித்தது.
ஒலிவாங்கி இல்லை. பெரிய அரங்கம் இல்லை. வெறும் புகழ்ச்சியில்லை. வகுப்பறைக்குள் அறுபது எழுபது மாணவர்களிடையே நடந்த உரையாடல். புதுக்கல்லூரியில் விட்டதை இங்கே பெற்றுவிட்ட மாதிரி நிறைவு ஏற்பட்டது. பெருவிழாப் பேச்சு எனக்கு ஒருபோதும் ஒத்து வருவதில்லை. இது போன்ற சிறுகூட்டத்திற்கு மட்டுமே ஒத்துக்கொள்ள வேண்டும் என்று அப்போது தோன்றியது.
000
பிற்பகல் 3 மணிக்குச் சென்னைப் பல்கலைக்கழக மெரினா வளாகத்தில் உள்ள மலையாளத் துறையில் நூல் வெளியீட்டு நிகழ்வு. மலையாளத் துறைத் தலைவர் பி.எம்.கிரிஷ் நவீன இலக்கியம் படைக்கும் எழுத்தாளர். அவர் எழுதிய நாவல் ‘சொரளா’ (தமிழ் ஒலிப்பில்: சரளா). அவரை எனக்கு அறிமுகம் இல்லை. என்னை அழைத்த அரபித் துறைத் தலைவர் ஜாகீர் உசைனையும் நேரில் தெரியாது. ஏற்கனவே புதுக்கல்லூரி நிகழ்வு இருந்ததால் அதே நாளில் பிற்பகல் வைத்தால் வருகிறேன் என்றேன். அதன்படி ஏற்பாடு செய்த நிகழ்வு இது.
தமிழ் இலக்கியத் துறை, தமிழ் மொழித்துறை, கிறித்தவ இலக்கியத் துறை ஆகியவை இருக்கும் மெரினா வளாகத்தின் முதல் மாடியில் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, அரபி, உருது ஆகிய மொழித்துறைகள் இயங்குகின்றன. அவ்வளாகத்தில் மாணவனாக எட்டாண்டுகள் சுற்றித் திரிந்தவன் நான். அப்போது மலையாளத் துறையில் பேராசிரியர்களாக இருந்த ராஜேந்திர பாபு, பிரசாத் ஆகிய இருவரையும் அறிவேன். அதே வளாகத்தில் மலையாளத் துறைக்குச் சிறப்பு விருந்தினராகச் செல்வது உற்சாகம் கொடுத்தது.
தமிழ்மொழித் துறைத் தலைவரான நண்பர் ய.மணிகண்டனைச் சந்தித்துக் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் வேறொரு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார். அதில் பேச ஆர்.பாலகிருஷ்ணன், சுந்தர், சுடர்விழி ஆகியோர் வந்திருந்தனர். அவர்களிடமும் சில நிமிடம் பேசினேன். நிகழ்வு தொடங்கும் நேரத்தில் வந்து அழைத்தனர். சரியாக 3 மணிக்கு நிகழ்வு தொடங்கியது. சிற்றரங்கு. மலையாளம் உள்ளிட்ட மொழிப்புல மாணவர்களும் சென்னையில் வசிக்கும் மலையாள இலக்கிய ஆர்வலர்களும் வந்திருந்தனர். கிட்டத்தட்ட நூறு பேர்.
அழகொளிர ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி. என்னை அறிமுகப்படுத்தி உரையாற்றியவர் அரபு மொழித்துறைத் தலைவர் ஜாகீர் உசைன். அக்டோபர் 2024 காலச்சுவடு இதழில் ‘அரபு இலக்கியத்தில் அண்ணல் காந்தி’ என்னும் கட்டுரை எழுதியிருக்கிறார். மஹ்மூத் தர்வீஷ் கவிதைகளை அரபியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார். ‘நாடோடிக் கட்டில்’ என்னும் தலைப்பில் நூலாகியுள்ளது. அரபு எழுத்தாளர் இஹ்சான் அப்துல் குத்தூஸின் சிறுகதைகளைக் ‘கிறுக்கி’ என்னும் நூலாகத் தமிழுக்குக் கொண்டு வந்திருக்கிறார். இவ்விரு நூல்களும் காலச்சுவடு வெளியீடு. வஃபா அப்துல் ரஸ்ஸாக்கின் நுண்கதைகள் ‘புயல் முட்டை’ என இவர் மொழிபெயர்ப்பில் எதிர் வெளியீடாக வந்துள்ளது. தமிழிலிருந்து அரபி மொழிக்குப் பழந்தமிழ் இலக்கியங்களைக் கொண்டு சென்றிருக்கிறார். மொழிபெயர்ப்பு மட்டுமல்லாமல் சுயமாகவும் பல நூல்களை எழுதியுள்ளார். என்னையும் நூல்கள் வழி அறிமுகப்படுத்திப் பேசினார். கூச்சமில்லாமல் கேட்க முடிந்தது.
மலையாள நாவல் என்பதால் என்னால் வாசிக்க இயலவில்லை. ‘நானோ நாவல்’ என்று சொன்னார்கள். ஒட்டுமொத்த நாவலுமே 375 தொடர்கள்தான். 74 அத்தியாயம். ஒரு அத்தியாயம் ஒரே ஒரு தொடரால் மட்டும் ஆனது. சில அத்தியாயங்கள் ஒருபத்தி, இருபத்தி அளவிலானவை. மொத்தமாக இரண்டாயிரம் சொற்கள் தான் இருக்கும். மகாத்மா காந்திக்கும் சரளா தேவிக்கும் இடையே இருந்த ஆன்மிக உறவை மையமாகக் கொண்ட நாவல். சரளா தேவி பற்றி ராமச்சந்திர குஹா தம் நூலில் எழுதியுள்ள செய்திகளை ஆதாரமாகக் கொண்டு இந்நாவலைக் கிரிஷ் எழுதியிருக்கிறார். இந்தத் தகவல்களை எல்லாம் அறிந்துகொண்டேன்.
நாவலில் ஒரு அத்தியாயமே இரண்டாயிரம், மூவாயிரம் சொற்கள் எழுதுபவன் நான். மொத்த நாவலே இரண்டாயிரம் சொற்கள் என்றால் புதுமைதான். என் வியப்பைத் தெரிவித்துவிட்டுத் தமிழ் உட்பட இந்திய மொழி இலக்கியத்தில் மகாத்மா காந்தி தீராக் கருப்பொருளாக இருக்கும் சிறப்பைச் சில தமிழ்ச் சான்றுகளை எடுத்துரைத்துப் பேசினேன். நவீன இலக்கியத்திற்கும் கல்விப்புலத்திற்கும் இடைவெளி குறைந்து வருவது மகிழ்ச்சி தருகிறது என்பதையும் சொல்லி அவரை வாழ்த்தினேன். இன்னும் சிலர் பேச வேண்டியிருந்தது. வெகுதூரப் பயணம் என்னுடையது என்பதால் விடைபெற்றேன்.
மலையாளம் வாழ்க!
—– 03-11-24.
உங்களைப் போல் இலக்கியத்தோடு பிஸியாகவே இருக்க வேண்டும் ஐயா. அதோடு, கங்கணம் நாவலைப் பாதியில் விட்டிருக்கிறேன். தொடர வேண்டும்.