(‘என் வாழ்வனுபவக் கட்டுரைகளின் தொகுப்பாகப் ‘பாதி மலையேறுன பாதகரு’ நூல் காலச்சுவடு வெளியீடாக வந்துள்ளது. அதற்கு நான் எழுதிய முன்னுரை இது.)
‘மாதொருபாகன்’ நாவல் சர்ச்சையில் நீதிமன்றத் தீர்ப்பு வந்தபோது வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்த மலையாளக் கவிஞர் கே.சச்சிதானந்தன் ‘நீங்கள் நிறைய எழுத வேண்டும். சுயசரிதைகூட எழுதலாம்’ என்று சொல்லியிருந்தார். தீர்ப்பு என்னை எழுதச் சொல்லிக் கட்டளையிட்டிருந்தது. எனினும் வெறுமையான மனநிலையில் இருந்தேன். சச்சிதானந்தன் சொன்னது போலச் சுயசரிதையை எழுதிப் பார்க்கலாமா என்று நினைத்ததுண்டு. அத்தனை சுவாரசியம் கொண்ட வாழ்வு என்னுடையதில்லை. நினைத்த வாழ்வுக்கும் அமைந்த வாழ்வுக்குமான முரண் பெரிதாக இல்லை. வேறென்ன, வாழ்வின் அடிப்படையை அமைத்துக்கொள்ள அலைந்த அலைச்சல்கள் கொஞ்சம் சுவை தரலாம். அவ்வளவுதான். எனவே அவ்வெண்ணத்தைப் புறந்தள்ளிவிட்டுப் ‘பூனாச்சி’ நாவலை எழுதினேன்.
பின்னர் ‘தோன்றாத் துணை’ நூல் எழுதும்போது சின்னக் கணக்கீடு மனதில் வந்தது. சொந்த வாழ்க்கை பற்றிக் கணிசமாக எழுதியிருப்பதாக அக்கணக்கீடு சொன்னது. ‘கரித்தாள் தெரியவில்லையா தம்பீ…’, ‘நிழல்முற்றத்து நினைவுகள்’, ‘நிலமும் நிழலும்’ ஆகிய நூல்கள் அப்படியானவை. தனிப்பாடல் இலக்கியத்தை முன்வைத்து எழுதிய ‘வான்குருவியின் கூடு’ நூலிலும் சுயசரிதச் சாயல் உண்டு. பல நூல்களின் முன்னுரைகள் அப்படிப்பட்டவை. சரி, அவ்வரிசையில் ‘தோன்றாத் துணை’யும் சேர்கிறது என்று நினைத்துக் கொண்டேன்.
அதுபோலப் பல்லாண்டுகளாக நான் எழுதிச் சேர்ந்திருந்த கட்டுரைகளை இனம் பிரித்துக் கோத்தபோது வாழ்வனுவங்களும் படைப்புகளின் மூல ஊற்று பற்றியவையும் கணிசமாக இருக்கக் கண்டேன். நல்ல வாசிப்பனுபவம் கொண்டவைதான். எனினும் நூலாக்கத் தயக்கம் இருந்தது. ‘கரித்தாள்’ நூலுக்கு அடுத்த பதிப்பு கொண்டு வரலாம் என்றும் ஏதும் திருத்தங்கள் இருந்தால் செய்யலாம் என்றும் காலச்சுவடு பதிப்பகத்தில் சொன்னார்கள். தனித்தெடுத்த வாழ்வனுபவக் கட்டுரைகளை அந்நூலோடே சேர்த்து விடலாம் என்றோர் எண்ணம் தோன்றிக் ‘கொஞ்சம் பொறுத்திருங்கள்’ என்று சொன்னேன்.
அப்போது எனது ஐந்து நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பெங்குவின் பதிப்பகத்தோடு ஒப்பந்தப் பேச்சு வார்த்தையைக் கண்ணன் தொடங்கியிருந்தார். ‘கரித்தாள் தெரியவில்லையா தம்பீ…’ நூலும் அவற்றுள் ஒன்று. அதில் உள்ள கட்டுரைகள் அனைத்தும் ஆங்கிலத்திற்குத் தேவையில்லை, தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்று பேசினோம். தேர்ந்தெடுத்தால் சிறிய நூலாகத்தான் வரும் என்றார் கண்ணன். அதில் மேலும் சில கட்டுரைகளைச் சேர்க்கத் திட்டமிருக்கிறது என்று சொன்னேன். இந்த இருவிஷயங்களும் கட்டுரைகளைச் சேர்த்துப் பார்க்கும் எண்ணத்தை விரைவுபடுத்தின. கோப்புகளிலிருந்து பிரித்தெடுத்து வரிசைப்படுத்திய போது இதுவே தனி நூலாகும் என்றுணர்ந்தேன்.
அப்படித் தொகுத்த நூல்தான் ‘பாதி மலையேறுன பாதகரு.’ தலைப்புக் கட்டுரையில் என் தாத்தாவைப் பற்றிய சித்திரம் இருக்கிறது. சுவாரசியத்திற்குப் பஞ்சமில்லாத மனிதர் அவர். என்னைப் ‘பொன்னு’ என்றழைக்கும் குரலுக்கு உரியவர். அதில் அழுத்தமான சம்பவம் ஒன்றும் உள்ளது. தம் வாழ்வின் இறுதிக் காலத்தில் ‘பாதகர்’ பட்டம் பெற்றவர் அவர். அதற்கான பின்னணியை விவரிக்கும் கட்டுரை அது. அவர் சித்திரம் இக்கட்டுரையில் அமைந்தது போலவே ஒவ்வொரு கட்டுரையிலும் ஒவ்வொரு கூறு, ஒவ்வொரு சித்திரம் சிறந்திருப்பதாகத் தோன்றியது. நூலாக்கத்திற்கான நியாயம் இப்படித்தான் உருவாயிற்று.
தமிழ் வாசகரும் சரி, பிறமொழி வாசகரும் சரி ஒரு எழுத்தாளரின் வாழ்வையும் படைப்புக்கும் அவர் வாழ்வுக்கும் உள்ள தொடர்பையும் அறிந்துகொள்ள பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர். அத்தகைய கட்டுரைகளையும் நூல்களையும் வாசிப்பதற்குப் பெருங்கூட்டம் இருக்கிறது. மேலும் படைப்பின் இரகசியத்தைப் பற்றிப் பல கேள்விகள் வந்து கொண்டேயிருக்கின்றன. அதுதான் இரகசியம் ஆயிற்றே, எப்படிச் சொல்வது? எனக்கே புரியாத இரகசியம் அது என்றாலும் விடுவதில்லை.
நேர்காணல்களில் ‘இந்தக் கதையின் கரு எப்படித் தோன்றியது?’, ‘இந்த நாவல் உருவான பின்னணி என்ன?’ என்றெல்லாம் தொடர்ந்து துளைத்தெடுக்கிறார்கள். நாவலை விடவா நாவல் உருவான பின்னணிக்கு முக்கியத்துவம் வந்துவிடப் போகிறது? ஒரு கரு எப்படி உருவாகிறது என்று எல்லாவற்றுக்கும் தெளிவாகச் சொல்ல முடியாது. சிலவற்றுக்குப் பின்னால் இருக்கும் உந்துதலைத் தொட்டுக் காட்டலாம். சிலவற்றை உணரலாம். சிலவற்றின் மூலத்தை உருவி எடுப்பது கடினம். ‘நதிமூலம் ரிஷிமூலம் காண முடியாது என்பது போலத்தான் படைப்பின் மூலத்தையும் காண முடியாது’ என்று சொல்லிச் சமாளிக்கலாம். எத்தனையோ சம்பவங்களில் ஏதேனும் ஒன்றைக் கதைக்கானதாக மனம் எப்படித் தேர்வு செய்கிறது? தெரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
படைப்பிலக்கியப் பயிற்சி வகுப்புகளில் ‘அடிப்படையில் படைப்பு மனம் இருந்தால் எழுதலாம்’ என்று சொல்ல வேண்டியிருக்கிறது. படைப்பு மனம் என்பதைக் கழற்றிப் பகுதி பகுதியாகக் காட்ட முடிவதில்லை. படைப்பிலக்கியப் படிப்புகள் பல நாடுகளில் உள்ளன. அங்கெல்லாம் இருக்கும் பாடத்திட்டம் என்ன, எப்படிக் கற்றுக் கொடுப்பார்கள் என்பதை அறிய ஆவலாக இருக்கிறேன். செய்முறை வகுப்புகள், ஆசிரியர் செய்யும் திருத்தங்கள், அவர்கள் தரும் குறிப்புகள் என்பவற்றைப் பார்த்துக் கற்றுக்கொண்டால் பதில் சொல்லலாமோ என்னவோ!
பதில் சொல்லும்போது ஏதாவது ஒரு படைப்போடு என் வாழ்வையும் இணைத்துச் சொன்னால் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறார்கள். பிறர் வாழ்வை ஜன்னல் வழியாகவேனும் எட்டிப் பார்க்கும் ஆசை எல்லோருக்கும் இருக்கிறது. புனைவில் காணும் வாழ்வு தரும் போதை போதுவதில்லை. அதை எதார்த்தத்தில் பொருத்திப் பார்த்தால் கொஞ்சம் நிறைவு ஏற்படும் போல. படைப்பு உருவாக்க முறைப்பாடு பற்றியும் கேள்விகள். அம்முறைப்பாட்டை வகைப்படுத்தி, வரிசைப்படுத்திக் காண்பதிலும் சொல்வதிலும் எனக்கு ஈடுபாடு இல்லை. சலிப்பையும் எரிச்சலையும் கொடுக்கும் வேலை அது. எனினும் சில சந்தர்ப்பங்களில் சொல்ல வேண்டி நேர்ந்துவிடுகிறது. அது விபத்துப் போல நல்ல கட்டுரையாகவும் அமைந்துவிடுகிறது. மேற்சொன்ன மனோபாவம் கொண்ட கேள்விகளுக்கு ஒருசேரச் சொல்லும் பதிலாகவும் இந்நூல் அமையும்.
இப்படி ஒருநூல் எழுத வேண்டும் என்னும் திட்டமில்லாமல் அவ்வப்போதைய தேவைகளை ஒட்டிப் படைப்பு உருவான பின்னணி குறித்து எழுதிய கட்டுரைகள் பல. ‘முதல் பிரசவம்’ என்னும் தலைப்பில் 1990களின் இறுதியில் ‘தினமணி கதிர்’ வார இதழில் ஒருதொடர் வெளியாயிற்று. கவிஞர் ராஜமார்த்தாண்டன் அதன் பொறுப்பில் இருந்தார். அவர் கேட்டு எழுதிய கட்டுரைதான் ‘மருதநாயகம் போட்ட தீனி.’ என் படைப்புகளின் பின்னணி குறித்து எழுதிய முதல் கட்டுரையும் அதுதான். அதன்பின் வெவ்வேறு சந்தர்ப்பங்கள். அவற்றை முடிந்த வரைக்கும் வரிசைப்படுத்த முயன்றிருக்கிறேன். எழுத்து வாழ்வின் தொடக்கம், சிறுகதைகள் சிலவற்றின் பின்னணி, ஏறுவெயில் தொடங்கி நாவல்கள் உருவான விதம், புத்தகங்களுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு, என் ஊரும் பள்ளியும் என்றெல்லாம் ஒருவகை வரிசை இதற்குள் உருவாகி இருக்கிறது. அதேசமயம் எந்த வரிசையையும் பின்பற்றாமல் தனித்தனிக் கட்டுரையாகவும் வாசிக்கலாம்.
என் வாழ்வைப் பற்றியும் படைப்புகளைக் குறித்தும் மெலிதான வரைகோடு ஒன்றை இதன் மூலம் வாசகர் பெற முடியும். பெரும்பாலான கட்டுரைகளுக்கு வெளியான விவரம் கொடுத்திருக்கிறேன். சிலவற்றுக்குக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆங்கில இதழ்கள் சிலவற்றுக்கு எழுதிக் கொடுத்து அவை வெளியாகும் போது குறித்து வைக்காமல் விட்டிருப்பேன். எனினும் எல்லாக் கட்டுரைகளும் ஏதேனும் ஒரு தேவையை ஒட்டிப் பிறர் கேட்டதால் எழுதியவைதான். சில நூல்களுக்கு எழுதிய முன்னுரைகளும் உள்ளன. மலையாளத்தில் வெளியான சிறுகதைத் தொகுப்புகளுக்கான முன்னுரைகள் தமிழில் வெளியாகவில்லை என்பதால் இத்தொகுப்பில் சேர்த்துள்ளேன்.
இவற்றைக் கேட்டு வாங்கிய நண்பர்கள், வெளியிட்ட இதழ்கள் அனைவருக்கும் நன்றி. நூலை வெளியிடும் காலச்சுவடு பதிப்பகத்திற்கும் நண்பர் கண்ணனுக்கும் என் அன்பு.
26-11-24
நாமக்கல் பெருமாள்முருகன்.
நூல் விவரம்: பாதி மலையேறுன பாதகரு, 2024, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், விலை ரூ.240/-
—– 16-12-14
Add your first comment to this post