வாசகருக்கு வழிகாட்டும் பதிப்பு 2

You are currently viewing வாசகருக்கு வழிகாட்டும் பதிப்பு 2

நாட்குறிப்பிலிருந்து சில சொற்களைப் பார்க்கலாம்.

‘இனிமேல் உம் மீது சண்டை போட்டுக் கத்தி எடுப்பதில்லை என்று நாம் உமக்கு வார்த்தைப்பாடு கொடுக்கச் சொல்கிறோம்’ (ப.192). இதில்  ‘வார்த்தைப்பாடு’ என்னும் சொல் இன்றைய வழக்கில் ‘உறுதிமொழி’ என்பதைக் குறிக்கிறது. உறுதிமொழி எப்போது வழக்கிற்கு வந்தது? உறுதி என்னும் சொல் பலபொருள் குறிப்பதாக இரண்டாயிரம் ஆண்டு வரலாறு கொண்டது. அதனுடன் ‘மொழி’ சேர்ந்து ‘உறுதிமொழி’ ஆனது எப்போது? தமிழ்ப் பேரகராதியில் உறுதிமொழி இடம்பெற்றிருந்தாலும் ‘காண்க: உறுதிச்சொல்’ என்று கொடுத்துள்ளனர். உறுதிச்சொல் என்பதும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வழக்கில் இருந்துள்ளது எனத் தெரிகிறது. எழுத்துச் சான்றை அகராதி தரவில்லை. ஆகவே பழையானது என்று சொல்ல முடியாது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் அல்லது இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் வழக்கிற்கு வந்திருக்க வேண்டும்.  ‘வார்த்தைப்பாடு’ என்னும் சொல்லை ஆனந்த ரங்கப்பிள்ளை உருவாக்கினாரா? அக்காலத்தில் அது வழக்கில் இருந்ததா?

‘அப்பால் துரையவர்கள் கோன்சேல் முடித்து தே குடித்து முடித்த பின்பு நான் போய்ச் சேதிகளைச் சொல்லிவிட்டு என் கச்சேரியே வந்தேன்’ (ப.339) என்று எழுதுமிடத்தில் வரும் ‘தே’ என்ன? பதிப்பாசிரியர்கள் ‘தே (நீர்)’ என்று அடைப்புக்குள் ‘நீர்’ போட்டு விளக்கியுள்ளனர். தேயிலை என்பதில் வரும் ‘தே’ எதைக் குறிக்கிறது? Tea என்பதைத்தான் ‘தே’ ஓரெழுத்து ஒருமொழியாக நின்று தெரிவிக்கிறது. அப்படியானால் தேநீர் என்று நாம் இன்று வழங்குவதில் பாதி ஆங்கிலம், பாதித்தமிழ் என்றாகிறது. ஒருவேளை ‘தேன் போன்ற நீர்’ என நிறத்தை அடிப்படையாகக் கொண்டு இப்போது விளக்கம் சொல்லலாம்.

கொள்ளையடித்தலைச் ‘சோறாவாரி பண்ணுதல்’ என்று குறிப்பிடுகிறார். இச்சொல் எங்கிருந்து வந்திருக்கும்? மோதல் என்பதை ‘பிகாடிச்சு’ என்கிறார். என்ன மொழி இது? ‘பீந்திக்கூந்தல்’ என்று ஓரிடத்தில் எழுதுகிறார். அதற்குப் ‘பயக்கூச்சல்’ எனப் பதிப்பாசிரியர்கள் பொருள் தந்துள்ளனர். அதென்ன பீந்திக்கூந்தல்? தபால்காரரை ‘அறுக்காறு’ என்கிறார். இப்படி ஒரு சொல்லை எங்கே கண்டுபிடித்தார்?

நாட்களின் பெயர்களைக் குறிக்கும்போது சோமவாரம், அங்காரக வாரம், புதவாரம், குருவாரம், சுக்கிரவாரம், சனிவாரம், ஆதிவாரம் என்றுதான் எழுதுகிறார். இவ்வழக்கம் அக்காலத்தில் ஆதிக்க சாதியினரிடம் இருந்ததா? எழுதப் படிக்கத் தெரிந்தோரிடம் மட்டும் வழங்கியதா?

ஆங்கில சொற்களை எழுதும் விதத்திலும் இன்றைய காலத்தோடு ஒப்பிட்டால் வேறுபாடுகள் அதிகம். அரசு அமைப்பில் இடம்பெற்றிருந்தவர் என்பதால் நிர்வாகச் சொற்கள் பல இடம்பெற்றுள்ளன. அவற்றில் ஆங்கிலம், பிரெஞ்சு, உருது, அரபி எனப் பலமொழிச் சொற்கள் கலந்திருக்கின்றன. அவற்றில் இன்றும் சில நிலைபெற்றிருக்கின்றன. பல சொற்கள் மாறிவிட்டன.

இதுபோல நாம் அறியாத எத்தனையோ சொற்கள் இதில் புழங்குகின்றன. அவற்றைக் குறித்து ஆராயவும் அறியவும் வேண்டும். இது போல மொழி சார்ந்தும் பிற துறைகள் சார்ந்தும் பல ஆய்வுகள் செய்யலாம்.

புதுவை அரசின் கலைப்பண்பாட்டுத் துறை வெளியிட்டுள்ள பதிப்புக்கும் இந்தப் பதிப்புக்கும் உள்ள வேறுபாடுகளைப் பதிப்பியல் நோக்கில் ஒப்பு நோக்கிக் காணவும் வேண்டும். 1736 செப்டம்பர் 6 அன்றுதான் இந்த நாட்குறிப்பு தொடங்குகிறது. அம்முதல் நாள் குறிப்பில் வரும் மூன்று தொடர்களை மட்டும் காண்போம்.

‘நாளது மத்தியானத்துக்கு மேல் நாலரை மணிக்கு முசே துமெலியோ – முசே துமாஸ் குவர்னர் துரையண்டைக்குப் போய் முசே துளோராம் எனக்குப் பிறகு கையெழுத்துப் போடுகிறதானால் நானிந்த உத்தியோகத்திலே யிருப்பேன்; இல்லாவிட்டால் எனக்கு முன்னே அவன் கையெழுத்துப் போடுகிறதானால் எனக்கு கும்பனியார் உத்தியோகம் கவலையில்லையென்று சொன்னான். அதுக்கு துரையிருந்து சொன்ன உத்தரம்: கும்பனியார் எழுதியனுப்பினபடிக்கு நான் நடப்பிக்க வேணுமேயல்லாமல் அதைத் தள்ளி நடத்துகிறது எனக்கு ஞாயமில்லை என்று சொன்னார்’ (அரசுப் பதிப்பு, ப.2)

‘அன்று மத்தியானத்துக்கு மேல் நாலரை மணிக்கு முசே துமெலியோ (M.Dumeslier),  முசியே துமாஸ் (M.Dumas), குவர்னர் துரையிடம் போனார்கள். “முசே துலேராம் எனக்குப் பிறகு (…) கையெழுத்துப் போடுவதாக இருந்தால் மாத்திரம் நான் உத்தியோகம் ஏற்பேன். எனக்கு முன்னே அவன் கையெழுத்துப் போடுவான் என்றால் எனக்கு கும்பனிர் கோன்சேல் உத்தியோகம் தேவையில்லை” என்று சொன்னான். அதற்கு துரை “கும்பனிர் எழுதியனுப்பினபடி நான் நடப்பிக்க வேண்டுமே தவிர அதைத் தள்ளி நடத்துவது ஞாயமில்லை” என்று சொன்னார் (அகநிப் பதிப்பு, ப.33).

வாசகருக்கு வழிகாட்டும் பதிப்பு 2

இவ்விரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தால் அகநிப் பதிப்பு எவ்வளவு எளிமைப்பட்டிருக்கிறது என்று தெரியும். ஆனந்த ரங்கப்பிள்ளையின் நடையில் செய்யுள் போலச் சந்தி காணப்படுகிறது. அகநிப் பதிப்பில் சந்தி பிரித்துள்ளனர். அக்கால வழக்குச் சொற்கள் பலவற்றுக்குப் பதிலியாக இக்காலச் சொற்கள் இடம்பெற்றுள்ளன. நாளது – அன்று என ஆகியுள்ளது. தொடர்ப்பிரிப்பும் செய்துள்ளனர். இன்றைய வாசகரை மனதில் கொள்ளும்போது இத்தகைய மாற்றங்கள் தேவைப்படுகின்றன. ஒப்பீட்டு ஆய்வு செய்யப் பதிப்பாய்வாளர்களுக்குச் சுவை கொண்ட தரவுகளையும் இப்பதிப்பு வழங்குகிறது.

பொதுவாசகருக்கு ஏற்ற வகையில் முடிந்தவரைக்கும் எளிமைப்படுத்தி இப்பதிப்பைச் செய்துள்ளனர். இருபது பக்கம் பதிப்புரை இருக்கிறது.  எனக்கு அது போதவில்லை. ஐம்பது பக்கமாவது எழுதியிருக்கலாம். தாம் கைக்கொண்ட பதிப்பு நெறிமுறைகள் குறித்து நல்ல சான்றுகளுடனும் பதிப்பிக்கும் போது தாம் எதிர்கொண்ட சிக்கல்களை எடுத்துக்காட்டுகளுடனும் விவரித்து இன்னும் விரிவான பதிப்புரை எழுதியிருக்கலாம். அது வாசிப்போருக்குச் சுவை கூட்டியிருக்கும். எதுவும் இல்லாத இடத்தில், எளிமையாக வாசிக்க இயலாத நிலையில் அவற்றைச் சாத்தியப்படுத்தி முதல்முதல் தமிழ்நாட்டிலிருந்து ஒரு பதிப்பை வெளிக்கொண்டு வந்திருக்கும் பதிப்பாசிரியர்களும் உதவியோரும் பெரிதும் போற்றத்தக்கவர்கள்.

—– 11-04-25

(அ.வெண்ணிலாவின் படைப்புகள் பற்றிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பாகிய ‘ஆனந்தத்தின் எல்லையற்ற பொயகை’ என்னும் நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரை. நூல் வெளியீடு: விப்ராஸ் பதிப்பகம், சென்னை, 2025.)

Add your first comment to this post