பெரியார் பித்தலாட்டமா?

You are currently viewing பெரியார் பித்தலாட்டமா?

 

சென்னையில் நடைபெற்று முடிந்த 49ஆவது புத்தகக் கண்காட்சியில் வெளியான சில நூல்கள் அரசியல் ரீதியாகக் கவனத்தை ஈர்த்ததோடு பெரும்விவாதத்தையும் ஏற்படுத்தின. அவற்றில் இரண்டு நூல்கள் மொழிப்போர் பற்றியவை. இரண்டையும் வெளியிட்டது ‘நாம் தமிழர்’ கட்சி சார்புடைய  ‘தமிழம் பதிப்பகம்.’ திராவிட இயக்க அரசியலுக்கும் தமிழ்த் தேசியம், இந்திய தேசியம் ஆகிய அரசியல் சக்திகளுக்கும் இடையே நடைபெற்று வரும் போராட்டத்தில் இந்நூல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.

ஈழத்துச் சிவானந்த அடிகள் எழுதிய ‘இந்தி எதிர்ப்புப் போரில் ஈவெரா பித்தலாட்டம்’ என்பது ஒருநூல். ஈழத்தடிகள், ஈழத்து அடிகள், கருவூர் ஈழத்து அடிகள், ஈழத்துச் சிவானந்த அடிகள் என்றெல்லாம் பெயர் காணப்படும் ஈழத்து அடிகள் 1965இல் எழுதிய ‘இந்தி எதிர்ப்பு அன்றும் – இன்றும்’ என்னும் நூலே இதன் மூலம் ஆகும். தமிழம் பதிப்பகம் வெளியிட்டுள்ள இன்னொரு நூல் மறைமலையடிகள் எழுதிய ‘முதலாம் இந்தி எதிர்ப்புப் போர்: தொடங்கியது யார்?’ என்னும் தலைப்புடையது. இதன் மூலம் மறைமலை அடிகள் 1937இல் எழுதிய ‘இந்தி பொதுமொழியா?’ என்னும் நூல்.

இரண்டு நூல்களின் தலைப்பையும் மாற்றி வெளியிட்டிருக்கிறார்கள் என்று மிக நாகரிகமாகச் சொல்லலாம். உண்மையில் தலைப்புகளைத் திரித்து வெளியிட்டிருக்கிறார்கள். ஈழத்து அடிகளின் நூல் கிரௌன் அளவில் 45 பக்கங்கள் கொண்டது. அதில் கிட்டத்தட்ட இருபது முறையேனும் பெரியார் பெயரைக் குறிப்பிட்டிருப்பார். எல்லா இடத்திலும்  ‘பெரியார் இராமசாமி அவர்கள்’ என்றே எழுதுகிறார். ஓரிரு இடத்தில்  ‘பெரியார் ஈ.வே.இராமசாமி’ என்கிறார். தனித்தமிழ் ஈடுபாடு கொண்டவர் ஈழத்து அடிகள் என்பதால்  ‘ராமசாமி’ என்று எழுதாமல் ‘இராமசாமி’ என்றே எழுதுகிறார். பெரியார் என்பதையும் தவிர்க்கவில்லை. ‘அவர்கள்’ என்னும் அடைமொழியையும் தவிர்க்கவில்லை.

ஆனால் ‘தமிழம்’ வெளியிட்டுள்ள நூலின் தலைப்பிலேயே   ‘ஈவெரா’ என்றிருக்கிறது. பெரியாரின் தந்தை பெயர் ‘வெங்கட்ட நாயக்கர்’ எனினும்  ‘வேங்கடம்’ என்பதே சரி என்பதால் ஈ.வே.இராசாமி என்றுதான் முன்னெழுத்தைப் போடுகிறார் ஈழத்து அடிகள். பெரியார் கொள்கைகளையும் அவர் பெயரையும் அழித்தொழிக்காமல் தம் அரசியலை நிலைநிறுத்திக் கொள்ள முடியாது என்பதால் தமிழ் தேசியம், இந்திய தேசியம் ஆகிய அரசியலைத் தம் வழிமுறையாகக் கொண்டிருக்கும் கட்சிகள் அனைத்தும் பெரியாருக்கு எதிராக அணிவகுத்து நிற்கின்றன. அதற்கு எத்தகைய இழிவான வழிமுறைகளைக் கையாளவும் தயங்குவதில்லை. நூல்களைத் திரித்து வெளியிடுவது அவற்றில் ஒன்று. மூல நூலில் ஆசிரியர் பெயர் ‘ஈழத்து அடிகள்’ என்றுள்ளது. அதை ‘ஈழத்துச் சிவானந்த அடிகள்’ என்று மாற்றியுள்ளனர்.

தலைப்பு, பெயர் மட்டுமல்ல, ஈழத்து அடிகள் கொடுத்திருந்த உட்தலைப்புகள் சிலவற்றையும் மாற்றியுள்ளனர். குறிப்பாகப் பெரியார் பற்றிய பகுதிகளின் தலைப்புகள். உள்தலைப்பே இல்லாத ஓரிடத்தில் ‘பெரியார் இராமசாமியின் எதிர்நிலை’ என்று இவர்களாகவே தலைப்புக் கொடுத்துள்ளனர்.  ‘மறியல் துவங்கியது’ என்பது ஈழத்து அடிகள் கொடுத்த தலைப்பு. அதில்  ‘மறியல் துவங்கியது பெரியாரின் சண்டித்தனம்’ எனப் பெரியாரைச் சேர்த்துள்ளனர். மூலத்தில் ‘செயல் இங்கே புகழ் அங்கே’ என்றிருக்கும் உட்தலைப்பு ‘பெரியாரின் பித்தலாட்டம்’ என்றாகியுள்ளது.  ‘பெரியாரின் இந்தி எதிர்ப்பு’ என்னும் தலைப்பு ‘பெரியாரின் இந்தி எதிர்ப்பு வேடம்’ எனச் சேர்க்கை பெற்றிருக்கிறது.

பெரியார் பித்தலாட்டமா?

முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்குப் பின் திராவிட இயக்க அரசியலில் ஈடுபட்ட ஈழத்து அடிகள் ‘இந்து மதம் தமிழர் மதமா?’, ‘பெரியபுராண ஆராய்ச்சி’ ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார். அறிஞர் அண்ணாவுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தார். அண்ணா நடத்திய ‘திராவிட நாடு’ இதழ் அலுவலகப் பொறுப்பை ஏற்றுப் பல்லாண்டுகள் செயல்பட்டிருக்கிறார். அப்படிப்பட்டவர்  ‘இந்தி எதிர்ப்பு அன்றும் இன்றும்’ என்னும் நூலை எழுத என்ன காரணம்? அண்ணாவுடன் மனக்கசப்பு ஏற்பட்டு 1964 வாக்கில் பிரிந்திருக்கிறார். 1965ஆம் ஆண்டு இரண்டாம் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றுள்ளது. முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடங்கியவர் அல்லது முக்கியப் பங்களித்த அவருக்கு இரண்டாம் எதிர்ப்புப் போராட்டத்தில் எந்தப் பங்கும் இல்லாத நிலை. எனவே தம் பங்களிப்பை விளக்கி எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இரண்டாம் போராட்டத்தில் அண்ணா முன்னிலை பெற்றதை அவரால் ஏற்றுக்கொள்ளவும் இயலவில்லை. இவ்விரண்டின் வெளிப்பாடுதான் இந்நூல்.

இரண்டு போராட்டங்களுக்கும் கிட்டத்தட்ட முப்பதாண்டு இடைவெளி. அதற்குள் நடைபெற்ற அரசியல் மாற்றங்கள் பல. திராவிட முன்னேற்றக் கழகத்தை அண்ணா தொடங்கி அது எதிர்க்கட்சியாக வளர்ந்திருந்தது. ‘திராவிட நாடு’ இதழ்ப் பணியில் இருந்த ஈழத்து அடிகள் இந்த அரசியல் வளர்ச்சியை ஆரோக்கியமானதாகப் பார்க்கவில்லை. அரசியல் தலைவராக அவர் உருவாகவும் இல்லை. ஆகவே 1938இல் தாம் தொடங்கிய போராட்டம் தன்னலமற்றது எனவும் அதைப் பெரியாரும் அண்ணா உள்ளிட்ட திராவிட இயக்கத்தவரும் பயன்படுத்திக் கொண்டனர் எனவும் 1965இல் நடைபெறும் போராட்டம் முழுக்க முழுக்க அரசியல் சார்பானது எனவும் மதிப்பிட்டார். முதல் போராட்டத்தில் தம் பங்கு மறைக்கப்படுகிறது என்று உணர்ந்தார். அதை நிலைநிறுத்தும் வகையில் இந்நூலை உருவாக்கினார்.

தம் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் சிறுமுன்னுரை, ஈழத்து அடிகளின் பங்கு பணியை விதந்தோதும் ‘அணிந்துரைகள்’ (இது தமிழம் வெளியீட்டில் ‘சான்றோர் உரைகள்’ என்றுள்ளது), நூலை வெளியிட்ட ‘தென்றல் திரை’ இதழ் ஆசிரியரின் ‘அறிமுகம்’ ஆகியவை நூலின் முன்பகுதியில் உள்ளன. பின்னர் ஈழத்து அடிகள் எழுதிய நூல் பகுதி உள்ளது. அணிந்துரைகளில் மறைமலையடிகள், சோமசுந்தர பாரதி, C.D.நாயகம், சோ.சிவஞான தேசிகர், உமாமகேசுவரன், வெங்கடசாமி (நாட்டார்), நாரணதுரைக்கண்ணன், அருணகிரி அடிகள், சண்முகானந்த அடிகள் ஆகியோர் அவ்வப்போது எழுதியவை கொடுக்கப்பட்டுள்ளன. இராஜாஜின் கூற்று ஒன்றும் இடம்பெறுகிறது. நாவலர் இரா.நெடுஞ்செழியன்  ‘மன்றம்’ இதழில் எழுதிய பகுதி ஒருபக்கம் முழுவதும் கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்தும் ஈழத்து அடிகளின் பங்களிப்பை ஏதோ ஒருவிதத்தில் எடுத்துச் சொல்பவை.

தலைப்பை மாற்றித் தமிழம் பதிப்பகம் வெளியிட்ட இந்நூலைப் புத்தகக் கண்காட்சியில் விற்கக் கூடாது என்று காவல்துறை மிரட்டியதாகவும் படிகளைப் பறிமுதல் செய்ததாகவும் சமூக ஊடகப் பதிவுகள் சிலவற்றைக் கண்டேன். அது எந்தளவு உண்மை என்று தெரியவில்லை. அத்தகைய காணொலிப் பதிவு எதுவும் என் பார்வைக்குக் கிடைக்கவில்லை. நண்பர் ஒருவர் மூலமாகத் தமிழம் பதிப்பகக் கடையில் நூல் படியை வாங்கினேன். காட்சிக்கு வைத்திருக்கவில்லை எனவும் நூற்பெயர் சொல்லிக் கேட்போருக்கு மட்டும் மறைவிலிருந்து எடுத்துத் தருகிறார்கள் என்றும் நண்பர் சொன்னார். இந்நூல் வெளியீட்டுக்குப் பெரியார் ஆதாரவாளர்களின் எதிர்ப்பு அத்தனை வலுவாக இருந்ததா என்பது தெரியவில்லை. அப்படி எதிர்க்க வேண்டிய அவசியம் சிறிதும் இல்லை.

ஈழத்து அடிகளின் மூல நூலை இணையத்தில் எளிதாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அத்தகவலைப் பெரியாரியர்கள் பரப்பியிருக்க வேண்டும். அல்லது மூலநூலை பொருத்தமான முன்னுரையோடு அச்சிட்டு விநியோகித்திருக்கலாம். இலவசமாகக் கூட வழங்கியிருக்கலாம். தமிழம் வெளியீட்டில் நேர்ந்திருக்கும் திரிபுகளை எடுத்துக் காட்டியும் முதல் இந்தி எதிர்ப்புப் போரில் பெரியார் பங்களிப்பின் இடம் எத்தகையது என்பதை விளக்கியும் ஈழத்து அடிகளின் நூல் எழுந்த பின்னணி பற்றிக் கூறியும் ஒருமுன்னுரை மட்டும் எழுதிச் சேர்த்திருந்தால்  போதுமானது. இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை.  சிலவற்றைச் செய்யலாம்.

அரசியல் இயக்கங்கள் தம் அன்றாடத்தில் கவனம் செலுத்தும் அளவு வரலாற்றுப் பதிவில் கவனம் கொள்வதில்லை. வரலாற்றைப் பேசினாலும் தம் தேவைக்கு ஏற்பவும் தம் அரசியல் நலனுக்கு உகந்த வகையிலும் மட்டும் எடுத்துப் பேசுகின்றன. சிலசமயம் அவை மிகைப்படுத்தலாகவும் இருக்கும். வரலாற்று அறிஞர்கள், ஆய்வாளர்கள்தான் நிதானமான வகையிலும் (சார்புகள் இருப்பினும்) ஆதாரப்பூர்வமாகவும் வரலாற்றை எழுத முடியும். வைக்கம் போராட்டத்தில் பெரியார் பங்கு பற்றிப் பலவிதமான கருத்துக்கள் நிலவி வந்த சூழலில் அதை ஆராய்ந்து பழ.அதியமான் எழுதிய ‘வைக்கம் போராட்டம்’ தெளிவைத் தருவதாக அமைந்தது. அதில் பங்கேற்ற தலைவர்கள் தொடங்கித் தொண்டர்கள் வரைக்கும் பலரது பங்களிப்புக்கும் உரிய இடமளித்துப் பெரியாரின் இடம் எத்தகையது என்பதை ஆதாரத்தோடு காட்டிய நூல் அது. அது போல முதல் மொழிப்போருக்கு ஓர் ஆய்வு நூல் அவசியம்.

அப்படி ஒருநூலை ஒருவர் எழுதினால் ஈழத்தடிகளின் இந்நூல் தகவல்களும் பெரிதும் பயன்படும். அதாவது இது சான்றாதார நூல்களில் ஒன்றாக விளங்கும். முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடங்கியது தாம்தான் என்று நிலைநாட்ட விரும்பும் ஈழத்து அடிகள் 1937இல் மறைமலை அடிகள் எழுதிய ‘இந்தி பொதுமொழியா?’ என்னும் நூலைப் பதினையாயிரம் படிகள் அச்சிட்டு இலவசமாக வழங்கியுள்ளார். அதைத் தான் தமிழம் பதிப்பகம் ‘முதலாம் இந்தி எதிர்ப்புப் போர்: தொடங்கியது யார்?’ எனத் தலைப்பை மாற்றி இப்போது பதிப்பித்துள்ளது. ஈழத்தடிகளின் நூலிலாவது ‘இதன் விளைவு பிறகு இந்தி எதிர்ப்புக்குப் பெரியார் இராமசாமி அவர்கள்தான் முதல்வர் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இது ஒரு பெரிய பித்தலாட்டமும் கொடுமையுமாகும்’ என்று எழுதியுள்ளார். ஆகவே ‘பித்தலாட்டம்’ என்று தலைப்பிட்டிருக்கிறார்கள் எனச் சமாதானமாவது சொல்லலாம். மறைமலை அடிகள் நூலுக்கு ஒரு விழுக்காடும் பொருந்தாத தலைப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.

மறைமலை அடிகள் எழுதியதைப் போலவே சோமசுந்தர பாரதியார் ‘இந்தி கட்டாயப் பாடமா?’ என்னும் தலைப்பில் சிறுநூல் ஒன்றை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். அதைத் தமிழில் மொழிபெயர்த்துப் பதினையாயிரம் படிகள் அச்சிட்டு இலவசமாக விநியோகித்தவரும் ஈழத்து அடிகள்தான். மறைமலை அடிகள், சோமசுந்தர பாரதியார் ஆகியோர் பங்களிப்பும் இந்தி எதிர்ப்பில் இருந்துள்ளது என்பது உறுதி. அறிவாளர்களான இவர்கள் தொடங்கிய இந்தி எதிர்ப்பு பெரியாரின் தலையீட்டால் வெகுஜனப் போராட்டமாக மாறியிருக்கிறது. அதை ஈழத்து அடிகளே இவ்வாறு குறிப்பிடுகிறார்: ‘…இந்தி எதிர்ப்பைத் தோற்றுவித்த நானும் மற்ற இரு துறவிகளான அருணகிரி அடிகளும் சண்முகானந்த அடிகளும் சிறை சென்றுவிடவே படிப்படியாக இந்தி எதிர்ப்புப் போரைப் பெரியார் இராமசாமி அவர்களே ஏற்று நடத்தும் நிலை உருவாகியது. எல்லாம் அவருடைய விருப்பப்படி நடைபெற்று வந்தது.’

போராட்டத்தில் பெண்கள் பலர் சிறை சென்றனர். அதைப் பற்றி நிவேதிதா லூயிஸ் ‘முதல் இந்தி எதிர்ப்புப் போரில் பெண்கள்’ என நூல் ஒன்றை எழுதியுள்ளார். போராட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான பெண்கள் திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். 105 பெண்கள் கைதானதாக ஈழத்து அடிகள் தகவல் தருகிறார். மொத்தமாக 1247 பேர் சிறை சென்றதாகவும் அவரே கூறுகிறார். பெரியாரின் தலையீட்டால் தான் பெரும்போராட்டமாக மாறியிருக்கிறது என்பதில் ஐயமில்லை. ஆகவே இப்போராட்டம் பற்றி இன்னும் விரிவான ஆய்வுகள் அவசியம்.

பெரியார் பித்தலாட்டமா?

இதுவரைக்கும் வந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றிய பதிவுகளில் மறைமலை அடிகள், ஈழத்து அடிகள், சோமசுந்தர பாரதியார் ஆகியோர் பெயர்கள் குறிப்பிடப்பட்டே வருகின்றன. யாரும் மறைத்ததாகத்  தெரியவில்லை. அண்ணாவிடம் இருந்து விலகும் வரையில் ஈழத்து அடிகளுக்கும் தம் பெயர் மறைக்கப்பட்டதாகத் தோன்றியிருக்க வாய்ப்பில்லை. முதல் இந்தி எதிர்ப்புப் போர் முடிவடைந்த ஓரிரு ஆண்டுக்குள்ளாக 1941இல் அவர் எழுதிய  ‘பெரியபுராண ஆராய்ச்சி’ நூலின் முன்னுரையில் பெரியாரைப் பற்றி இப்படி எழுதுகிறார்:

‘தமிழ்நாடு தனியாகப் பிரிக்கப்பட வேண்டுமென்ற கிளர்ச்சியைத் துவக்கி, அதன் பொருட்டு ஓயாது உழைத்து வரும் தமிழ் மக்களின் தன்மதிப்பியக்கத் தலைவரும் திராவிட மக்கள் அனைவருடையவும் அரசியல் தலைவராயும் இருந்து வருபவரான தோழர் ஈ.வெ.இராமசாமிப் பெரியார் அவர்கள்…’ (ப.x).

1941இல் பெரியார் மீது இத்தகைய மதிப்பீடு கொண்டிருந்த ஈழத்து அடிகள் 1965இல் மாறியதற்கு அப்போதைய அவரது நிலைதான் காரணம்.  ‘இந்தி எதிர்ப்பு அன்றும் இன்றும்’ நூலை அவர் எழுதிய பிறகு 1973இல்  ‘பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்’ மூலமாக  ‘பெரியபுராண ஆராய்ச்சி’ நூல் மறுபதிப்பாக வெளிவந்துள்ளது. அதன் அட்டையிலும் தலைப்புப் பக்கத்திலும் ‘இது கருவூர் அறிவுதயக் கழகத் தலைவரும் ’இந்து மதமும் தமிழரும்’ நூலின் ஆசிரியரும் முன்னாள் – இந்தி எதிர்ப்புத் தனி ஆணையாளரும் (சர்வாதிகாரியும்) தமிழ்த் தொண்டருமான கருவூர் ஈழத்து அடிகளால் இயற்றப்பட்டது’ என விளக்கமாக அவர் பெயர் இடம்பெற்றுள்ளது. பெரியார் இறப்புக்கு முன் வெளியான நூல் இது. அப்போது பெரியார் பற்றிய ஈழத்து அடிகளின் கருத்து மாறிவிட்டது. முதல் இந்தி எதிர்ப்புப் போரில் ஈழத்து அடிகளின் பங்களிப்பைப் பெரியார் அங்கீகரித்திருந்தார் என்பதற்கும் இதுவே சான்று.

‘இந்தி எதிர்ப்பு அன்றும் இன்றும்’ நூலின் இறுதிப் பக்கத்தில் முதல் இந்தி எதிர்ப்புப் போர் வரலாற்றைப் ‘புனிதப் போர்’ என்னும் தலைப்பில் தாம் எழுதியிருப்பதாகவும் அச்சில் 300 பக்கம் வரும் எனவும் அதற்கு அன்பளிப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கும் செய்தி ஒன்று காணப்படுகிறது. அவர் எழுதிய நூல் வெளியானதாகத் தெரியவில்லை. அவர் எண்ணத்தை நிறைவேற்றும் வகையிலேனும் அப்படி ஒருநூல் வெளிவர வேண்டும். வந்தால் ஈழத்து அடிகளின் நூல் பின்னணியும் பெரியார் பித்தலாட்டம் செய்தாரா இல்லையா என்பதும் ஆதாரத்தோடு வரலாறாகும்.

பயன்பட்ட நூல்கள்:

  1. ஈழத்து அடிகள், இந்தி எதிர்ப்பு அன்றும் – இன்றும், 1965, தென்றல் திரை.
  2. ஈழத்து அடிகள், பெரியபுராண ஆராய்ச்சி, 1973, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு, திருச்சி.
  3. மறைமலை அடிகள், இந்தி பொதுமொழியா?, 1971, கழக வெளியீடு, சென்னை, மறுபதிப்பு.
  4. ஈழத்துச் சிவானந்த அடிகள், இந்தி எதிர்ப்புப் போரில் ஈவெரா பித்தலாட்டம், 2026, தமிழம் பதிப்பகம், தஞ்சாவூர்.
  5. மறைமலை அடிகள், முதலாம் இந்தி எதிர்ப்புப் போர்: தொடங்கியது எப்படி?, 2026, தமிழம் பதிப்பகம், தஞ்சாவூர்.

—–   25-01-26

(மொழிப்போர் தியாகிகள் தினத்தை ஒட்டி வெளியாகும் இது கரட்டு வடிவமே. இன்னும் செம்மைப்படுத்த வேண்டும்.)

Add your first comment to this post