மலாயாவில் பெரியார்

You are currently viewing மலாயாவில் பெரியார்

 

கோலாலம்பூரில் 21-12-25 ஞாயிறு அன்று  நடைபெற்ற ‘வல்லினம் விருது வழங்கும் விழா’வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க இம்மாதம் மலேசியா சென்றிருந்தேன். விழாவில் பங்கேற்றோர் மூலமாக நான் வந்திருக்கும் செய்தியை அறிந்த தோழர் கோவிந்தசாமி முனுசாமி அவர்கள் அன்று இரவு பதினொரு மணிக்குச் செய்தி அனுப்பியிருந்தார். விழா நிறைவை நண்பர்களோடு கொண்டாடிவிட்டுத் தாமதமாக அறைக்கு வந்ததும் அவர் செய்தியைப் பார்த்து அழைத்தேன். மறுநாள் காலை சந்திக்க முடியுமா என்று கேட்டார். காலை எட்டுமணிக்கு வர முடிந்தால் சந்திக்கலாம் என்றேன். அப்படியே அவரும் தோழர் தமிழ் வேந்தனும் வந்தனர்;  சந்தித்தோம்.

பெரியார் பன்னாட்டு அமைப்பின் மலேசியத் தலைவராகவும் தோட்ட நிர்வாகிகள் மன்றத்தின் தலைவராகவும் இருக்கிறார் கோவிந்தசாமி. மலேசியாவில் திராவிடர் இயக்கச் செயல்பாடுகள் பற்றிய பல தகவல்களைக் கைவசம் வைத்திருக்கிறார்.  ‘The Dravidian Movement in Malaysia’ என்னும் தலைப்பில் விரிவான குறிப்புகளைத் தயார் செய்திருக்கிறார். கொஞ்ச காலம் முன்னால் மலேசியா முழுவதுமாகத் திராவிடர் கழகம் நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டிருந்ததாம். இப்போது முப்பத்தைந்தாகக் குறைந்திருக்கிறது. இளைஞர்கள் இத்தகைய இயக்கங்களுக்கு இன்று வருவதில்லை என்று அவர் வருந்தினார்.

வெளிநாடுகளிலும் திராவிடர் கழகம் சார்பாக நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு இந்துத்துவவாதிகள் பெருந்தடையாக இருக்கிறார்கள். அரசுகள் அனுமதித்தாலும் அவதூறு பரப்புதல், எதிர்ப்பைத் தூண்டுதல், அச்சுறுத்தல் எனப் பல வழிகளில் நெருக்கடி தருகிறார்கள். கருத்துரிமைக்கு எதிரான செயல்பாடுகளில் இந்தியர்கள் இருக்கும் எல்லா நாடுகளிலும் இந்துத்துவர்கள் வன்மையாக ஈடுபடுகிறார்கள்.  ‘பிரச்சினை எதற்கு?’ என்னும் மனோபாவத்தில் அரசுகள் நினைக்கின்றன. ஆகவே சிறு எதிர்ப்பு வந்தாலே அந்நிகழ்வுகளைத் தவிர்க்க விரும்புகின்றன. மலேசியாவிலும் அதுதான் நிலைமை.

தோழர் கோவிந்தசாமி பல செயல்பாடுகளோடு நூல்களையும் வெளியிடுகிறார். புலவர் குழந்தை எழுதிய திருக்குறள் உரை நூலை வெளியிட்டு மலேசியத் தமிழ்ப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்குகிறார். அவர்  ‘மலாயாவில் பெரியார்’ என்னும் சிறுநூலைச் சமீபத்தில் மறுபதிப்பாக்கி உள்ளார். எங்கள் சந்திப்பின் போது இருநூல்களையும் எனக்கு வழங்கினார். கி.வீரமணி தொகுத்த ‘மலேசியா சிங்கப்பூரில் பெரியார்’ என்னும் நூலும்  க.விநாயகம் (கவி) எழுதிய ‘மலாயா தமிழ் முன்னோடிகளும் பெரியார் வருகையும்’ என்னும் நூலும் தமிழ்நாட்டில் வெளியாகியுள்ளன. பெரியாரின் மலேசியப் பயணத்தைப் பற்றிய தகவல்களையும் அவர் உரைகளையும் தரும் இந்நூல்களுக்கு எல்லாம் முற்பட்டது ‘மலாயாவில் பெரியார்.’ ஆகவே இது அரிய ஆவணமாகத் திகழ்கிறது.

மலாயாவில் பெரியார்

1929, 1954 என இருமுறை மலேசியாவுக்குப் பெரியார் சென்றுள்ளார். அப்போது மலேசியா, சிங்கப்பூர் ஆகியவை சேர்ந்திருந்தன. ‘மலாயா’ என்னும் பெயரில் அப்போது அழைக்கப்பட்டது. அதனால் தான் இந்நூல் ‘மலாயாவில் பெரியார்’ என்றமைந்திருக்கிறது. பெரியாரின் மலேசிய வருகை பற்றிய தகவல்களையும் உரைக்குறிப்புகளையும் பிறர் நினைவுகளையும் ஒருசேரக் கொடுக்கும் நூல் இது. வை.திருநாவுக்கரசு என்பார் எழுதியும் தொகுத்தும் உருவாக்கிய இந்நூல் 1955இலேயே மலேசியாவில்   ‘பல நிறத்தில் அழகான முகப்புடன்’ வெளியான மலர். வெளியிட்டவர் கே.பிச்சையன் (199, அப்பர் சிராங்குன் ரோடு, சிங்கப்பூர் -13). தம் பதிப்புரையில் கே.பிச்சையன் ‘தமிழர் வரலாற்றில் அழிக்க முடியாத ஒரு இடத்தைப் பெற்றுவிட்ட பெரியாரின் மலாயா விஜயம் மட்டும் மறக்கப்பட வேண்டியதா? அல்லவே! மேலும் பெரியாரின் கொள்கைகளைப் போற்றுகிறவர்கள் மலாயாவில் பல்லாயிரவர் உண்டு. எனவேதான் இம்மலரை வெளியிடத் துணிந்தேன்’ என்கிறார்.

இம்மலரை  உருவாக்கிய வை.திருநாவுக்கரசு, ‘தமிழ் முரசு’ நாளிதழின் உதவி ஆசிரியராக இருந்தவர்; பெரியார் பேசிய சில கூட்டங்களுக்குத் தலைமை வகித்தவர். இவர் எழுதியிருக்கும் அரிய தகவல்களைக் கொண்ட தொகுப்புரை நூலின் தொடக்கத்தில் இடம்பெற்றுள்ளது. ‘தமிழ் முரசு’ இதழில் 1951 – 1952 காலகட்டத்தில் ‘புதுமைப்பித்தன் மேதையா?’ என்னும் பொருளில் தொடர்விவாதம் நடைபெற்றுள்ளது. வை.திருநாவுக்கரசுவும் அவ்விவாதத்தில் பங்கேற்றார். ‘தும்பி’ என்னும் புனைபெயரில் அவர் எழுதியுள்ளார்.  இறுதிக் கட்டுரையை எழுதி அவ்விவாதத்தை முடித்து வைத்தவரும் அவர்தான். விவாதக் கட்டுரைகள் அனைத்தும் ஆ.இரா.வேங்கடாசலபதி பதிப்பித்த ‘புதுமைப்பித்தன் களஞ்சியம்’ நூலில் இடம்பெற்றுள்ளன. அந்நூலில் வை.திருநாவுக்கரசு பற்றி உள்ள குறிப்பு இது:

‘திருநாவுக்கரசு, வை. (1926 – 2008) : சேலத்திலும் சென்னையிலும் கல்வி கற்றார். திராவிட இயக்கப் பின்புலம் கொண்டவர். தமிழகத்தில் பத்திரிகையாளராக அனுபவம் பெற்று 1951இல் சிங்கப்பூர் சென்று  ‘தமிழ் முரசு’ இதழில் உதவியாசிரியராக விளங்கினார்.  ‘தும்பி’ என்ற புனைபெயரில் இவர் எழுதிவந்த ‘பூந்தோட்டம்’ என்ற பத்தி பெரிய அளவில் கவனம் பெற்றது. 1958 முதல் அரசு உயரலுவலராகப் பணியாற்றிவிட்டு 1988இல்  ‘தமிழ் முரசு’ தலைமை ஆசிரியர் பொறுப்பினை ஏற்றார். சிங்கப்பூரில் தமிழர் பண்பாட்டு நடவடிக்கைகளில் முக்கியப் பங்காற்றினார்’ (ப.1156).

அவரைக் காலச்சுவடு கண்ணனும் சிங்கப்பூர் எழுத்தாளர் லதாவும் எடுத்த நேர்காணல் ஒன்று டிசம்பர், 2004 காலச்சுவடு இதழில் வெளியாகியுள்ளது. அதில் அவரைப் பற்றிக் கொடுத்திருக்கும் அறிமுகம் இது:

‘கடந்த ஐம்பது ஆண்டு காலத்துக்கும் மேலாகச் சிங்கப்பூரின் வளர்ச்சியோடும் வாழ்வோடும் தன்னை இணைத்துக்கொண்டிருப்பவர் வை. திருநாவுக்கரசு. தமிழகத்தின் தினத்தாள், விடுதலை ஆகிய பத்திரிகை களில் பணிபுரிந்த அனுபவத்தோடு தன் 25ஆம் வயதில் சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்தவர். தமிழவேள்  கோ. சாரங்கபாணியின் தமிழ்முரசு நாளிதழில் 1951 முதல் 1958 வரை துணையாசிரியராகப்  பணிபுரிந்தபோது அவரோடு இணைந்து மொழி, கல்வி, சமுதாய முன்னேற்றம் எனப் பல்வேறு சமூகப் பணிகளில் செயல் பட்டுள்ளார். அதன் பிறகு அரசாங்கத்தின் ஆங்கில வாரப் பத்திரிகையின் ஆசிரியராகவும் சிங்கப்பூர் வரலாற்று நூல் ஒன்றின் ஆசிரியராகவும் அரசாங்கப் பத்திரிகை உறவுப் பிரிவின் தலைவராகவும் பணிபுரிந்துள்ளார்.

‘அரசாங்கப் பணியிலிருந்து 1988 ஓய்வுபெற்றதும் தமிழ் முரசுப் பத்திரிகையின் ஆசிரியராக 12 ஆண்டுகள் பணிபுரிந்து அதனை நவீனப்படுத்திப் பெரிய பத்திரிகை நிறுவனத்துடன் இணைத்து மேம்படுத்தினார். தேசிய அளவில் மதிக்கப்படும் சமூகத் தலைவர்களில் ஒருவரான அரசு, அரசாங்கத்தின் பல்வேறு வாரியங்களிலும் உறுப்பினராக இருந்திருப்பதோடு, அரசியல், சமூகம், மொழி, இலக்கியம், கல்வி, சமயம் போன்ற பல துறைகளின் கொள்கை  மேம்பாட்டுத் திட்ட உருவாக்கங்களிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளார்.’

(படம் உதவி: காலச்சுவடு).

மலாயாவில் பெரியார்

மலேசியத் தமிழர் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டு அவர்கள் மனதில் நீங்க இடம்பெற்றுள்ள செயல்பாட்டாளரும்  ‘தமிழ் முரசு’ ஆசிரியருமான கோ.சாரங்கபாணி இந்நூலுக்கு எழுதியுள்ள பாராட்டுரையில் ‘பெரியாரின் மலாயா சுற்றுப்பிரயாண ஞாபக மலராய் விளங்கும் இந்த வெளியீடு அற்புதமான முயற்சி. அருமையான தொண்டு’ என்று கூறியுள்ளார். இம்மலர்  அப்போது சென்னை ‘ஸ்டார் பிரஸ்’ அச்சகத்தில்  அச்சாகியுள்ளது. இருபயணங்களிலுமே பல புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. தம் முதல் பயணத்தையும் இரண்டாம் பயணத்தையும் ஒப்பிட்டுப் பேசுகையில் பெரியாரே ‘500  போட்டோக்களுக்கு மேல் எடுத்தார்கள்’ என்று குறிப்பிடுகிறார். சில படங்களும் பத்திரிகைச் செய்திகளும் இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன. மூலப்படங்கள் கிடைத்தாலோ இதில் சேர்க்காத பிற படங்கள் கிடைத்தாலோ முக்கிய ஆவணமாக விளங்கும்.

1954 டிசம்பர் 14 முதல் 1955 ஜனவரி 9 வரை மலேசியாவில் பெரியார் மேற்கொண்ட பயணம் பற்றியே இந்நூலின் பெரும்பகுதி பேசுகிறது. 1929இல் பெரியார் அங்கு வந்ததைப் பற்றிய நினைவுக் குறிப்பாக ஒருவர் எழுதிய கட்டுரை ஒன்று மட்டும் உள்ளது. 1954இல் இருபத்தேழு நாட்கள் மலேசியாவில் சுற்றுப்பயணம் செய்த பெரியார் ஏராளமான கூட்டங்களில் பேசியுள்ளார். விருந்துகளில் பங்கேற்றுள்ளார். பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியிருக்கிறார். மலேசியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று ரப்பர் தோட்டங்களைப் பார்த்துள்ளார்.  அங்கு வேலை செய்யும் தமிழர்களைச் சந்தித்து அவர்கள் நிலை குறித்து அறிந்துள்ளார். அவர் பேசிய எல்லாக் கூட்டங்களுக்கும் பெருந்திரளாக மக்கள் கூடியுள்ளனர்.

1929இல் முதல்முறை சென்றபோது  அவர் வருகைக்குக் கடும் எதிர்ப்பு இருந்துள்ளது. இரண்டாம் முறை அத்தனை எதிர்ப்பு இல்லை என்றாலும் ஓரளவு இருந்தது. அதைப் பற்றி ‘கடலைக் காலால் அலப்பி அலையை எழுப்ப முயன்ற வேடிக்கை மனிதர் சிலரை மட்டுமே கண்டு சிரித்தது மலாயா’ என்று வை.திருநாவுக்கரசு குறிப்பிடுகிறார். மலேசியாவில் நடந்த கூட்டங்களை ஏற்பாடு செய்தவர்கள் யார்? அதைப் பற்றியும் வை.திருநாவுக்கரசு தம் முன்னுரையில் இப்படி எழுதியுள்ளார்:

‘அவர் மலாயாவில் தங்கிய இருபத்தேழு நாட்களில் தினம் மூன்று நான்கு ஊரில் ஐந்தாறு கூட்டம், விருந்து என்ற வகையில் ஏற்பாடு செய்தது திராவிடர் கழகமல்ல; விரல்விட்டு எண்ணக் கூடிய சில கூட்டங்களைத் தவிர மற்ற அனைத்தும் தமிழரின் ஏகோபித்த ஏற்பாடு. தமிழரின் ஏற்பாடு என்று கூறுவதுகூட முற்றும் சரியல்ல.  சில ஊர்களில் முன்னின்று ஏற்பாடு செய்தவர்கள் மலையாளிகள். ஆர்வமுடன் பெரியாரைச் சந்தித்துப் பேசியவர்களில் பலர் பஞ்சாபிகள்’ (ப.8).

அவர் வருகை பற்றிப் பல தரப்பிலும் அச்சம் நிலவியதாம். அதைத் தம் முதல் பேச்சிலேயே பெரியார் போக்கிவிட்டாராம்.  ‘அருமைத் தமிழரைக் காணத்தான் வந்தேனே ஒழிய மதம் பற்றிப் பேச வரவில்லை’ என்று தெளிவுபடுத்தினாராம். அதன் பிறகு அவர் பேசிய எல்லாக் கூட்டங்களிலும் சில செய்திகளையே முதன்மைப்படுத்திப் பேசியிருக்கிறார். தமிழர் ஒற்றுமையை வலியுறுத்தியவர் சீனர்களோடு ஒப்பிட்டுத் தமிழர்கள் கூலித் தொழிலாளர்களாகவே வாழ்வது கூடாது, வாழ்க்கை வசதிகளை மேம்படுத்தி முன்னேற வேண்டும் என்றும் அதற்குக் கல்வியே பயன்படும் என்றும் வலியுறுத்தியிருக்கிறார். தமிழர்கள் சிக்கனமாக இருந்து அடுத்த தலைமுறைப் பிள்ளைகளைக் கல்வி கற்கச் செய்ய வேண்டும், ஆண்கள் சாராயம் குடிப்பதற்கும் பெண்கள் திரைப்படம் பார்ப்பதற்கும் செய்யும் செலவுகளைத் தவிர்க்க வேண்டும் என்றிருக்கிறார். ஒரு கூட்டத்தில் அவர் பேசியது இது:

‘ஒரு பால் வெட்டும் தொழிலாளப் பெற்றோர் தம் பிள்ளை கையில் பால் வெட்டும் உளியை எடுத்துக் கொடுக்கக் கூடாது. பேனாவைக் கையில் எடுத்துக் கொடுத்துக் கற்பிக்க வேண்டும். அலகு, காவடி எடுப்பது போன்றவற்றை ஒழித்து மற்ற வகுப்பினரைப் போல முன்னேற்றமுடன் வாழ நமக்குள் ஒற்றுமை வேண்டும். காசு மிச்சம் செய்து பிள்ளைகட்குக் கல்வி தர வேண்டும். காசு மிச்சம் ஆணிடம் இருந்தால் கள்ளுக்கடையும் பெண்ணிடம் இருந்தால் சினிமாவும் பறித்துக்கொள்ள விடக் கூடாது.  காரியக்காரர்களாக இருக்க வேண்டும்’ (ப.3).

மலாயாவில் பெரியார்

அப்போது மலாயா குடியுரிமை பெறுவது தொடர்பாகத் தமிழர்களிடம் குழப்பம் நிலவியது. இந்தியாவுக்குத் திரும்பிவிடுவதா மலாயாவிலேயே வசிப்பதா? குடியுரிமை பெற்றுவிட்டால் தமிழ்நாட்டுக்கு வர முடியாதோ? என்றெல்லாம் நினைத்துள்ளனர். அதனால் குடியுரிமை பெறுவதற்குத் தயங்கினர். இப்பிரச்சினையைப் பற்றித் தம் உரைகளில் தொடர்ந்து பேசிய பெரியார் ‘குடியுரிமை பெறுங்கள்’ என்று வலியுறுத்தினார்.  ‘மலாயாவில் வாழ்கிற தமிழர்கள் தங்கள் உரிமையை நிலைநாட்டிக் கொள்ளவும் பிற சமூக மக்களைப் போல் சமத்துவமாக வாழவும் இந்த நாட்டுப் பிரஜாவுரிமையை எடுக்க வேண்டும்’ (ப.112) என்று அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார். பெரியாரின் பேச்சு ஏற்படுத்திய விளைவைப் பற்றி வை.திருநாவுக்கரசு கூறுவதை அப்படியே தருகிறேன்.

‘மலாயா இந்தியரின் தலையாய பிரச்சினை ஒன்றில் பெரியார் செலுத்திய நாட்டமும் தந்த அறிவுரையும் நல்ல சூழ்நிலையை ஏற்படுத்தின. மனமாற்றம் பலருக்கு நிகழ்ந்திருக்கிறது. பலகாலமாக மலாயாவில் வாழ்ந்தும் மலாயாவை வளப்படுத்த உழைப்பை நல்கியும் இந்த நாட்டுப் பிரஜைகளாகப் பகிர்ந்து கொள்ள உங்களில் பலர் முன்வரவில்லையே என்று வருந்தினார். மலாயா நாட்டில் சொந்தம் கொண்டாட, தமிழருக்குரிய உரிமையைப் பெற, சீனர்களுக்கு இணையாக வாழ மலாயா நாட்டுக் குடியுரிமை பெறுவதே வழி. இங்கே குடியும் குடித்தனமுமாக நிரந்தரமாக நிலைப்பதே அறிவுடைமை என்று பெரியார் சந்தேகத்திற்கு இடமின்றி அழுத்தம் திருத்தமாகச் சொன்னார். இந்தியாவுக்குத் திரும்ப வர வேண்டும் என்ற ஆசையையே அழித்துவிடுங்கள் என்று சொன்னார்.

‘திக்குத் தெரியாமல் திகைத்துக் கொண்டிருந்த தமிழர் பலருக்கு இதுதான் வழி என்று திட்டமாகச் சுட்டிக்காட்டினார் பெரியார். இதுதான் வழியென்று தெரிந்தும் மதில் மேல் பூனையாக அமர்ந்திருந்த பலரைத் தங்கள் வழியைத் தீர்மானிக்கச் செய்தது பெரியாரின் பேச்சு.’

மலாயாப் பயணத்தில் பெரியார் கவனத்துடன் பேசிய இன்னொரு விஷயம் கடவுள். அவரைக் குறித்துப் பரவியிருந்த கருத்துக்களை எல்லாம் மாற்றும் வகையில் எல்லா உரையிலும் கடவுள் பற்றிப் பேசினார்.  ‘நான் கடவுள் இல்லை என்று கூறுவதற்காகவோ மதம் கூடாது என்று சொல்லுவதற்காகவோ கோவிலை இடிக்க வேண்டும் எனச் சொல்வதற்காகவோ இங்கு வரவில்லை. எனது நண்பர்கள் – அருமைத் தமிழ் மக்களைப் பார்த்துப் போகவே வந்தேன்’ என்றார். ‘உண்மையிலேயே நான் கடவுளைப் பற்றிப் பேச விரும்புவதில்லை. என்றாலும் என்னைப் பேசும்படி சூழ்நிலைகளை ஏற்படுத்திப் பேச வைத்து விடுகிறார்கள்’ என்றும் சொன்னார்.

மலாயாவில் நிலவிய சூழலைப் புரிந்துகொண்டு அங்கு நிலவிய பிரச்சினைகளையே பேசினார். கடவுள் பற்றிய தம் கொள்கையை விளக்கும்போது மலாயாவில் நடைபெற்ற கூட்டம் அனைத்திலும் ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்னும் கருத்தையே முன்வைத்தார். ‘நாங்கள் சொல்லுவதெல்லாம் இழிவான நிலையிலிருந்து நாம் மாறுவதற்காக ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதுதான். இது ஒன்றும் புதிதல்ல. கிறிஸ்தவர்கள், முகம்மதியர்கள் தங்களிடம் ஒரே கடவுள் கொள்கையைத்தான் கடைபிடித்து வருகிறார்கள்’ என்று பேசினார். ‘கடவுள்’ என்பதற்குப் புதுவிளக்கம் கொடுத்தார். ‘ஒழுக்கம், உண்மை, பரோபகாரம், அன்பு இவைதான் கடவுள்’ என்று சொன்னார். மலாயாவில் நிலவிய காவடி எடுத்தல், அலகு குத்துதல், தீமிதித்தல் ஆகியவற்றைக் கண்டித்தார். அவற்றை மூட நம்பிக்கைகள் என்றார். மூட நம்பிக்கைகளால்தான் தமிழர்கள் முன்னேற முடியவில்லை என்றும் சொன்னார்.

பெரியாரின் மலாயாப் பயணத்தில் பல சுவாரசியங்களும் இருக்கின்றன. ஒருபள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் பாடிய சீனப்பெண் ஒருவரை அழைத்துப் பாராட்டினார். அப்பெண்ணின் பெயர் கமலம். சீனப்பெண் என்றாலும் தமிழ்ப்பெண்ணாகவே வளர்ந்தவராம். அவர் பங்கேற்ற பல நிகழ்வுகளில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடப்பட்டிருக்கிறது. 1955இல் எப்பாடலைத் தமிழ்த்தாய் வாழ்த்தாகப் பாடினர் என்பது தெரியவில்லை. மூவார் என்னுமிடத்தில் அவர் பேசிய ஒரு தமிழ்ப் பாடசாலையின் பெயர் ‘நந்தனார் தமிழ்ப் பாடசாலை.’ இப்போது அப்பள்ளி இருக்கிறதா எனத் தெரியவில்லை. இருப்பினும் அப்பெயர் இருக்குமா என்பது ஐயம்தான்.

இவ்வாறு ஏராளமான செய்திகளைக் கொண்டு பெரும் ஆவணமாகத் திகழும் நூல் ‘மலாயாவில் பெரியார்.’

பயன்பட்ட நூல்கள்:

  1. வை.திருநாவுக்கரசு (தொ.ஆ.), மலாயாவில் பெரியார் (Periyar in Malaya 1929 & 1954), 1955, கே.பிச்சையன், 199, அப்பர் சிராங்குன் ரோடு, சிங்கப்பூர் 13. மறுபதிப்பு: கோவிந்தசாமி முனுசாமி, ஆண்டு இல்லை, வெளியீடு: கா.ஆறுமுகம், இராணிப்பேட்டை.
  2. ஆ.இரா.வேங்கடாசலபதி (ப.ஆ.), புதுமைப்பித்தன் களஞ்சியம், 2025, காலச்சவடு பதிப்பகம், நாகர்கோவில்.
  3. காலச்சுவடு இதழ், டிசம்பர் 2004.

—–   24-12-25

 

Add your first comment to this post