பெரியாரின் ‘சந்தை மொழி’

You are currently viewing பெரியாரின் ‘சந்தை மொழி’

 

 

திராவிட இயக்கத்தவரின் மேடைப் பேச்சு மொழியில் கவனம் செலுத்தும் யாரும் பெரியாரின் தனித்தன்மையை எளிதில் கண்டுகொள்ள முடியும். அண்ணாவின் பேச்சு அடுக்குமொழியும் அலங்காரங்களும் கொண்டது. அதையே திராவிட இயக்கப் பேச்சாளர்கள் பலரும் பின்பற்றியுள்ளனர். பெரியாரின் மொழியை யாராலும் பின்பற்ற இயலவில்லை. அதற்குக் காரணம்  அவர் வாழ்வுக்கும் மேடைப் பேச்சு மொழிக்கும் பெரிதும் தொடர்பு இருந்ததாகும். வாழ்வனுபவத்தில் விளைந்த இயல்பான மொழியை சிறிதும் பூச்சுக்கள் இன்றி அப்படியே மேடைக்குப் பெரியார் பயன்படுத்திக் கொண்டார். அத்தகைய வாழ்வனுபவம் அற்றவர்கள் அவர் மொழியை மட்டும் எடுத்துக் கொள்வதோ பின்பற்றுவதோ சாத்தியமில்லை.

கிட்டத்தட்ட நாற்பது வயது வரைக்கும் ஈரோட்டில் பெருவணிகராகப் பெரியார் திகழ்ந்தார். அவர் தந்தை உருவாக்கிய வணிகக் கட்டமைப்பைப் பெருக்கிச் சமூகத்தில் உயர்ந்த மதிப்பையும் பெற்று வாழ்ந்தார். பள்ளிக் கல்வி முறைக்குள் உட்பட முடியாத அவர் குணம் வணிகம் நடைபெறும் கடைவீதிக்குள் சிறுவயது முதலே உழன்று பலவற்றையும் கற்றுக்கொள்ளச் செய்திருக்கிறது. சிறுவணிகர்கள், உழைப்பாளிகள், தொழிலாளர்கள், பொதுமக்கள் எனப் பலருடனும் தொழில் சார்ந்து பழகிக் கற்றுக் கொண்டவர் பெரியார்.

வணிகத்தை விட்டு முழுநேரமாக அரசியல், சமூகச் சீர்திருத்தம் எனத் தம் வாழ்வை அமைத்துக் கொண்டபோது மேடைப் பேச்சுக்கெனத் தனிமொழியை அவர் கையாளவில்லை. தமக்கு இயல்பாகக் கைவந்த உரையாடல் மொழியையே பயன்படுத்தினார்.  மக்களின் உரையாடல் மொழியில் தாராளமாகப் புழங்கும் அனைத்துக் கூறுகளையும் கொண்டது அம்மொழி. அதைத் தனியாக அடையாளப்படுத்த வேண்டுமானால் ‘சந்தை மொழி’ என்று குறிப்பிடலாம்.

பெரியார் பேச்சின் ஒலிப்பதிவாக இன்று இணையத்தில் கிடைப்பவை மிகவும் குறைவுதான். அவர் பேச்சைக் கேட்டுப் பிறர் எழுதிக் கொடுத்துக் கட்டுரைகளாக வெளியானவை பெருவாரியானவை. அவை பேச்சு மொழியை எழுத்து மொழியாக்கியவை. பெரியார் பேச்சின் கூர்மையைப் பெரும்பாலும் தவற விட்டவை.   ‘நாகரிகம் அற்றவை’ எனக் கருதிப் பலவற்றை ஒதுக்கியவை. வட்டார வழக்குச் சொற்கள் புரியாமையால் அவற்றைத் தவிர்த்தவை. தொனியைக் கையாள்வதில் சிரமத்தை எதிர்கொண்டவை. எனினும் அரிதாகச் சில பதிவுகள் காணக் கிடைக்கின்றன. பத்திரிகைக்காகப் பெரியார் எழுதியவற்றில் பேச்சு தொனியும் வட்டார வழக்கும் ஆங்காங்கே காணப்படுகின்றன.

கொங்குப் பகுதியைச் சேர்ந்த ஈரோட்டில் தம் நடுத்தர வயது வரைக்கும் வசித்த காரணத்தால் வட்டார வழக்குச் சொற்களும் ஒலிப்பு முறையும் அவர் மொழியில் சேர்ந்திருக்கின்றன. 1973ஆம் ஆண்டு பட்டுக்கோட்டையில் அவர் ஆற்றிய உரையில் அவர் தம் இளமைக் காலத்தில் எல்லாச் சாதியாரோடும் பழகியதைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்கிறார்.

‘அதுக்கு முன்ன உள்ளுக்குள்ள எல்லார் வீட்டிலயுஞ் சாப்பிடுவன். எல்லார் வீட்டிலயும் சிநேகமா இருப்பன்… சாணி தெளிச்சுக் கொண்டாந்து போட்டான்னா அத எடுத்துத் தின்னுக்கிட்டு உக்காந்திருப்பன். அதுல சந்தவ, முறுக்கு, கொழக்கட்ட எல்லாம் இருக்கும்’ என்று சொல்கிறார். இதில் ‘சந்தவை’ என்பது இடியாப்பத்தைக் குறிக்கும் கொங்கு வட்டாரச் சொல்லாகும்.

அதே உரையில் ‘அதுக்கு முன்ன கோயில் சித்தாலச் செவுத்துக்குள்ள போகக்குடாது’ என்று சொல்கிறார். ‘சித்தாலச் சுவர்’ என்பது மதில் அல்லது சுற்றுச்சுவர் எனப் பொருள்படும் கொங்கு வட்டார வழக்கு. ‘சுற்றோலைச் சுவர்’ என்பது எழுத்து வழக்கு. சுற்றுச்சுவர் மண்ணால் கட்டப்பட்டிருக்கும். அதன் மேல் பகுதி மழையில் கரைந்து வலுவிழந்துவிடும் என்பதற்காகப் பனையோலையைக் குடை போல வரிசையாக அடுக்குவர். அதன் மேல் கற்களையோ மண்ணையோ போட்டுக் காற்றில் விழுந்துவிடாமல் இருக்கும்படி செய்வர். சுற்று ஓலைச் சுவர் என்பதே பேச்சில்  ‘சித்தாலச் சுவர்’ என்றாயிற்று. அதைப் பெரியார் பேச்சில் பயன்படுத்தியுள்ளார்.  ‘ஒருசொப்புக் கள்ளக் குடிச்சுப்போட்டு’ என்றொரு தொடரும் அதே பேச்சில் வருகிறது. சொப்பு என்பது குடிப்பதற்குப் பயன்படும் மண்பாண்டம்.

அவர் பேச்சில் கொங்கு வட்டார மொழியின் ஒலிப்புமுறையையே இறுதிவரை பின்பற்றினார். தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வந்தாலும் பேச்சிலும் எழுத்திலும் பொதுமொழியைப் பயன்படுத்தினாலும் வட்டார மொழியின் தொனி அவரிடமிருந்து விலகவில்லை. சொன்னன், கேட்டன், கொண்டாந்து, இன்னது, சொல்லிப்போட்டு எனச் சொற்களின் ஒலிப்பிலும் தொடர்களின் முடிவிலும் கொங்கு வட்டார மொழியின் தொனியைத் தெளிவாகக் கேட்கலாம்.

மக்களின் உரையாடலில் பழமொழிகளுக்கு முக்கியமான இடமுண்டு. பெரியார் தம் பேச்சிலும் எழுத்திலும் ஆங்காங்கே விதவிதமான பழமொழிகளைக் கையாள்வார். அவை பெரும்பாலும் எழுத்தில் பதிவாகாதவையாகவே இருக்கும். அவர் தாயார் மறைவுக்கு எழுதிய இரங்கல் கட்டுரையில்  ‘கைம்பெண் வளர்ப்பது கழுதைக் குட்டிதான்’ என்னும் பழமொழியைப் பயன்படுத்தியுள்ளார்.  ‘மாமியார் உடைத்தால் மண்சட்டி, மருமகள் உடைத்தால் பொன்சட்டி’ (தொகுதி 6 , பகுதி 1, ப.2804) என்னும் பழமொழியை ஓரிடத்தில் கையாள்கிறார். பொதுவழக்கில் ‘மண்குடம்; பொன்குடம்’ என்பர். வட்டார வழக்கில் ‘மண்சட்டி; பொன்சட்டி’ என வழங்குகிறது. பொதுவழக்கில் உள்ள பழமொழிகள் பலவற்றையும் அவர் கையாள்வதுண்டு. ‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ என்னும் பழமொழியை ஓரிடத்தில் (மேற்படி, ப.2805) எடுத்தாள்கிறார். இவ்வாறு ஏராளமான பழமொழிகளை அவர் பேச்சிலும் எழுத்திலும் காணலாம்.

மக்கள் மொழியில் வசைச்சொற்கள் இயல்பாக வழங்கும். அதுவும்  ‘சந்தை மொழி’யில் வசைச்சொற்கள் வழங்குவது சாதாரணம். பெரியாரும் தம் பேச்சிலோ எழுத்திலோ வசைச்சொற்களை விலக்கவில்லை. சூத்திரர்களைப் ‘பாப்பானுக்குத் தேவடியா மகன்’ என்று சாஸ்திரங்கள் சொல்வதாக அவர்தம் பேச்சில் தொடர்ந்து கூறி வந்தார். ‘தேவடியா மகன்’, ‘வைப்பாட்டி மகன்’ என்பவற்றைப் பல இடங்களில் பயன்படுத்தியுள்ளார். புணர்ச்சியைக் குறிக்க மக்கள் வழக்கில் பயன்படும் ‘வேல உட்டான்’, ‘வேல பண்ணுனான்’, ‘சென பண்ணுனான்’, ‘சென ஆக்கினான்’ ஆகியவற்றையும் போகிற போக்கில் கையாள்வார். ரகளை, பித்தலாட்டம், சோணகிரி, முட்டாள், மடையன், அடிமை, வீணாப் போனது, மானங்கெட்டவன், இழிமகன், வெங்காயம், சோதாப்பயல் என ஏராளமான வசைச்சொற்கள் அவர் பேச்சில் வந்து விழுந்து கொண்டேயிருக்கும்.

பெரியாரின் ‘சந்தை மொழி’

பெரியார் பேச்சில் நீண்ட தொடர்கள் இடம்பெறுவதில்லை. ஒவ்வொன்றும் ஐந்தாறு சொற்களை மட்டுமே கொண்ட சிறுதொடராகவே இருக்கும். கொஞ்சம் நீளம் கூடுமானால் அங்கே காற்புள்ளி வரும் வகையில் தொடர்களை நிறுத்திப் பேசுவார். அவர் எழுதிய கட்டுரைகளில் சற்றே நீண்ட தொடர்கள் இருக்கும். உரையில் அப்படிக் காண முடியாது. சென்னை, தியாகராய நகரில் நிகழ்ந்த அவரது இறுதிச் சொற்பொழிவின் ஒருபகுதி இது:

‘ஏன் இதையெல்லாம் சொல்றேன்னா, இந்த மாதிரியான, பதிலுக்குப் பதிலான முறையை நாம் எடுக்காததனாலே, நாதி இல்லை நம்மைப்பத்திப் பேசறதுக்கு. கேள்வி இல்லை, நம்மைப் பத்திப் பேசறதுக்கு. நாளைக்குக்கூட நம்மாளு சிரிச்சுக்கிட்டுப் போவான் – ‘நேத்து வந்தான்; நல்ல அடி அடிச்சான்; நல்லாப் பேசுனான்’. அவ்வளவோடுதான் நின்னுக்குவான். பார்ப்பான் சொல்லுவான், ‘நேத்து வந்தான் பார்த்தியா நாய்க்கன், அவன் என்னென்ன சொன்னான்; நான், என்ன பண்ணுவேன்?’ கோவப்படுவான். பெண்டாட்டிக்கிட்ட சொல்லிக்கிட்டு அழுவான். நமக்கு மான ஈனம் ஒன்னும் இல்லை; சிரிச்சிக்கிட்டுப் போய்விடுவோம்.’

பெரியார் பேச்சில் கேள்விகளின் அடுக்கு தொடரும். சில சமயம் கேள்விகளோடு நிறுத்துவார். சில சமயம் எல்லாவற்றுக்கும் சேர்த்துப் பதில் சொல்வார். சில சமயம் ஒவ்வொரு கேள்விக்கும் ஒவ்வொரு சிறுதொடரில் பதில் சொல்வார். காரைக்குடியில் நிகழ்த்திய சொற்பொழிவு ஒன்றில் கீழ்வருமாறு பேசுகிறார்:

‘அரசாங்கச் செலவுலயே வெச்சுக் கொளுத்துறாங்க இராவணன, எவன் கேக்கறான்? சமணனக் கழுவேத்துனானே, எவன் கேக்கறான்? சூரசம்ஹாரம் வருச வருசம் கோவில்ல நடக்குதே, வெட்டறானே கழுத்துல, எவன் கேட்டான்? சூரன்னா அவன் எங்கிருந்து வந்தான்? அவன் ஒரு தனிச்சாதியா? அவனுக்குக் கண்ணுமூக்கு காலுகை வேறயா? அவன் ஒரு தனிநாட்டுல இருந்தானா? தமிழ்நாட்டுல இருந்தானில்ல?’

கேள்விகளின் அடுக்குக்குப் பிறகு எல்லாக் கேள்விகளுக்கும் அவரே தொகுப்பாகப் பதில் சொல்கிறார். மக்களிடம்  நெருங்கி உட்கார்ந்து உரையாடும் ஒரு நாட்டுப்புறக் கதைசொல்லியைப் போலப் பெரியார் பேசுகிறார். தாம் அன்றாடம் புழங்கும் மொழியில் அவர் பேசுவதால் மக்கள் எளிதாக இணைந்து கொள்ள முடிகிறது. இன்றைக்குப் போல நடுத்தர வர்க்கம் பெரியளவில் உருவாகாத அக்காலத்தில் பெரியார் கருத்துக்கள் விரிவான தளத்திற்குச் சென்று சேர்ந்தமைக்குக் காரணம் அவர் பயன்படுத்திய மொழி என்று தாராளமாகச் சொல்லலாம். முக்கியமான பல கருத்துக்களை எளிய தர்க்கத்தோடு எடுத்துச் சொல்ல அவருக்கு இந்த மொழி சிறப்பாகக் கை கொடுத்திருக்கிறது.

அதேசமயம் நடுத்தர வர்க்க மதிப்பீடுகளைக் கொண்டிருந்தவர்கள் அவர் பேச்சை எப்படி எதிர்கொண்டார்கள் என்பதற்கு சுந்தர ராமசாமி எழுதிய ஒரு குறிப்பைச் சான்றாகக் காணலாம்.

‘நான் முதல் முதலாவதாகச் சேலத்தில் எனது 17-ஆவது அல்லது18-ஆவது வயதில் பெரியாரின் பேச்சையும் அவர் முன்னிலையில் ராமாயணத்தை முன்வைத்து நிகழ்த்தப்பட்ட ஒரு சில காட்சிகளையும் பார்த்தேன். எனது வயது காரணமாகவும் மத்தியதர வர்க்கப் பின்னணி சார்ந்தும் எனது பெற்றோரிடமிருந்து எனது மூளையில்  இறங்கியிருந்த மதிப்பீடுகள் சார்ந்தும் அன்று பெரும் அதிர்ச்சிக்கு நான் ஆளானேன். அன்று அவர் பேசிய பேச்சளவுக்கு அருவருக்கத்தக்க பேச்சை நான் அறிந்த வரையில் உலகத்தில் எந்தத் தலைவரும் எந்த மக்கள் கூட்டத்திற்கு முன்னாலும் பேசியிருப்பார் என்று நான் கருதவில்லை. ராமாயணத்தை முன்வைத்து நடத்தப்பட்ட காட்சிகள் மிக மிக ஆபாசமானவை. இவற்றைக் கண்டிக்க ஒருவன் பிராமணர்களைத் தூக்கிப் பிடிப்பவனாகவோ அல்லது ராமாயணத்தில் பக்தி தளும்புகிறவனாகவோ இருக்க வேண்டியதில்லை. பகுத்தறிவுவாதியாக இருந்தால் மட்டுமே போதுமானது. இந்த அனுபவம் அவரது பிரசாரத்தளம் மிகக் கீழானது என்ற எண்ணத்தை அன்று என் மனத்தில் ஆழமாக ஏற்படுத்திற்று’ (மனக்குகை ஓவியங்கள், ப.1221).

‘அருவருக்கத்தக்க பேச்சு’ என்றும் ‘மிகக் கீழானது’ என்று சுந்தர ராமசாமி கூறுவது பெரியார் பயன்படுத்திய மொழியைப் பற்றித்தான். தாம் அதிர்ச்சி அடைந்தமைக்குக் காரணமாகத் தம் நடுத்தர வர்க்கப் பின்னணியைக் காரணமாகக் காட்டுகிறார் என்றாலும் பெரும் எழுத்தாளராக வளர்ந்த  பிற்காலத்திலும் பெரியாரின் மொழியை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றே தெரிகிறது. அதனால்தான் ‘அவரது கொள்கை சார்ந்த விமர்சனங்கள் முன்னிலைப்பட வேண்டிய இக்கால கட்டத்திலவரது பிரச்சாரத்தளம் சார்ந்த வழிமுறைகளைச் சிறிதும் ஏற்காத நான், அவரது கொள்கைகளைப் பற்றி மட்டுமே ஒருசில கருத்துகள் எழுதியிருக்கிறேன்’ (மேற்படி, ப.1222) என்கிறார்.

சுந்தர ராமசாமி போன்ற புறத்தே நின்று சிந்திக்கக் கூடிய எழுத்தாளராலேயே ஏற்றுக் கொள்ள இயலாத வகையில் அமைந்திருந்தது பெரியாரின் மொழி. ஆனால் அதுதான் பலரது உள்ளத்தில் புகுந்து பெருமாற்றங்களை உருவாக்கியது. இன்றும் பலர் பெரியாரை ஏற்றுக்கொள்ள இயலாமல் கடுமையாக விமர்சிப்பதற்கு ஒரு காரணம் எதையும் பட்டவர்த்தனமாகவும் நாகரிகம் என்று பலர் கருதுவதற்கு எதிராகவும் அவர் பயன்படுத்திய ‘சந்தை மொழி’ தான் என்று சொல்லலாம். அம்மொழியைக் கேட்கவும் உள்வாங்கவும் ரசிக்கவும் சாதாரண மக்களால் முடிந்திருக்கிறது. அவர்களுக்கு அருவருப்பாயில்லை; கீழானதாகத் தோன்றவில்லை. பெரியார் பேச்சுக்கு எதிர்வினை காட்டும் வகையில் மக்கள் பேசுவதும் பதில் சொல்வதும் சிரிப்பதும் ஒலிப்பதிவில் காட்சிகளாக விரிகின்றன.

—–

பயன்பட்ட நூல்கள்:

  1. வே.ஆனைமுத்து (ப.ஆ.), பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள், தொகுதி 6, பகுதி 1, 2009, பெரியார் ஈ.வெ.இராமசாமி – நாகம்மை கல்வி, ஆராய்ச்சி அறக்கட்டளை, சென்னை, இரண்டாம் பதிப்பு.
  2. சுந்தர ராமசாமி, மனக்குகை ஓவியங்கள், 2011, காலச்சுவடு, நாகர்கோவில்.
  3. இணையதளம்: பெரியார் உலகம், https://periyar.world/category/periyar-speech/

 

—–  25-12-24

தி இந்து தமிழ் திசை வெளியிட்ட ‘என்றும் தமிழர் தலைவர்’ நூலில் இடம்பெற்றுள்ள என் கட்டுரை.

Add your first comment to this post