பழந்தமிழ் நூல்களில் தனிப்பாடல்கள், கம்பராமாயணம், முத்தொள்ளாயிரம் முதலியவற்றில் புதுமைப்பித்தனுக்கு மிகுந்த ஆர்வமும் வாசிப்பும் இருந்துள்ளன. பழந்தமிழ்ப் பாடல்களை நயப்பார்வையில் சுவைக்கும் வகையில் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். ஒருபாடலை எடுத்துக்கொண்டு அதில் உள்ள நயங்களை எல்லாம் விளக்கிக் கட்டுரை எழுதும் வகைமையை உருவாக்கியவர் அல்லது பிரபலப்படுத்தியவர் என ரசிகமணி என்று போற்றப்படும் டி.கே.சிதம்பரநாத முதலியாரைச் சொல்லலாம். அவர் அதிகம் எழுதவில்லை எனினும் அவருடன் உரையாடியதன் மூலமாகவே செல்வாக்குக்கு ஆட்பட்டோர் பலர். ‘இதய ஒலி’, ‘கம்பர் யார்?’ ஆகிய நூல்களில் அவர் பார்வைக்குச் சான்றான கட்டுரைகள் உள்ளன.
புதுமைப்பித்தனும் ரசிகமணியின் செல்வாக்குப் பெற்றவர்தான். அவரைத் தம் குருநாதர் என்றே கருதினார். அவர் பெயரை நேரடியாகச் சொல்லாமல் ஒருகட்டுரையில் புதுமைப்பித்தன் எழுதியுள்ள பகுதியை அப்படியே தருகிறேன்:
‘எனது நண்பரும் குருநாதருமானவர் – பெயரைச் சொல்ல இஷ்டமில்லை – ‘ரஸிகர்’ என்று வைத்துக்கொள்ளுங்கள்; நான் மாணவனாக இருந்த காலத்தில் தமிழ் இலக்கியம் என்றால் சமணரைக் கழுவேற்றுவதற்கும் “காதைக் குறும்பையளவாகத் தோண்டி எடுப்பதற்கும்” இடைஇடையே “முதலையுண்ட பாலனை யழைத்தல்”, “எலும்பைப் பெண்ணுருவாக்குதல்” முதலிய செப்பிடு வித்தைகள் செய்வதற்கும் தற்காலத்தில் சர்வகலாசாலைப் பண்டிதர்கள் கால ஆராய்ச்சிகள் செய்து பால் மணம் மாறாத மாணவர் தலையில் சுமத்துவதற்கும் ஏற்பட்ட சித்திரவதை செய்யும் ஸ்பானிய யந்திரம் (Spanish Engines of Inquisition) என்று எண்ணியிருந்தேன்.
‘ரஸிகர்தான் தமிழ் இலக்கியத்தின் உண்மை இனிமையைக் காட்டி என்னை யனுபவிக்கச் செய்தவர். அவருடன் பேசுவதே ஓர் அனுபவம் என்று சொல்லுவேன். அவர் இப்பொழுது சென்னையில் இருக்கிறார். கொஞ்ச நாட்களுக்கு முன் அவர்களைச் சந்திக்க நேர்ந்தது. அதைப் பற்றித்தான் நான் சொல்ல வந்தது.
‘குசலம் விசாரித்த பிறகு சாப்பிட உட்கார்ந்தோம். சமையல் அன்று விசேஷம்; ஆனால் விருந்தல்ல. நான் பொறித்த குழம்பை, விளக்கெண்ணைப் பிள்ளைக்கும் நோயாளிக்கும் நெருங்கிய பந்து என்று நினைத்திருந்தேன். நான் அன்று உண்ட பொறித்த குழம்பு எந்த வெங்காயச் சாம்பாரையும் தூக்கியடித்துவிடும்.
‘பேச்சின் போக்கில் பாரதியாரின் “நெஞ்சு பொறுக்குதில்லையே” என்ற நொண்டிச் சிந்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர், சிலரைப் போல் பிரசங்க மாருதத்தால் என் மூளையைச் சிதற அடிக்கவில்லை; பாரதியின் பாட்டுக்கு “ஸ்பெஷல் ப்ளீடிங்” மாதிரி இன்ஷூரன்ஸ் ஏஜண்ட் வேலை செய்யவில்லை. அதைக் கேட்ட பிறகு பாரதி உண்மைக் கவி என்பதற்கு அந்தப் பாட்டு ஒன்று போதும் என்று பட்டது. அன்று பாரதியாரின் ஆவேசமும் மனக் கொதிப்பும் அந்தப் பொறித்த குழம்பு பெற்றது என்றால் வியப்பென்ன? பாட்டை அனுபவித்ததினால் உண்டான குதூஹலமும் மனக்களிப்பும் அன்று உணவிற்கு ஒரு கவிதையுணர்ச்சியைக் கொடுத்தது” (ப.72).
ரசிகமணியை ‘ரஸிகர்’ என்று குறிப்பிடுகிறார். ‘குருநாதருமானவர்’ என்கிறார். ‘அவருடன் பேசுவதே ஓர் அனுபவம்’ என்றும் ‘தமிழ் இலக்கியத்தின் உண்மை இனிமையைக் காட்டி என்னை யனுபவிக்கச் செய்தவர்’ என்றும் விதந்து சொல்கிறார். ஏனோ அவர் பெயரை வெளிப்படையாகச் சொல்லவில்லை. 1934இல் புதுமைப்பித்தன் எழுதிய கட்டுரை இது. அதற்கு முன்னரே டிகேசியுடன் புதுமைப்பித்தனுக்குத் தொடர்பு இருந்துள்ளது. அவருடன் பழகியும் அவர் பேச்சைக் கேட்டு உத்வேகம் பெற்றும் இருக்கிறார்.
ஆகவே ரசிகமணியின் நயப்பார்வை பழந்தமிழ் இலக்கியத்தைப் பொருத்த அளவில் புதுமைப்பித்தனிடமும் இருந்திருக்கிறது. ‘தமிழில் டி.கே.சி.யிடம் மிதமிஞ்சிக் காணப்பட்ட இக்கொள்கை (ரசனைப் பார்வை) புனைகதையில் புதுமைகளைச் சாதித்த புதுமைப்பித்தனிடமும் செல்வாக்குப் பெற்றிருந்தமை வியப்புக்குரியது’ (ப.41) என்று எம்.ஏ.நுஃமான் இதைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
கம்பராமாயணம், முத்தொள்ளாயிரம் எனச் சில நூல்களைப் பெரிதும் போற்றிய ரசிகமணியிடம் சங்க இலக்கியம் பற்றி உயரிய எண்ணம் இல்லை. புதுமைப்பித்தனுக்கும் அதே பார்வைதான். ‘சங்க இலக்கியங்களை அனுபவிப்பதற்கு ஒரு தனிப்பயிற்சி வேண்டும்; அந்த இலக்கியத்தின் சமூகம், அதன் நாகரிகம் இறந்துவிட்டது. அதன் பதப் பிரயோகங்களின் ரகசியத்தை அறிந்த பின் தான் அந்த இலக்கியத்தின் உள்ளத்தைத் தொட முடியும்’ (ப.88) ஓரிடத்தில் புதுமைப்பித்தன் கூறுகிறார்.
அவரே இன்னோரிடத்தில் ‘தமிழ்க் கவிதையை இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம். ஒன்று பழைய இலக்கியமான சங்க இலக்கியங்கள். வெறும் எதார்த்த விஸ்தரிப்புக்கள். புகைப்படக் கவிதை என்று கூறிவிடலாம். அதற்குப் பிறகுதான் கவிதையின் உண்மையான வளர்ச்சி – கம்பன் வரை உள்ள பெருங்கனவுகள். அதன் பிறகு கவிதையின் க்ஷீணம். தற்பொழுது ஒரு தப்பு அபிப்பிராயம் இருந்துவருகிறது. காரணம் மனிதனின் பெரும் கனவுகளை யதார்த்த உண்மையாகக் கருதி வந்ததுதான். இதனால் ஓரளவு நம்பிக்கையற்ற தன்மை வளர்ந்தவுடன், உள்ளதை உள்ளபடி உரைக்கும் சங்க நூல்களுக்குக் கவிதை மதிப்பு ஏற்பட்டிருக்கிறது. காரணம் இவர்கள் நம்பக்கூடிய உண்மைகள் அணி அலங்காரங்களுடன் எழுதப்பட்டிருக்கிறது என்பதுதான்’ (ப.136) என்று எழுதுகிறார்.
ரசிகமணி குழுவினருக்குச் சங்க இலக்கியம் பற்றி நல்லபிப்ராயம் இல்லை. அதுவே புதுமைப்பித்தன் எழுத்திலும் வெளிப்படுகிறது. சங்க இலக்கியம் காட்டும் நாகரிகம் இறந்துவிட்டது என்றும் அதன் சொற்கள் எளிதில் பொருள் அறிய முடியாதவை என்றும் புதுமைப்பித்தன் கருதியுள்ளார். அவர் சங்க இலக்கியத்தை வாசித்தமைக்கான சான்று எதுவும் அவர் எழுத்துக்களில் இல்லை. ‘என் வாசிப்புக்கு எட்டியவரை’ என்று சேர்த்துக் கொள்கிறேன். புதுமைப்பித்தன் அன்பர்களிடம் இருந்து தப்பிக்க அதுதான் வசதி.
இப்படித்தான் எனக்குத் தோன்றுகிறது: சங்க இலக்கியத்தை வாசிப்பதற்கான முயற்சியைப் புதுமைப்பித்தன் எடுத்திருந்தால் இந்த எண்ணங்கள் மாறியிருக்கலாம். கம்பனில் தேங்கி நின்றோருக்குச் சங்க இலக்கியத்தை அனுபவிக்கக் கொடுத்து வைக்கவில்லை போல.
பயன்பட்ட நூல்:
ஆ.இரா.வேங்கடாசலபதி (ப.ஆ.), புதுமைப்பித்தன் கட்டுரைகள், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், 2002.
—– 26-05-25
சங்க இலக்கியத்தின் வெளிப்பாடும், திறனும் புதுமைப்பித்தனை வாசிப்பவர்களுக்கு தெரிந்திந்திருக்கும்