கோகுல் போல

You are currently viewing கோகுல் போல
அரசு கலைக் கல்லூரி முதல்வராக இருந்த போது காலையில் கல்லூரி தொடங்குவதற்குக் கால்மணி நேரம் முன்னதாக வந்து நுழைவாயிலில் நின்று கொள்வேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறை என முறை வைத்து முதல் மணி நேரம் வகுப்பில்லாத ஆசிரியர்களில் சிலர் என்னுடன் துணைக்கு வந்து  நிற்பர். தாமதமாக வரும் மாணவர்களை நிறுத்தி விசாரித்து நேரத்திற்கு வர வேண்டும் என அறிவுறுத்தி அனுப்புவோம்.
உள்ளடங்கிய கிராமத்தில் இருந்து வரும் சில மாணவர்களுக்கு அவர்கள் ஊர் வழித்தடத்தில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பேருந்து இருக்கும். அதில் தான் வந்தாக வேண்டும். கல்லூரி வந்து சேரக் கொஞ்சம் தாமதமாகும். தினமும் பார்ப்பதால் அவர்களை எனக்குத் தெரியும். தலையாட்டி அனுப்பி விடுவேன். எப்போதோ ஒருநாள் வந்து நிற்கும் ஆசிரியர் அம்மாணவர்களை அறிய மாட்டார். விசாரிக்காமலே நிற்க வைத்துத் திட்டத் தொடங்கி விடுவார். நான் தலையிட்டு மாணவர்களை மீட்க வேண்டும்.
சில மாணவர்கள் கையில் சாதி அடையாளக் கயிறு கட்டி வருவர். கேட்டால் சாமி கயிறு என்பார்கள். சாமி கயிறுக்கும் சாதிக் கயிறுக்கும் எங்களுக்கு வித்தியாசம் தெரியும். மென்மையாக உணர்த்தி அதை அவிழ்க்கச் செய்வோம். சிலர் வெவ்வேறு நிறத்தில் ரப்பர் வளையம் போட்டு வருவார்கள். அதிலும் சாதி அடையாளம் உண்டு.  அதன் விலை பத்துப் பதினைந்து ரூபாய் இருக்கும்.  ஆகவே கழற்றிக் கொடுக்க யோசிப்பார்கள். சிற்றுரை ஆற்றி அவர்கள் மனதை இளக்க வேண்டும். அதற்குப் பயிற்சி தேவை. சில சமயம்  ‘பயிற்சி போதவில்லையோ’ என்று தோன்றும். சாமபேத தானதண்ட வழிமுறைகள் எல்லாவற்றையும் பிரயோகிக்க வேண்டியிருக்கும்.
இருசக்கர வாகனத்தில் வரும் மாணவர் சிலர் தமக்குப் பிடித்த நடிகர் படத்தை ஒட்டி வைத்திருப்பர்.  சாதிக் கொடி, சின்னம் என எதையாவது ஒட்டிச் ‘சிங்கம்டா’, ‘புலீடா’ என்றெல்லாம் எழுத்துப் பொறித்திருப்பர். வாள் வேல் கேடயம் எல்லாம் படமாக இருக்கும். வாளைக் கையில் தொட்டுக் கூடப் பார்க்க வாய்ப்பு இல்லாதவர் வண்டியில் ஆண்ட பரம்பரைப் பீற்றல் வாசகம் இருக்கும். அவர்களிடம் பேச வேண்டும். சாதி கடந்து பழகுவதற்குக் கிடைக்கும் முதல் வாய்ப்பு கல்வி நிறுவனங்களில் தான். அதையெல்லாம் உரிய வழியில் எடுத்துரைக்க வேண்டும். கொஞ்சம் பிசகினாலும் ஆசிரியர் மாணவர் இடையே பிரச்சினை ஏற்பட்டுப் பெரிதாகி விடும்.
தனியார் கல்லூரிகளில் இந்தப் பிரச்சினை இல்லை. நிர்வாகம் போடும் விதிகளுக்குப் பெற்றோரும் மாணவரும் சிறுமுணுமுணுப்பும் இன்றி அடிபணிந்து போவார்கள். தாமதமாக வந்தால் தண்டம் விதிப்பார்கள். கட்டித் தான் ஆக வேண்டும். எதையும் காசாக்கும் வல்லமை பெற்றவர்கள். மாணவர்களுக்குள் அடிதடி நடந்தால் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தலைக்கு இருபத்தையாயிரம் தண்டம் விதிக்கும் கல்லூரி ஒன்றைச் சமீபத்தில் அறிந்தேன். கட்டவில்லை என்றால் கல்லூரியை விட்டு அனுப்பி விடுவார்கள். ஆகவே கயிறு கட்டக் கூடாது, சீருடை அணிய வேண்டும், ஆணும் பெண்ணும் பேசக் கூடாது என எந்த விதி போட்டாலும் சகல புலன்களும் ஒடுங்கக் கட்டுப்படுவார்கள்.
அரசு கல்லூரி உரிமை பேசும் இடம். எந்த விதியும் செல்லுபடியாகாது. ஏதாவது சிறு நடவடிக்கை எடுத்தாலும் அரசியல்வாதி, மாணவர் சங்கம், சாதித் தலைவர் என்று யாராவது தலையிட்டுப் பேசுவார்கள். சில சமயம் அமைச்சர் அலுவலகத்தில் இருந்து அழைப்பார்கள். வருகைப் பதிவு குறைந்த மாணவருக்கு அமைச்சர் பரிந்துரை செய்த கதையெல்லாம் உண்டு. தம் சாதி மாணவர் பட்டியலைக் கையில் எடுத்துக் கொண்டு கல்லூரிக்கே வரும் தலைவர்களைப் பார்த்திருக்கிறேன்.
அந்தத் தொந்தரவுகளை எல்லாம் தவிர்க்கும் வகையில் மாணவர்களை அணுகுவது கத்தி மேல் நடப்பது போல. அது ஒரு கலை. சில ஆசிரியர்கள் அதில் கை தேர்ந்தவர்களாக இருப்பர். குரல் உயர்த்திப் பேசினாலும் தம் எல்லை எதுவரை செல்லுபடியாகும் என்னும் உணர்வு அவர்களுக்கு இருக்கும்.பல ஆசிரியர்களுக்கு அந்தக் கலை கை வராது. நுழைவாயிலில் வந்து நின்றதும் ஒழுக்கக் காவல் முழுக்கத் தம் தலைமேல் வந்து சேர்ந்து விட்டதாகக் கருதி மமதையோடு நடந்து கொள்வார்கள்.
அதிகாரம் அற்ற பெரும்பதவி ஆசிரியர் பணிதான் என்று நான் அடிக்கடி சொல்வதுண்டு. மாவட்ட ஆட்சியரை விட அதிக ஊதியம் பெறும் ஆசிரியர்கள் உண்டு. ஆனால் அதிகாரம் பூஜ்யம். ஆகவே எளிய இலக்காக இருக்கும் மாணவர் மீது வெற்று அதிகாரத்தை ஏவுவார்கள். அது சிலநேரம் பலன் தரும். சில நேரம் அவர்கள் மீதே திரும்பிவிடும்.
கோகுல் என்னும் மாணவரைப் புள்ளியியல் படிப்பில் நான் தான் சேர்த்தேன். இந்திய மாணவர் சங்கத் தொடர்பில் இருந்தார். தைரியமும் கூடுதல் தன்மானமும் கொண்டவர். பேருந்தில் இருந்து இறங்கியதும் வெளியில் இருக்கும் கடைப்பக்கம் போய் உலாத்திவிட்டு, நண்பர்களோடு அளவளாவி முடித்துக் கல்லூரிக்குள் நுழையத் தாமதம் ஆகத்தான் செய்யும். கையில் புத்தகமோ குறிப்பேடோ எதுவும் இருக்காது. வகுப்பில் இருக்கும். அல்லது அவருக்காக நண்பர்கள் யாராவது எடுத்துச் சென்றிருப்பார்கள். இப்படி எல்லாம் சொன்னால் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்.
நுழைவாயிலில் நின்று மாணவர்களை விசாரித்து அனுப்பிக் கொண்டிருந்த ஆசிரியர் ஒருவரிடம் கோகுல் ஒருமுறை மாட்டிக் கொண்டார். ஆசிரியர் ஏதோ கேட்க இவர் ஏதோ பதில் சொல்ல இருவருக்கும் வாக்குவாதம். ஆசிரியரிடம் வாதம் செய்யும் மாணவர் எப்படி ஒழுக்கமானவராக இருக்க முடியும்? விஷயம் எதுவாகவும் இருக்கட்டும். மாணவர் எதிர்த்துப் பேசலாமா? ஆசிரியருக்குத் தன்முனைப்பு. மாணவருக்கு இளமை வேகம். முட்டல் தான்.
ஆசிரியரும் கோகுலும் ஒருவருக்கு ஒருவர் சளைக்கவில்லை. தூரத்தில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த நான் ஒருகட்டத்தில் தலையிட வேண்டியதாயிற்று. விசாரித்து யார் பக்கம் சரி என்று தீர்மானித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய பிரச்சினை இல்லை. இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தால் போதும். அதைத்தான் செய்தேன். மாணவரிடம் வாதம் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று ஆசிரியரிடம் தனியாகச் சொன்னேன். இத்தகைய ஆசிரியரிடம் கொஞ்சம் பணிந்து பேசிவிடு என்று கோகுலுக்கும் சொன்னேன்.
அது முடிந்து கொஞ்ச நாள் ஆயிற்று. மறுபடியும் இருவரும் பார்த்துக் கொண்ட சந்தர்ப்பங்களில் இணக்கமாகப் பேசியிருக்கிறார்கள். ஆசிரியர் தம் பரோபகாரம் பற்றிக் கொஞ்சம் பீற்றவும் செய்திருக்கிறார். எல்லா மாணவர்களும் தனக்கு ஒன்றுதான் என்றும் எல்லோரையும் சமமாக நடத்துவேன் என்றும் சொல்லியிருக்கிறார். உன்னைத் திட்ட வேண்டும் என்று எனக்கு என்ன நிர்ப்பந்தம்? உன் நல்லதுக்குத் தான் சொன்னேன் என்று சமாதானக் கொடி ஏற்றியிருக்கிறார். கோகுலும் சமாதானம் ஆகிவிட்டார்.
பிறகொரு நாள் தம் இருசக்கர வாகனத்தில் வந்த ஆசிரியர் அதை மரத்தடியில் நிறுத்தியிருக்கிறார். அப்போது அங்கே கோகுலும் நண்பர்களும் நின்றிருந்தனர். ஆசிரியர் வாகனத்தில் சாதி அடையாளச் சின்னம். சாதியை உணர்த்தும் ஒற்றைச் சொல் பொறிப்பு. அவற்றைக் கவனித்து விட்ட கோகுல் ஆசிரியருக்கு அருகில் வந்து ‘என்னங்க சார் இது?’ என்று கேட்டிருக்கிறார்.
ஆசிரியரால் பதில் சொல்ல முடியவில்லை. தம்பியின் வண்டி என்று சொல்லிச் சமாளிக்க முயன்றிருக்கிறார். அவர் துறையைச் சேர்ந்த மாணவர் ஒருவரும் அங்கே இருந்தார். ‘தெனமும் இந்த வண்டியில தான வரீங்க’ என்று அவர் சொல்லியிருக்கிறார்.
‘சாதி அடையாளத்த இப்படி வச்சிருக்கிற நீங்க மாணவர்கள எப்பிடிச் சமமா நடத்துவீங்க?’ என்று கோகுல் கேட்டாராம்.
பதில் சொல்ல முடியாமல் திருதிருவென விழித்துக் கொண்டிருந்த ஆசிரியரைப் பார்த்துத் ‘திருந்துங்க சார்’ என்று சொல்லித் தலையில் அடித்துக் கொண்டு கோகுல் போய்விட்டாராம்.
அடுத்த நாள் ஆசிரியரின் இருசக்கர வாகனத்தில் சாதி அடையாளமும் பெயர் பொறுப்பும் இல்லை. மாணவரைத் திருத்துவது ஆசிரியர் வேலை எனப் பொதுவாகச் சொல்வோம். ஆசிரியரைத் திருத்தும் மாணவரும் உண்டு. கோகுல் போல.
—– 30-11-24

Latest comments (2)

Bharath Thamizh

எப்போதும் மாணவர்கள் பக்கம் அதாவது பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நின்று எழுதும் உங்கள் எழுத்து தனித்துவமானது ஐயா. அந்த மாணவனைப் பாராட்டணும். நல்ல அணுகுமுறை உங்கள் முதல்வர் பணி.