தற்குறி, தற்குறித்தனம், தற்குறிப்பயல்

You are currently viewing தற்குறி, தற்குறித்தனம், தற்குறிப்பயல்

 

(இந்தக் கட்டுரைக்கு என்ன படம் போடுவது எனக் குழம்பி ஒருவழியாக இருபடங்களைச் சேர்த்திருக்கிறேன். கட்டுரை எழுதும் சிரமம் ஒருபுறம் என்றால்  வெளியிடுவது அதைவிடச் சிரமமாக இருக்கிறது. என்னதான் செய்வது?)

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமாகிய விஜய் ரசிகர்களை அல்லது தொண்டர்களைக் குறிக்கத் ‘தற்குறி’ என்னும் சொல் பயன்பாடு சமீபத்தில் பிரபலமாயிற்று. அதைப் பயன்படுத்துவது குறித்த விவாதங்களும் நடைபெற்றன.  இச்சொல் 1930களில் வெளியான சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதியிலேயே (தமிழ் லெக்சிகன்) இடம்பெற்றுள்ளது. இதைப் பழைய சொல்லாகப் பலர் கருதுகின்றனர். ‘அந்தக் காலத்தில் இப்படி வழங்கியது’ என்று பொதுவாகச் சொல்வதைக் காண முடிகிறது. ‘ஒரு காலத்தில் படிப்பறிவு இல்லாத, எழுத படிக்க தெரியாதவர்களை குறிப்பிடும் வார்த்தையாக பயன்பாட்டில் இருந்தது’ என்று எழுதுகின்றனர். இச்சொல் பழந்தமிழ் இலக்கிய ஆட்சி பெற்ற சான்று ஒன்றும் இல்லை. ஆனால் கல்வெட்டுச் சான்று இருக்கிறது.

தென்னிந்தியக் கல்வெட்டுக்கள், தொகுதி 5இல் இடம்பெற்றுள்ள கல்வெட்டு ஒன்றில் (ப.105)  ‘கண்டராதித்தப் பல்லவ(ரைய)ன் தற்குறி மாட்டெறிந்தென்’ என்றும் ‘சோழநாட்டாழ்வான் தற்குறி மாட்டெறிந்தென்’ என்றும் ‘தில்லை சிங்களெவர் தற்குறி மாட்டெறிந்தென்’ என்றும் மூன்று முறை ‘தற்குறி’ இடம்பெற்றுள்ளது. இதை ஆதாரமாகக் கொண்டு ‘தற்குறி மாட்டெறி-தல்’ என்னும் சொல் பதிவைக் கொடுத்திருக்கும் பேரகராதி  ‘கல்வியில்லாதவன் கையெழுத்துக்குப் பிரதியாகத் தன் அடையாளக்குறி இடுதல்’ எனப் பொருள் கூறுகிறது. இக்கல்வெட்டின் காலம் தெரியவில்லை. வேறு கல்வெட்டுக்களிலும் இச்சொல் இடம்பெற்றிருக்கக் கூடும். எப்படியேனும் பழைய சொல் என்பதற்குக் கல்வெட்டு ஆதாரம் உள்ளது.

நவீனக் கல்வி முறை வந்த பிறகு பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலோ இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலோ இது மக்கள் வழக்கில்  பயன்பட்டிருக்கக் கூடும். தம் பெயரை எழுதிக் கையொப்பம் இடுவோர் கணிசமானதும் எழுத முடியாதோர் வைக்கும் ரேகையைக் குறிக்க இச்சொல் பெருவழக்குப் பெற்றிருக்கலாம். பேரகராதிப் பதிவில் இச்சொல்லின் ஆட்சியைக் குறிக்க ‘Colloquial’ எனக் குறிப்பு உள்ளது. அதாவது பொதுப்  பேச்சுவழக்கில்  உள்ள சொல் என அந்தக் குறிப்புக்குப் பொருள்.  இச்சொல்லுக்கு ‘எழுதத் தெரியாதவன் தன் கையெழுத்தாக இடும் கீறல்’ என்றும் ‘எழுதப் படிக்கத் தெரியாதவன்’ என்றும் இருபொருள்களைப் (தொகுதி 3, ப.1805) பேரகராதி தருகிறது. பெருவிரல் ரேகையிடும் கீறலை முதலில் குறித்திருக்கிறது. பின் ஆகுபெயராகிக் கீறலிடுபவரையே குறிப்பதாகப் பொருள் விரிவு பெற்றுள்ளது.

இச்சொல் வரலாறு இத்துடன் நின்றுவிடவில்லை. பொருள் அழிந்தும் பொருள் மாற்றம் பெற்றும் தொடர்ந்திருக்கிறது. 1990களில் வெளியான க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியும் இச்சொல்லுக்கு இருபொருள் தருகிறது. முதலாவது ‘எழுதப் படிக்கத் தெரியாத நபர்’ என்பது. பேரகராதியில் முதற்பொருளாக இடம்பெற்ற ‘கீறல்’ க்ரியா அகராதியில் ஒருபொருளாகவே இல்லை. கீறல், ரேகை ஆகியவை வழக்குப் பெற்றுவிட்டதால் அப்பொருளில் இருந்து ‘தற்குறி’ தன்னை விடுவித்துக் கொண்டது போலும்.

பேரகராதியில் இரண்டாவதாக இடம்பெறும்  ‘எழுதப் படிக்கத் தெரியாதவன்’ என்பது க்ரியாவில் ‘எழுதப் படிக்கத் தெரியாத நபர்’ என முதலிடத்திற்கு வந்துவிட்டது. ‘ன்’ என ஆண்பாலை மட்டுமே குறித்த பொருள் ‘நபர்’ என ‘ர்’ ஆகி ஆண், பெண் இருவரையும் குறிப்பதாக மாற்றம் பெற்றிருப்பதையும் கருத வேண்டும். பெண்கள் கல்வி கற்பது பெருவழக்கானதை இந்த ‘ர்’ மாற்றம் உணர்த்துகிறது.  ‘எழுதப் படிக்கத் தெரியாத நபர்’ என்னும் பொருளுக்கு க்ரியா அகராதி சான்றுத் தொடர் எதையும் தரவில்லை. அனேகமாகத் தற்காலத் தமிழில் அப்பொருள் அருகி வருவதால் தொடர் கிடைத்திருக்காது என்றே நினைக்கிறேன். எழுதப் படிக்கத் தெரியாத தலைமுறை அருகிவிட்டது என்றும் கருதலாம்.

இச்சொல்லுக்குக் க்ரியா அகராதியில் இடம்பெற்றுள்ள இரண்டாம் பொருள் ‘(ஒரு துறையில்) எதுவும் தெரியாதவர்’ என்பதாகும். எழுதப் படிக்கத் தெரியாமல் இருத்தல் என்னும் ஒன்றை மட்டுமே குறித்திருந்த இச்சொல் ‘எதுவும் தெரியாதவர்’ என்று  பொதுப்பொருளை நோக்கி விரிவு பெற்றிருக்கிறது. சான்றுக்கு இருதொடர்கள் உள்ளன.  ‘சங்கீதத்தில் நான் ஒரு தற்குறி’, ‘நண்பர் விளக்கிச் சொன்ன பிறகுதான் சட்ட சம்பந்தமான விஷயங்களில் நான் தற்குறியாக இருப்பது புரிந்தது’ ஆகியவை அவை. குறிப்பிட்ட ஒருதுறை சார்ந்த அறிவின்மை என்பதைக் குறிக்கச் சங்கீதம், சட்டம் ஆகிய துறைகள் இத்தொடர்களில் காட்டப்பட்டுள்ளன.

தற்குறி, தற்குறித்தனம், தற்குறிப்பயல்

அகராதிப் பதிவுகளைக் கடந்து இப்போது இச்சொல் அரசியல் முக்கியத்துவம் பெற்றதோடு அல்லாமல் வசைச்சொல்லாகவும் மாறியிருக்கிறது. ஒரே ஒரு விஷயம் மட்டும் தெரியாதவர் என்பதிலிருந்து ஒருதுறை சார்ந்து எதுவும் தெரியாதவர் என மாறி இப்போது எதுவுமே தெரியாதவர் ஆகியிருக்கிறது. வெளிப்படையாகச் சொன்னால் தற்குறிக்கு ‘முட்டாள்’ எனத் தெளிவாகப் பொருள் ஏறியிருக்கிறது. இனி இச்சொல்லைப் பொதுவெளியில் வசையாகத்தான் பயன்படுத்த முடியும்.  க்ரியா அகராதியின் சான்றுத் தொடர்களில்  ‘நான் ஒரு தற்குறி’, ‘நான் தற்குறியாக இருப்பது…’ என தன்னையே குறிப்பிடும் ‘நான்’ இனி ‘தற்குறி’யோடு இணைந்து பெரும்பாலும் வராது. எதிரில் இருப்பவரை, எங்கோ இருப்பவரை வசைபாடவே பயன்படும். அதாவது தன்மைப் பயன்பாடு அருகிவிடும். முன்னிலை, படர்க்கைப் பயன்பாடு மிகும்.

‘தற்குறி என்பது நிச்சயம் பாராட்டு கிடையாது என்றாலும், அது தரக்குறைவான சொற்பயன்பாடு என்று சொல்வதற்கில்லை’ என ராஜன்குறை தம் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். இதுவரைக்கும் அப்படி இருந்திருக்கலாம். இனி இருக்க முடியாது. இப்போதைய அரசியல் சூழலில் இச்சொல் பெற்ற பொருள் மாற்றத்திற்குப் பிறகு  இது வசைச்சொல் என்னும் மதிப்பைப் பெற்றுவிட்டது.

தற்குறி மட்டுமல்ல, தற்குறித்தனம், தற்குறிப்பயல் ஆகியவையும் வழக்குப் பெற்றிருக்கின்றன. வலைத்தளத்தில் கண்ட சில சான்றுகள்:

‘தற்குறித்தனத்தின் மொத்த உருவம் இவர்தான்.’

‘அணில்களின் தற்குறித்தனங்கள்.’

‘தமிழ்நாட்டோட உன் தற்குறித்தனத்தை வச்சுக்கோ.’

‘தற்குறிப்பயலுக்குப் பதிலடி.’

‘கொள்கையற்ற தற்குறிப்பயலே.’

தற்குறி என்பதன் பயன்பாடு மிகுதி. கூகுளில் அதிகம் பேர் தேடிய சொல். தற்குறித்தனம், தற்குறிப்பயல் ஆகியவை அவ்வளவு இல்லை என்றாலும் பலர் பயன்படுத்தியிருக்கின்றனர். பேரகராதியிலேயே ‘அவன் தற்குறிப்பையல்’ எனச் சான்றுத்தொடர் உள்ளது. ஓரளவு வசை கொண்ட பொருள்தான் அது. இப்போது வசைத்தன்மை கூடி முழுவசைச்சொல்லாக மாறிவிட்டது எனலாம். ஆக இனி  இவை மூன்றுமே முழுமையான வசைச்சொற்கள் தாம். அடுத்து வரும் அகராதிப் பதிவுகளில் ‘வசைச்சொல்’ என்னும் குறிப்பு கொடுக்கப்படும். சமூகமே கூடி ஒருசொல்லை வசைப்பொருளுக்கு மாற்றிய புதுவரலாற்றை இச்சொல் பெற்றிருக்கிறது.

பயன்பட்ட நூல்கள்:

  1. தமிழ்ப் பேரகராதி, தொகுதி 1, தொகுதி 5 ஆகியவை.
  2. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி.
  3. South Indian Inscriptions, V.5.

—–   11-12-2025

Add your first comment to this post