தமிழ்த்தாய் வாழ்த்து உரை

You are currently viewing தமிழ்த்தாய் வாழ்த்து உரை

 

தமிழ்த்தாய் வாழ்த்துப் பிரச்சினை தொடர்பாகச் சில கட்டுரைகள் எழுதிய போது அப்பாடலுக்குப் பொருள் எழுதினால் உதவியாக இருக்கும் என்று நண்பர்கள் சிலர் கேட்டனர். மனோன்மணீயத்தில் உள்ள வாழ்த்துப் பாடல் முழுமைக்கும் உரை எழுதலாம் எனத் திட்டமிட்டதில் தாமதமாகிவிட்டது. அது மிகுதியான நேரம் எடுக்கும் வேலை. ஆகவே அரசு விழாக்களில் பாடப்படும் எட்டடிக்கு மட்டும் இப்போது பொருள் எழுதியுள்ளேன். சிறுமுயற்சி இது.  காண்க.

பாடும் வடிவம் இது:

நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்

சீராரும் வதனமென திகழ்பரத கண்டமிதில்

தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்

தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே

அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற

எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே

உன்சீர் இளமைத் திறம்வியந்து  செயல்மறந்து

வாழ்த்துதுமே வாழ்த்துதுமே வாழ்த்துதுமே.

000

பொருள் கூறும் வசதிக்காகச் சந்தி பிரித்த வடிவம் இது:  

நீர்ஆரும் கடல்உடுத்த நிலமடந்தைக்(கு) எழில்ஒழுகும்

சீர்ஆரும் வதனம்எனத் திகழ்பரத கண்டம்இதில்

தெக்கணமும் அதில்சிறந்த திராவிடநல் திருநாடும்

தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே;

அத்திலக வாசனைபோல் அனைத்(து)உலகும் இன்பம்உற

எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழ்அணங்கே!

உன்சீர் இளமைத் திறம்வியந்து செயல்மறந்து

வாழ்த்துதுமே வாழ்த்துதுமே வாழ்த்துதுமே!

000

அருஞ்சொற்பொருள்: நீர் – அலை; ஆரும் – ஒலிக்கும், நிறையும், பொருந்தும்; சீர் – செல்வம், அழகு; வதனம் – முகம்; என – போல; தெக்கணம் – தெற்கு; நுதல் – நெற்றி; தரித்த – அணிந்த; திலகம் – பொட்டு;  அணங்கு – தெய்வம்.

000

பதவுரை: நீர் ஆரும் கடல் உடுத்த – அலைகள் ஒலிக்கும் கடலை ஆடையாக அணிந்த, நிலமடந்தைக்கு – நிலமாகிய பெண்ணுக்கு, எழில் ஒழுகும் சீர் ஆரும் வதனம் என – அழகு மிகுந்த, பொலிவு நிறைந்த  முகம் போல, திகழ்பரத கண்டம் இதில் – விளங்கும் பரத கண்டம் ஆகிய இதில், தெக்கணமும் – தென்பகுதியும்,  அதில் சிறந்த திராவிட நல் திருநாடும் – அதில் சிறந்த திராவிடம் என்னும் நல்ல வளமுடைய நாடும், தக்கசிறு பிறை நுதலும் – பொருத்தமான சிறுபிறை போன்ற நெற்றியும், தரித்த நறும் திலகமுமே – அணிந்த நறுமணம் வீசும் பொட்டும் ஆகும்;

அத்திலக வாசனை போல் – அந்தப் பொட்டின் வாசனை போல, அனைத்து உலகும் இன்பம் உற – உலகம் முழுதும் இன்பம் அடைய, எத்திசையும் புகழ் மணக்க – எல்லாத் திசையிலும் புகழ் பெற்று, இருந்த பெரும் தமிழ் அணங்கே – வீற்றிருந்த பெருமைக்குரிய தமிழ்த் தெய்வமே, உன் சீர் இளமைத் திறம் வியந்து – உன் அழகிய இளமையின் ஆற்றலைக் கண்டு வியந்து, செயல் மறந்து – பிற செயல்களை எல்லாம் மறந்து, வாழ்த்துதுமே – வாழ்த்துகின்றோமே.

பொழிப்புரை: அலைகள்  ஒலிக்கும் கடலை ஆடையாய் அணிந்திருக்கும் நிலமகளின் அழகு மிகுந்த பொலிவான முகம் போல விளங்கும் பரத கண்டமாகிய இதில் தென்பகுதியும் தென்பகுதியில் சிறந்த  திராவிடமாகிய நல்ல வளம் பெற்ற நாடும் ஆகியவை முகத்திற்குப் பொருத்தமான சிறுபிறை போன்ற நெற்றியும் அதில் வைத்த நறுமணம் வீசும் பொட்டும் ஆகும்.

அந்தப் பொட்டின் வாசனை போல உலகம் முழுதும் இன்பம் அடையவும் எல்லாத் திசையிலும் புகழ் பெற்றும்  வீற்றிருக்கும் பெருமைக்குரிய தமிழ்த் தெய்வமே! உன் அழகிய இளமை ஆற்றல் கண்டு வியந்து பிற செயல்கள் எல்லாம் மறந்து  வாழ்த்துகின்றோம்.

எளிய உரை: அலைகள்  ஒலிக்கும் கடலை ஆடையாய் அணிந்திருப்பவள் நிலமகள். அவளது அழகு மிகுந்த பொலிவான முகமாக விளங்குவது பரத கண்டம். அம்முகத்திற்குப் பொருத்தமான சிறுபிறை போன்ற நெற்றி தென்னகம். அந்நெற்றியில் வைத்த நறுமணம் வீசும் பொட்டு தென்னகத்தில் சிறந்த திராவிடமாகிய நல்ல வளம் பெற்ற நாடு. அப்பொட்டின் வாசனை போல, உலகம் முழுதும் இன்பம் அடையவும் எல்லாத் திசையிலும் புகழ் பெற்றும் வீற்றிருக்கும் பெருமைக்குரிய தமிழ்த் தெய்வமே! உன் அழகிய இளமை ஆற்றல் கண்டு வியந்து பிற செயல்கள் எல்லாம் மறந்து நாங்கள் வாழ்த்துகின்றோம்.

கருத்துரை: நிலமகளின் முகம் பரதகண்டம்.  நெற்றி தென்னகம். நெற்றியில் அணிந்த பொட்டு திராவிடம். பொட்டின் வாசனை தமிழ்த்தெய்வம். அத்தெய்வத்தை வாழ்த்துகின்றோம்.

இலக்கணக் குறிப்பு: நிலமடந்தை – நிலமாகிய மடந்தை; உருவகம். என – உவம உருபு. திகழ்பரதகண்டம் – வினைத்தொகை. பிறைநுதல் – பிறை போன்ற நுதல்; உவமைத்தொகை. சிறுநுதல், நல்நாடு, பெருந்தமிழ் ஆகியவை பண்புத்தொகை. தமிழணங்கு – தமிழாகிய அணங்கு; உருவகம். வாழ்த்துதும் – உளப்பாட்டுத் தன்மைப் பன்மை.

விளக்கம்: புவியைப் பெண்ணாக உருவகித்துள்ளார். அவள் முகமே பரதகண்டம். நெற்றி தென்னகம்; நெற்றிப்பொட்டு திராவிட நாடு; பொட்டின் வாசனை தமிழ். பாடல் முழுவதுமே உருவகம். அக்காலத்தில் நெற்றிக்கு இடும் பொட்டை நறுமணம் வீசும் மூலிகைகள் மூலம் தயார் செய்வர்.

நிலத்தைப் பெண்ணாக உருவகிப்பது மரபு. ‘பன்மாண் நிலமகள் அழுத காஞ்சியும்’ (புறம் 365),  ‘நிலமென்னும் நல்லாள் நகும்’ (குறள் 104), ‘நிலமகள் நெஞ்சுகை எறிந்து நையவும்’ (சீவக சிந்தாமணி, 2221) என்பன போல இலக்கிய வழக்குகள் பல உள்ளன. ‘பூமாதேவி’ என்பது உலக வழக்கு.

அணங்கு – தெய்வம்; ‘அணங்கே விலங்கே களவர்தம் இறையென’ (தொல்காப்பியம் பொருளதிகாரம் 256).

வாழ்த்துதும் – வாழ்த்துகின்றோம். ‘திங்களைப் போற்றுதும்; ஞாயிறு போற்றுதும்; மாமழை போற்றுதும்; பூம்புகார் போற்றுதும்’ என அமைந்த சிலப்பதிகார வாழ்த்தை நினைவில் கொள்க.

—–   16-11-24.

Latest comments (1)

Bharath Thamizh

தகவல்களைத் தெரிந்து கொள்வதைத் தாண்டி ஒற்றுப்பிழைகள் இன்றி எழுதக் கற்றுக் கொள்ளவும் உங்கள் கட்டுரைகளை வாசிக்கிறேன் ஐயா!