தாயக் கிறுக்கு

You are currently viewing தாயக் கிறுக்கு

 

 

சமீபத்தில் இணையதளத்தில் பார்த்த திரைப்படம் ‘லப்பர் பந்து.’ விளையாட்டை மையமாக வைத்து வெளியாகும் படங்கள் இந்த நூற்றாண்டில்தான் அதிகம். கடந்த நூற்றாண்டில் அப்படிப்பட்ட படங்கள் ஏதும் வந்ததாக எனக்குத் தெரியவில்லை. சில படங்களில் அங்கங்கே விளையாட்டுக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பெரும்பாலும் கதாநாயகனின் வீரத்தைப் பறைசாற்றும் உத்தியாகத்தான் விளையாட்டு இடம்பெறும். ஜல்லிக்கட்டு அப்படித்தான். கதாபாத்திரங்கள் மேல்தட்டு வர்க்கம் என்பதை உணர்த்துவதற்கு டென்னிஸ் விளையாடுவதாகக் காட்டுவதுண்டு.

கடந்த நூற்றாண்டில் வெளியான ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களைப் பார்த்திருக்கிறேன். எனினும் படங்களில் கண்ட விளையாட்டுக் காட்சிகள் சட்டென்று நினைவுக்கு வரவில்லை. சில காட்சிகள் பாடல்களால் ஆனவை என்பதால் நினைவில் பதிந்திருக்கின்றன. கபடி பல படங்களில் இடம்பெற்றிருக்கிறது. கிராமத்தைக் காட்சிப்படுத்தவோ திருவிழா கொண்டாட்டத்தைக் குறிக்கவோ விளையாட்டுக்களைக் காட்டுவதுண்டு.

‘பணக்காரக் குடும்பம்’ என்னும் எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படத்தில் ‘பலிஞ் சடுகுடு சடுகுடு சடுகுடு’ என்று சரோஜாதேவி குழுவினர் பாடிக்கொண்டு கபடி விளையாடும் காட்சி உண்டு.  ‘வாடியம்மா வாடி வண்டாட்டம் வாடி ஆத்தங்கரைப் பக்கத்திலே காத்திருக்கேன் வாடி’ என்று பி.சுசிலாவும் எல்.ஆர்.ஈஸ்வரியும் பாடும் பாடல் அது. அதே படத்தில் சரோஜாதேவியும் எம்.ஜி.ஆரும் டென்னிஸ் விளையாடும் காட்சியும் உண்டு. அதற்கும் ஒருபாடல். பந்தடிக்கும் ஒலியே தாளமாக வரும். ‘பறக்கும் பந்து பறக்கும் அது பறந்தோடி வரும் தூது’ என்னும் காதல் பாடல் அது.

எனக்கு ஊர்ப்புறத்து விளையாட்டுக்கள் மட்டுமே எனக்குத் தெரியும். தாயத்தில்  மிகுந்த ஈடுபாடு உண்டு. அதில் எப்போதும் எனக்கு வெற்றிதான். அரிதாகவே தோல்வி வரும். என் அப்பன் சொல்லிக் கொடுத்த சூட்சுமங்கள் மூளைக்குள் அப்படியே பதிந்திருக்கின்றன. நானாகவும் சிலவற்றைக் கற்றுக்கொண்டேன். ஒவ்வொரு முறையும் புதிது புதிதாகத் தோன்றும் விளையாட்டு அது. ஒருமுறை விளையாடிய மாதிரி இன்னொரு முறை விளையாடவே முடியாது. என்னைப் பலமணி நேரம் ஓரிடத்தில் உட்கார வைக்க வேண்டும் என்றால் அது தாயத்தால் முடியும்.

எங்கள் ஊர் மாரியம்மன் கோயில் ஒருகாலத்தில் தாயம் விளையாடும் இடமாக இருந்தது. காலையில் தொடங்கினால் மாலை வரைக்கும் நடந்துகொண்டே இருக்கும். ஆட்கள் மாறுவார்கள். பார்வையாளர்கள் மாறுவார்கள். ஆட்டம் தடைபடாது. சிலர் கழிப்பதற்குக்கூட எழுந்து செல்லாமல் ஆடியபடியே இருப்பார்கள். சோறு தண்ணீரையும் மறந்தவர்கள் உண்டு. கரம் போட்டு நாய் ஓட்டி விளையாடும் ஆட்டம் முடிய நேரமாகும். ஐம்பது பைசா, ஒரு ரூபாய் பந்தயம் வைத்து விளையாடும் ஆட்டம் வேறு. அதற்குத் தாயக்கட்டைகளைப் பயன்படுத்துவதில்லை.

மரத்திலும் இரும்பிலும் பித்தனையிலும் தாயக்கட்டைகள் உண்டு. அவற்றை உருட்டிவிட்டால் கண்டபடி விருத்தம் விழும். ஐந்தும் ஐந்துக்கும் அதிகமான எண்களும் விழுந்தால் அதற்குப் பெயர் விருத்தம். ஒன்றுக்கு மேற்பட்ட முறை கட்டையை உருட்ட வேண்டியிருந்தால் அது விருத்தம். தாய்க்கொட்டைகளைப் பயன்படுத்தினால் விருத்தம் விழுவது கடினம். ஆறு புளியங்கொட்டைகளை ஒருபுறம் உறைத்து வைத்துக்கொள்ள வேண்டும். ஒன்றிற்கு மட்டும் இன்னொரு புறத்திலும் சிறுவட்டம் விழும் அளவு உறைக்கலாம். நான்கு விழுந்து சிறுவட்டக்கொட்டை கவிழ்ந்து கிடந்தால் அது எட்டு.

தாயக் கிறுக்கு

தாயக்கட்டைக்கும் கொட்டைக்கும் சில வித்தியாசங்கள் உண்டு. ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, பன்னிரண்டு இரண்டிலும் விழும். கட்டையில் எட்டுக்கு வாய்ப்பில்லை. கொட்டையில் எட்டு உண்டு. ஆனால் ஆறு, எட்டு, பன்னிரண்டு ஆகியவை தாயக்கொட்டையில் விழுவது அரிது. ஆகவேதான் பந்தயம் கட்டி விளையாடும்போது கொட்டையே நல்லது. ‘ஏறுவெயில்’ நாவலின் முதல் இயலில் ஒரே ஒரு சிறுபத்தி இந்தத் தாயத்தைப் பற்றி எழுதியிருக்கிறேன். அதில் கோயிலைப் பற்றி வரும். என் அப்பனின் சித்திரமும் உண்டு. அப்பகுதி:

‘காரை போட்டுப் பந்தல் நட்டிருக்கும் வெளிவாசலில் தாயக்கரம் ஆடிச் சலித்த நாட்கள். பெரிய பெரிய தலைகள் மண்டியிட்டு, பல்லை இறுகக் கடித்துக்கொண்டு கொட்டையை உருட்டுவார்கள். ‘தாயம்…’, ‘ஓரெட்டு ஓரெட்டு’, ‘இதுதான் ஆறு பாத்துக்க.’ கலாமுலா சத்தம். கெக்கலிச் சிரிப்பு. தோற்றுப் போய்விட்டால் தாயக்கொட்டைகளை அள்ளி, எச்சில் துப்பித் தலையைச் சுற்றி வீசி எறிவார் அப்பன். அந்தப் புளியமரத்திற்கு அடியில் தேடிப் பார்த்தால் அவர் எறிந்த கொட்டைகள் இப்போதும் கிடைக்கும். பளிச்சிடும் எட்டாம் கொட்டையில் வேர்த்துச் சுண்டிக் கொதிக்கும் இவன் அப்பனின் முகம் தெரியும்.’

கரம் இல்லை, ஓட்ட நாயும் இல்லை என்றால் அதை விளையாட்டு என்று சொல்ல முடியாது. சூதாட்டம் என்பதே சரி. ஒருவர் கொட்டைகளைக் கையில் அள்ளி நான்கைந்து முறை சொலுக்கிக் கீழே வீசினால் ஏதோ ஒரு எண்ணிக்கை விழும். எதிரில் இருப்பவர் அடுத்து வீசுவார். இருவரில் யாருடைய எண்ணிக்கை அதிகமோ அவர் வெற்றி. ‘இவர் ஜெயிப்பார்’ என்று சுற்றி நிற்பவர்களும் பந்தயம் கட்டலாம். இரண்டு பேர் கொட்டையை வீசியதும் ஓர் ஆட்டம் முடிந்துவிடும். அடுத்துப் புதிய ஆட்டம். பிற விளையாட்டுக்களை விடக் கிரிக்கெட்டுக்குச் சந்தை மதிப்பு அதிகமாக இருப்பதற்குக் காரணம் ஒவ்வொரு பந்தும் முக்கியம் என்பதுதான். ஒருபந்தில் ஓட்டம் எடுக்கலாம். அது ஒன்றோ இரண்டோ இருக்கலாம். நான்கு ஆறாகவும் இருக்கலாம். ஒருபந்தில் ஆளைப் போண்டியாக்கலாம். பார்வையாளர்களை ஒவ்வொரு பந்தும் எதிர்பார்ப்பில் வைத்திருக்கும். தாயமும் அப்படித்தான். கிரிக்கெட் வெளியரங்க விளையாட்டு; தாயமோ உள்ளரங்க விளையாட்டு.

கரமில்லாத தாயம் என்பது மகாபாரதத்தில் வரும் பகடையாட்டம் போன்றதுதான். ஒவ்வொரு உருட்டலும் ஆட்டத்திற்கு முக்கியம். தை மாதத்தில் தொடங்கி சித்திரை மாதம் வரைக்கும் உழவு வேலை இருக்காது. அப்போது ஆண்களும் இளைஞர்களும் மாரியம்மன் கோயிலே கதியென்று கிடப்பார்கள். கோயில் வாசலில் வந்து நின்று பெண்கள் தங்கள் புருசனையோ மகனையோ கண்டபடி திட்டி அழைத்துச் செல்வதுண்டு. மனதை அடிமையாக்கும் விளையாட்டு அது.

அதில் ஈடுபட  என்னை அம்மா அனுமதித்ததே இல்லை. சுற்றி நின்று பார்ப்பதற்கே கெஞ்சித்தான் அனுமதி வாங்க வேண்டும். ‘உங்கொப்பனோட தாயக் கிறுக்கு உனக்கு வேண்டாம்’ என்பார். கரம் போட்டுத் தாயம் விளையாடுவதை ஒருபோதும் தடுத்ததில்லை. அம்மாவுக்கும் அதை விளையாடுவதில் விருப்பம் உண்டு. தம் கடைசி காலத்தில்கூட என் பிள்ளைகளோடு விளையாடியிருக்கிறார். பிள்ளைகள் விளையாடும்போது எப்படி நாய் ஓட்ட வேண்டும் என்று நுட்பங்களைச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.

தாயத்தை ஏன் எந்த விளையாட்டு விழாவிலும் போட்டியாகச் சேர்ப்பதில்லை? உள்ளரங்க விளையாட்டுக்களில் ஒன்றாக இதைச் சேர்க்கலாம். தமிழர் விளையாட்டைப் போற்றிக் காக்கத் ‘தம்பிகள்’ முயல வேண்டும். போட்டியில் தாயம்  இருந்திருந்தால் என் கணக்கிலும் சில கோப்பைகள் சேர்ந்திருக்கும்.

—–   06-12-24

Latest comments (3)