சிறுவெள்ளாங் குருகே!
தூது என்பதற்கான வரையறை மிகவும் எளிதானதுதான். அதை நடைமுறை வாழ்க்கையிலிருந்து சொல்ல முடியும். நமக்கு வேண்டியவருக்கு நேரில் போய்ச் செய்தியைச் சொல்ல முடியாது. நேரில் செல்ல முடியாத சூழலில் தன் சார்பாக இன்னொருவரை அனுப்பி ‘இந்தச் செய்தியை சொல்லிவிட்டு வா’ என்பது தான் தூது. இதை நடைமுறை வாழ்வில் நாம் பார்க்கலாம். இப்போது தொலைபேசி வந்தவுடன் நாம் எங்கிருந்தாலும் தொழில்நுட்ப வசதிகளால் பேசிக் கொள்கிறோம்; முகத்தையே பார்த்துக் கொள்கிறோம். ஆனால் முந்தைய காலத்தில், பத்து ஆண்டுகளுக்கு முன்னால் கூட ஒருவரை அணுகுவது என்பது மிகக் கஷ்டமானது. ஒரு கிலோ மீட்டர், இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இருந்தாலும் ஒருவரை உடனே அணுக முடியாது. அதைப் பிரிவு என்று இலக்கியங்கள் சொல்கின்றன. பிரிந்திருக்கும் போதும் செய்தியைச் சொல்லுவதற்குச் சில வழிகள் இருக்கின்றன.
உதாரணமாக தமிழ்நாட்டில் இருந்து சிங்கப்பூருக்குச் செல்பவர்களிடம் பொருட்களைக் கொடுத்து அனுப்பித் தமக்கு உரியவர்களிடம் சேர்த்துவிடச் சொல்வது உண்டு. இதெல்லாம்கூடத் தூது என்பதற்கான அடிப்படை தான். அப்படித் தூரத்தில் இருக்கக்கூடிய ஒருவருக்குச் செய்திகளைச் சொல்லலாம். அதே போல் தூரத்தில் இருக்கும் ஒருவர் தனக்கு வேண்டியவருக்குச் செய்தி சொல்ல வேண்டுமென்றால் அங்கிருந்து யார் இங்கு வருகிறார்களோ அவர்களிடம் சொல்லி விடலாம். இது நடைமுறை வாழ்க்கையில் இன்றைக்கு வரைக்கும் இருக்கக்கூடிய ஒரு விஷயம். அதிலிருந்து இலக்கியம் எடுத்துக்கொண்டு அதை ஒரு உத்தியாக மாற்றி இலக்கிய வகைமையை உருவாக்கி இருக்கிறது. இதுதான் நம் தூதிற்கான அடிப்படை. இப்படி அன்றாட வாழ்க்கையில் கலந்த ஒரு விஷயமாக இருக்கும் காரணத்தால் தொடர்ச்சி அறுபட்டு போகாமல் இன்றைக்கு வரைக்கும் வந்து கொண்டிருப்பதை நாம் காணலாம். எனவே சமகாலத்திலும் இருக்கக்கூடிய சிற்றிலக்கிய வகை என்று தூது இலக்கியத்தைக் கூறலாம். சங்க இலக்கியங்களில் தூது இலக்கியத்தை அகத்தூது, புறத் தூது என்று இரண்டாகப் பிரித்துச் சொல்லுவார்கள்.
அகத்தூது என்பது காதலுக்காக அனுப்புவது. பெரும்பாலும் தலைவி தலைவனுக்கு அனுப்பும் தூது. சில சமயங்களில் தான் தலைவன் தலைவிக்கு அனுப்புவதாக இருக்கும். இவை அகத் தூதுக்கள் ஆகும். புறத்தூது என்பது காதல் அல்லாத பிற காரணங்களுக்காகத் தூது செல்வது. இந்த இரண்டையும் சங்க இலக்கியங்களில் நாம் காணமுடிகிறது.சங்ககால மிக முக்கிய புலவர் வெள்ளி வீதியார் எழுதிய பாடல் தூதுக்கான அருமையான ஆரம்பம் என்று சொல்லலாம். அவர் குருகைத் தூது விடுகிறார். குருகு என்பது நாரை வகையைச் சேர்ந்த ஒரு பறவை. அது சிறு நாரை வகையைச் சார்ந்தது. நீர்நிலைகளில் இருக்கக்கூடிய பறவையாகும். அந்தப் பறவையைப் பார்த்துச் “சிறு வெள்ளாங்குருகே” என்று விளித்து அழைப்பதாகச் சங்க இலக்கியத்தில் முன்னோட்டமாக இப்பாடல் அமைந்திருக்கிறது.
பல பாடல்களில் தூதுப் பொருட்கள் வந்தாலும்கூட இந்த வெள்ளிவீதியார் பாட்டு மிகச்சிறந்த பாட்டாகும். ஏனென்றால் எந்தப் பொருளை நாம் தூது அனுப்புகிறோமோ அந்தப் பொருளை நேரடியாக விளித்துச் சொல்வதாக இப்பாடல் அமைந்திருக்கிறது.
“சிறுவெள்ளாங் குருகே! சிறுவெள்ளாங் குருகே!
துறைபோகு அறுவைத் தூமடி யன்ன
நிறம்கிளர் தூவிச் சிறுவெள்ளாங் குருகே!
எம்மூர் வந்தெம் உண்துறைத் துழைஇ
சினைக்கெளிற் றார்கையை அவர்ஊர்ப் பெயர்தி
அனைய அன்பினையோ பெருமறவி யையோ
ஆங்கண் தீம்புனல், ஈங்கண் பரக்கும்
கழனி நல்லூர் மகிழ்நர்க்கென்
இழைநெகிழ் பருவரல் செப்பா தோயே!” (நற்.70)
என்று வலசை போய்க் கொண்டிருக்கும் சிறுவெள்ளாங் குருகை அழைத்துத் தலைவி தலைவனிடம் தனது துன்பத்தைச் சொல்லக் கூறியதாக எழுதப்பட்டுள்ளது. ‘காமம் மிக்க கழிபடர் கிளவி’ என்று அகப்பொருள் கூறும். ஒரு பெண் தன்னுடைய காதலை வெளிப்படையாக பேசக் கூடாது. ஆனால் அதற்கு ஒரு விதிவிலக்கு உண்டு. சில சந்தர்ப்பங்களில் பேசலாம். எப்பொழுது என்றால் காமத்தை ஆற்றியிருக்க முடியாமல் தாங்க முடியாத நிலை வரும்போது ஒரு பெண் வெளிப்படையாகப் பேசலாம் என்ற ஒரு விதிவிலக்கு உண்டு.
அந்தச் சமயத்தில் பேசும்போது தான் தூது வருகிறது. மனம் ஆற்றாமையின் காரணமாகப் பேசும்போது காதல் பிரிவினால் தனக்குத்தானே பேசிக் கொள்வார்கள். சுவரைப் பார்த்துப் பேசுவார்கள். எதிரில் இருக்கக்கூடிய மரத்தைப் பார்த்துப் பேசுவார்கள். என்ன என்ன பொருட்கள் இருக்கிறதோ அதையெல்லாம் பார்த்துப் பேசுவார்கள். அவை பேசுகிறதோ இல்லையோ அவர்களுடைய மன கனம் குறைவதற்காக எதிரில் இருக்கக்கூடிய எதைப் பார்த்து வேண்டுமானாலும் பேசுவார்கள். இப்படி ஒரு நிலை காதலில் உண்டு. அதைத்தான் ‘காமம் மிக்க கழிபடர் கிளவி’ என்று இலக்கணம் சொல்கிறது. இந்தப் பாடல் அந்தப் பொருளில் அமைந்தது. அகத்தூதுக்கான இலக்கணமாக இந்தப் பாடலை நாம் கொள்ளலாம்.
அகத்தில் மட்டுமல்ல, புறத்திலும் தூது விடுவதுண்டு. காப்பியங்களில் ராமனுடைய தூதுவனாக அனுமன் இலங்கைக்குச் சென்றதை நாம் காணலாம். “ராமனுடைய தூதுவன் நான்” என்று தன்னை அனுமன் அறிமுகப்படுத்திக் கொண்டு ராவணனிடம் பேசத் தொடங்குகிறான். பாரதத்தில் ‘கிருஷ்ணர் தூதுச் சருக்கம்’ என்று ஒன்று உண்டு. கிருஷ்ணர் பாண்டவருடைய தூதராகக் கௌரவர்களிடம் தூது சென்றதைக் குறிப்பது. இப்படிப் போர் சம்பந்தமாக பேசுவதற்கு அல்லது வேறு ஏதாவது ஒரு செய்தியைச் சொல்வதற்குச் செல்லக்கூடிய தூதைப் புறத்தூது என்று சொல்கிறோம். இதற்கும் சங்க இலக்கிய உதாரணங்கள் உண்டு.
—– 15-03-25
😍