நவீன இலக்கியமும் கல்விப் புலமும்
(நேற்றைய பதிவின் தொடர்ச்சி)
வழக்கமாகப் பிப்ரவரி என்றால் பல்கலைக்கழகங்களில் கருத்தரங்க மாதம் என்று பொருள். சென்னைப் பல்கலைக்கழகத்தில் பல்வேறு அறக்கட்டளைகள் உள்ளன. அவற்றுக்கான சொற்பொழிவுகளும் நடைபெறும். ய.மணிகண்டனுக்கு நாளொரு சொற்பொழிவு, கருத்தரங்கு என்று தொடர் நிகழ்வுகள். ஈரோட்டில் இருந்த அவர் தாயார் உடல்நிலை கவலைக்கிடம். இடையில் ஒருநாள் கிடைத்தாலும் தாயைப் பார்க்க ரயிலேறி விடுவார். இத்தகைய அலைச்சலுக்கு இடையே பிப்ரவரி 20 வியாழன் அன்று ‘பெருமாள்முருகன் படைப்புகள்’ கருத்தரங்கு.
இத்தகைய கருத்தரங்குக்குப் பல்கலைக்கழகம் என்ன வழங்கும்? இன்று பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர் இல்லாமல் இயங்குவது போலவே போதுமான நிதியும் இல்லாமல் அல்லாடுகின்றன. முந்தைய காலம் போலத் தொலைதூரக் கல்வி வருமானம் இல்லை. நடுவண் அரசு உயர்கல்விக்குப் போதுமான நிதி ஒதுக்குவதில்லை. மாநில அரசு கொடுக்கும் நிதி போதுமானதாக இல்லை. ஆகப் பல்கலைக்கழகத்திடமிருந்து என்ன எதிர்பார்க்க முடியும்?
இலக்கியக் கூட்டங்களுக்குப் பார்வையாளர்கள் குறைந்துவிட்டனர். அவற்றின் பதிவைச் சுருதி டிவி கபிலன் அன்றன்றைக்கே வெளியிட்டு விடுவதால் நேரம் கிடைக்கும்போது கேட்டுக்கொள்ளலாம் என்றாகிவிட்டது. இப்போது கைப்பேசியைக் கொண்டு இளைஞர்களே பதிவு செய்து வெளியிட்டுவிடுகின்றனர். நேரலையாகவும் ஒளிபரப்புகின்றனர். இத்தனை வசதிகள் இருக்கும்போது நேரமும் பணமும் செலவழித்துக் கூட்டத்திற்குச் செல்ல வேண்டிய தேவையென்ன? இணைய வழிக் கூட்டங்களும் இப்போது பெருகிவிட்டன. அவற்றில் இணைவது சுலபமாக இருக்கிறது. திருவிழா போல ஏதேனும் இலக்கியக் கூட்டம் நடந்தால் சென்று கொண்டாட்டத்தில் பங்கேற்கலாம் என்னும் மனநிலை உருவாகிவிட்டது.
இந்நிலையில் பல்கலைக்கழகத்திலோ கல்லூரியிலோ கூட்டம் நடத்தினால் மாணவர்கள் பார்வையாளர்களாகப் பங்கேற்பர். ஆட்கள் வருவார்களோ இல்லையோ என்று அலமர வேண்டியதில்லை. அரங்கும் ஒலிபெருக்கியும் பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே இருப்பவை. அழைப்பிதழின் மென்படியைத் தயாரித்தால் போதும். எனினும் அதற்கு மேலான செலவுகளும் இருக்கின்றன. சிற்றுண்டி, உணவு, அன்பளிப்பு ஆகியவற்றுக்குக் காலச்சுவடு பொறுப்பெடுத்துக் கொண்டது. உரையாளர்களுக்கு மட்டும் அல்லாமல் பார்வையாளர்களாக வரும் மாணவர்களுக்கும் அன்பளிப்பு வழங்கும் வகையில் நூற்றைம்பது கட்டுப் புத்தகங்களைக் காலச்சுவடு வழங்கியது.
உரையாளர்களை முடிவு செய்யவும் கருத்தரங்க ஏற்பாடு தொடர்பாகவும் காலச்சுவடு கண்ணனும் அரவிந்தனும் உதவினர். பழ.அதியமான் பலநிலைகளில் ஆலோசனைகள் வழங்கினார். பெருந்தலைகளும் இளைய தலைமுறையும் கிட்டத்தட்டச் சம அளவில் பங்கேற்குமாறு நிகழ்ச்சி நிரல் அமைந்தது. மணிகண்டனின் நல்மாணாக்கர் இளங்கோ ஏற்பாடுகளைப் பார்த்துக் கொண்டார். தம் ஆசிரியரின் பெயரைச் சொல்லவும் தயங்கும் பழங்காலப் பண்புடையவர் இளங்கோ. ஆசிரியர் நிலையறிந்து சக ஆய்வாளர்களுடன் இணைந்து அனைத்தையும் நிறைவுறச் செய்தார்.
கருத்தரங்கு நாள் காலை எனக்கு மகிழ்ச்சியாக இல்லை. தாயாரைப் பார்க்கச் சென்ற மணிகண்டன் அன்று காலையில் தான் சென்னை வந்து சேர்ந்தார். தொடக்கவுரை நிகழ்த்தவிருந்த ஆ.இரா.வேங்கடாசலபதிக்குத் தொடர் இருமல். ஒருமணி நேர அமர்வுப் பொறுப்பை ஏற்றிருந்த டி.எம்.கிருஷ்ணா சிறுஅறுவை சிகிச்சை முடிந்து முந்தைய நாள் இரவுதான் வீட்டுக்குத் திரும்பியிருந்தார். கவிஞர் வெய்யில் விபத்தில் சிக்கிக் காயம்பட்ட படங்களை அனுப்பியிருந்தார். நண்பர்களை எல்லாம் சிரமத்திற்கு உள்ளாக்குகிறோமே என்று சங்கடத்தில் ஆழ்ந்தேன். மணிகண்டனின் பிடிவாதம் மேல் கோபமும் வந்தது. சஞ்சலத்தோடு சென்றாலும் அவர் முகம் பார்த்ததும் எல்லாம் மறந்தேன்.
பல்கலைக்கழகம் கடற்கரைக்கு எதிரில் இருந்தாலும் மாணவர் விடுதி வெகுதொலைவில் தரமணிப் பகுதியில் இருப்பதால் மாணவர்கள் வந்துசேரப் பத்து மணிக்கு மேலாகியது. ஆகவே பத்தரை மணிக்குத்தான் நிகழ்வு தொடங்கியது. பேராசிரியர் நிர்மலர் செல்வி தம் துறையின் முன்னாள் மாணவரைப் பெருமைப்படுத்தும் வகையிலான தகவல்களோடு இயல்பான வரவேற்புரை வழங்கினார். ஒலிபெருக்கி முன் நின்றால் அருவி போல் பொழியும் மணிகண்டனைக் கட்டுப்படுத்தித் தலைமையுரையைப் பத்து நிமிடத்தில் முடிக்குமாறு செய்தவர் சலபதி. அப்படியும் ‘தமிழ் இலக்கியம் பயின்று ஆசிரியராக, ஆய்வாளராக, அறிஞராக இருக்கும் பெருமாள்முருகன் நவீன இலக்கியப் படைப்பாளராகவும் இருப்பது எங்களுக்கெல்லாம் பெருமை’ என விதந்து பேசினார்.
நவீன இலக்கியத்திற்கும் கல்விப் புலத்துக்கும் ஏனோ பாரதூரமாகவே இருக்கிறது. வேறு மொழிகளில் அப்படி இருப்பதாகத் தெரியவில்லை. இப்போது கணிசமானோர் கல்விப் புலத்திலும் நவீன இலக்கியத்திலும் ஒருசேரச் செயல்படும் காலம் கணிந்திருக்கிறது. நான் எழுத வந்த போது ‘நாவல், சிறுகதை எல்லாம் இலக்கியமா?’ என்று ஏளனமாகப் பார்க்கும் பார்வையே பரவலாக இருந்தது. மணிகண்டனின் உரை அந்த நினைவுகளைக் கொண்டு வந்தது. காலச்சுவடு சார்பாகப் பங்கேற்று அறிமுகவுரை ஆற்றியவர் அரவிந்தன். நான் மாணவனாக இருந்த காலத்திலிருந்து அறிந்தவர். என் எழுத்துப் பயணத்தைத் தொடர்ந்து வரும் ஒருவருக்கு என்ன அவதானிப்புகள் கிடைக்குமோ அவற்றை எல்லாம் தொகுத்து அழகுறப் பேசினார்.
இவ்வாண்டு சாகித்திய அகாதமி விருதாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி தொடக்கவுரை ஆற்றினார். அவரைச் சிரமப்படுத்துகிறோம் என்று தோன்றினாலும் எங்கள் அனைவருக்குமே கருத்தரங்கில் அவர் உரை வேண்டும் என்னும் ஒருமித்த கருத்து இருந்தது. இருமலும் சொற்களுமாய் நிதானமாகப் பேசிய அவர் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தார். வலைத்தளத்தில் நாளொரு கட்டுரை எழுதுவதைப் பற்றிப் பரிசீலிக்க வேண்டும் என்பது ஒன்று. என் படைப்புலகை விரித்துப் பெருநாவல் ஒன்றை எழுத வேண்டும் என்பது மற்றொன்று. அவருடைய இரண்டாம் கோரிக்கை எனக்கும் ஏற்புடையதுதான். காலமும் மனமும் அமைய வேண்டும். உலகியல் சார்ந்தே ஓடி இளமை கழிந்தது. இப்போது அனுபவங்கள் நிறைந்திருக்கின்றன. ஆற அமர எழுத ஓய்வும் உடல் மனநிலைகளும் இயைய வேண்டும். பார்க்கலாம்.
(தொடர்ச்சி நாளை)
—– 03-04-25
சிறப்பான பதிவு.