கர்னாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு இவ்வாண்டு சங்கீத கலாநிதி விருது வழங்குவதைப் பற்றிச் சிலர் சர்ச்சைகளை எழுப்பினர். அவரது இசைத்திறன் குறித்து ஏதும் சொல்ல இயலாதவர்கள் அவர் பெரியாரைப் பற்றிப் பாடினார் என்றும் வேறு சில காரணங்களையும் சொல்லி எதிர்ப்புத் தெரிவித்தனர். சங்கீத கலாநிதி விருதுடன் இந்து பத்திரிகைக் குழுமம் வழங்கும் ‘சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி விருதும்’ அவருக்கு வழங்குவதைத் தடை செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இசைமேதை எம்.எஸ்.சுப்புலட்சுமியைப் பற்றி அவர் எழுதிய சிறந்த விமர்சனக் கட்டுரையை வேண்டுமென்றே திரித்து ‘எம்.எஸ்ஸை இழிவுபடுத்தியவர்’ என்று பரப்பினர்.
மதவாதிகளும் சாதியவாதிகளும் கிட்டத்தட்டப் பத்து மாதங்களாக அவரைக் குறிவைத்து வன்மத்தோடு பலவிதத்தில் உளவியல் தாக்குதல் தொடுத்தனர். எதையும் நிதானமாகவும் கலைஞருக்குரிய தன்மையிலும் அணுகும் டி.எம்.கிருஷ்ணா இந்தச் சர்ச்சைகள் பற்றி எதுவும் பேசவில்லை. தன்விளக்கமோ நேர்காணலோ எதுவும் இல்லை. அவர் வாயைப் பிடுங்கிச் சர்ச்சையை மேலெடுத்துச் செல்லவும் திசை திருப்பவும் முயன்றோர் ஏமாற்றம் அடைந்தனர்.
தம்மைப் பற்றியோ தம் படைப்புகள் பற்றியோ சர்ச்சைகள் ஏற்படும் போது கலைஞர்/எழுத்தாளர் என்ன செய்ய முடியும்? சர்ச்சையை உருவாக்குவோருக்குப் பதில் சொல்லிச் சரி செய்ய முடியுமா? அவர்களுக்கு ஒரு திட்ட நிரல் இருக்கிறது. என்ன பதில் சொன்னாலும் அதிலிருந்து விலக மாட்டார்கள். அவர்கள் மனதிற்குள் புதிய கருத்தை, பார்வையை நுழைப்பது இயலாது. ஆகவே கலைஞர்/எழுத்தாளர் மௌனம் காப்பதுதான் சிறந்தது. வன்மம் கொண்டு ஒருகுழுவினர் கொந்தளிப்பு உணர்வுடன் பேசும் மொழிக்கு எப்படிப் பதில் சொல்வது? அவர்கள் மொழியைக் கலைஞரும் கையாளலாமா? முடியுமா? அதற்குப் பலன் இருக்குமா? கும்பல் மனோபாவத்திற்கு எதிராக எந்தக் கருத்தைச் சொல்லி விளக்க முடியும்?
சர்ச்சையாளர்கள் பேசும் மொழிக்கு எதிராக மௌனத்தை முன்வைக்கும் கலைஞர்/எழுத்தாளர் காலம் முழுவதும் அப்படியே இருந்துவிட முடியாது. அவர் தம் மொழியில் பேசுவதற்குச் சந்தர்ப்பம் உருவாக வேண்டும்; வெளி அமைய வேண்டும். பத்து மாதங்களுக்குப் பிறகு டி.எம்.கிருஷ்ணாவுக்கு அப்படி ஒரு சந்தர்ப்பமும் வெளியும் அமைந்தன. சங்கீத கலாநிதி விருது பெறவுள்ள அவரது இசைக்கச்சேரி கிறிஸ்துமஸ் நாளான 25-12-2024 அன்று மியூசிக் அகாடமி அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை நேரத்தில் கச்சேரி. தம் குழுவுடன் டி.எம்.கிருஷ்ணா பாடினார். இரண்டு மணி நேரக் கச்சேரி.
லுங்கியும் (உண்மையில் அது லுங்கி அல்ல. இலங்கையில் கிடைக்கும் வண்ண வேட்டி) பூப்போட்ட சட்டையும் அணிந்து தம் பாணியில் மேடைக்கு வந்தார். அவரது மனோபாவத்தை வெளிப்படுத்தும் தோற்றம். அந்தத் தோற்றமே இந்தச் சர்ச்சைகளால் தாம் மாறிவிடவில்லை என்பதை உணர்த்தியது. கச்சேரியைத் தியாகையரின் முகாரி ராகப் பாடலோடு தொடங்கினார். துயரத்திற்கான ராகம் முகாரி. அதில் தொடங்குவது வழக்கமில்லை. தொடர்ந்து சில செவ்வியல் பாடல்கள். அதன் பிறகு ‘சுதந்திரம் வேண்டும்’ என்னும் கீர்த்தனை.
‘சுதந்திரம் வேண்டும் சுதந்திரம் வேண்டும்’ எனப் பல்லவியின் முதல் வரியைப் பாடிய அவர் தொடர்ந்து ‘எதையும் பேச’ என்னும் வரியைப் பாடிச் சில நொடிகள் அப்படியே நிறுத்தினார். அவர் உணர்த்த வரும் குறிப்பைச் சட்டென்று புரிந்துகொண்ட பார்வையாளர்கள் ஆரவாரம் செய்தும் சீழ்க்கை அடித்தும் தம் ஆதரவைத் தெரிவித்தனர். ‘எதையும் பேச, எதையும் எழுத, எதையும் பாட, எதையும் படிக்க, எதையும் கேட்கச் சுதந்திரம் வேண்டும்’ என்று மேற்கொண்டு பாடப் பாடப் பார்வையாளர்களின் ஏகோபித்த ஆதரவு பெருகிற்று. பத்து மாதம் மௌனம் காத்த கலைஞர் இப்போது தம் மொழியில் சமூகத்திற்குப் பதில் சொன்னார். இசைக் கலைஞரின் மொழி பாடலாகத்தானே இருக்கும்?
பிறகு நாராயண குருவின் வசனம் ஒன்றைப் பாடினார். மலையாளமும் தமிழும் கலந்த மொழியில் அமைந்த அதன் பொருளை மட்டும் எடுத்துச் சொன்னார். மக்கள் வழிபடும் பல்வேறு வடிவங்களுக்கு நடுவில் கடவுளே உன் உண்மையான உருவம் எது எனக் கேட்கும் பொருளில் அமைந்த பாடல் அது. ஒவ்வொரு மதத்தினர் வழிபடும் கடவுள் பெயரையும் சொல்லி ‘அதுவா நீ?’ என்று கேட்கிறார் குரு. இப்பாடலைப் பாடத் தேர்ந்தெடுத்ததன் மூலம் மதவாதத்திற்கும் சாதியவாதத்திற்கும் நாராயண குரு மூலமாகக் கிருஷ்ணா பதில் சொன்னார்.
டி.எம்.கிருஷ்ணாவுக்கு எதிராகச் செயல்பட்டோரின் எண்ணத்திற்கு மாறாக மியூசிக் அகாடமிக்குப் பெருந்திரளான ரசிகர் கூட்டம் வந்திருந்தது. காலை எட்டு மணிக் கச்சேரிக்கு அரங்கு நிறைந்த கூட்டம். அரங்கிற்கு வெளியில் அமைத்திருந்த திரைக்கு முன்னால் கூட்டம். எங்காவது நின்று கச்சேரியைக் கேட்டுவிட முடியாதா என்று இடம் கிடைக்காமல் பரிதவித்தோர் பலர். இளைஞர் கூட்டம் மிகுந்திருந்ததாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. எல்லா வயதுப் பார்வையாளர்களும் குழுமியிருந்தனர்.
எம்.எஸ்.சுப்புலட்சுமி குடும்பத்தைச் சேர்ந்தோர் சிலரும் வந்திருந்தனர். நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த சீனிவாசன் ஒருவர் மட்டும் அக்குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல. பலர் உள்ளனர். கச்சேரி முடிந்த அடுத்த நாள் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இணைய இதழில் எம்.எஸ். குடும்பத்தைச் சேர்ந்த சங்கர் ராமச்சந்திரன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் ‘வழக்குத் தொடுத்தது நீதிமன்றத்திற்கு நேர விரயம்; தேவையில்லாத விளம்பரம் என்பதே எம்.எஸ். குடும்பத்தைச் சேர்ந்த பெரும்பாலோர் அபிப்ராயம்’ என்று அவர் சொல்கிறார். எதிர்ப்பாளர் எண்ணிக்கையை விட ஆதரவாளர் எண்ணிக்கையே மிகுதி என்பதைக் கச்சேரிக்கு வந்திருந்த பார்வையாளர்கள் கூட்டம் காட்டியது.
கிறிஸ்துமஸ் விடுமுறை நாள் காலை நேரத்தில் ஆயிரக் கணக்கில் பார்வையாளர்கள் வந்து குழுமியதன் காரணம் என்ன? இந்தக் கச்சேரிக்கு வருவதன் மூலம் டி.எம்.கிருஷ்ணா என்னும் கலைஞரைக் கௌரவிக்க வேண்டும் என்பதுதான். திரை விலகும் போது கைத்தட்டலோடு இசைக்குழுவை வரவேற்ற கூட்டம் கச்சேரி முடிந்ததும் எழுந்து நின்று ஐந்து நிமிடங்களுக்கு மேல் விடாமல் கைத்தட்டிக் கொண்டேயிருந்திருக்கிறது. இதன் பொருள் என்ன? நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என்பதை உணர்த்துவதுதான்.
எதிர்ப்பாளர்கள் சிலர் திட்டமிட்டுக் கூடுவது எளிது. ஆதரவாளர்கள் எங்கெங்கோ இருப்பர். அவர்கள் எல்லோரும் கூடும் களமாக இக்கச்சேரி நிகழ்ச்சி அமைந்துவிட்டது. கர்னாடக சங்கீதத்தை ஜனநாயகப்படுத்த வேண்டும் என்னும் கிருஷ்ணாவின் கருத்துக்கு இளைய தலைமுறையிடம் ஏகோபித்த ஆதரவு இருக்கிறது என்பதையும் இக்கூட்டம் உணர்த்தியிருக்கிறது. எத்தனை சக்திகள் சேர்ந்து பின்னிழுத்தாலும் சமூகம் பின்னோக்கிப் போகாது; முன்னோக்கியே செல்லும் என்பதுதான் இக்கூட்டம் சொன்ன செய்தி.
இந்தக் கச்சேரியோடு இன்னொன்றையும் சேர்த்துப் பார்க்க வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் சங்கீத கலாநிதி விருதுக்குத் தேர்வு செய்யப்படுபவர் டிசம்பர் 16இல் தொடங்கி 31 வரை அவருடைய கச்சேரி தினம் தவிரப் பதினைந்து நாட்களுக்கு அன்றாடம் காலையில் கருத்தரங்கு ஏற்பாடு செய்ய வேண்டும். பொதுவாக இசைக்கலைஞர்கள் இத்தகைய விஷயங்களில் ஆர்வம் காட்டுவதில்லை. அகாடமியின் விருப்பத்திற்கு விட்டுவிடுவதே பொதுவழக்கம். டி.எம்.கிருஷ்ணா அப்படி இருக்கவில்லை. பதினைந்து நாட்களுக்கான கருத்தரங்கப் பொருளை முடிவு செய்து கருத்தாளரையும் தீர்மானித்துத் தாமே முன்னின்று அந்நிகழ்வுகளை நடத்தியிருக்கிறார்.
கர்னாடக சங்கீத உலகில் பாடகர்கள் மட்டுமல்லாமல், வாத்தியக் கலைஞர்களுக்கும் அதில் இடமளித்திருக்கிறார். அது மட்டுமல்ல, ஒப்பாரிப் பாடல்களுக்கு ஒருநாள். நாட்டுப்புறவியல் அறிஞர் ஆறு.இராமநாதன் அவ்வரங்கில் பேசினார். அவர் உரை. அவர் மாணவரும் கல்லூரிப் பேராசிரியருமான முனைவர் ரமேஷ் ஒப்பாரிப் பாடல்களை மேடையில் பாடினார். அழுகையுடன் கூடிய ஒப்பாரி நிகழ்த்து கலையாகவே அமைந்தது. இன்னொரு நாள் கானாப் பாடல்கள் பற்றிய அரங்கு. அப்பாடல்களில் ஆய்வு செய்த முனைவர் ஏழுமலை உரையாற்றினார். அதிலும் கானாப் பாடல் நிகழ்வு. மியூசிக் அகாடமி மேடையில் கானாப் பாடல் வேண்டும் என்னும் டி.எம்.கிருஷ்ணாவின் விருப்பம் நிறைவேறியது. திரைப்பாடல்களில் ராகம் பற்றி ஒருநாள் அமர்வு. இப்படி வெவ்வேறு வகை இசை வடிவங்களுக்கும் இடமளிப்பதாகக் கருத்தரங்க நிகழ்வை மாற்றிக் காட்டியிருக்கிறார். ஒவ்வொரு நாளும் இருநூறுக்கும் மேற்பட்டோர் வந்து கருத்தரங்கைக் கேட்டுப் பயன்பெற்றிருக்கின்றனர்.
தம் மொழியில் உரிய வகையில் பதில் கொடுத்த டி.எம்.கிருஷ்ணா இன்று மாலை சங்கீத கலாநிதி விருது பெறுகிறார். வாழ்க வாழ்க!
—–
சென்னைப் புத்தகக் கண்காட்சி நடைபெறும் தருணம் இது. டி.எம்.கிருஷ்ணா எழுதிய மூன்று நூல்கள் தமிழில் மொழிபெயர்ப்பாகி இப்போது விற்பனையில் உள்ளன. காலச்சுவடு வெளியீடு. அவற்றை வாசித்துப் பாருங்கள்.
1.செபாஸ்டியன் குடும்பக் கலை, விலை ரூ.390/-
2.எம்.எஸ்: காற்றினிலே கரைந்த துயர், விலை ரூ.50/-
3.கர்னாடக இசையின் கதை, விலை ரூ. 175/-
—– 01-01-2025
அத்தனையும் எடுத்துக்கொண்டு அமைதியாக தொடர்ந்து பயணிக்கும் விரிந்த பேராறு போன்ற இசைக்கலைஞரும் அதே தன்மையான கட்டுரையும்.
தூசுதுப்புகள் ஆற்றின் மேல் மிதந்து .ஆடினாலும் ஆற்றின் போக்கிலதான் அவையும் செல்கின்றன. எதிர்திசையில் பயணிக்க இயலுவதில்லை.
அருமை அருமை. இன்னும் பல விருதுகள் கிடைக்க வாழ்த்துகள்.