அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டம் மிகவும் அவசியம். மக்கள் அனைவருக்குமே தம் ஓய்வுக் காலத்தை, முதுமையைப் பொருளாதாரச் சிக்கலின்றிக் கழிக்க ஓய்வூதியம் தேவை. பல நாடுகளில் அந்த நிலை இருக்கிறது. உதவித்தொகை என்றோ ஓய்வூதியம் என்றோ வழங்கி வாழ்வாதாரத்திற்கு ஏற்பாடு செய்கிறார்கள். இங்கே 2003 ஏப்ரல் மாதத்திற்கு முன் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு மட்டும் ஓய்வூதியம் கிடைக்கிறது. முதியோர் உதவித்தொகையை அரசு வழங்குவதும் குடும்பத் தலைவியருக்கு மாதம் ஆயிரம் வழங்குவதும்கூட ஓய்வூதியம் போன்றதுதான். இது படிப்படியாக அதிகரித்துத் தேவைப்படும் அனைவருக்கும் ஓய்வூதியம் என்னும் நிலையை எட்ட வேண்டும். அறுபது, அறுபத்தைந்து வயது வரை ஒருவர் செய்திருக்கும் சமூகப் பங்களிப்பைக் கருத்தில் கொண்டு ஓய்வூதியம் வழங்க வேண்டும். நல்ல அரசு தம் குடிகளின் நல்வாழ்வுக்கு உத்தரவாதம் தருவது கடமை.
அரசு ஊழியர்களுக்கு ஏற்கனவே இருந்ததையும் பறித்தால் அது வளர்ச்சியல்ல. சமூக நலத் திட்டத்தில் இது பெருந்தோல்வி என்றுதான் சொல்ல வேண்டும். 2003ஆம் ஆண்டுதான் ‘பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்’ நடைமுறைக்கு வந்தது. அது பல குழப்பங்களைக் கொண்டது. அதனால் சிறுபயனும் கிடையாது. அப்போது நடந்த போராட்டத்தின் விளைவாக அதற்கு எதிராக மீண்டும் வலுவான போராட்டத்தை முன்னெடுக்க முடியவில்லை. அரசு ஊழியர் ஒவ்வொருவருக்கும் ஓய்வுக் காலத்தைக் கழிப்பதற்குக் குறைந்தபட்சத் தொகை என்ற அளவிலாவது கணக்கிட்டு ஓய்வூதியம் தருவது அவசியம். அது படிப்படியாகப் பிற பிரிவினருக்கும் பரவ வேண்டும். அனைவருக்கும் ஓய்வூதியம் என்னும் நிலையை நாம் எப்போது எட்டுவோமோ தெரியவில்லை.
இப்போதைய நிலையில் அரசு ஊழியர் சங்கங்கள் சில வாய்ச்சவடால் விட்டுக் கொண்டிருக்கின்றன. வேலைநிறுத்தப் போராட்டம் ஒன்றை அறிவித்தால் எதார்த்த நிலை என்னவென்று தெரியும். பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இருக்கும் ஊழியர்கள் போராட்டத்திற்கு வர மாட்டார்கள். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் இருப்போர் பலரும் முப்பது முப்பத்தைந்து வயதுக்கு மேல்தான் அரசுப் பணிக்கு வந்திருப்பார்கள். அதைத் தமக்குக் கிடைத்த பெரிய வாய்ப்பு என்று கருதுகிறார்கள். அரசுப் பணியால் அவர்கள் குடும்பப் பொருளாதார நிலையும் மதிப்பும் மிகவும் உயர்ந்திருக்கும். அவற்றை இழக்க வேண்டி வருமோ என்னும் அச்சத்தால் போராட்டத்திற்கு வரத் தயங்குவார்கள்.
சங்கங்களில் பல பிரிவுகள் இருக்கின்றன. கட்சி சார்ந்த சங்கங்கள் எத்தகைய நிலைப்பாடு எடுக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. போராட்டத்திற்கு வராதவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் அரசுப் பணியின் எல்லா நிலைகளிலும் தற்காலிகப் பணியாளர் எண்ணிக்கை கணிசமாக இருப்பதால் வேலைகளில் அதிகப் பாதிப்பு ஏற்படாது. பல அரசு அலுவலகங்கள் வழக்கம் போலவே இயங்க வாய்ப்புள்ளது. பொதுமக்கள் இப்போதும் எதிரான மனநிலையில்தான் இருக்கிறார்கள்.
வாரம் இருநாள் விடுமுறை, அரசு விடுமுறை நாட்கள், தற்செயல் விடுப்பு, வரையறுத்த விடுப்பு, மருத்துவ விடுப்பு, பேறுகால விடுப்பு, ஈட்டிய விடுப்பு, அரைச்சம்பள விடுப்பு, முழுச்சம்பள விடுப்பு என விடுமுறைகளும் விடுப்புகளும் கொண்டது அரசுப்பணி. அதற்கு நிகரான சலுகைகள் வேறு எந்தத் தனியார் நிறுவனப் பணியிலும் கிடையாது. பெரும்பான்மைச் சமூகம் சலுகைகள் இன்றிக் கஷ்டத்தில் உழலும்போது சலுகைகள் பெற்ற அரசு ஊழியர் மீது பொதுமனதில் பொறாமையும் கோபமும் ஏற்படுவது இயல்புதான். இத்தகைய உரிமைகள் அனைத்துப் பணிகளிலும் கிடைக்கும் காலத்தில்தான் பொறாமை அகலக்கூடும்.
இதையெல்லாம் உணராத சங்கத் தலைமைகளில் சிலர் ‘இந்தக் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் வரும் தேர்தலில் உங்களை எதிர்க்கட்சியாகத்தான் அமர்த்துவோம்’ என்று முதல்வர் பெயரைச் சொல்லியே உரக்கப் பேசுகிறார்கள். ‘2026ஆம் ஆண்டு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பரிசளிக்கத் தயாராக இருக்கிறோம்’ என்று ஒருசங்கம் மிரட்டல் விடுக்கின்றது. இந்த அணுகுமுறை மிகுந்த வியப்பளிக்கிறது. எந்தத் தைரியத்தில் இப்படிப் பேசுகிறார்கள் என்று தெரியவில்லை.
2003ஆம் ஆண்டு போராட்டத்தை ஒடுக்க அடக்குமுறையை ஏவிய ஜெயலலிதா தலைமையிலான அதிமுகதான் 2011 முதல் 2021 வரை பத்தாண்டுகள் ஆட்சி செய்தது. அதிமுக ஆட்சியில் அமர அரசு ஊழியர்கள்தான் காரணமா? 2003ஆம் ஆண்டை மறந்துவிட்டு அரசு ஊழியர்கள் அனைவரும் மொத்தமாக வாக்களித்து அதிமுகவை ஆட்சியில் அமர்த்தினார்களா? அப்படி அமர்த்திச் சாதித்தது என்ன? ஏற்கனவே இழந்த எதையாவது பெற்றார்களா? புதிய உரிமைகள், சலுகைகள் கிடைத்தனவா? அந்த ஆட்சியிலும் போராட்ட அறிவிப்புகள் வந்தன. போராட்டங்களை அடக்க அரசு பலவிதத் தந்திரங்களைக் கையாண்டது.
அரசு ஊழியர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக வாக்களித்ததால் 2021இல் திமுக ஆட்சிக்கு வந்ததா? 150 இடங்களைக்கூடப் பெற முடியாத வெற்றிதான் அது. பல தொகுதிகளில் குறைவான வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றது. அரசு ஊழியர்கள், அவர்கள் குடும்பங்கள் என எல்லோரும் ஒட்டுமொத்தமாகத் தம் நலம் சார்ந்து வாக்களிக்கிறார்களா? சாதியச் சமூகத்தில் ‘அரசு ஊழியர் வாக்கு’ என்பதற்குப் பொருள் உண்டா? 2006ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டு திமுக ஆட்சிக்கு வந்தமைக்கும் பல காரணங்கள் இருந்தன. அரசு ஊழியர் வாக்கு ஒட்டுமொத்தமாகத் திமுகவுக்கு விழுந்ததுதான் காரணம் என்று சொல்ல முடியாது.
‘எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பரிசளிப்போம்’ என்று சொன்ன பிறகும் 2026இல் திமுகவே ஆட்சியில் அமரும் என்றால் இதே கோரிக்கைகளை எடுத்துக்கொண்டு அந்த அரசின் முன் எப்படிப் போய் நிற்க முடியும்? எதிர்க்கட்சியாகவே அமர்ந்தாலும் தம் கோரிக்கைகளை வலியுறுத்தத் திமுகவை அணுக வேண்டுமே. எதிர்காலம் பற்றி எந்த அனுமானமும் இல்லாமல், திட்டமும் இல்லாமல் பேசும் அரசு ஊழியர் சங்கத்தினரால் பிரச்சினை கூடுமே தவிர பலன் இருக்காது. வேறு வகையான போராட்ட வழிமுறைகளை யோசிப்பதும் மிரட்டலாக இல்லாமல் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலான அணுகுமுறைகளைத் திட்டமிடுவதும் நல்லது.
அரசைச் சாதாரணமாகக் கருதக் கூடாது. தேர்தல் நெருங்க நெருங்க அரசு ஊழியர் பிரச்சினை பெரிதாகும், போராட்ட அறிவிப்புகள் வரும் என்பதை அரசு அறியாமல் இருக்காது. இந்நேரம் அதைப் பற்றிய தரவுகளை எல்லாம் திரட்டிப் போராட்டத்தை எவ்வாறு கையாள்வது என அரசு திட்டம் தீட்டியிருக்கும். அதையெல்லாம் கருத்தில் கொண்டு அரசு ஊழியர் சங்கங்கள் தம் போராட்ட வழிமுறைகளைக் கைக்கொள்ள வேண்டும். இன்றைய அரசியல் சூழ்நிலையில் ‘234 தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெற்றாலும் ஆச்சரியமில்லை’ என முதல்வர் பேசுகிறார். வரும் தேர்தலில் அரசு ஊழியர் வாக்குகள் மீது திமுக பெரிதாகக் கவனம் குவிக்காது என்றே நினைக்கிறேன்.
எப்படியாயினும் சரி, பழைய ஓய்வூதியத் திட்டம் வேண்டும் என்பதை முழுமனதோடு ஆதரிக்கிறேன். அதைப் பெறுவது சாதாரணமல்ல. நல்ல செயல்திட்டம் தேவை. அரசியல் கட்சிகளை மிரட்டுவதால் பயனில்லை.
—– 18-05-25
அரசு ஊழியர் போராட்டம் குறித்த மூன்று கட்டுரைகளையும் வாசித்தேன். அருமை. அரசு ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த சங்கங்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் குறித்துத் தங்கள் பார்வை மிகச்சரி. கோரிக்கைகளை நிறைவேற்றுவதைவிட தங்களின் செல்வாக்கை நிலைநாட்டவும் அரசை மிரட்டவும் போராட்ட வடிவத்தைப் பயன்படுத்துவதாகவே தோன்றுகிறது. சங்கங்களால் ஆக்கப்பூர்வமான அதேசமயம் அரசு ஒரு தீர்வை நோக்கிச் செல்ல வைக்கமுடியவில்லை. அரசு ஊழியர் சங்கங்களின் போராட்ட அணுகுமுறையில் மாற்றம் ஏற்படாதவரை கோரிக்கைகள் வெற்று முழக்கங்களாகவே இருக்கும்!