பெருமாள்முருகன்
சில நாட்களுக்கு முன் திருநெல்வேலி, கல்லிடைக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த இசக்கி சங்கர், சத்யபாமா ஆகிய இருவரும் காதல் திருமணம் செய்துகொள்ள இருந்த நிலையில் இசக்கி சங்கர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அதையறிந்த சத்யபாமா தற்கொலை செய்துகொண்டார். கொலையில் ஈடுபட்ட சத்யபாமாவின் தம்பியும் நண்பர்களும் பள்ளி மாணவர்கள். பதினைந்து முதல் பதினேழு வயதுவரை உள்ள பதின்வயதுச் சிறார்கள். இதற்கு முன் ஓசூர் பகுதியைச் சேர்ந்த நந்தீஷ், சுவாதி தம்பதியினர் காதல் திருமணம் செய்துகொண்டதால் இருவரையும் சுவாதியின் பெற்றோர் கொடூரமாகக் கொலை செய்தனர். இந்த ஆணவப் படுகொலையில் ஈடுபட்ட சுவாதியின் பெற்றோர், பெரியப்பா, சித்தப்பா உள்ளிட்ட உறவினர்கள் முப்பத்தைந்திலிருந்து நாற்பத்தைந்து வயதுக்குட்பட்டவர்கள். அவர்களை ‘இளைஞர்’ என்னும் வரையறைக்குள்தான் அடக்க வேண்டும்.
உடுமலை சங்கர் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்றவர்கள் ஆறு பேர். அவர்களில் மணிகண்டன், செல்வக்குமார், கலைதமிழ்வாணன், மதன் ஆகிய நான்கு பேரின் வயது இருபத்தைந்து முதல் இருபத்தேழு வரை. மற்ற இருவரில் ஒருவருக்கு முப்பத்து மூன்று. இன்னொருவருக்கு நாற்பத்திரண்டு. கோகுல்ராஜ் கொலை வழக்கில் சம்பந்தட்டவர்களும் இத்தகைய வயதுடைய இளைஞர்கள்தான். தருமபுரி இளவரசன் காதல் பிரச்சினையில் தாக்குதல் நடத்தியவர்களில் பெரும்பான்மையோர் இளைஞர்கள்.
இளைஞர்கள் மனம் வறண்டது எப்படி?
கடந்த மூன்று ஆண்டுகளில் 81 ஆணவப் படுகொலைகள் நடந்திருப்பதாகப் புள்ளிவிவரம் ஒன்று தெரிவிக்கிறது. இப்படுகொலைகளின் பின்னணியில் நடுத்தர வயதினர், முதியோர் இருந்திருக்கலாம். ஆனால், நேரடியாகக் கொலையில் ஈடுபட்டவர்கள் இளைஞர்களாகவே உள்ளனர். இது மிகப் பெரும் ஆச்சரியம் தருகிறது. இளமைப் பருவம் காதல் மயமானது என்பது பொய்யா? இந்த இளைஞர்களின் மனத்தில் காதல் ஊற்று உருவாகவில்லையா? சக வயதினரின் காதல் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியாத அளவு வறண்ட மனம் இவர்களுக்கு எங்கிருந்து வந்தது?
இளமையில் காதல் என்பது இயல்பான உணர்வு மட்டுமல்ல. மிகை புனைவுகளும் அதீதக் கற்பனைகளும் மிகுந்து பித்துநிலை தரக்கூடியது காதல். தம் வயதொத்தவர்களின் காதலை ஆதரிப்பதும் அவர்கள் திருமணத்துக்கு உதவுவதும் திருமணத்துக்குப் பின்னான நல்ல வாழ்க்கைக்குத் துணை நிற்பதும் இளைஞர்களின் இயல்பு என்று நினைத்திருந்தோம். சாதி, மதம், ஊர், சொந்தம் ஆகிய எல்லாவற்றையும் கடந்து உருவாகும் காதலை வாழ வைப்பவர்கள் இளைஞர்கள். நண்பர்களாக இல்லாவிட்டாலும் தம் வயதொத்தவர்களின் காதலுக்குத் துணை செய்ய வந்து நண்பர்களாவார்கள். நண்பரின் நண்பரின் நண்பராக இருப்பினும் காதல் பிரச்சினை என்றால் உதவ வருபவர்கள்தானே இளைஞர்கள்?
இத்தகைய மனச் சித்திரம் வெற்றுப் பிரமையோ என்று சந்தேகம் வருகிறது. காதல் மனம் ஈவிரக்கம் பார்க்கக்கூடியது. அன்பு நிறைந்து ததும்புவது. அன்பையும் காதலையும் பூரணமாகப் பெற்ற இளைஞர்கள் காதலுக்கு எதிராக நின்று படுகொலைகளில் ஈடுபடுவார்கள் என்பது நம்ப முடியாததாக இருக்கிறது. முந்தைய காலத்தை விடவும் இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் கல்வி அறிவு பெற்றவர்களாக இருக்கிறார்கள். எழுத்தறிவு பெற்ற எவரும் தம் வாழ்நாளில் காதல் கவிதை ஒன்றையாவது வாசிக்காமல் இருக்க இயலாது. வாசிக்காவிட்டாலும் காதல் கவிதை என்னும் பெயரில் ஒரு வரியையாவது கிறுக்காமல் இளமைப் பருவத்தைக் கடந்து வரவே முடியாது. ஆம், இன்றும் மிகுதியாக எழுதப்படுபவை காதல் கவிதைகள்தான். அக்கவிதைகள் குறைந்தபட்சக் கிளர்ச்சியைக் கொடுத்துக் காதலை வாழ வைக்க வேண்டும் என்னும் எண்ணத்தைத் தரக்கூடியவை என்றே நினைக்கிறேன்.
தமிழ் மரபில் காதல்
நம் மரபிலும் காதல் கவிதைகளே மிகுதி. காதலைப் போற்றும், புனிதமாக்கும் வரிகளுக்கு இருக்கும் மேற்கோள் மதிப்பு வேறெவற்றுக்கும் கிடையாது. காதல் இந்த நிலவுலகை விடவும் பெரியது; கடல் நீரை விடவும் ஆழமானது; வானத்தை விடவும் உயர்ந்தது என்னும் வரிகளை அத்தனை சுலபமாகக் கடந்து செல்ல முடியாது. ‘ஒன்றன் கூறாடை உடுப்பவரே ஆயினும் ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை’, ‘அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்’, ‘காதல் இருவர் கருத்தொருமித்து ஆதரவு பட்டதே இல்வாழ்க்கை’, ‘காதல் காதல் காதல், காதல் போயின் காதல் போயின், சாதல் சாதல் சாதல்’, ‘கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர்கடுகாம்’ – இப்படி எத்தனையோ விதமான அற்புதத் தொடர்கள் நம் காதுகளில் வந்து விழுந்து கொண்டேயிருக்கின்றன. காதலை மகத்துவப்படுத்தும் இவையெல்லாம் இளைஞர்களை ஒன்றுமே செய்யவில்லையா?
காதலின் அருமையை மிகச் சிறப்பாகச் சொல்லும் ஒரு பாடல் (எண்.40) குறுந்தொகையில் உள்ளது. பாடிய புலவர் யாரென்றே தெரியவில்லை. ஆகவே, பாடலில் பயின்று வரும் உவமைத் தொடரையே புலவருக்கும் பெயராக்கிவிட்டனர். அவ்விதம் ஆக்கிய பெயர்: செம்புலப்பெயல்நீரார். அப்பாடல் இது:
யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே.
இந்தப் பாடல் காதலன் அல்லது காதலியின் கூற்று. தம் காதலின் மேன்மையை எடுத்துச் சொல்லித் தாமே வியப்புக்கு உள்ளாவதாக அமைந்த பாடல். ஒருவருக்கு இரண்டு வழிகளில் உறவுகள் இருப்பர். தாய் வழி, தந்தை வழி. இந்தக் காதலர்கள் தாய் வழியிலும் உறவில்லை; தந்தை வழியிலும் உறவில்லை. ஒரே ஊர், சாதி என்றிருந்தால் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் சந்தித்துக்கொள்ள நேர்ந்திருக்கும். ஒருவரை ஒருவர் ஏற்கெனவே அறிந்திருப்பர். அப்படியும் இல்லை. ‘என் தாயும் உன் தாயும் யார் யாரோ. என் தந்தையும் உன் தந்தையும் யார் யாரோ. நானும் நீயும் இதற்கு முன்னால் எந்த வழியிலும் ஒருவரை ஒருவர் அறிந்ததும் இல்லை. இப்போதுதான் முதன்முறை சந்திக்கிறோம். என்ன மாயம்! சந்தித்த ஒரு கணத்திற்குள் இரண்டு நெஞ்சங்களும் அன்பு கொண்டு செம்மண்ணில் பெய்த மழை போல ஒன்றுடன் ஒன்று கலந்துவிட்டனவே’ என்று தம் காதலை வியந்து போற்றுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
காதல் தேசிய கீதம்
முன்பின் பார்த்திராத இருவர் முதல் சந்திப்பிலேயே உள்ளம் மாறிப் புகுந்து காதல் வயப்படும் விந்தை இன்னும் இந்த உலகத்தில் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஊர், வட்டம், மாவட்டம், சாதி, மதம், மொழி, நிறம் எல்லாவற்றையும் கடந்தது காதல் என்று போற்றும் இப்பாடல் தமிழில் எழுதப்பட்டிருப்பது நம் மொழிக்கும் நமக்கும் விவரிக்க இயலாத பெருமை தருவதாகும். இப்பாடலை எந்தத் தயக்கமும் இல்லாமல் ‘காதல் தேசிய கீதம்’ என்று அறிவிக்கலாம்.
அவ்வாறு அறிவித்துப் பொதுவிடங்களில் இப்பாடலைப் பாடுவதை ஊக்கப்படுத்தலாம். ஏற்கெனவே திரைப்பாடல் ஒன்றிலும் இடம்பெற்றுள்ள இதை மேலும் விதவிதமான மெட்டுக்களில் பதிவு செய்து பரப்பலாம். பொதுவிடங்களில் எழுதி வைக்கலாம். பேருந்துகளிலும் ரயில்களிலும் எல்லோர் கண்களிலும் படும்படி இப்பாடலை அழகாக எழுதலாம். பள்ளிப் பாட நூல்களில் தொடங்கிக் கல்லூரிப் பாடநூல்கள் வரை எல்லாவற்றிலும் இப்பாடலை முன்வரிசையில் வைக்கலாம். இப்பாடலின் அடிகளை மட்டுமல்ல, பொருளையும் விரிவாகக் கற்கச் செய்யலாம். போட்டித் தேர்வுகளில் இப்பாடலைப் பற்றி ஒரு வினாவாவது கட்டாயம் இடம்பெறச் செய்யலாம்.
இப்பாடல் மனதில் பதிந்தால் இளைஞர்கள் (இருபாலரையும் உள்ளடக்கியே சொல்கிறேன்) காதலைக் கொண்டாடுவார்கள். காதலிப்பவர்களைப் போற்றுவார்கள். காதலருக்கு உதவுவார்கள்.முக்கியமாகக் காதலிப்பவர்களைப் படுகொலை செய்யாமலாவது இருப்பார்கள். என் இலக்கியப் பித்து மனம் இன்னும் இப்படி நம்புகிறது: ‘அன்புடை நெஞ்சம் கொண்டவர்கள் இளைஞர்கள்.’