‘பண்பாடு’ என்பது பண், பாடு ஆகிய இருசொற்களின் சேர்க்கை. இசைத்துறையில் வழங்கும் கலைச்சொல் பண். ஒழுங்குபடுத்திய ஒலி இசை ஆகும். குறிப்பிட்ட வகையில் ஒழுங்கமைந்த ஒலிதான் பண். இப்போது அதை இராகம் என்று சொல்கிறோம். இராகத்தைக் குறிக்கும் பழைய தமிழ்ச்சொல் பண். மகிழ்ச்சி, துன்பம் உள்ளிட்ட ஒவ்வொரு உணர்ச்சியையும் வெளிப்படுத்த ஒவ்வொரு ராகம் உள்ளது. நேரத்திற்கேற்பப் பாடும் ராகங்களும் உள்ளன.
சங்க காலத்தில் ஒவ்வொரு நிலத்தின் தன்மைக்கு ஏற்பவும் ஒவ்வொரு பண் இருந்தது. குறிஞ்சிப் பண், முல்லைப் பண், மருதப் பண், நெய்தல் பண், பாலைப் பண் என்று ஐந்து வகை நிலத்திற்கும் ஐந்து வகைப் பண்களைத் தமிழர்கள் கொண்டிருந்தனர். ஒலியை வரையறைக்குள் படிப்படியாகக் கொண்டு வந்து ஒரு பண்ணை உருவாக்க மனித சமூகம் பல காலம் எடுத்துக் கொண்டிருக்கும். நிலத்தை உழவுக்குத் தயார் செய்வதைப் ‘பண்படுத்துதல்’ என்று சொல்வது வழக்கு. நிலத்தைச் சீராக்குதல் என்று பொருள். ஒருவரைப் ‘பண்பட்டவர்’ என்று புகழ்வர். சீரான வாழ்முறையைப் பின்பற்றுபவர் என்று பொருள்.
படு என்னும் வினைச்சொல் பல பொருள் தருவது. அனுபவித்தல் என்பது ஒருபொருள். ‘பட்டால் தான் தெரியும்’ என்று மக்கள் வழக்கில் சொல்வார்கள். வாழ்ந்து பெறும் அனுபவமே படுதல். படு என்னும் வினைச்சொல் முதல் நீண்டு ‘பாடு’ எனப் பெயர்ச் சொல்லாகும். ‘பெரும்பாடு பட்டான்’ என்று சொல்வதுண்டு. அதிக உழைப்பு, கஷ்டம் என்றெல்லாம் அதற்கு அர்த்தங்கள் உள்ளன. அவற்றின் மூலப்பொருள் ‘அனுபவம்’ தான். அனுபவ அறிவைப் ‘பட்டறிவு’ என்று சொல்வதுண்டு.
பண்ணும் பாடும் இணைந்து பண்பாடு என்னும் ஒற்றைச் சொல்லாக மாறியுள்ளன. ‘வாழ்ந்து பெற்ற அனுபவங்களை வரையறைக்கு உட்படுத்தி ஒழுங்காக்கியதே பண்பாடு’ என்று ஒருவாறு சொல்லலாம். மனித சமூகம் பல்லாயிரம் ஆண்டுகளாக இப்புவியில் வாழ்ந்து பல்வேறு அனுபவங்களைப் பெற்றுள்ளது. அந்த அனுபவங்களிலிருந்து பல சிறந்த கூறுகளை எடுத்து உருவாக்கியதே பண்பாடு. அடுத்தடுத்த தலைமுறைகளும் பின்பற்றும் வகையில் அன்றாட வாழ்வோடு இயல்பாகப் பண்பாடு இணைந்திருக்கும். நம்மை அறியாமலே முன்னோரிடம் இருந்து பெற்று அதைப் பின்பற்றிக் கொண்டிருப்போம்.
‘குறிப்பிட்ட நாடு, இடம் போன்றவற்றைச் சேர்ந்த மக்களின் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், மதம், மொழி, கலைகள், சிந்தனை வெளிப்பாடு, வாழ்க்கையுடன் தொடர்பு கொண்டிருக்கும் பொருள்கள் போன்றவற்றின் மொத்தம்’ என ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’ பண்பாட்டை விளக்குகிறது. ‘பிறரிடத்தில் அல்லது பலர் முன்னிலையில் ஒருவர் நடந்துகொள்ள வேண்டிய முறை’ என்னும் விளக்கத்தையும் அவ்வகராதி தருகிறது.
ஒவ்வொரு மொழி பேசும் மனித இனமும் தாம் வாழும் நிலப்பரப்பு, இயற்கைச் சூழல், தட்பவெப்ப நிலை ஆகியவற்றுக்கு ஏற்பப் பண்பாட்டைக் கொண்டிருக்கும். தமிழ் மொழி பேசும் மக்களின் பண்பாட்டைத் ‘தமிழர் பண்பாடு’ என்று நாம் விதந்து பேசுகிறோம். ஒவ்வொரு மொழியினரும் தம் பண்பாட்டை அப்படித்தான் போற்றிக் கொண்டாடுவார்கள். உலகத்தில் மிகப் பழமையான மொழிகளுள் ஒன்று தமிழ். அதற்கேற்பப் பழமையான பண்பாட்டைக் கொண்ட இனம் தமிழர். சில பண்பாட்டுக் கூறுகள் இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வருவதை இலக்கியப் பதிவுகள் காட்டுகின்றன.
‘உணவுப் பண்பாடு’ என்பதில் தமிழருக்கே உரிய தனித்தன்மைகள் பல உள்ளன. முதலாவது கூறு கூடி உண்ணுதல். மகிழ்ச்சி என்றால் அதைக் கொண்டாடக் கூடி உண்பது தமிழர் வழக்கம். திருமணம், பிறந்த நாள், திருவிழா உள்ளிட்ட மங்கல நிகழ்வுகள் சிறப்பு விருந்துடன் இன்றும் நடக்கின்றன. அவற்றுக்கென்றே சிறப்பு உணவு வகைகளையும் செய்கின்றோம். இறப்பு போன்ற துயரம் சூழும் சமயத்திலும் அதிலிருந்து மீளக் கூடி உண்ணும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறோம். அனைவரும் கூடி மகிழ்ந்துண்ணும் நிகழ்வை ‘உண்டாட்டு’ என்று பழந்தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன.
உணவுப் பண்பாட்டின் இன்னொரு முக்கியமான கூறு விருந்தோம்பல். ‘விருந்து’ என்னும் சொல்லுக்குப் புதுமை எனப் பொருள் உண்டு. வழக்கமாக நாம் உண்ணும் உணவு அல்லாமல் புதிய வகை உணவுகளை உண்ணும் நிகழ்வை ‘விருந்து’ என்று அழைக்கிறோம். உறவினர்களும் நண்பர்களும் நம்முடன் இருப்பவர்கள்; அடிக்கடி சந்திப்பவர்கள். அவர்களை நாம் உபசரிப்பது இயல்பு. இதற்கு முன்னர் அறிமுகம் இல்லாமல் இப்போதுதான் புதிதாக அறிமுகம் ஆகும் ஒருவரே ‘விருந்தினர்’ ஆவார். அத்தகைய விருந்தினரை மனம் கோணாதவாறு கவனித்துக் கொள்ளுதலை ‘விருந்தோம்பல்’ என்கிறோம்.
நாம் நடத்தும் நிகழ்ச்சிக்கு உரையாற்ற ஒருவர் வந்தால் அவரைச் ‘சிறப்பு விருந்தினர்’ என்று சொல்வோம். அவரைக் கவனித்துக் கொள்வதற்குத் தனிக்குழு ஒன்றையே நியமனம் செய்வதுண்டு. கவனிப்பதில் முக்கியமானது உணவு. விருந்தினருக்குப் பிடித்த உணவைக் கொடுக்க விரும்புவோம். அவருக்கு உரிய நேரத்தில் உணவு வழங்க வேண்டும் என்று நினைப்போம். வயிற்றுக்கு நிறைவாக அவர் உண்ண வேண்டும் என்று எண்ணுவோம். அவர் உண்ட பிறகே நாம் உண்ணுவோம்.
இவற்றை எல்லாம் சேர்த்துத்தான் ‘விருந்தோம்பல்’ என்று சொல்கிறோம். ‘விருந்திருக்க உண்ணாதார்’ என்று தமிழரைச் சொல்வதுண்டு. விருந்தினரைப் பார்த்து முகம் சுழிப்பதைப் பெருந்தவறாகச் சொல்வோம். செல்லும் விருந்தினரை பிரியாவிடை கொடுத்து அனுப்பிவிட்டு வரும் விருந்தினரை வரவேற்க வழி பார்த்து இருப்பது தமிழர் இயல்பு. விருந்தினரை முதல் நாள் மகிழ்ச்சியோடு உபசரித்துவிட்டு அடுத்தடுத்த நாட்களில் சரியாகக் கவனிக்காமல் விட்டுவிடக் கூடாது. முதல் நாள் எவ்வாறு உபசரித்தோமோ அப்படியே அவர் எத்தனை நாள் தங்கியிருந்தாலும் உபசரிக்க வேண்டும்.
விருந்தோம்பலைப் பற்றிப் பேசாத தமிழ் இலக்கியமே கிடையாது. சிலப்பதிகாரத்தில் கண்ணகியைப் பிரிந்து கோவலன் சென்ற காலத்தில் விருந்தினரை உபசரிக்க இயலவில்லையே என்றுதான் கண்ணகி வருந்துகிறாள். அசோகவனத்தில் சிறையிருக்கும் சீதை ‘விருந்தினர் வந்தால் அவர்களை உபசரிக்கத் தானில்லாமல் இராமன் என்ன பாடு படுவானோ’ என்று யோசிக்கிறாள்.
திருக்குறள் உள்ளிட்ட நீதி நூல்களில் ‘விருந்தோம்பல்’ என்றோர் அதிகாரமே உண்டு. தம்மை நாடி வரும் புலவர்களை அரசர்கள் விருந்தோம்பிய கதைகள் பல புறநானூறு என்னும் சங்க இலக்கிய நூலில் உள்ளன. சாதாரண மக்களின் விருந்தோம்பல் சிறப்பைப் பத்துப்பாட்டு என்னும் சங்க இலக்கியத் தொகுப்பில் உள்ள ‘ஆற்றுப்படை’ நூல்கள் கூறுகின்றன. இவ்வாறு ‘விருந்தோம்பல்’ என்னும் உணவுப் பண்பாடு தமிழர்களின் சிறப்பியல்பாக இன்று வரை தொடர்ந்து வருகிறது.
உணவைப் பரிமாறுவதிலும் சில முறைகளைப் பின்பற்றுவது நமது பண்பாடு. விருந்தினர் இலையில் முதலில் வைப்பது உப்பு. உறவைப் பிணைக்கும் தன்மை கொண்டது உப்பு என்று நம்புகிறோம். உணவில் தன்னைக் கரைத்துக் கொண்டு சுவையைக் கூட்டுவது உப்பு. அதுபோல உறவும் கலக்க வேண்டும் என்பதன் குறியீடாகவே உப்பை முதலில் வைக்கிறோம். திருமணத்திற்குப் பண்டங்கள் வாங்கும்போது முதலில் உப்பைத்தான் வாங்குவர். உப்புக்கு எப்போதும் முன்னுரிமை கொடுப்பது தமிழர் உணவுப் பண்பாடு. ‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை’ என்பது தமிழ்ப் பழமொழி. உணவுக்குச் சுவை தரும் உப்பு இப்பழமொழியில் ஆகுபெயராகி ஒட்டுமொத்த உணவையும் குறிக்கிறது. உணவுப் பண்பாட்டில் இவ்வாறு பல கூறுகள் இருக்கின்றன.
‘இயற்கை நேயம்’ என்பது முக்கியமான தமிழர் பண்பாடு ஆகும். மனிதர் அல்லாத அனைத்து உயிர்களையும் உயிரற்ற பொருள்களையும் அஃறிணை என்று தமிழ் இலக்கணம் வகைப்படுத்துகிறது. ஆனால் அஃறிணையையும் உயர்திணை போலக் கருதும் பண்பாட்டைத் தமிழர் பின்பற்றி வந்துள்ளனர். தன் தாய் விதை போட்டு வளர்த்த புன்னை மரத்தைத் தமக்கையாக ஏற்றுக்கொண்ட ஒரு பெண்ணை நற்றிணை என்னும் நூல் காட்டுகிறது. மரம் செடி கொடிகளையும் பறவைகளையும் தூது அனுப்பும் இலக்கிய உத்தியை நம் இலக்கியங்களில் காணலாம். ‘எல்லா உயிர்களிடத்தும் அன்பு செய்தல்’ என்பது தமிழரின் வாழ்வியல் கோட்பாடு.
இயற்கையை மனித உணர்வுகளுக்கு ஏற்ற பின்னணியாகக் கொள்வது புலவர்களின் வழக்கம். இயற்கைப் பொருட்களைப் பேசுவனவாகவும் கேட்பனவாகவும் கருதி அவற்றிடம் தம் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் பல பாடல்களைப் புலவர்கள் எழுதியுள்ளனர். இயற்கைப் பொருட்களின் பெயர்களைக் குழந்தைகளுக்குச் சூட்டுவது தமிழர் வழக்கம். கதிரவன், நிலா ஆகியவற்றைக் குறிக்கும் பல சொற்கள் இன்றும் மக்கட்பெயர்களாக வழங்குகின்றன. இவையெல்லாம் தமிழர் பண்பாட்டில் இயற்கை நேயம் முக்கிய இடம் பெறுவதன் சான்றுகள் ஆகும்.
அதன் இன்னொரு வெளிப்பாடுதான் தமிழர்களின் மலர்ப் பண்பாடு. தமிழர்களின் அன்றாட வாழ்வில் ஏதேனும் ஒருவகையில் மலர்கள் இடம்பெற்றே தீரும். பெண்கள் தலையில் பூச்சூடிக் கொள்கின்றனர். தலையில் குடுமி வைத்திருந்த காலத்தில் ஆண்களும் பூச்சூடிக் கொண்டிருந்தனர். அதன் எச்சமே காதில் பூ வைப்பதாகும். கடவுள் வழிபாட்டில் பூக்களுக்கு முக்கிய இடமுண்டு. திருமணம் முதலிய எந்த மங்கல நிகழ்ச்சியாக இருந்தாலும் பூக்கள் பயன்படுகின்றன. உதிரிப் பூக்கள், பூச்சரம், மாலை எனப் பல வடிவங்களில் பூக்களைக் கையாள்கிறோம். பூச்செடிகளோ பூங்கொடிகளோ இல்லாத வீட்டைப் பார்ப்பது அரிது.
நிலத்தை அடையாளப் படுத்துபவையும் பூக்கள்தான். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகியன நிலங்கள் என்றாலும் அவற்றுக்குச் சூட்டியுள்ளவை பூப்பெயர்கள். எந்தச் செயலைச் செய்தாலும் அதற்கு அடையாளமாக குறிப்பிட்ட பூவகையைச் சூடிக்கொள்வர். அக்காலத்தில் இருநாடுகளுக்கு இடையே போர் நடக்கும் காலத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு பூவைச் சூடியுள்ளனர். வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை, வாகை ஆகிய பூப்பெயர்களால் போருக்குரிய புறத்திணைகள் குறிக்கப்படுவதைக் காணலாம்.
பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், சடங்குகள், வழிபாடு முதலியவற்றிலும் பண்பாட்டுக் கூறுகள் பொதிந்திருக்கின்றன. ஒருவரைக் கண்டதும் கைகளைக் கூப்பி வணக்கம் சொல்வது நமது வழக்கம். ‘காக்கை கரைந்தால் வீட்டுக்கு விருந்தினர் வருவர்’ என்னும் நம்பிக்கை வெகுகாலமாகத் தமிழர்களுக்கு இருந்து வருகிறது. குழந்தைகளுக்குக் காது குத்துதல் தமிழர் வாழ்வில் தவிர்க்க இயலாத சடங்கு. விளக்கேற்றிச் சுடரைக் கும்பிடுவது அன்றாட வழிபாட்டு முறை.
இவ்வாறு தமிழருக்கெனத் தனித்தன்மை கொண்ட பண்பாட்டுக் கூறுகள் பல உள்ளன. அவற்றில் பலவற்றை இன்றும் பின்பற்றி வருகிறோம். நல்லன எல்லாம் தமிழர் பண்பாடே என்று சொல்லலாம்.
—– 29-03-25
(திருச்சி, எஸ்.ஆர்.வி. பள்ளி வெளியீட்டு நூல் ஒன்றிற்காக எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க 2023இல் எழுதிய கட்டுரை.)
Add your first comment to this post