இந்தி என்னும் கொலைக்கருவி

 

இந்தி என்னும் கொலைக்கருவி

 

இந்தி மொழி பற்றி அறிஞர் அண்ணாவின் கூற்றைச் சொல்லிப் பத்ரி சேஷாத்ரி தெரிவித்திருந்த கருத்து தொடர்பாக நடந்து வரும் விவாதங்களைக் கவனித்து வருகிறேன். இத்தகைய கருத்துக்களின் அரசியல் வெளிப்படை. எல்லோரின் கவனத்தையும் தம்மை நோக்கி ஈர்ப்பதற்கு இந்துத்துவம் வெவ்வேறு தரப்பினரை மாற்றி மாற்றிப் பயன்படுத்திக் கொண்டேயிருக்கிறது. உணர்ச்சிகளைத் தூண்டும் வகையில் கருத்துத் தெரிவிப்பதும் பிறர் தெரிவிக்கும் கருத்துக்களை அவ்விதம் மாற்றுவதும்  இந்துத்துவத்தின் தொடர் செயல்பாடு. அதன் வழியாகத் தம்மை நிலைநிறுத்திக் கொள்ளும் வெற்றித் தந்திரம்.

இந்தியைப் பற்றி இது மட்டுமல்ல, இன்னும் மோசமாகவும் அண்ணா சொல்லியிருப்பார். அண்ணா மட்டுமல்ல, பெரியாரும் சொல்லியிருப்பார். இன்னும் ஏராளம் பேர் பேசியிருப்பார்கள்; எழுதியிருப்பார்கள். இந்தியைப் பேய்பிசாசாக உருவகித்த காலம் உண்டு. இழிவுபடுத்திப் பேசியதும் வரலாறுதான். ‘கொடியில் காயப்போட்ட துணிகளைப் போலத் தொங்கும் எழுத்துக்களைக் கொண்ட மொழி’ என்று ஏளனம் செய்திருக்கிறோம். ஏன் அப்படிப் பேசினார்கள்? இந்தி ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடி மாண்டவர்கள் பலர். கைகால்களை இழந்தும் உடல்நலம் பாதிக்கப்பட்டும் வாழ்க்கையை இழந்தவர்கள் ஏராளம். ‘இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாற்றை’ முழுமையாக எழுதினால் அதில் பங்கேற்ற உள்ளூர்ப் போராளிகள் பலரும் வெளிச்சத்திற்கு வருவார்கள். ஏன் அப்படிப் போராடினார்கள்?

தமிழகத்தைப் பொருத்தவரை, ஏன், இந்தியாவைப் பொருத்தவரையிலேயே இந்தி ஒரு மொழி மட்டுமல்ல. அது நம் அடையாளத்தை அழிக்க வந்த ஆதிக்கக் கருவி. கொலைக் கருவியை எடுத்து நெஞ்சில் சாய்த்துக் கொஞ்சவா முடியும்? பிரேம்சந்த், அசோக் வாஜ்பாயி போல ஆயிரமாயிரம் எழுத்தாளர்கள், கவிஞர்கள் அந்த மொழியில் இருக்கட்டும். அவர்கள் படைத்த நூல்கள் பேரிலக்கியமாக விளங்கட்டும். அதற்காக  ‘இந்தி படி, இந்தி படி’ என்று கூவி வரும் ஆதிக்கக் குரலுக்கு அடிபணிய இயலுமா? ஒரு மொழியைப் படிப்பது விருப்பம், தேவை சார்ந்தது. படித்தாக வேண்டும் என்னும் நிர்ப்பந்தத்தின் பின்னால் ‘ஒரே மொழி’ என்னும் கொள்கை இருக்கிறது. அதை எந்த அடிப்படையில் நாம் ஏற்க முடியும்? ‘இந்தி தெரியாது, போடா’ என்று உரக்கச் சொல்லியே எதிர்ப்போம்.

இந்தி என்னும் கொலைக்கருவி

அண்ணா அப்படி என்ன சொல்லிவிட்டார்? ‘மூன்று மாதத்தில் கற்றுக் கொள்ளலாம்’ என்கிறார்.  நடைமுறைத் தேவை சார்ந்து  ஒரு மொழியை மூன்று மாதத்தில் கற்றுக்கொள்ள முடியாதா என்ன? என் உறவினர்கள் பலர் இந்தியில் சரளமாகப் பேசுவார்கள். ஆழ்துளைக் கிணறு அமைக்கும் தொழிலில் இருப்பவர்கள் அவர்கள். இந்தி பேசும் மாநிலங்களுக்குச் சென்று சில மாதங்கள் அங்கேயே தங்கித் தொழில் நடத்துவார்கள். தமிழ்நாட்டுக்கு வந்து பிழைக்கும் இந்திக்காரர்களிடம் பேசுவதற்கு நம்மை இந்தி கற்றுக்கொள்ளச் சொல்லும் இந்துத்துவம், தமிழ்நாட்டிலிருந்து வட மாநிலங்களுக்குச் சென்று தொழில் செய்வோரிடம் பேசத் தமிழ் கற்றுக் கொள்ளுங்கள் என்று இந்திக்காரர்களைச் சொல்வதில்லை. ஆனால் தமிழர்களுக்கு ஒன்றும் பிரச்சினையில்லை.

அங்கே சென்று தங்கியிருக்கும்  ஓரிரு மாதத்தில் அன்றாடத் தேவைக்கான அளவு இந்தியில் பேசக் கற்றுக் கொள்கிறார்கள். அங்கே தொடர்ந்து  தொழில் நிமித்தம் செல்வதால் போகப்போக இயல்பாகப் பேசுகிறார்கள். இவ்வாறு இந்தி பேசத் தெரிந்த ஏராளமானவர்கள் நாமக்கல் மாவட்டத்தில் இருக்கிறார்கள். எந்த மொழியும் அப்படித்தான். ஒரு மொழியை ஆழக் கற்றுப் புலமை பெறுபவர்கள் மிகச் சிலரே. அது தாய்மொழியாக இருப்பினும் அப்படித்தான். புழக்கத்திற்கு ஏற்ற அளவு கற்க மூன்று மாதமே அதிகம். அதிகபட்சம் ஆயிரம் சொற்களைத் தெரிந்துகொண்டு வாழ்க்கையை அருமையாக நடத்திவிட முடியும். ஆயிரம் சொற்களைக்கூட அறியாமல் மொழிப்புலமை உடையவர் போலப் பாவனை செய்வோர் எத்தனையோ பேர்.

அண்ணா  ‘மூன்று மாதம்’ என்று சொல்லிவிட்டார். உடனே மூன்று மாதம் என்றால் சரியாகத் தொண்ணூறு நாட்கள் என்று துளி பிசகாமல் எடுத்துக்கொள்பவரின் மொழிப் புலமையை என்னவென்று சொல்வது? மூன்று மாதம் என்று பேச்சில் பயன்படுத்தும்போது ‘குறைந்த காலம்’ என்று பொருள் வரும். ‘மூனு மாசத்துல பாரு’ என்கிறோம். சரியாக மூன்று மாதம் என்றா பொருள்? சில மாதங்கள் என்று பொருள்.  ‘மூன்று நான்கு பேர்’ என்கிறோம். சிலர் என்று பொருள்.  ‘மூன்றாம் மனுசன்’ என்றால் சம்பந்தமில்லாதவர் என்று பொருள். பெருவரலாறு உடைய மொழியில் இப்படிப் பல நுட்பங்கள் பொதிந்திருக்கும்.

தமிழர்  அடையாளம் அனைத்திற்கும் எதிரானது இந்துத்துவம். நாம் சமூக நீதி என்போம்; அது ‘தகுதி’ என்கும்.  தமிழ் என்போம்; அது இந்தி என்கும். அப்படியே போய்ச் சமஸ்கிருதம் என்கும். இப்போது விவாதத்தைச் சமஸ்கிருதம் நோக்கி நகர்த்திவிட்டார்கள். சமஸ்கிருதத்திற்கு எதிரான போராட்டம் என்பது தமிழ் மொழி வரலாற்றின் முக்கியமான பகுதி. சமஸ்கிருதம் தமிழுக்கு எதைக் கொடுத்தது? தமிழுக்கு மூலம் சமஸ்கிருதம் என்று தவறான கருத்தைக் கொடுத்தது. தமிழ் இலக்கணம் எல்லாம் சமஸ்கிருதத்திலிருந்து வந்தது என்றது. தமிழ் இலக்கியங்களுக்கு மூலம் சமஸ்கிருதம் என்றது. தெளிந்த தமிழில் அமைந்த வைணவ இலக்கியங்களுக்கு ‘மணிப்பிரவாள’ நடையில் உரை எழுதித் தனதாக்கிக் கொள்ள முயன்றது. தேவபாஷை சமஸ்கிருதம்; நீச பாஷை தமிழ் என்று மேல் கீழாக்கியது. இதுவா இருமொழி உறவு?

இருமொழிகளுக்கு இடையேயான உறவு எப்படி இருக்கும்? கொடுத்தலும் பெறுதலும்தான் மொழி உறவு. ஆனால் இங்கே எப்படி இருக்கிறது? எப்போதும் சமஸ்கிருதம்தான் கொடுக்குமாம். தமிழ் பெறுமாம். தமிழுக்குக் கொடுக்கும் திறன் இல்லையா? ஒருவழிப் பாதையாக மொழி உறவு இருக்கவே முடியாது. சரி, சமஸ்கிருதம் நமக்கு எதை வேண்டுமானாலும் கொடுத்திருக்கட்டும். அதில் எத்தனையோ அதிசயங்கள் இருக்கட்டும். நம்மை நோக்கி அது வரும்போது எல்லாவற்றிலும் அதன் ஆதிக்க குணமே முன்னிற்கும். ஆதிக்கத்தை எல்லா வழியிலும் எதிர்த்தாக வேண்டும்.

ஆதிக்கத்தை எதிர்த்த அண்ணாவை அறிஞர் என்கிறோம் நாம்; முட்டாள் என்கிறது இந்துத்துவம்.

—–   22-10-22