யூமா இயல்பாக எங்கள் வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தார். குறைவாகவே அவர் பேசுவார். நானும் அவ்வளவாகப் பேசாதவன் என்ற போதும் அவருக்கும் சேர்த்து நானே பேச வேண்டியிருக்கும். முதல் மாடியில் இருந்த எங்கள் வீட்டுக்கு முன் பெரிய முற்றம். மாமரங்களின் கிளைகளை எட்டிப் பிடிக்கலாம். காற்று நன்றாக வீசும். இரவில் அதிகமான வெளிச்சம் இல்லாத பகுதி. வாசல் விளக்கைப் போடவில்லை என்றால் நிலவொளி வந்து தீண்டும். அங்கே இருவரும் பேசாமலே வெகுநேரம் உட்கார்ந்திருப்போம். திடீரென்று ‘கிளம்பறன் முருகன்’ என்று சொல்லிவிட்டு வேகமாக இறங்கிப் போய்விடுவார்.
அவர் மென்மையான சுபாவமும் முரட்டுப் பிடிவாதமும் கொண்டவர். தம் பெயரை அப்போது ‘யூமா.வாஸுகி’ என்று தான் எழுதுவார். ‘ஸு’ என்னும் வரிவடிவம் சமஸ்கிருத ஒலிப்புக்கானது. அதைப் பயன்படுத்த என்ன காரணம் என்று ஒருமுறை கேட்டேன். அப் பெயரில் உள்ள ‘யூ’ அவருடைய நண்பர் யூசுப் என்பவரின் முதல் எழுத்து. அவருடைய இயற்பெயர் மாரிமுத்து. அதன் முதல் எழுத்து ‘மா.’ அவர் அக்காவின் பெயர் வாசுகி. இம்மூன்றையும் இணைத்துப் புனைபெயர் வைத்துக் கொண்டார். அதுசரி. ஆனால் ஏன் ‘ஸு’ போட வேண்டும்? அக்காவின் பெயரை மென்மையாக உச்சரிக்க வேண்டும், வல்லின ஒலிப்பு வந்துவிடக் கூடாது என்பதற்காக ‘ஸு’ போடுவதாகச் சொன்னார்.
நான் அப்போது தமிழ் இலக்கியம் பயின்று கொண்டிருந்த மாணவன். அதனால் எனக்கு அந்த மாதிரி எழுதுவதில் உடன்பாடு இல்லை. முடிந்த வரைக்கும் தமிழ் வரிவடிவத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதே இப்போதும் என்னுடைய எண்ணம். வேறு வழியில்லை, நிர்ப்பந்தம் என்றால் சமஸ்கிருத ஒலிப்புக்கான வரிவடிவத்தைப் பயன்படுத்தலாம். அதனால் அவரிடம் ‘நீங்கள் இந்த எழுத்தைப் பயன்படுத்துவது சரியல்ல’ என்று சொன்னேன். அந்தச் சமயத்தில் மொழியியல் வகுப்புக்கூட எடுத்த மாதிரி ஞாபகம். சமஸ்கிருதம், இந்தி, மலையாளம் தெலுங்கு ஆகிய மொழிகளில் நான்கு வகை க, ச, ப, த முதலிய எழுத்துக்கள் உண்டு. ச என்றால் அதில் நான்கு எழுத்துக்கள். ஒவ்வொன்றுக்கும் லேசாக உச்சரிப்பு வேறுபடும். காகம் என்னும் சொல்லில் வரும் இரண்டு ‘க’வுக்கும் ஒலிப்பு வேறுபாடு உண்டு. தமிழில் இரண்டையும் வேறுபடுத்தி எழுதுவதில்லை. ஆனால் வேறுபடுத்தி ஒலிப்போம். அதுபோல ‘வாசுகி’ என்று எழுதினாலே ஒலிப்பில் ‘வாஸுகி’ என்றுதான் ஆகும்.
அவர் எந்தப் பதிலும் சொல்லவில்லை. ஏற்றுக் கொள்ளவில்லை என்று மட்டும் தெரிந்தது. ‘வாஸுகி’ என்றே எழுதிக் கொண்டிருந்தார். அதன் பின் ஆறு ஆண்டுகள் கழித்து அவர் பிடிவாதத்தை அசைத்து ‘வாசுகி’ என எழுதும்படி மாற்றியவர் தமிழினி வசந்தகுமார். ‘ரத்த உறவு’ நாவலில் ‘யூமா.வாசுகி’ என்றுதான் பெயர் இருக்கும். ‘எப்படீங்க அண்ணாச்சி, மாத்துனீங்க?’ என்று வசந்தகுமாரிடம் கேட்டேன். ’அதெல்லாம் கஷ்டமில்ல. ஸு வேண்டாம் தம்பி, சு பயன்படுத்தலாம்னு சொன்னேன், சரின்னுட்டாரு’ என்று அவர் சொன்னார். வசந்தகுமாரின் அன்பும் காலமும் மாரிமுத்துவின் மனதை இளக்கிவிட்டன போலும்.
அவர் எந்தச் செயலில் இறங்கினாலும் அதிதீவிரம் காட்டுவார். மலையாளம் கற்றுக் கொண்டதும் அப்படித்தான். அவரும் நானும் ஒன்றாகத்தான் மலையாளம் கற்றுக்கொள்ளத் தொடங்கினோம். ‘30 நாட்களில் மலையாளம்’ என்னும் நூலை வாங்கி மலையாளம் கற்றோம். எழுத்துக்களைக் கற்றுக் கொண்டதோடு நான் நிறுத்திவிட்டேன். எனக்கு வேலை கிடைத்தது, இடம்பெயர்ந்தது எனப் பல காரணங்களால் மலையாளத்தைக் கைவிட்டேன். இப்போது கேரள இலக்கிய நிகழ்வுகளுக்குச் செல்லும் போது எழுத்துக் கூட்டிப் படிக்கும் அளவு அப்போது கற்ற மலையாளம் உதவுகிறது. யூமாவுக்கும் எத்தனையோ சூழல்கள் வந்த போதும் மலையாளத்தைக் கைவிடவில்லை.
எழுத்துக்களைக் கற்றுக்கொண்ட பிறகு அடுத்த கட்டத்திற்குப் போனார். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையான மலையாளப் பாட நூல்களை வாங்கி அவற்றைப் படித்தார். உண்மையில் ஒரு சிறுவனாகத் தம் மனநிலையை ஆக்கிக் கொண்டு பாடநூல்களைப் படித்தார் என்றே சொல்வேன். அடுத்துச் சிறுவர் நூல்கள், மலையாள நாளிதழ்கள் என்று படிக்கத் தொடங்கினார். சிறுவர் நூல்களை மொழிபெயர்த்தார். பின்னர் ‘கசாக்கின் இதிகாசம்’ போன்ற செறிவான மொழி கொண்ட நாவலையே மொழிபெயர்த்துச் சாகித்திய அகாதமி விருது வாங்கினார். ஒரு செயலில் இறங்கினால் அதில் எத்தனை தீவிரம் காட்டுவார் என்பதற்கு அவரது மலையாள மொழி கற்றலே சான்று.
சின்ன விஷயமோ பெரிய விஷயமோ ஒன்றை எடுத்துக்கொண்டால் அதில் தீவிரமாக இறங்கிவிடுவதால் மற்றவை எல்லாம் அவருக்கு மறந்துவிடும். அன்றாட நடவடிக்கைகளில் அவரது மறதி புகழ் பெற்றது. என் மனைவி ‘மறதி மாரிமுத்து’ என்றே பெயர் வைத்திருந்தார். ஒருமுறை அவர் அறையிலிருந்து தண்டவாளம் வழியாக நடந்து எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டார். என்னோடு பேசிக் கொண்டிருந்தவர் தம் சட்டைப்பையில் கையை விட்டுத் தேடினார். பிறகு பதற்றத்தோடு ‘ஒரு கவிதை எழுதி உங்ககிட்டக் காட்டலாமுன்னு கொண்டுக்கிட்டு வந்தேன். பாக்கெட்டுலதான் வெச்சிருந்தேன். வர்ற வழியில எதோ குப்பப் பேப்பரு பாக்கெட்டுல இருக்குதுன்னு நெனச்சுத் தூக்கி எறிஞ்சிட்டன். அது நல்ல கவித முருகன். நான் போய்த் தண்டவாளத்துல தேடி எடுத்துக்கிட்டு வர்றன்’ என்று சொல்லி வேகமாகக் கிளம்பிவிட்டார்.
சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்தார். ரயில் தண்டவாளப் பாதையில் பத்து முறை முன்னும் பின்னும் நடந்து தேடிவிட்டுத் திரும்பி வந்தார். ‘நல்ல கவித முருகன். வார்த்தைகள் நல்லா வந்திருந்துச்சு. இனி அதே வார்த்தைகள் வருமான்னு தெரீயலயே’ என்றார். ஒரு கவிதைக்காக அப்படிப் புலம்பினார். கொஞ்ச நேரம் மனம் ஒட்டாமல் ஏதேதோ பேசிவிட்டு அறைக்குத் திரும்பிச் சென்றார். போன அரைமணி நேரத்தில் மீண்டும் வந்தார். அவர் முகத்தில் சந்தோசம். ‘முருகன், பேப்பர எங்கயும் தூக்கிப் போடல. ரூம்லயே வெச்சிட்டு வந்துட்டன். மறந்து தண்டவாளத்துல தூக்கிப் போட்ட மாதிரி நெனச்சுக்கிட்டன். இதோ அந்தக் கவிதை’ என்று தாளை நீட்டினார். அவர் மறதி இந்த அளவுக்குப் பெயர் பெற்றது.
மனத்தை வருடும் பகிர்வு. நன்றிங்க.
இர. மணிமேகலை
ரத்த உறவு குறித்து நல்ல விமர்சனங்கள் கிடைக்கின்றன ; புத்தகம் இல்லை. மறுபதிப்பு கொண்டுவரச் சொல்லுங்கள் அய்யா.
மறதி இயல்புதாங்க ஐயா. வாசகர்கள் ரசிக்கும் தன்மையில், எழுத்துகளை நுகர்ந்து அனுபவிக்கும் தன்மையில் இருப்பதால் ஏற்றுக்கொள்வது பொருத்தம் தான் ஐயா. மாரிமுத்து சார் யூமா வாசுகியின் கவிதையின் கவித்துவம் அருமை.