உ வே சாமிநாதையர்

‘வெள்ளத்தால் அழியாது; வெந்தணலில் வேகாது’

உ வே சாமிநாதையர்

உ.வே.சாமிநாதையர் பணியாற்றிய கும்பகோணம் அரசு கல்லூரி, சென்னை மாநிலக் கல்லூரி ஆகியவற்றில் தாமும் பணியாற்றிய ஒப்புமையைக் கருதி முகநூல் பதிவு ஒன்றை ஆர்.சிவகுமார் எழுதியுள்ளார். அக்கல்லூரிகளில் பணியாற்றிய அனுபவங்களை உவேசா அங்கங்கே குறிப்புகளாகவும் சில கட்டுரைகளாகவும் எழுதியிருப்பவற்றைத் தம் அனுபவத்தோடு இயைத்து ஆர்.சிவகுமார் எழுதியிருக்கும் தொடக்கம் மிகச் சிறப்பாக இருக்கிறது.

அப்பதிவில் கருத்திட்டுள்ள வாசுதேவன் ‘பழந்தமிழ் ஓலைகளை ஆடிப்பெருக்கின்போது காவிரி நதியில் விடும் அபத்த பழக்கமும் நடைமுறையில் இருந்துள்ளது…குடந்தையில் காவிரி ஆற்றங்கரையில் உ.வே.சா இரவு முழுவதும் விழித்து அதிகாலையில் காவிரி நதியில் மூழ்கி ஓலைகளை மீட்டுள்ளார்’ என்று ஒரு சம்பவத்தை எழுதியுள்ளார். உவேசா ஓலைச்சுவடிகளை இப்படி மீட்ட கதைகள் ஏராளமாக உலவுகின்றன. அவரைப் பற்றிப் பொதுவில் பேசத் தொடங்கும் ஒருவர் இத்தகைய கதையோடோ கரையான், வெள்ளம், நெருப்பு ஆகியவற்றிடம் இருந்து ஓலைச்சுவடிகளை மீட்ட தகவல்களைச் சொல்லியோ தொடங்குவது மரபாகிவிட்டது. உண்மையில் தமிழர்கள் அனைவரும் ஓலைச்சுவடிகளை வெள்ளத்தில் விட்டனரா? நெருப்பில் எரித்தனரா? காப்பாற்றி வைக்கும் வழக்கமே இல்லையா? இதைப் பற்றிக் கொஞ்சம் யோசிப்போம்.

‘வெள்ளத்தால் அழியாது வெந்தணால் வேகாது’ (விவேக சிந்தாமணி) என்பது கல்வியைப் பற்றிய நம் மரபுப் பார்வை. எத்தனையோ செல்வங்கள் இருப்பினும் கல்விச் செல்வத்திற்கே இத்தகைய அழியாச் சிறப்பு உண்டு. இவ்விதம் கல்வியைப் போற்றிய மரபு ஓலைச்சுவடிகளை அழிய விட்டிருக்குமா? உ.வே.சா. எழுத்துக்களில் ஓலைச்சுவடிகள் அழிவைப் பற்றிய குறிப்புகளும் உண்டு; பாதுகாத்து வைத்திருந்தது பற்றிய தகவல்களும் உண்டு. அழிவைப் பற்றிய செய்திகளையே நாம் பொருட்படுத்துகிறோம். பாதுகாப்புச் செய்திகளை எளிதில் கடந்து விடுகிறோம். உவேசா வெள்ளத்தில் பாய்ந்து சுவடிகளைப் பொறுக்கினார்; தீயில் குதித்துச் சுவடிகளை மீட்டார் என்றால் கதை கேட்கச் சுவையாக இருக்கிறது. ஆகவே அத்தகைய கதைகள் பலவாக உலவுகின்றன.

‘என் சரித்திரம்’ நூலில் ஓரிடத்தில் சுவடிகளைத் தீயில் எரித்தது பற்றிய குறிப்பு வருகிறது. வரகுண பாண்டியர் என்பவர் சேகரித்து வைத்திருந்த சுவடிகள் அவரது இறப்புக்குப் பிறகு கரிவலம் வந்த நல்லூர், பால்வண்ண நாதர் கோயிலுக்குக் கொடுக்கப்பட்டன. அதைக் கேள்விப்பட்டு அங்கு போய் விசாரிக்கிறார் உவேசா. அவை பழைய கூளங்களாக இருந்த காரணத்தால் ‘நெய்யில் தோய்த்து ஹோமம்’ செய்துவிட்டதாக அறிகிறார். அதைப் பற்றி இப்படி விவரிக்கிறார்: ‘குழி வெட்டி அக்கினி வளர்த்து நெய்யில் தோய்த்து அந்தப் பழைய சுவடிகள் அவ்வளவையும் ஆகுதி செய்துவிட்டார்கள்’ (ப.678).

அதே போல ஓலைச்சுவடிகளை வெள்ளத்தில் விட்டது பற்றிய குறிப்பு ஒன்றும் அந்நூலிலிருந்தே கிடைக்கிறது. ஆழ்வார் திருநகரியில் வக்கீல் சுப்பையா பிள்ளை என்பவர் வீட்டில் நிறைய ஓலைச்சுவடிகள் இருக்கின்றன எனக் கேள்விப்பட்டு அவரைப் பார்க்கச் செல்கிறார். ‘ஆற்றில் விடலாமென்றும் ஆடி பதினெட்டில் சுவடிகளைத் தேர் போலக் கட்டிவிடுவது சம்பிரதாயமென்றும் சில முதிய பெண்கள் சொன்னார்கள். நான் அப்படியே எல்லா ஏடுகளையும் ஓர் ஆடிமாதம் பதினெட்டாந்தேதி வாய்க்காலில் விட்டுவிட்டேன்’ (ப.683) என்று அவர் கூறுகிறார்.
அவ்விடத்தில் உவேசா மிகுந்த வருத்தத்தோடு ‘தமிழின் பெருமையைச் சொல்லிய பெரியோர் சிலர் அது நெருப்பிலே எரியாமல் நின்றதென்றும் நீரிலே ஆழாமல் மிதந்ததென்றும் பாராட்டியிருக்கிறார்கள். அதே தமிழ் இன்று நெருப்பில் எரிந்தும் நீரில் மறைந்தும் புறக்கணிக்கப்படுவதை அவர்கள் பாராமலே போய்விட்டார்கள். பார்த்து இரங்குவதற்கு நாம் இருக்கிறோம்’ (ப.683) என்று எழுதுகிறார்.

நெருப்பு, வெள்ளம் ஆகியவற்றால் மட்டும் சுவடிகள் போகவில்லை. தேவையில்லை என்பதால் கேட்டவர்களுக்கு எல்லாம் கொடுத்ததாலும் போயின. ஸ்ரீவைகுண்டத்தில் வைகுந்தநாதன் கவிராயர் என்பவர் இப்படிச் சொல்கிறார்: ‘என்னிடம் பழைய ஏட்டுச் சுவடிகள் பல இருந்தன. என் பிள்ளைகள் இங்கிலீஷ் படித்து உத்தியோகத்துக்குப் போய்விட்டார்கள். இனிமேல் இந்த ஏடுகளை யார் காப்பாற்றப் போகிறார்களென்ற எண்ணத்தால் யார் யார் எது எதைக் கேட்டார்களோ அவர்களுக்கெல்லாம் கொடுத்துவிட்டேன்’ (ப.680).

சுவடிகள் கிடைக்காத காரணம் பற்றிய இந்தச் செய்திகள் மனதில் பதிந்த அளவுக்கும் பரவிய அளவிற்கும் சுவடிகளைப் பாதுகாத்து வைத்திருந்த செய்திகள் பதியவில்லை; பரவவில்லை. அக்காலத்தில் சுவடிகளைப் பாதுகாத்து வைத்திருந்த இடங்கள் என உவேசா காட்டுபவை மூன்று. முதலாவது மடங்கள். திருவாவடுதுறை மடத்து நூலகம் பற்றிப் பல இடங்களில் அவர் எழுதியுள்ளார். அம்மடத்தின் ‘புஸ்தக சாலை’யில் இருந்து பல சுவடிகளை அவர் பெற்றிருக்கிறார். தம் பதிப்புகள் அனைத்திலும் பயன்படுத்திய சுவடிகளின் பட்டியல் தரும்போது அம்மடத்தின் பெயரையே முதலில் தருவது அவர் வழக்கம். குன்றக்குடி உள்ளிட்ட சில மடங்களின் புஸ்தக சாலைகள் பற்றியும் சில குறிப்புகள் உண்டு. திருமலைராயன் பட்டினத்தில் குளக்கரை நந்தவனத்திடையே இருந்த ‘செங்குந்தர் மடம்’ ஒன்றில் ஏடு பார்த்த அனுபவத்தையும் (நிலவில் மலர்ந்த முல்லை, ப.206) குறிப்பிட்டுள்ளார்.

பத்துப்பாட்டு ஏடு தேடித் தருமபுர மடத்திற்கு சென்ற அனுபவத்தை விவரிக்கும் ‘உதிர்ந்த மலர்கள்’ என்னும் கட்டுரையில் மடங்களில் எவ்வாறு புஸ்தகசாலை பராமரிக்கப்பட்டது என்பது குறித்துச் சித்திரம் போல ஒருகாட்சியைக் காட்டியுள்ளார். ‘அவ்வாதீனத்துப் புஸ்தகசாலைக்கு அவர்கள் என்னை அழைத்துச் சென்றார்கள். அங்கே பல ஏட்டுச்சுவடிகள் இருந்தன. எல்லாவற்றையும் எடுத்து ஓரிடத்தில் தொகுத்து வைத்தார்கள். ஆயிரக்கணக்கான ஏட்டுச்சுவடிகள் இருந்தன. அவற்றைக் கண்டவுடனே எனக்கு வியப்பு உண்டாயிற்று. எல்லாம் பழைய ஏடுகளே; புதிதாக எழுதப்பட்ட ஏடு ஒன்றேனும் அதிற் காணப்படவில்லை… உடனிருந்தவர்களில் ஒருசாரார் சுவடிகளின் கட்டை அவிழ்த்துக் கொடுத்தார்கள். நான் ஒவ்வொன்றாகப் பார்த்தேன். பார்த்தவுடன் அவற்றை மீண்டும் ஒருசாரார் நன்றாகக் கட்டி வைத்தார்கள். சுவடிகளைப் பார்ப்பதும் ஒழுங்காகக் கட்டுவதுமாகிய காரியங்களில் அவர்களுக்கு நல்ல பழக்கம் இருந்தது’ (நிலவில் மலர்ந்த முல்லை, ப.239) என்பது அப்பகுதி.

மடங்களில் புஸ்தக சாலைகள் இருந்தன; அவை ஆயிரக்கணக்கான சுவடிகளைக் கொண்டிருந்தன; பராமரிக்க நன்கு பயிற்சி பெற்ற ஆட்கள் இருந்தனர் முதலிய விவரங்களை இப்பகுதி நமக்குத் தருகிறது. மடங்களின் புஸ்தக சாலைகள் பற்றி உவேசாவின் குறிப்புகளில் இருந்தும் பிறரது எழுத்துக்களில் இருந்தும் இன்னும் விரிவான பல தகவல்களைத் தொகுத்துக்கொள்ள முடியும்.
புலவர் அல்லது கவிராயர் என்னும் பெயரில் இருந்த குடும்பத்தினர் வீடுகளில் பரம்பரையாக ஓலைச்சுவடிகள் பராமரிக்கப்பட்டு வந்தன. உவேசா சுட்டுபவற்றில் இரண்டாவதான சுவடிப் பாதுகாப்பு இடமாக இதைக் கருதலாம். திருநெல்வேலியில் கவிராஜ ஈசுவர மூர்த்திப் பிள்ளை என்பவர் வீட்டு நூலகம் பற்றி உவேசா இப்படி எழுதுகிறார்: ‘புத்தக அறையைத் திறந்து காட்டினார்கள். பார்த்தவுடன் என் உடம்பு சிலிர்த்தது…ஏட்டுச் சுவடிகளை அடுக்கடுக்காகவும் ஒழுங்காகவும் வைத்திருந்தார்கள். சுவடிகளைக் கட்டி வைத்திருந்த முறையே திருத்தமாக இருந்தது. புழுதி இல்லை; பூச்சி இல்லை; ஏடுகள் ஒன்றோடொன்று கலக்கவில்லை. தமிழ்த் தெய்வத்தின் கோயிலென்று சொல்லும்படி இருந்தது அவ்விடம்’ (என் சரித்திரம், ப.637).

திருப்பாற்கடனாதன் கவிராயர் என்பவர் வீட்டில் பார்த்த சுவடிகளைப் பற்றி ‘ஏறக்குறைய 500 சுவடிகள் இருக்கலாம். முக்கால்வாசி ஏடுகள் அவருடைய பாட்டனார் எழுதியவை’ (மேற்படி, ப.641) என்று கூறுகிறார். ஆழ்வார் திருநகரியில் லக்ஷுமணக் கவிராயர் என்பவர் வீட்டிலும் ஆயிரக்கணக்கான சுவடிகள் இருந்தன (ப.646). அக்கவிராயர் இன்னொரு தகவலையும் தருகிறார். அவரது முன்னோர்கள் மூன்று சகோதரர்கள் என்றும் பாகம் பிரிக்கும்போது வீட்டில் இருந்த சுவடிகளை மூன்றாகப் பாகம் செய்து அவரவர் எடுத்துச் சென்றுவிட்டனர் என்பது அத்தகவல். சுவடிகளைச் செல்வமாகக் கருதிப் பாகம் பிரித்திருக்கின்றனர் என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தி.

தம் முகத்தைக் காட்டாத பெயரையும் வெளிப்படுத்தாத ஒருவர் நூற்றுக்கணக்கான சுவடிகளை உவேசாவிடம் கொண்டு ஒப்படைத்துச் சென்ற தகவலையும் அதிலிருந்தே ‘தமிழ் விடு தூது’ நூல் கிடைத்தது என்பதையும் ‘இன்னும் அறியேன்’ என்னும் கட்டுரையில் உவேசா எழுதியுள்ளார். இப்படித் தனிநபர்களின் சேகரம் பற்றிப் பலப்பல தகவல்களை உவேசா கொடுக்கிறார்.

சுவடிப் பாதுகாப்பு இடமாக அவர் குறிப்பிடும் ‘கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்’ (இது இன்னும் செயல்பட்டுக் கொண்டுள்ளது) ஆங்கிலேய அரசாங்கம் உருவாக்கியதாகும். அதைப் பார்வையிட்டும் பயன் கொண்டிருக்கிறார் உவேசா. அங்கே பணியாற்றிய பண்டிதர் ஒருவர் ‘நைடதம்’ நூலை ‘மாவிந்த புராணம்’ என்று தலைப்பில் எழுதி வைத்திருந்ததைப் பற்றிக் கட்டுரை ஒன்றும் எழுதியுள்ளார்.

இவ்வாறு இருக்க எல்லாச் சுவடிகளும் தீயிலும் வெள்ளத்திலும் போய்விட்டன என்று பொதுவாகச் சொல்வது சரியல்ல. ஒரு வீட்டில் தமிழில் ஆர்வம் கொண்ட புலவர் உயிரோடு இருக்கும்வரை அவர் சேகரித்த சுவடிகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. அவர் இறப்புக்குப் பிறகும் அச்சுவடிகள் பாதுக்காக்கப்பட வேண்டுமானால் அவர் பரம்பரையில் தமிழில் ஆர்வமுடையோர் யாரேனும் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் சுவடிகளைக் கேட்போருக்குக் கொடுத்துவிடுவதும் புனிதம் எனக் கருதி வெள்ளத்தில் விடுவதும் நடந்திருக்கிறது. அவ்வாறு வெள்ளத்தில் விட்டவர்கள் சாதாரண மனிதர்கள் அல்ல. ஆங்கிலக் கல்வி கற்று உத்தியோகத்தில் இருந்தவர்கள் என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.

இன்றும் அதே நிலைதான். சில ஆண்டுகளுக்கு முன்னால் நாமக்கல் பழைய புத்தகக் கடையில் சில நூல்களை வாங்கினேன். அவற்றிலெல்லாம் ‘புலவர் தங்கப்பன், சேலம்’ என்று பெயரெழுதி இருந்தது. சேலம் நண்பர்களிடம் விசாரித்தபோது அவர் தமிழாசிரியர் என்பதும் இறந்து ஒருவாரம் தான் ஆயிற்று என்பதும் தெரிந்தது. ஒருவர் இறந்து ஒருவாரத்திற்குள் அவர் சேகரமாகிய புத்தகங்கள் பழைய புத்தகக் கடைக்கு வந்துவிட்டன என்றால் அடுத்த தலைமுறைக்கு அப்புத்தகங்களால் எந்தப் பயனும் இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. ஓலைச்சுவடிப் பாதுகாப்பிலும் இதுதான் நிலை. பயன்படுத்தாதவர்கள் அதைப் பாதுகாத்து வைத்திருப்பர் என்று எதிர்ப்பார்ப்பது சரியல்ல. மதக் காழ்ப்பின் காரணமாக அழிந்த சுவடிகளும் பல இருக்கலாம்.

இவ்வாறு இன்றைக்குப் பல பழந்தமிழ் நூல்கள் கிடைக்காமல் போனமைக்குப் பல காரணங்கள். சுவடிகளின் அருமை அறிந்தவர்களும் அவற்றை வெள்ளத்தில் விட்டிருக்கின்றனர். தருமபுர மடம் தொடர்பாக எழுதும் போது அதைப் பற்றிய தகவல் ஒன்றை உவே சா எழுதியுள்ளார். அம்மடத்தில் காறுபாறாக இருந்தவர் சொல்கிறார், ‘சில தினங்களுக்கு முன் ப்தினெட்டாம் பெருக்கில் காவிரியிற் கொண்டுபோய் விட்டுவிடுவதற்காகப் பல பழைய கணக்குச் சுருணைகளையும் சிதிலமான வேறு சுவடிகளையும் கட்டிச் சிறிய தேரில் வைத்துக்கொண்டு போனார்கள்.’ (நிலவில் மலர்ந்த முல்லை, ப.242). பழைய கணக்குச் சுருணைகள், சிதிலமான சுவடிகள் முதலியவற்றை வெள்ளத்தில் விட்டுள்ளனர் என்பது இதன் மூலம் தெரிகிறது. எல்லாவற்றையும் வெள்ளத்தில் விடவில்லை. அவ்வாறு விடும்போது படி எடுத்துக்கொண்டு பழைய சுவடிகளை வெள்ளத்தில் விடுவர். படியோலை எழுதுவது பற்றி விவரித்தால் பெருகும்.

—– 25-05-20

பயன்பட்ட நூல்கள்:
1 உ.வே.சாமிநாதையர், என் சரித்திரம், 1990, சென்னை, உவே சாமிநாதையர் நூல் நிலையம், மூன்றாம் பதிப்பு.

2 உ.வே.சாமிநாதையர், ப.சரவணன் (ப.ஆ.), நிலவில் மலர்ந்த முல்லை, 2016, நாகர்கோவில், காலச்சுவடு.
—–