சென்னை, தரமணியில் உள்ள அறிவுலகச் செல்வமான ‘ரோஜா முத்தையா நினைவு ஆராய்ச்சி நூலகம்’ பற்றியும் அங்கே சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் நூல்கள் குறித்தும் ‘ஆயிரங்காலத்துப் பரண்’ என்னும் தலைப்பில் ‘ஆனந்த விகடன்’ இதழில் தொடர் வெளியாகிறது. வெகுஜன இதழில் இத்தகைய தொடர் வருவது மிக நல்லது. நூலகம், பழந்தமிழ் இலக்கியம், தமிழில் வெளியாகியுள்ள வகைவகையான நூல்கள் முதலியவற்றை பெருமக்கள் திரளுக்குக் கொண்டு சேர்க்கும் அபூர்வமான தொடர் இது. வெ.நீலகண்டன் எழுதி வருகிறார். நூலகப் பொறுப்பாளர்களிடம் செய்திகளைக் கேட்டுக்கொண்டு எழுதுகிறாரா, அவரே தரவுகளை எல்லாம் நேரடியாகப் பார்த்து எழுதுகிறாரா என்று தெரியவில்லை. எப்படியிருப்பினும் சரி, தரவுகளையும் தகவல்களையும் கவனமாகவும் பொறுப்பாகவும் கொடுக்க வேண்டும்; ஒருமுறைக்கு இருமுறை, மும்முறை சரிபார்க்க வேண்டும். அப்படிச் செய்வதாகத் தெரியவில்லை.
செம்மொழித் தகுதிக்கான இலக்கிய வளமாகிய தொல்காப்பியம், சங்க இலக்கியம், பதினெண்கீழ்க்கணக்கு உள்ளிட்ட நாற்பத்தொரு நூல்களின் முதல் பதிப்பில் சிலவற்றைத் தொட்டுப் பேசும் கட்டுரை இவ்வாரம் வெளியாகியுள்ளது. அவற்றை ரோஜா முத்தையா நூலகம் எப்படிப் பாதுகாக்கிறது என்னும் விவரங்களை எல்லாம் சரியாகத் தருகிறது. ஆனால் பதிப்புகளைப் பற்றிப் பேசும்போது பல தவறான தகவல்கள்.
‘1894-ல் உ.வே.சா. ‘புறநானூறு மூலமும் உரையும்’ என்ற நூலைத் தொகுத்துள்ளார்’ என்றொரு தகவல். தமிழ்ச் சமூகத்தில் நூற்றாண்டுக்கும் மேலாகப் பெருஞ்செல்வாக்குச் செலுத்தி வரும் புறநானூற்றை ‘என்ற நூல்’ என்று யாரும் அறியாத ஒன்றைப் போல எழுதியிருக்கிறார். அது போகட்டும். அதை ‘உ.வே.சாமிநாதையர் தொகுத்தார்’ என்றால் என்ன செய்வது? இரண்டாயிரம் ஆண்டுகால வரலாறு கொண்ட நூலை உ.வே.சா. எப்படித் தொகுத்திருக்க முடியும்? ஓலைச்சுவடியில் இருந்து அச்சில் கொண்டு வந்தது அவர் செய்த வேலை. அதற்குப் பெயர் ‘பதிப்பித்தல்.’ இன்னோரிடத்தில் ‘உ.வே.சாமிநாதய்யரின் மகன் கல்யாண சுந்தரையர் தொகுத்து பதிற்றுப் பத்து மூலமும் உரையும்’ என்றிருக்கிறது. உ.வே.சாமிநாதையர் பதிப்பித்த நூல்களை அவர் மகன் மறுபதிப்பாகக் கொண்டு வந்தாரே தவிர அவராக எந்த நூலையும் பதிப்பிக்கவும் இல்லை; தொகுக்கவும் இல்லை. இவை அறியாமல் நேர்ந்த சாதாரணப் பிழைகள் என்று விட்டுவிடலாம். அப்படிக் கருத இயலாத இன்னொரு தகவலும் கட்டுரையில் இருக்கிறது.
கட்டுரை இப்படிச் சொல்கிறது: ‘சங்க இலக்கியங்கள் அச்சாக்கம் பெறுவதற்கு மிக முக்கியப் பங்காற்றிய இன்னொருவரையும் நாம் நினைவுகூர வேண்டும். முத்துராமலிங்கத் தேவர். உ.வே.சா-வுக்குப் பலவிதங்களில் முத்துராமலிங்கத் தேவர் உதவியிருக்கிறார். புறநானூறு நூல் வெளிவருவதற்கு முத்துராமலிங்கத் தேவர் செய்த பொருளுதவியையும் நினைவுகூர்ந்திருக்கிறார் உ.வே.சா. 1889-ல் உ.வே.சா. பதிப்பித்த ‘பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியருரையும்’ என்ற நூலுக்கும் முத்துராமலிங்கத் தேவர் பொருளுதவி செய்திருக்கிறார்.’
இதை வாசிப்போர் உ.வே.சா.வுக்கு உதவியவர் ‘பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்’ என்றுதானே கருதுவர்? இன்று ‘தேவர்’ என்று சொன்னாலும் ‘முத்துராமலிங்கத் தேவர்’ என்றாலும் அது ‘பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்’ என்றே பொருள்படும்படி அரசியல் சூழல் இருக்கிறது. கட்டுரையில் ‘பசும்பொன்’ என்னும் சொல் இல்லை என்றாலும் அவரைக் குறிக்கும் தொனி இருக்கிறது. உ.வே.சா.வுக்கு எத்தனையோ பேர் பொருளுதவி செய்திருந்தாலும் அவர்களைப் பற்றியெல்லாம் ‘முக்கியப் பங்காற்றியவர்’ என்று குறிப்பிட்டுச் சொல்லவில்லை. முத்துராமலிங்கத் தேவரைக் குறிப்பிட்டுச் சொல்லக் காரணம் அவரைப் ‘பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்’ என்று பிழையாக நினைத்துக் கொண்டதுதான்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்ததே 1908ஆம் ஆண்டுதான். அப்படியிருக்க 1894இலும் 1899இலும் வெளியான நூல்களுக்கு அவர் எப்படிப் பொருளுதவி செய்திருக்க முடியும்? தமக்கு உதவியவர் ‘சிறுவயல் ஜமீந்தாரவர்களாகிய முத்துராமலிங்கத் தேவரவர்கள்’ என்றும் ‘சிவகங்கை (ஸப் டிவிஷன் சிறுவயல் ஜமீந்தாரவர்களாகிய)… ஸ்ரீமுத்துராமலிங்கத் தேவர்’ என்றும் தெளிவாக உ.வே.சா. குறிப்பிட்டிருக்கிறார். இப்போது சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ‘அரண்மனைச் சிறுவயல்’ என்னும் ஊரில் ஜமீந்தாராக இருந்தவர். நேரில் அவரைச் சந்திக்காமலே பொருளுதவி பெற்று வந்த உ.வே.சா. பின்னர் ஜமீனுக்கே சென்று சந்தித்தார். அதைப் பற்றி ‘என் சரித்திரம்’ நூலில் ஒருபகுதி எழுதியுள்ளார்.
‘அப்படியே சிறுவயல் சென்று அவ்விடத்து ஜமீன்தாராகிய முத்துராமலிங்கத் தேவரைப் பார்க்க எண்ணிப் புறப்பட்டேன். வரவேண்டுமென்று பலமுறை அவர் தெரிவித்ததுண்டு. அவர் சங்கீதத்திலும் தமிழிலும் வடமொழியிலும் விசேஷமான அபிமானமுடையவர். தெலுங்கில் நல்ல பழக்கமுள்ளவர்… என்னுடைய வரவினால் மிக்க மகிழ்ச்சி கொண்ட ஜமீன்தார் பலவாறு உபசரித்தனர்’ (ப.722).
அவரோடு பேசிய சிலவற்றையும் நூலில் பதிவு செய்துள்ளார். மருத பாண்டியரின் அரண்மனையில் தாம் வசித்து வருவதையும் அந்த அரண்மனை காரணமாக அவ்வூருக்கு ‘அரண்மனைச் சிறுவயல்’ எனப் பெயர் வழங்குவதையும் அவரே சொல்லியிருக்கிறார். இருவருக்கும் கடிதப் போக்குவரத்தும் இருந்துள்ளது. சிறுவயல் ஜமீந்தார்1891 முதல் 1898 வரை எழுதிய ஆறு கடிதங்கள் ‘உ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம்’ தொகுப்பில் உள்ளன. அவற்றில் உ.வே.சா. மீது ஜமீந்தார் வைத்திருந்த மதிப்பு நன்கு வெளிப்படுகிறது. ‘தமிழ்நாடு செய்த தவப்பயன் போல விளங்கும் தாங்கள்’ என்று ஒருகடிதத்தில் எழுதியுள்ளார். உ.வே.சாமிநாதையரின் பல நூல்களின் பதிப்புக்கு உதவியாக விளங்கிய திருமானூர் அ.கிருஷ்ணையர் முதலில் சிறுவயல் ஜமீனின் ஆதின வித்துவானாக இருந்தவர். உ.வே.சா.வுக்கு உதவச் செல்ல ஜமீந்தார் அனுமதி கொடுத்தார். சிறுவயல் ஜமீந்தார் முத்துராமலிங்கத் தேவரைப் பற்றி ‘என் சரித்திரம்’ நூலில் ஐந்தாறு இடங்களில் பதிவுகள் இருக்கின்றன. ப.சரவணன் பதிப்பில் காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கும் ‘என் சரித்திரம்’ நூலில் ஜமீந்தாரின் படமும் இடம்பெற்றுள்ளது. இத்தனை தகவல்களோடு விளங்கும் ஒருவரைப் பற்றி ஏதும் அறியாமல் இன்னொருவாராக அவரை அடையாளப்படுத்தலாமா?
இத்தகைய நூல்களை எல்லாம் தேடிப் பார்த்து விவரம் அறிய வெகுஜன இதழாளர்களுக்கு நேரம் இருக்காது. அதனாலென்ன? பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்த ஆண்டு எது என விக்கிப்பீடியாவில் பார்த்திருந்தாலே இருவரும் வேறுவேறு எனத் தெளிவு பெற்றிருக்கலாமே? சிறுவயல் ஜமீந்தார் முத்துராமலிங்கத் தேவரைப் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்று கருதும்படி ஆளை மாற்றும் தொனியில் ஆனந்த விகடன் எழுதியிருப்பது மிகத் தவறானது. இச்செயல் பத்திரிகை அறத்திற்கும் புறம்பானது.
பயன்பட்ட நூல்கள்:
- ப.சரவணன் (ப.ஆ.), சாமிநாதம் (உ.வே.சா. முன்னுரைகள்), 2014, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்.
- உ.வே.சாமிநாதையர், என் சரித்திரம், 2019, டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை, பதினொன்றாம் பதிப்பு.
- ஆ.இரா.வேங்கடாசலபதி (ப.ஆ.), உ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம் தொகுதி ஒன்று, 2018, டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம், சென்னை.
- ப.சரவணன் (ப.ஆ.), உ.வே.சாமிநாதையர் என் சரித்திரம், 2017, நாகர்கோவில்: காலச்சுவடு பதிப்பகம்.
—– 18-07-25
நல்ல எதிர் வினைக்கட்டுரை…
அருமை ஐயா…..