பறக்கும் கூந்தல் 1 : ‘இதையும் எழுதுங்கள்’

You are currently viewing பறக்கும் கூந்தல்  1 : ‘இதையும் எழுதுங்கள்’

 சமீப காலமாகக் கல்லூரி நிகழ்வுகளில் என்னைப் பேச அழைப்பது கூடியிருக்கிறது. குறிப்பாக ஆங்கிலத் துறையினர். பெரும்பாலான நாவல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பதால் தன்னாட்சிக் கல்லூரிகளில் ஏதாவது ஒன்றைப் பாடத்தில் வைத்துள்ளனர். முதுகலை படிக்கும் மாணவர்கள் தம் திட்டக்கட்டுரை எழுத தமிழ்நாட்டு நாவலாக இருந்தால் நல்லது என்று என் நாவல்களையும் விரும்பி எடுக்கின்றனர். ஆகவே ஆங்கில ஆசிரியர்களும் மாணவர்களும் என்னுடன் உரையாட விரும்புகின்றனர். வரும் அழைப்புகளை எல்லாம் ஒத்துக்கொண்டால் முழுநேரப் பேச்சாளராகிவிடலாம் போல. ஆனால் எனக்கு மேடைப்பேச்சு கைவராது. நூற்றுக்கும் மேற்பட்டோர் இருக்கும் கூட்டத்தில் என் பேச்சு எடுபடாது. அதற்குரிய உத்திகள், நகாசுகள் எல்லாம் எட்டாத் தூரம். நகைச்சுவைக்குத் துளியும் வாய்ப்பில்லை.

முடிந்தவரைக்கும் மாணவர்களுடன் உரையாடும் வாய்ப்பை ஏற்கிறேன். என் உரையை அதிகபட்சம் அரைமணி நேரம் வைத்துக்கொண்டு அவர்களுடன் உரையாட ஒருமணி நேரத்திற்கு மேல் ஒதுக்குகிறேன். அது நல்ல பலனளிக்கிறது. மகளிர் கல்லூரியாக இருந்தால் பிரச்சினையே இல்லை. துளி சத்தமும் இல்லாமல் உரையைக் கவனிக்கின்றனர். நிதானமாகக் கேள்விகளைக் கேட்கின்றனர். இலக்கியக் கல்வி பயிலும் பெண்கள் எண்ணிக்கை கூடியிருக்கிறது. சமீப காலத்தில் கலைப்பாடங்கள், ஊடகத்துறை ஆகியவற்றைக் கற்பதில் பெண்கள் முன்னிற்கின்றனர். வாசிப்பிலும் அவர்கள் கை ஓங்குவதைக் காண்கிறேன்.

ஒரு கல்லூரியில் பேசச் சென்றபோது நிகழ்வு தொடங்குவதற்கு முன் ஓய்வறையில் காத்திருந்தேன். மாணவப் பொறுப்பாளர்களாக இருந்த நான்கைந்து பெண்கள் என்னிடம் பேசிக் கொண்டிருந்தனர். பேச்சினிடையே திடுமென ஒரு மாணவி  ‘சார், நீங்க மயிர்தான் பிரச்சினையான்னு புத்தகம் எழுதியிருக்கறீங்க. அதுல பசங்களோட பிரச்சினயத்தான பேசியிருக்கறீங்க. பெண்களுக்கும் நெறைய மயிர்ப் பிரச்சினை இருக்குதுங்க சார். அதையும் எழுதியிருக்கலாமே’ என்று கேட்டார். இப்படி ஒரு கோணத்தை நான் யோசித்துப் பார்த்ததில்லை.

அந்தக் கேள்வி என்னை அதிரச் செய்தது. நான் கிராமத்துக் கல்லூரிகளில் பணியாற்றியவன். அங்கே பெண்களின் கூந்தல் தொடர்பாகப் பிரச்சினை எதுவும் வந்ததில்லை. சவுரி வைத்துப் பின்னும் முறை இப்போதில்லை. முதுகில் ஊசலாடும் வகையில் தளர்வாகவோ இறுக்கமாகவோ ஒற்றைச் சடை பின்னிக்கொண்டு வருவதுதான் பொதுப்போக்கு. நடுவில் வகிடு எடுப்பார்கள்; எடுக்காமலும் இருப்பார்கள். பல பெண்கள் பூச்சூடியும் வருவார்கள். தலைக்குக் குளித்த நாளில் மயிர் பறக்க வரும் பெண்கள் வகுப்பறையிலேயே பின்னிப் பாந்தமாக்கிக் கொள்வார்கள். வேறு வகையில் கூந்தலை வைத்துக்கொள்ளப் பெற்றோரே அனுமதிப்பதில்லை. அதனால் கல்லூரியிலும் பிரச்சினை ஏதும் வந்ததில்லை.

நகரத்துக் கல்லூரிகளில் அவரவர் விருப்பப்படி கூந்தலை விட்டுக்கொள்ளச் சுதந்திரம் இருக்கிறது என்று நானாக முடிவு செய்துகொண்டேன். மாநிலக் கல்லூரியில் ஒன்றரை ஆண்டு பணியாற்றினேன். அங்கே படிக்க வருவோர் பெரும்பாலும் கிராமத்து மாணவர்கள். அதனால் எனக்கு வித்தியாசம் தெரியவில்லை. என்னைக் கேள்வி கேட்ட பெண்ணிடம் ‘உங்களுக்கு என்ன பிரச்சினைம்மா இருக்குது?’ என்றேன் ஆதரவாக. Free hair (தமிழில் எப்படிச் சொல்லலாம்? பறக்கும் கூந்தல்!) விட்டுக்கொள்ள அனுமதியில்லை என்பதை முதலில் சொன்னார்கள். விதி இல்லை என்றாலும் கூந்தலைப் பறக்க விட்டுக்கொண்டு வரும் பெண்ணைப் பற்றி ஆசிரியர்களுக்கு (அவர்களும் பெண்களே) நல்லபிப்ராயம் இல்லை என்றார்கள்.

பறக்கும் கூந்தல் 1 : ‘இதையும் எழுதுங்கள்’

பறக்கும் கூந்தல் கொண்ட பெண் அறிவுரை சொல்லித் திருத்துவதற்கு உரியவள் என்று நினைக்கிறார்கள். ‘அவள் ஒருமாதிரி’ என்னும் பேச்சு உருவாகிவிடும். அடங்காதவள், சொல்பேச்சு கேட்காதவள் என்றெல்லாம் இயல்பாகவே கருத்து ஏற்பட்டுவிடும். சொல்லியும் மாற்றிக் கொள்ளவில்லை என்றால் மதிப்பெண்ணைக் குறைப்பது உள்ளிட்ட மறைமுகத் தண்டனை நடவடிக்கைகள் பாயும். மயிரை வெட்டிக் கழுத்துவரை மட்டும் விட்டுக்கொள்ளப் பல பெண்களுக்கு விரும்புகிறார்கள். அதற்குச் சுத்தமாக அனுமதியே இல்லை. அப்படி வரக்கூடாது என எழுத்துப்பூர்வ விதியில்லை எனினும் வாய்மொழியாக விதியிருக்கிறதாம்.

எழுத்தாக இருக்கும் விதிகளைவிட வாய்மொழி விதிகள் சார்ந்த விழுமியங்களின் ஆதிக்கம் நம் சமூகத்தில் மிகுதி.  எழுத்து சார்ந்த விதிகள் கற்றவர்களுக்கு அந்தத் துறை சார்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும். வாய்மொழி விதிகள் சகல தரப்புக்கும் தெரியும். அதன் பரவலும் அதிகம். யாரென்றே அறிமுகம் இல்லாத ஒருவர்கூடச் சாலையில் பார்க்கையில் ‘மயிர விரிச்சுப் போட்டுக்கிட்டுப் போவுது பாரு’ என்று கருத்தை எடுத்து விடுவார்கள். இன்னொரு விதத்தில் மயிரை விரித்தல் என்பது அமங்கலம். சிலம்பைக் கையிலேந்திச் சென்ற கண்ணகியின் பிம்பம் விரித்த கூந்தலோடுதான் நம் மனதில் பதிவாகியிருக்கிறது. கடற்கரையில் நிற்கும் சிலையும் அந்த வடிவம்தான்.

பின்னிய கூந்தல் கருநிற நாகம், ஆறடிக் கூந்தல் காலடி மீதில் மோதுவதென்னடி சந்தோசம் என்றெல்லாம் வந்த திரைப்பாடல்கள் இப்போது காலாவதியாகிவிட்டன. இன்றைய வாழ்வில் நீள்கூந்தலைப் பராமரிப்பது, அதற்கு நேரம் ஒதுக்குவது எல்லாம் சாத்தியமில்லை. திருமணம் போன்ற விசேஷங்களின் போது மட்டும் சடங்காகப் பின்னி அலங்கரித்துக் கொள்ளும் வழக்கம் மிஞ்சியிருக்கிறது. குறைந்த மயிர் வைத்துக் கொள்வதை அனுமதிக்கும் வழக்கம் வந்துவிட்டாலும் அதைப் பின்னிக் கொள்ளும் முறை பற்றிப் பலவித மதிப்பீடுகள் நிலவுகின்றன போலும். இந்தப் பிரச்சினையை  விரிவாகக் கள ஆய்வு செய்து எழுதினால் நல்லது என்று நினைக்கிறேன்.

என்னிடம் கேட்ட பெண்களிடம் அதிக நேரம் உரையாட முடியவில்லை. நிகழ்வுக்கு நேரமாகிவிட்டது என அழைத்துச் சென்றுவிட்டார்கள். நிகழ்வின் போது யாராவது ஒருபெண் எழுந்து என்னிடம் இந்தக் கேள்வியை கேட்பாரா என்று எதிர்பார்க்கிறேன். இதுவரைக்கும் எவரும் கேட்கவில்லை. ஆண்களுக்குக்  கேட்கும் தைரியம் எப்படியோ வந்துவிடுகிறது. பெண்களுக்கு இன்னும் தயக்கம் தீரவில்லை.

சமீபத்தில் சென்னை, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரிக்கு அழைத்திருந்தனர். அது மகளிர் கல்லூரி.

—–   15-04-25

(தொடர்ச்சி நாளை)

000

 

Add your first comment to this post