மலையாளக் கவிஞர் சியாம் சுதாகர் அழைப்பின் பேரில் கொச்சியில் உள்ள தூய நெஞ்சக் கல்லூரி (Sacred Heart College) நிகழ்வில் கடந்த 03-10-24 வியாழன் அன்று பங்கேற்றேன். சென்னை, மாநிலக் கல்லூரியிலும் சென்னைப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையிலும் பயின்றவர் சியாம் சுதாகர். ஆர்.சிவகுமார், அழகரசன் ஆகிய பேராசிரியர்களோடு நல்ல நட்பு கொண்டவர். சென்னையில் பயின்றதால் நன்றாகத் தமிழ் பேசக் கூடியவர். திருச்சூரில் உள்ள ‘புனித வளனார் கல்லூரி’யில் (Saint Thomos College) ஆங்கிலப் பேராசிரியராகத் தற்போது பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
‘சியாம் சுதாகர் கவிதைகள்’ தொகுப்பு யூமா.வாசுகி மொழிபெயர்ப்பில் 2008ஆம் ஆண்டு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடாக வந்துள்ளது. அதற்கு முன்னுரை எழுதியவர் சுகுமாரன். ‘நிகழ்காலத்தின் இயல்பையும் மனப்பாங்கையும் துல்லியமாகப் பேசுபவை’ என இவர் கவிதைகளைச் சுகுமாரன் சுட்டுகிறார். முன்னுரையில் மேற்கோள் காட்டும் ஒருகவிதை:
பரிசு
முன்பு உபயோகத்திலிருந்த
ஒரு பழைய பாத்திரத்தை
முலாம் பூசி
பட்டில் பொதிந்து
மஞ்சள் நூலால் கட்டி
நான்
மற்றொருவனுக்குப் பரிசளித்தேன்
அந்தக் கதையறியாமல்
இன்றும்
அவன் அதில்தான்
சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான்.
மலையாளத்தில் இரண்டு தொகுப்புகள் வெளியாகியுள்ளன. மூன்றாம் தொகுப்பு தயாராகிக் கொண்டிருக்கிறது. மிகவும் குறைவாக எழுதும் கவிஞர். யூமா.வாசுகி மொழிபெயர்த்த தொகுப்பில் பல நல்ல கவிதைகள் உள்ளன. விதவிதமான காட்சிகள் கவிதைகளாக விரிகின்றன.
நேற்று
பேருந்தில்ருந்து இறங்கியபோது
மின்கம்பத்தின் கீழேயிருக்கிறான்
ஒரு செருப்புத் தைப்பவன்
– என்று ஒரு கவிதை தொடங்குகிறது. நேற்றைய காட்சி அது. இன்று? அதன் தொடர்ச்சியில் கவிதைக்குள் இன்னொரு காட்சி வருகிறது.
இன்று காலையில்
அந்தச் செருப்புத் தைப்பவனை
தைக்க முயற்சிக்கின்ற
எறும்புகளைப் பார்த்துத்தான்
நான் பேருந்தில் ஏறினேன்
என்று அக்காட்சி விரிகிறது. அதன்பின் பேருந்துக்குள் ஒருசிறுகாட்சியைக் காட்டி,
செருப்புகள் குளம்படிக்கின்றன
அவற்றிலிருந்து பால் கசிகிறது
ஒருபோதும் காணச் சாத்தியமற்றவர்களை
நான் தேடவும் செய்கிறேன்.
எனக் கவிதை முடிகிறது. சாதாரணமாகத் தொடங்கும் காட்சி ஒன்றிலிருந்து விரிந்து இறுதியில் வேறொரு தளத்தில் சென்று நிற்கிறது. அத்தளத்தை உணர்ந்துகொள்வதற்கும் அதைப் பிடித்துக்கொண்டு பயணம் செய்வதற்கும் பொறுமையும் நிதானமும் தேவை. பெரும்பாலும் இதுதான் இவர் கவிதைகளின் பொதுத்தன்மையாக இருக்கிறது. சிறுதொகுப்பு எனினும் கவனத்தோடு வாசிக்கக் கோரும் கவிதைகளைக் கொண்டிருக்கிறது.
000
திருச்சூரில் நடைபெறவிருந்த ‘இளைஞர் இலக்கிய விழா’ ஒன்றுக்காகத்தான் சியாம் முதலில் என்னை அழைத்தார். அவ்விழா தள்ளிப் போயிற்று. எனினும் என்னை விடவில்லை. திருச்சூரிலும் கொச்சியிலும் இருகல்லூரிகளில் நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய முயன்றார். ஒருநாள்தான் நான் இருக்க முடியும் என்பதால் கொச்சி நிகழ்வு மட்டும் முடிவானது. கொச்சி, தூய நெஞ்சக் கல்லூரிக்கு இது எண்பதாம் ஆண்டு. அதையொட்டி ‘எழுத்தாளரைச் சந்திப்போம்’ என்னும் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடாயிற்று. அக்கல்லூரியின் முதல்வர் பிஜு முதலில் திருச்சூர் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியவர். ஆகவே இருவரும் நல்ல நண்பர்கள்.
கொச்சி ரயில் நிலையத்திற்கு இருவருமே வந்து வரவேற்று அழைத்துச் சென்றனர். கல்லூரி விருந்தினர் இல்லம் அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு ஒன்றாக இருந்தது. கல்லூரியைச் சுற்றிப் பார்க்கலாம் என்று முதல்வர் அழைத்தார். தயாராகிச் சென்றேன். கழிமுகக் கரையில் கல்லூரி. பாலம் போடும் முன் படகில்தான் ஆசிரியர்களும் மாணவர்களும் கல்லூரிக்கு வருவார்களாம். காலை நேரத்தில் கல்லூரி சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. விளையாட்டுத் திடலில் மாணவர் கூட்டம். பெரிய உடற்பயிற்சிக் கூடத்திலும் மாணவர்கள். மக்கள் நடைப்பயிற்சி செய்ய அமைக்கப்பட்டிருந்த தடத்திலும் பலர் நடந்து கொண்டிருந்தனர். அவர்கள் உடற்பயிற்சி செய்ய வழியோரத்தில் பலவிதமான கருவிகள் இருந்தன. அழகும் பயன்பாடும் ஒருசேர அமைந்த கல்லூரி. கொச்சிக்குப் பலமுறை சென்றிருக்கிறேன். இந்த ஆண்டிலேயே இது மூன்றாவது பயணம். பல இடங்களையும் சுற்றிப் பார்த்திருக்கிறேன். இந்த முறை இந்தக் கல்லூரியோடு சரி. கல்லூரியே பார்ப்பதற்கான நல்ல இடமாகத்தான் தோன்றியது.
கல்லூரியில் இருக்கும் மலையாளம், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட மொழித்துறைகள் அனைத்தும் இணைந்த ‘மொழிப்புலத் துறைகள்’ நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். ‘எழுத்தாளர் சந்திப்பு’ நிகழ்வை மூன்று பிரிவாக அமைத்திருந்தனர். முதல் நிகழ்வில் ஒருமணி நேரம் என் உரை. வரவேற்புரை, தலைமையுரை, விருந்தினருக்குச் சிறப்புச் செய்தல் எல்லாம் இருந்தன. எல்லாம் வெகுசுருக்கம். என் நேரத்தை எனக்கு முழுமையாக வழங்கினர். மொழிபெயர்ப்பு சார்ந்து தலைப்பு இருக்கலாம் என்று சொன்னதால் ‘மலையாள மொழிபெயர்ப்பு: எனது அனுபவங்கள்’ என்று சொன்னேன்.
இப்படி ஒரு தலைப்பில் பேசும் அளவுக்கு மலையாள மொழிபெயர்ப்புகள் இருக்கிறதா, ஆங்கிலத்தையும் இணைத்துக் கொள்ளலாமா என்று சியாம் கேட்டார். மலையாளத்தில் பதினைந்துக்கும் மேற்பட்ட நூல்கள் வெளியாகியிருக்கின்றன, அதுவே போதும் என்று சொன்னேன். ஆங்கிலத்தில் The Malayalam Perumalmurugan: Exegesis and Experiences என்று தலைப்பு கொடுத்திருந்தனர். இந்த உரைக்காக மலையாளத்தில் மொழிபெயர்ப்பான என் நூல்களைத் தேடி எடுத்தேன். இருபத்திரண்டு நூல்கள் என் கைக்குக் கிட்டின. இன்னும் இரண்டு மூன்று இருக்கும். ஆக, ஏறத்தாழ இருபத்தைந்து நூல்கள் என்று வைத்துக் கொள்ளலாம். அவை சார்ந்து நூலாசிரியராக என் அனுபவங்களில் சிலவற்றைப் பகிர்ந்து கொண்டேன்.
இந்த உரைக்குத் தயாரித்த குறிப்புகளைக் கட்டுரையாக எழுதவும் எண்ணமிருக்கிறது. அக்கல்லூரி இந்தித் துறைப் பேராசிரியர் மினிப்ரியா எனது நான்கு நூல்களைத் தமிழில் இருந்து மலையாளத்திற்குப் பெயர்த்திருக்கிறார். பல மொழிகள் தெரிந்தவர். தமிழில் நன்றாகப் பேசவும் செய்வார். நிகழ்வுக்கு அவரால் வர இயலவில்லை என்பது எனக்கு வருத்தம்தான்.
10.30க்குத் தொடங்கிய நிகழ்வு முடிய 12.30 ஆகிவிட்டது. அடுத்த நிகழ்வு 1.30 மணிக்கு என்றார்கள். அக்கல்லூரியின் மலையாளத் துறைத் தலைவர் பிஜூவும் வேறு சிலரும் நாடகத்தில் ஆர்வம் கொண்டவர்கள். அவர்கள் ஏற்பாட்டில் மாதொருபாகன் நாவலை முக்கால் மணி நேர நாடகமாக ஆக்கியிருந்தனர். ‘நாவலை அப்படியே நாடகம் ஆக்கவில்லை. இதை ஒரு சுதந்திரமான நாடகம் என்று எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று சொன்னார்கள். நான்கைந்து நாட்களில் உருவாக்கியுள்ளனர்.
மொழித்துறை மாணவர்கள் மிகச் சிறப்பாக நடித்தனர். காளி, பொன்னா, முத்து ஆகிய பாத்திரங்களே முதன்மை. அவற்றை ஏற்ற மாணவர்கள் நடிப்பு நிறைவாக இருந்தது. நாடகம் பழங்குடிப் பெண்ணைப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கும் காட்சியில் தொடங்கியது. கல்லூரியில் ஒருநாடகம் இப்படிப்பட்ட காட்சியில் தொடங்குவது அபூர்வம். அதே போலக் காளி பொன்னாவின் காதல் நெருக்கத்தையும் நாடகத்தின் மைய இழையாக்கியிருந்தனர். நவீன நாடகத்திற்குரிய கூறுகளை எல்லாம் எளிமையாகப் பயன்படுத்தியிருந்தனர். பெருநிறைவு.
அது முடிந்ததும் சில மணித் துளிகளில் கலந்துரையாடல் நிகழ்வு தொடங்கியது. அதை ஒருங்கிணைத்தவர்கள் இரண்டு ஆசிரியர்கள். இருவரும் என் படைப்புகளை நன்றாக வாசித்திருந்தனர். வினாக்களைத் தயார் செய்து வந்திருந்தனர். அவர்கள் இருவரும் தமிழிலும் மலையாளத்திலும் மாறிமாறிக் கேள்விகள் கேட்டனர். கால் மணி நேரத்திற்குப் பிறகு ஒலிவாங்கி மாணவர்களிடம் சென்றது. என் எழுத்துக்களை மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் வாசித்திருந்த மாணவர்கள் கேள்விகளை எழுப்பினர். எல்லாமே பொருட்படுத்தத்தக்கவை.
ஆசிரியர் கேட்ட இறுதிக் கேள்வி இது: ‘நீங்கள் கல்லூரியில் ஆசிரியராகவும் முதல்வராகவும் பணியாற்றினீர்கள். எங்கள் மாணவர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன?’
என்ன பதில் சொல்லியிருப்பேன் என்று நினைக்கிறீர்கள்?
பொதுவாக மாணவர்களுக்கு அறிவுரை பிடிக்காது. வலிந்து சொன்னாலும் கேட்கும் மனநிலை இருக்காது. அதுவல்லாமல் அவர்களுக்கு அறிவுரை தேவையும் இல்லை. ஆசிரியர்களுக்குத் தான் அறிவுரை சொல்ல வேண்டும். மாணவர்களை எப்படி நடத்த வேண்டும், மாணவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், வகுப்பறையை வடிவமைத்துக் கொள்ள வேண்டிய விதம், துறை சார்ந்த அறிவைப் பெற்றிருத்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆசிரியர்களுக்குத்தான் அறிவுரை தேவை. மாணவர்களுக்கு வேண்டுமானால் ஆலோசனை சொல்லலாம்; தேவையான போது வழிகாட்டல் தரலாம். மாணவர்களுக்கு என் ஆலோசனை என்றால் ‘இந்த வயது வாசிப்பதற்கேற்ற வயது. பாடம் தவிர்த்து நிறைய வாசியுங்கள். உங்கள் துறையிலும் சமூகத்திலும் சிறந்து விளங்குவீர்கள்’ என்பதுதான்.
இப்படித்தான் சொன்னேன். மாணவர்கள் ஆரவாரத்தோடு ரசித்தார்கள். ஆசிரியர்களுக்குக் கொஞ்சம் சங்கடம். அப்படித்தான் இருக்கும் என்று அறிவேன். நிகழ்ச்சி முடிந்ததும் ‘இந்தக் கல்லூரியில் மாணவர்களிடம் ஆசிரியர்கள் இயல்பாகவே பழகுவார்கள்’ என்று ஒருவர் சொன்னார். ‘மகிழ்ச்சி’ என்றேன்.
நூல்களில் கையொப்பம், புகைப்படங்கள் என்று நிறைவாக முடிந்தது. காலை நிகழ்வை இருநூறு பேர் அமரும் அரங்கில் வைத்திருந்தனர். பதிவு செய்துகொண்ட மாணவர்கள் இருநூற்றைம்பது பேர் வந்திருந்தனர். எங்கும் போல இங்கும் மொழி இலக்கியப் பாடங்களில் பெண்களே அதிகம். ஐந்நூறு பேர் அமரும் பெரிய அரங்கில் நாடகம் நடத்தினர். அரங்கு நிறைந்திருந்தது. கலந்துரையாடல் நிகழ்வில் நூறு பேர். பெரிய அரங்கின் மேடையைத் தவிர்த்துவிட்டு மாணவருக்கு நெருக்கமாக இருக்கும் வகையில் கீழே ஏற்பாடு செய்திருந்தனர்.
அந்த நாள் முழுவதும் என்னுடையதாக இருந்தது.
—– 20-10-24
Add your first comment to this post