நோவெடுத்த ஒற்றைத் தலை
மனித இயல்பில் பல்வகைக் குணங்கள் நிறைந்திருக்கின்றன. அவற்றை நல்லவை, கெட்டவை என வகை பிரித்தது மனித நாகரிக வளர்ச்சி. அதுமுதல் கெட்டவற்றை அழித்து நல்லவற்றை நிலைநிறுத்தும் பாடுதான் பெரிதாக இருக்கிறது. எல்லாவிதத் தத்துவங்களும் ஆன்மிக அலசல்களும் புறத்திலும் அகத்திலும் இந்தப் போராட்டத்தையே முன்னெடுக்கின்றன. இது என்றைக்கும் முடிவு பெறப் போவதில்லை. ஒருவேளை ஊழி முடிவில் எல்லாம் முடியலாம்.
மனிதப் பண்புகளில் முக்கியமானது ‘அகந்தை.’ நான், அகங்காரம், தலைக்கனம் என்றெல்லாம் பல சொற்களால் குறிக்கப்படும் இந்தப் பண்பைத் தீயதாகவே காண்கிறோம். அகந்தையை அழித்துவிட்டால் ஈடேற்றம் சித்திக்கும். முதலில் அகந்தையைக் கண்டுகொள்வதே பெரும்பாடு. பின்னர் அதை இல்லாமல் ஆக்குவது அத்தனை எளிதல்ல. வானர சேனை போலப் பெருகிப் பெருகி வந்துகொண்டே இருக்கும் இயல்புடையது அகந்தை. கவிதைகளும் இதைப் பற்றிப் பலபடப் பேசியிருக்கின்றன. கவிஞன் என்னும் பிம்பமே பெரிய அகந்தையைத் தரக்கூடியது. அதிலிருந்து மீளக் கவிதை வழியாகக் கவிஞன் முயன்று கொண்டேயிருக்கிறான். எல்லாவித மேன்மைகளையும் சித்திக்கச் செய்வது கவிதை என்றால் அதன்முன் இந்த அகந்தையின் நிலைதான் என்ன? ஆயுதங்களை இழந்து தலைகுனிந்து நிற்கும் அகந்தையைக் கண்டு ‘இன்று போய் நாளை வா’ என்கிறது இன்னொரு அகந்தை. திரும்பிச் சென்ற அகந்தை அப்படியே போய்விடுவதில்லை. அது மேலும் ஆயுதங்களைத் திரட்டிக்கொண்டு ஆவேசத்தோடு திரும்பிக் களத்திற்கு வருகிறது. ஏதோ ஒருபக்கம் மறுபடியும் ‘இன்று போய் நாளை வா.’
அகந்தையைத் தலையாக உருவகிக்கும் சொல்தான் ‘தலைக்கனம்.’ இராவணனின் பத்துத் தலைகளுக்குக் காரணங்களும் அர்த்தங்களும் பலவகையாகச் சொல்லப்படுகின்றன. அவற்றுள் ஒன்று தலை பண்பின் உருவகம் என்பது. அப்பண்பு அகந்தையாக இருக்கலாம்; இன்னும் வெவ்வேறாகவும் இருக்கலாம். முருகனுக்கு ஆறு தலைகள். பிரம்மனுக்கு நான்கு தலைகள். அவை மேன்மைப் பண்புகளின் உருவகமாக இருக்கலாம். இராவணத் தலைக்கும் மேன்மைகளும் கற்பிக்கப்படுகின்றன; இழிவுகளும் கற்பிக்கப்படுகின்றன. ஏனென்றால் இராவணன் அசுரன். முக்கியமாக இராவணன் தலைகள் அகந்தையின் உருவகம். இத்தகைய மரபில் அகந்தையைத் தலையாக உருவகித்துத் ‘தலையாலங்கானம்’ என்னும் கவிதையை எழுதியுள்ளார் கவிஞர் குவளைக்கண்ணன்.
ரவிக்குமார் என்னும் இயற்பெயர் கொண்டவர் குவளைக்கண்ணன் (1964 – 20-05-2015). சேலத்தைச் சேர்ந்தவர். மூன்று கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன. அவை: மாயாபஜார் (1993), பிள்ளை விளையாட்டு (2005), கண்ணுக்குத் தெரியாததன் காதலன் (2011). ஆப்பிரிக்கப் பெண் கவிதைகளின் மொழிபெயர்ப்பாக ‘எங்கே அந்தப் பாடல்கள்?’ என்னும் நூலும் வெளிவந்துள்ளது. வேறு சில மொழிபெயர்ப்பு நூல்களும் வந்துள்ளன. தம் ஐம்பதாண்டு ஆயுளில் நூற்றுக்கும் குறைவான கவிதைகளையே எழுதியுள்ளார். நீண்ட இடைவெளிகளில் வெளியான அவர் கவிதைத் தொகுப்பு ஒவ்வொன்றும் ஒவ்வொரு தன்மையிலானவை. கவிதை குறித்த தொடர்தேடலின் விளைவாக ஒவ்வொரு விதமாக எழுதி எழுதிப் பார்த்திருக்கிறார்.
‘நகரம்’ பற்றி அவர் எழுதியுள்ள பதின்மூன்று கவிதைகள் ஒத்த பொருட்தன்மை கொண்டவை எனினும் சொல்முறையில் வெவ்வேறானவை. இவ்விதம் வரையறைக்குள் அடக்க இயலாமல் தாவித் திரியும் பொருட்சிறப்பும் சொல்முறைகளுமாகத் தம் கவிதைகளை உருவாக்கியுள்ளார். கவிதை பற்றி அவர் தெளிவு இது: ‘கவிதை என்னிடமிருந்து வரவில்லை, என் வழியாக வெளிப்படுகிறது. என் வழியாக எது வெளிப்பட வேண்டுமோ அது வெளிப்படுவதற்குத் தோதாக என் மனத்தையும் என் மொழியையும் பராமரித்து வைத்துக்கொள்வது என் கடமை.’
அவரது கவிதை:
தலையாலங்கானம்
எனக்குப் பதினோரு தலைகளிருந்தன
ஒரு தலை புன்னகைக்கும்போது
ஒரு தலை உங்களைப் பழித்துக் காட்டும்
ஒன்று இன்சொல் உதிர்க்கும்போதே
வேறொன்று வசவைப் பொழியும்
ஒன்று முழுக்குருடு
மற்றொன்று செவிடு
ஒருமுறை
ஒரு தலையில் நோவெடுத்தது
பார்க்காத வைத்தியமில்லை
மருந்துகளால் பலனில்லை
ரணசிகிச்சை வல்லுனரொருவர்
அகற்றினார் அந்தத் தலையை
தொல்லையின்றிக் கழிந்தது சில காலம்
நண்பரொருத்தர்
இராக்கதர் கோனெனச்
செல்லப் பெயரிட்டழைத்தார் அப்போது
தொடர்ந்த கோடையில்
மற்றவொரு தலையில் வலியெடுக்க
மீண்டும் வல்லுனர்
மீண்டும் ரணசிகிச்சை
இப்படியாக ஒவ்வொன்றாகக் குறைந்து
மிஞ்சியது மூன்று
மூன்று காலத்துக்கு மூன்று தலைகளென்றிருந்தேன்
ஆனால்
சென்ற காலத்தில் சீழெடுத்து
வருங்காலத்துக்கும் பரவியது
அவற்றையும் அகற்றிவிட்டு
எண்ணிறந்த தலையுடைய எண்ணற்றவர்களூடே
ஒற்றைத் தலையோடு உலாவுகிறேன்
இத் தலையிலும் நோவெடுத்தால்
நானே பிய்த்தெறிவேன்.
எனக்குப் பதினோரு தலைகள்
‘தலையாலங்கானம்’ என்னும் தலைப்பு பலவித எண்ணங்களைக் கிளர்த்துவதாக இருக்கிறது. தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரே ஒரு பாடல் பாடிப் புலவர் வரிசையில் இடம்பெற்றதோடு பல புலவர்களால் பாடப்பெற்ற சிறப்பும் கொண்டவன் ‘தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன்’ என்னும் பாண்டிய மன்னன். ‘நகுதக் கனரே நாடுமீக் கூறுநர்’ எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாடல் (72) வஞ்சினம் கூறும் தன்மையிலானது. அவன் பெயருக்கு அடைமொழியாக அமையும் ‘தலையாலங்கானம்’ ஓர் ஊர்ப்பெயர். தலையாலங்கானம் என்னும் ஊரில் நடைபெற்ற போரில் ஏழு மன்னர்களை ஒருசேர எதிர்த்துப் போர் புரிந்து வென்றவன் இம்மன்னன். குவளைக்கண்ணனின் ‘தலையாலங்கானம்’ என்னும் கவிதைத் தலைப்பு முதலில் நினைவுக்குக் கொண்டு வருவது இந்த வரலாற்றுச் செய்தியைத்தான். பிரபலமான தொடர் தரும் நினைவுச் சித்திரம் இது.
ஆலங்கானம் என்றால் ஆலமரம் நிறைந்த காடு எனப் பொருள். ஆலங்காடுகளில் முதன்மையானது இவ்வூர். கவிதைத் தலைப்பு ஆலமரத்தையோ காட்டையோ முதன்மையையோ குறிக்கவில்லை. தலை என்பது மனிதத் தலையாகிய உறுப்பையே குறிக்கிறது. ஆலம் என்னும் சொல்லுக்குப் பல பொருள் உண்டு. இங்கு ‘உலகம்’ என்னும் பொருள் பொருந்தும். கானம் – பாடல் ஆகும். தலையாகிய உலகத்தைப் பற்றிய பாடல் என இக்கவிதைத் தலைப்பு பொருள் படுகிறது.
‘எனக்குப் பதினோரு தலைகளிருந்தன’ எனக் கவிதை தொடங்குகிறது. பத்துத் தலை கொண்ட இராவண பிம்பம் நம் மனதிலிருக்கிறது. தான் அதற்கு மேல் என்பதை இந்தப் ‘பதினோரு’ உணர்த்துகிறது. கவிதையின் இத்தொடக்கமே தான் மேல் என்னும் அகந்தையோடுதான் அமைகிறது. அகந்தையின் அளவு கூடக்கூடத் தலைகளின் எண்ணிக்கை கூடுகிறது போலும். ஒவ்வொரு தலையும் ஒவ்வொரு தன்மை கொண்டவை. பெரும்பாலும் ஒன்றுக்கொன்று முரண்பவை. முரணால்தான் அவை வெவ்வேறாக இருக்கின்றன. ஒன்று புன்னகைத்தால் இன்னொன்று பழிக்கும். ஒன்று இன்சொல் உதிர்த்தால் இன்னொன்று வசவைப் பொழியும். ஒரு தலை முழுக்குருடு. அது எதையுமே பார்க்காது. மற்றொன்று செவிடு. அது எதையுமே கேட்காது. அகந்தை பெருத்த தலைகளுக்குப் பார்வையும் இல்லை; செவியும் இல்லை.
தனக்கு எத்தனை வகைத் தலைகள் இருக்கின்றன என்பதை அறியாத வரைக்கும் பிரச்சினை இல்லை. சுமந்துகொண்டே அலையலாம். தனக்கு இத்தனை தலைகள் என்னும் அறிதல் உண்டான பிறகு அவை சுமை. அவற்றைச் சுமப்பது பெருவலி. பதினோரு தலைகளில் ஒன்று நோவெடுத்துத் தொந்தரவு தருகிறது. நோவுக்கு என்ன வைத்தியம் பார்ப்பது? நோவா பிரச்சினை? தலைதானே பிரச்சினை. ரண சிகிச்சை மூலம் அத்தலையை அகற்றிய பிறகே தொல்லை ஒழிந்தது. அத்தலை போன பிறகு ஏற்கனவே கண்டறியப்பட்ட பத்துத் தலைகளோடு சமம் என்னும் நிலை. இது கொஞ்சம் நிம்மதி தருவது. ஏற்கனவே அறியப்பட்ட வடிவில் இருந்தால் அங்கீகாரம் கிடைத்துவிடும். ‘இராக்கதர் கோன்’ என இந்தச் சமநிலை ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
அடுத்து இன்னொரு தலையில் நோவு. அதையும் ரண சிகிச்சை கொண்டு அகற்றம். இப்படியாக ஒவ்வொன்றாக அகன்று கடைசியில் மூன்றில் வந்து நிற்கிறது. மூன்று காலத்திற்கும் மூன்று எனச் சமாதானம் கொண்டு அவற்றோடு வாழலாம் என்றால் சென்ற காலத்திற்கான தலையில் சீழ் பிடித்து அது வருங்காலத்திற்கும் பரவுகிறது. இறந்த காலம் எப்போதும் வருங்காலத்தைப் பாதிப்பது இயல்புதான். நாம் ஒருவரை எடை போடுவது அவரது நிகழ்காலத்தை வைத்தல்ல. இறந்த காலத்தை வைத்துத்தான். அதைக் கொண்டே அவரது எதிர்காலத்தையும் தீர்மானிக்கிறோம். இப்போது இறப்பு, எதிர்வு ஆகிய இரண்டுக்குமான தலைகளும் அகற்றப்படுகின்றன. மிஞ்சுவது ஒற்றைத் தலைதான்.
இந்த ஒற்றைத் தலையும் பிரச்சினைதான். சக மனிதர்கள் பத்தல்ல, பதினொன்று அல்ல. எத்தனை என எண்ண முடியாத தலைகளோடு உலவுகிறார்கள். அவர்களுக்குத் தம் தலைகள் பற்றிய உணர்வும் கிடையாது. அவ்வாறு எண்ணிறந்த தலைகளோடு உலவும் ஏராளமான மனிதர்களுடன் ஒற்றைத் தலையுடன் வாழ்வது கடினமே. ஆனாலும் தம் தலை பற்றிய உணர்வு ஏற்பட்டுவிட்டால் அதை அழிக்கும் செயலை மேற்கொள்வதுதான் இயல்பு. விழிப்புணர்வு பெற்ற மனம் அவ்வழியிலேயே செல்லும். அதனால்தான் இக்கவிதை இப்படி முடிகிறது: ‘இத்தலையிலும் நோவெடுத்தால் நானே பிய்த்தெறிவேன்.’ இருக்கும் ஒற்றைத் தலையும் பிரச்சினை என்றால் அப்போது ரண சிகிச்சை வைத்தியரெல்லாம் தேவையில்லை. நானே பிய்த்தெறிவேன் என இந்த அகந்தையின் மீதான பெரும்வன்மத்துடன் கவிதை பேசுகிறது.
நம் அகந்தையைப் பற்றிய உணர்வைக் கிளர்த்தும் இந்தச் சிறந்த கவிதையை எழுதிய குவளைக்கண்ணன் நான்காண்டுகளுக்கு முன் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். நோவெடுத்த ஒற்றைத் தலையைத் தானே பிய்த்தெறிந்தாரோ குவளைக்கண்ணன்?
(கவிஞர் குவளைக்கண்ணனின் நினைவு நாள் : 20-05-19)
—–
நன்றி: மின்னம்பலம், 2019/05/20