பொதுவெளி தரும் அச்சம்

You are currently viewing பொதுவெளி தரும் அச்சம்

 

(அரசு கல்லூரியில் பணியாற்றிய அனுபவங்களை மையமாகக் கொண்டு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘காதல் சரி என்றால் சாதி தப்பு.’ காலச்சுவடு வெளியீடு. சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும். அதற்கு நான் எழுதிய முன்னுரை இது.)

ஆத்தூர், அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் ஓராண்டு முதல்வர் பொறுப்பு வகித்தேன். நாமக்கல், அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் முதல்வராகப் பணியாற்றினேன். கல்வியாண்டுக் கணக்கில் பார்த்தால் நிறையும் குறையுமாக ஐந்து கல்வியாண்டுகள். கல்லூரி முதல்வர் பதவி என்பது வெறுமனே கோப்புகளில் கையொப்பமிட்டுக் கொண்டிருக்கும் அலுவலகம் சார்ந்த நிர்வாக வேலை மட்டுல்ல. இரண்டாயிரம் மூவாயிரம் மாணவர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆகியோரின் அன்றாடத்தைக் கண்காணிக்க வேண்டும். அவர்களுக்குள் நேரும் சண்டை சச்சரவுகளை விசாரித்துச் சமாதானப்படுத்த வேண்டும்; நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எளிய மொழியில் சொன்னால் ‘கட்டப் பஞ்சாயத்து’ வேலைதான் அதிகமாக இருக்கும்.

இதில் மாணவர்களைச் சமாளிப்பது எளிது. ஆனால் மாணவர் பிரச்சினை காளான் போல அங்கங்கே முளைத்துக் கொண்டேயிருக்கும். ‘வெட்ட வெட்டத் தழையும்’ என்பார்களே, அதுமாதிரி. ஓடும் வாய்க்காலில் ஒரு உடைப்பை அடைத்தால் பத்து உடைப்புகள் ஏற்படும். ஒவ்வொருவரின் பின்னும் சாதி அடையாளம் தெளிவாக இருக்கும். சாதி கடந்த நட்பைச் சாத்தியப்படுத்த இயலாத காலம் இது. ஒருகுழுவாக மாணவர் சேர்ந்திருந்தால் எல்லோரும் ஒரேசாதி என்று அனுமானிப்பது பெரும்பாலும் தவறாகாது. இன்னொரு குழு வேறுசாதி என்பதாலேயே இருகுழுக்களுக்கும் பகை மூண்டுவிடும். அவ்வயதில் வடிகால் கிடைக்காத பாலியல் தூண்டல்களால் உருவாகும் பிரச்சினைகளும் வரும்.

ஒழுக்கத்தைப் பற்றிப் பேச வேண்டாம். நிறுவன ஒழுங்கு என்று ஒன்றிருக்கிறதல்லவா? அதை வலியுறுத்தினாலே பிரச்சினைதான். பின்னாலிருந்து தூண்டி விடுவதற்கென்று சில ஆசிரியர்களும் இருப்பார்கள். தன்னகங்காரத்தைக் கிளப்பிப் பிரச்சினையைப் பெரிதாக்கும் நண்பர்களும் இருப்பார்கள்.  எனினும் மாணவர்களைச் சமாளிப்பது எளிதுதான்.   இளமை முறுக்கில் துள்ளும் மாணவர்களிடம் குரல் உயர்த்தி அகந்தையைச் சீண்டாமல் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நிதானமாகப் பேசினாலே வழிக்கு வந்துவிடுவார்கள்.

முனைவர் பட்டமெல்லாம் வாங்கிய மெத்தப் படித்த ஆசிரியர்களைச் சமாளிப்பதே கடினம். ஆசிரியர்களிடம் குரலை உயர்த்தினாலும் முடியாது; நிதானமாகப் பேசினாலும் நடக்காது. ஒவ்வொருவரின் முதுகுக்குப் பின்னும் சாதி ஒளிந்திருக்கும்; ஊர் எட்டிப் பார்க்கும்; அதிகாரமும் அரசியலும் கமுக்கமாக நின்றிருக்கும். நீ என்ன வேண்டுமானாலும் செய், நாங்கள் இருக்கிறோம் என்று அவையெல்லாம் சொறிந்து சீண்டிக் கொண்டேயிருக்கும். நேர ஒழுங்குக்கு உட்படாத ஆசிரியர்கள் கணிசமாக இருப்பார்கள். அவர்களை என்ன செய்தும் முறைப்படுத்தவே இயலாது. கொஞ்ச நாள் சொல்லிப் பார்ப்பார்கள், பிறகு தண்ணீர் தெளித்து விட்டுவிடுவார்கள் என்பது அவர்கள் நம்பிக்கை. வகுப்புக்கே போகாதவர்கள் கணிசம்; போனாலும் கற்பிக்காமல் ஏமாற்றுவது எப்படி என்னும் வித்தை கற்றிருப்பார்கள். சக ஆசிரியர்களோடு இணக்கம் என்பதே கிடையாது. எல்லா நேரமும் அகந்தை துருத்திக்கொண்டு நிற்கும். பண மோசடி, பாலியல் சீண்டல், சாதிப் பிரச்சினை எனச் சகலமும் ஆசிரியர்களிடம் இருக்கும். ஆசிரியர் பிரச்சினை பற்றிய கோப்புகள் பெருகிக் கொண்டேயிருக்கும். விசாரணைக் குழு, அறிக்கைகள், அறிக்கைகள்.

நம்முடையது சாதியச் சமூகம். அதன் முதன்மைக் கூறு சக மனிதர்களை அந்நியப்படுத்துவது தான். பொதுவெளிகள் அதிகரித்துவிட்ட காலம் இதுவென்றாலும் அவை இன்னும் நம் மனதிற்குப் பழக்கமாகவில்லை. பொதுவெளியில் பாதுகாப்பு பற்றிய அச்சம் மனதிற்குள் வலுவாக இருக்கிறது. அங்கே சுயசாதியைச் சேர்ந்த ஒருவரைக் கண்டுபிடித்துவிட்டால் மனம் சற்றே ஆசுவாசம் கொள்கிறது; நெருக்கம் கொள்ள முடிகிறது. வேறொரு சாதியைச் சேர்ந்தவர் என்றால் உடனடியாக விலக்கம் வந்துவிடுகிறது. இணையும் புள்ளி எதுவுமே இருப்பதில்லை.

புதிதாக ஒருவரைச் சந்திக்க நேர்ந்தால் நம்மையறியாமலே அவர் சாதியை மனம் ஆராய ஆரம்பிக்கிறது. ஏதாவது ஒருவகையில் சாதியை உறுதிப்படுத்தியதும் இணக்கமா விலக்கமா என்று உடனடியாக மனம் தீர்மானித்துவிடுகிறது. பெரும்பான்மையோர் சுயசாதியைச் சேர்ந்தவராக இருக்க வாய்ப்பில்லை. அப்போது பொதுவெளிக்குள்ளும் சிலரை மட்டும் கொண்ட தனிவெளியை உருவாக்கி நிம்மதி அடைகிறது. பொதுவெளியை வயிற்றுப்பாட்டுக்கு மட்டும் உரியதாகக் காண்கிறோம். வேறு வழியில்லாமல் பொதுவெளிக்குள் உலவ வேண்டியிருக்கிறது. சக மனிதர்களை விலக்கிய மனநிலையிலேயே நடமாட்டம் அமைகிறது. இதிலிருந்து விடுபட்டு விரைவில் தனிவெளிக்குள் போய் விழுவதற்கே பெரிதும் விரும்புகிறோம்.

கல்லூரி நேரம் காலை 10 மணி என்றால் பெரும்பாலான ஆசிரியர்கள் 9.55க்குத்தான் உள்ளே நுழைவார்கள். 10.15, 10.30 வரை வந்து கொண்டேயிருப்பார்கள். கால்மணி முதல் அரைமணி வரை அவர்களுக்கு அவகாசம் கொடுத்தாக வேண்டும். தூரத்தில் இருந்து வருகிறோம், போக்குவரத்து நெரிசல் என்றெல்லாம் எத்தனையோ காரணங்களைச் சொல்வார்கள்.  அதே போலக் கல்லூரி நேரம் முடிவதற்கு அரைமணி நேரம் இருக்கும்போதே கிளம்பத் தொடங்கிவிடுவார்கள். கல்லூரி நேரம் முடிய இருந்துதான் செல்ல வேண்டும் எனச் சொன்னாலும் சில ஆசிரியர்கள் பத்துநிமிடம் முன்னதாகப் பையை எடுத்துக்கொண்டு வருவார்கள்.

அப்படிக் கிளம்பிய ஆசிரியர் ஒருவரிடம் ‘இன்னும் பத்து நிமிடம் இருக்கிறதே’ என்றேன். ‘துறையிலிருந்து கிளம்பி வழியில் யாரிடமாவது ஓரிரு நிமிடம் பேசிவிட்டு வண்டி நிறுத்துமிடம் சென்று அதை எடுத்துக்கொண்டு நுழைவாயிலைக் கடப்பதற்குப் பத்து நிமிடம் ஆகிவிடும். கல்லூரி நேரம் முடியும்போதுதான் நுழைவாயிலைக் கடப்பேன். அதுவரை வளாகத்திற்குள் தானே இருக்கிறேன்’ என்று அவர் சொன்னார். அதைக் கேட்டு அதிர்ந்து போனேன். அடேங்கப்பா, என்ன ஒரு கணக்கீடு! ஏதேனும் காரணத்தால் ஒருமணி நேரம், இரண்டு மணி நேரம் கூடுதலாகக் கல்லூரியில் இருக்க வேண்டி வந்தால் கூரையைத் தகர்க்கும் அளவு ஆசிரியர்களின் முணுமுணுப்பு பெருகும்.

இதற்கிடையே ஒருமணி நேரம் பின்தங்கி வருவதற்கும் ஒருமணி நேரம் முன்னால் செல்வதற்கும் அனுமதி கேட்போர் அன்றாடம் இருபத்தைந்து விழுக்காடேனும் இருப்பார்கள். வேலை நேரத்தில்  ‘வங்கிக்குப் போக வேண்டும்’, ‘வீட்டில் ஒரு அவசர வேலை’ என்று சொல்லிவிட்டுச் செல்வார்கள். சொந்த வேலைகளை எல்லாம் கல்லூரி நேரத்திலேயே முடித்துக்கொள்வதில் குறியாக இருப்பார்கள். மொத்தமே கல்லூரி வேலைநேரம் ஒருநாளுக்கு ஐந்துமணி நேரம்தான். உலகம் தீர்மானித்திருப்பது போல எட்டுமணி நேரம் அல்ல; ஐந்தே ஐந்து மணி நேரம்தான். அதிலும் பருவத்திற்குத் தொண்ணூறு நாட்கள் மட்டுமே வேலைநாள். ஆண்டுக்கு 180 நாட்கள். அதிலும் தற்செயல் விடுப்பு, மாற்றுப்பணி உள்ளிட்டவை போக ஒருவர் சராசரியாக 150 நாட்கள்தான் கல்லூரிக்கு வர வேண்டியிருக்கும். இத்தனை சலுகைகள் இருக்கும் ஒரு பொதுவெளிக்குள் இருந்து நின்று தங்கி ஆர்வத்துடன் பணியாற்றும் மனநிலை ஏன் வரவில்லை? அரசு கல்லூரிகளை மாதிரி அலகாக எடுத்து ஆய்வு செய்தால் என்ன முடிவுக்கு வர வேண்டியிருக்கும்?

கல்லூரி ஒரு நிறுவனம். அதேசமயம் ஆயிரக்கணக்கானோர் உலவும் பொதுவெளி. எப்போதும் பெற்றோர்களோ முன்னாள் மாணவர்களோ சிறப்பு விருந்தினர்களோ வந்து செல்லும் பொதுவெளி. போக்குவரத்து, திரையரங்கம் உள்ளிட்ட பொதுவெளிகள் உருவானது போல கல்வி சார்ந்து பள்ளி, கல்லூரி ஆகியவை உருவாயின. இவை பொதுவெளியாக முழுமை பெறுவதற்குக் காலம் எடுத்துக்கொண்டது. அனைவருக்கும் கல்வி,  இடஒதுக்கீடு முதலிய சமூகநீதித் திட்டங்கள் நடைமுறைக்கு வர வேண்டியிருந்தன. ஆகவே படிப்படியாகத்தான் கல்வி நிறுவனங்கள் பொதுவெளியாக மாறின. இத்தனை காலம் ஆகியும் ஒருவரால்  மாணவர்களுடனும் சக ஆசிரியர்களுடனும் இயல்பாக அளவளாவி இந்தப் பொதுவெளி வழங்கும் சுதந்திரத்தை ஏன் அனுபவிக்க முடியவில்லை? வெந்நீரைக் காலில் கொட்டியது போலத் துள்ளிக்கொண்டு அப்படி வெளியே ஓடி என்னதான் செய்வார்கள்? ஆராய்ந்து பார்த்தால் உருப்படியாக ஒன்றுமே செய்ய மாட்டார்கள். இப்போதெல்லாம் கல்லூரி மதியத்தோடு முடிந்துவிடுகிறது. பிற்பகல் நேரத்தில் வீடு சென்று தூங்குவார்கள். சிலர் வேறேதாவது தொழில் செய்வார்கள். தங்கள் சாதி நண்பர்களுடன் குடிப்பதற்குச் செல்வார்கள். பல ஆசிரியர்களின் பொழுதுபோக்கு மாலை நேரக் குடிதான். குடும்ப வேலைகளில் ஈடுபடுவோரும் உள்ளனர்; எண்ணிக்கை குறைவு.

ஆசிரியர்களுக்கே இப்படி இருந்தால் அவர்களை முன்மாதிரியாகக் கொள்ளும் மாணவர் நிலை எப்படியிருக்கும்? கல்லூரிக்கு வருவதைத் தவிர்ப்பதற்கும் வந்தாலும் முடிந்தவரை வகுப்பறைக்குள் செல்லாமல் இருப்பதற்கும் விரைவில் வெளியே ஓடுவதற்குமே அவர்கள் மனநிலை உந்துகிறது.  ‘சாதி சார்ந்த மனநிலையை விட்டு வெளிவராத நமக்குப் பொதுவெளி தரும் அச்சமே இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம்’  என்பது  அனுபவ சாரத்தைக் கொண்டு நான் வந்து சேர்ந்திருக்கும் முடிவு; என் நிலைப்பாடு. இதை எல்லா நிலைப் பணிகளுக்கும் பொருத்த முடியுமா என்று நண்பர்கள் கேட்பதுண்டு. பொருத்த முடியும் என்றுதான் நினைக்கிறேன். நிர்ப்பந்தம் காரணமாகவே பொதுவெளியில் குறிப்பிட்ட நேரத்தைச் செலவிடுகின்றனர். ஈடுபாட்டால் பணியாற்றுவோர் வெகுகுறைவு. எல்லாவற்றையும் ‘சாதிப் பார்வையில் நீங்கள்தான் பார்க்கிறீர்கள்’ என்று குற்றம் சாட்டுவோர் உண்டு. இருக்கலாம். கவனமாக எல்லோரையும் உற்று நோக்கி என் அனுமானங்களைப் பகுத்துப் பார்த்துத்தான் இந்த முடிவுக்கு வருகிறேன். ஒருவேளை, என்னைச் சமாதானமாக்கிக் கொள்ளும் விடையை அதில்தான் கண்டடைய முடிகிறதோ  என்னவோ.

இவற்றை எல்லாம் கடந்து நிறுவன வளாகத்தைக் கல்வி சார்ந்ததாக மாற்றுவது எளிதல்ல. ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்ய பெருமுயற்சி வேண்டும். எத்தனையோ தடைகளைக் கடக்க வேண்டும். ஏழு கடல், ஏழு மலை கடந்து தேவ ரகசியம் பொதிந்த பூவொன்றைப் பறித்து வந்துவிடலாம். அரசு கல்லூரியில்  உருவாகும் தடைகளைக் கடந்து ஒரு நல்ல செயலைச் செய்து முடிப்பது கடினம். சில முயற்சிகளில் வெற்றி பெற்றேன். சிலவற்றில் முன்முயற்சி எடுத்துள்ளேன். சிலவற்றைத் தொடங்கவே முடியவில்லை. பல எண்ணங்கள் எனக்குள்ளேயே முடங்கிப் போயின. ஒரு கட்டத்தில் நம்முடைய ஆற்றலை எல்லாம் உறிஞ்சி எடுத்துவிடும் வேலை இது என்றுணர்ந்தேன். வெகுவிரைவில் முதுமை என்னை ஆட்கொண்டுவிடும் எனத் தோன்றியது. என் எஞ்சிய வாழ்நாளை விருப்பப்படி எழுதியும் வாசித்தும் குடும்பத்தோடு நேரம் செலவிட்டும் இன்பமாகக் கழிக்கலாம் என்று நினைத்தேன்.

கல்லூரி வேலையில் நிறைவில்லை. மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான பிரச்சினைகள்; வார்த்து வைத்த நபர்கள்; ஒரே நடைமுறைகள். எனக்குச் சலிப்பும் சோர்வும் வந்துவிட்டன. விருப்ப ஓய்வு பெறுவதற்கு ஐம்பது வயது நிறைந்திருக்க வேண்டும் அல்லது இருபது ஆண்டு பணிக்காலம் முடிந்திருக்க வேண்டும் என்பது விதி. ஆசிரியராக மட்டும் கற்பித்தல் பணியைச் செய்து கொண்டிருந்த போதே என்னைச் சோர்வு ஆட்கொண்டு விட்டது. பாடத்திட்டத்திலோ கற்பித்தலிலோ சவால் என்பதே இல்லை. செக்குமாட்டு வாழ்க்கை என்றாயிற்று. அந்த நுகத்தில் என் கழுத்தை இருத்திக்கொள்ள முடியவில்லை. ஐம்பது வயதானதும் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்தேன். ஆனால் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. குடும்பக் கடமைகளுக்காக இன்னும் சில ஆண்டுகள் பணியில் இருந்தாக வேண்டிய நிர்ப்பந்தம்.

முதல்வர் பணியில் நீண்ட நாள் நீடிக்க விரும்பவில்லை. இன்னும் நான்காண்டுகள் பணிக்காலம் இருந்தபோது குடும்பத்தார் சம்மதத்துடன் விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டேன். முதல்வர் பணி சார்ந்த என் அனுபவங்களைக் கட்டுரைகளாக எழுதினேன். கொஞ்சம்தான் எழுதியிருக்கிறேன். இன்னும் எழுத எவ்வளவோ இருக்கின்றன. குறைந்தபட்சம் இன்னும் ஒரு நூலாவது எழுதுவேன் என்று நினைக்கிறேன். முதல்வர் பணி அனுபவம் சார்ந்த கட்டுரைகளோடு கல்வி சார்ந்தும் மாணவர் சார்ந்தும் எழுதியவையும் இந்நூலில் உள்ளன. மொத்தத்தில் கல்வி சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பு இது. ஏற்கனவே ‘மயிர்தான் பிரச்சினையா?’, ‘மனதில் நிற்கும் மாணவர்கள்’ ஆகியவை வெளிவந்துள்ளன. அவ்வரிசையில் இந்நூலும் சேர்கிறது.

இந்நூலில் உள்ள கட்டுரைகளில் பெரும்பான்மையானவை அருஞ்சொல், உயிர்மை ஆகியவற்றில் வெளிவந்தன. நண்பர்கள் சமஸ், மனுஷ்யபுத்திரன் ஆகியோருக்கு நன்றி. வெளியான போது பல கட்டுரைகள் பெருங்கவனம் பெற்றன. ஆதரவாகவும் எதிராகவும் ஆவேசமாக விவாதித்தோர் பலர். எல்லோருக்கும் நன்றி.  இந்நூலை வெளியிடும் காலச்சுவடு கண்ணன், நண்பர் அரவிந்தன், காலச்சுவடு ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி.

15-10-24

நாமக்கல்                                                                                             பெருமாள்முருகன்.

நூல் விவரம்: காதல் சரி என்றால் சாதி தப்பு (கல்விசார் கட்டுரைகள்), 2024, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், விலை ரூ.250/-

—–

Latest comments (5)

குணசேகரன் பெ

பலருக்கும் சவாலாக இருப்பது இன்றைய பொதுவெளி. சமூக அனுமானங்களைக் கடந்து , உடன் பணியாற்றுவோரின் விமர்சனங்களைக் கடந்து சுயமாக இயங்க முடியும் என்றால் அது மிகப் பெரும் வெற்றி. ஆனால் பிறரின் ஒத்துழைப்பை எதிர்பார்க்க முடியாது. சிலவற்றில் சார்ந்தும் சிலவற்றில் விலகியும் பயணிக்க வேண்டிய பொதுவெளி நம்முடையது.

Prof D. Parthiban

“நம்முடையது சாதியச் சமூகம். அதன் முதன்மைக் கூறு சக மனிதர்களை அந்நியப்படுத்துவது தான். பொதுவெளிகள் அதிகரித்துவிட்ட காலம் இதுவென்றாலும் அவை இன்னும் நம் மனதிற்குப் பழக்கமாகவில்லை” 100 percentage true Sir

க. காசிமாரியப்பன்

கட்டுரை நல்ல கண்டுபிடிப்பு. பொது வெளியின் தோற்றம் வளர்ச்சி , பொது வெளியை எதிர் கொள்ளும் ஆசிரியர்கள் குறித்து நன்றாகக் கூறுகிறது. திராவிட இயக்கக் கூர்மை கொண்ட காலத்தில் இவ்வளவு நெருக்கடி இருந்ததாகத் தெரியவில்லை. நான் படிக்கும் காலத்தில் ஆசிரியர்களின் ஒழுங்கீனம் முற்றிலும் தரங் கெடவில்லை. தலித் எழுச்சி ; அதை எதிர்கொள்ளும் பிற்பட்டோர் மூர்க்கம், பிறசாதிப்பதற்றம் ,இந்துத்துவ மனநிலை ஏற்பைக் கைக்கொண்டது என்ற காரணங்களும் உள என யூகிக்கிறேன்.