தோல்வியில் முடிந்த ஒத்திகை!
வரலாற்றை ஒற்றைச் சொல்லால் குறிப்பிடுவதென்றால் ‘அதிகாரம்’ என்று சொல்லலாம். நாட்டை ஆள்வோரிடம் மட்டுமல்ல, சாதாரண மனிதர்களிடமும் அதிகார வேட்கையும் போட்டியும் நிலவுகின்றன. ஒவ்வொரு சிறு செயலிலும் அதிகார வெளிப்பாடு இருக்கிறது. ஒருவர் முன் நிற்கிறோம் என்றால் அது அதிகாரத்தின் வெளிப்பாடுதான். அமர்வதும் சமமாக இருப்பதில்லை. ஒருவர் நாற்காலி நுனியில் அமர்ந்திருக்கிறார் என்றால் அது அதிகாரத்தின் முன் வெளிப்படும் பவ்வியம். ஒவ்வோர் அழைப்பிலும்கூட அதிகாரம் வெளிப்படும். ‘டேய்’ என்பது விளிச்சொல். இச்சொல் எவ்விடத்தில் ஒலித்தாலும் அதற்குள் அதிகாரம் இருக்கும். பண்ணைக்காரர் தம் வேலையாளை ‘டேய்’ என்றழைத்தால் அது எஜமான அதிகாரம். மூத்தவர் இளையவரை ‘டேய்’ என்றழைத்தால் வயது வழங்கும் அதிகாரம். தம்பியை அண்ணன் அழைத்தால் அது உறவு அதிகாரம். நண்பர்கள் தமக்குள் ‘டேய்’ என்றழைத்துக் கொள்வதிலும் உரிமை என்னும் அதிகாரம் இருக்கும். இதை விளக்க நான் ‘டேய்’ என்னும் ஆண் விளியை எடுத்திருக்கிறேன். ஆண் அதிகாரம்தான் இதற்குக் காரணம் என்றும் சொல்லலாம்.
இப்படி நம் மொழி, செயல் என அனைத்திலும் அதிகாரத்தின் கறை படிந்திருப்பதைக் காணலாம். அதிகாரம் செய்பவரை யாருக்கும் பிடிப்பதில்லை. அடிபணிவதும் பிடிப்பதில்லைதான். எனினும் அதிகாரப் படிநிலையாகவே நம் சமூக அமைப்பு இருக்கிறது. இதில் அதிகாரம் செய்பவராகவோ அடிபணிபவராகவோ இருந்துதான் ஆக வேண்டும். ஆனால் அடிபணிபவருக்கு அதிகாரம் கிடைத்தால் தன்னை அதிகாரம் செய்தவரின் பாணியைத்தான் அவரும் கடைப்பிடிப்பார். அதிகாரம் பற்றிய விழிப்புணர்வு கொண்ட மனங்களே அதை எளிதாகக் கடந்து மனிதத்தன்மையைப் போற்றும். அது அத்தனை எளிதல்ல.
ஒருவரைப் பற்றி அறிந்துகொள்ள அவரிடம் பணத்தையோ பதவியையோ கொடுத்துப் பார் என்று சொல்வது அனுபவ வாக்கியம். ஒவ்வொருவரும் அவரவர் எல்லைக்கு உட்பட்டு அதிகாரம் செய்யத்தான் முயல்கின்றனர். தம் அதிகாரத்தைச் செலுத்தவும் நிலைநிறுத்தவும் படுகிற பாடுதான் எத்தனை! அதிகாரம் செல்லுபடியாகாதபோதும் அதிகாரத்திற்கு எதிராகக் கேள்விகள் எழும்போதும் அதை அகந்தையால்தான் எதிர்கொள்கிறோம். ஒவ்வொரு கோபத்தின் பின்னும் அகந்தை நின்று சிரிக்கிறது.
அதிகாரத்துக்கான எதிர்ப்புக் குரல்கள்
இன்றைய சமூகத்தில் அதிகாரத்தைப் புறந்தள்ளிவிட்டு வாழ இயலாது என்றே தோன்றுகிறது. என்றாலும் அதிகாரம் சகல வழிகளிலும் எதிர்க்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது. பெரும்பெரும் போராட்டங்கள்தாம் அதிகாரத்தை எதிர்க்கின்றன என்றில்லை. வீட்டில் ஒரு பாத்திரம் உருண்டாலும் அது அதிகாரத்திற்கு எதிரான குரல்தான். அதிகாரத்தை எதிர்க்கும் கொலைக்கருவி மௌனம். அன்றாட வாழ்வில் எங்கெங்கும் அதிகாரம் நிலவுவது போலவே அதிகாரத்திற்கான எதிர்ப்பும் நிலவுகிறது. அப்படியிருக்க இலக்கியம் அதை விட்டு வைக்குமா? அதுவும் இவ்வெதிர்ப்பில் கவிதையின் இடம் பெரிது.
கவிதை என்பதே அதிகார எதிர்ப்பின் குறியீடுதான். கவிதைக்குள் இருக்கும் அதிகார எதிர்ப்பு எனக்கு எப்போதுமே உவப்பானது. அதிகாரத்தை விமர்சிப்பதும் எள்ளி நகையாடுவதும் புறந்தள்ளுவதும் எதிர்ப்பதும் எனச் செயல்படும் கவிதைகள் என் விருப்பமானவை. கவிஞர் கரிகாலன் எழுதியுள்ள ‘உதிரிப் பூக்கள்’ (கரிகாலன் கவிதைகள், 2008, உயிரெழுத்து பதிப்பகம், திருச்சி, ப.170) என் விருப்பக் குறியில் இதயச் சின்னத்தைப் பெறும் கவிதையாகும்.
கரிகாலன் (1965) தொண்ணூறுகளிலிருந்து கவிதை எழுதிவருகிறார். ‘களம் புதிது’ என்னும் இதழை நடத்தியுள்ளார். அப்போதிருந்த இடைவெளியில், புலன் வேட்டை, தேவதூதர்களின் காலடிச் சத்தம், இழப்பில் அறிவது, ஆறாவது நிலம், அபத்தங்களின் சிம்பொனி, தாமரை மழை ஆகியவை இவரது கவிதைத் தொகுப்புகள். தேர்ந்தெடுக்கப்பட்ட ‘கரிகாலன் கவிதைகள்’ தொகுப்பாக வெளிவந்துள்ளன. ‘நிலாவை வரைபவன்’ என்னும் நாவலும் சில கட்டுரைத் தொகுப்புகளும் இவரது பிற முகங்கள்.
இவரது கவிதைகளைக் ‘காட்சிச் சித்திரிப்பு’ என்று சொல்லலாம். இயற்கை, நிலக்காட்சிகள், சம்பவங்கள் என ஏதாவது ஒன்றை விவரிக்கும் சித்திரிப்பு இவரது கவிதைகளின் இயல்பு. அவ்வகையில் கடந்த முப்பது ஆண்டுக் காலத் தமிழ்ச் சமூகத்தின் பலவிதக் காட்சிகளையும் இவர் பதிவு செய்திருக்கிறார். சில காட்சிகள் உற்சாகம் ஊட்டும்; சில வருத்தும்; சில அதிர்வூட்டும். அன்றாட வாழ்வில் கண்ணில்பட்டும் மனதில் பதியாமல் நாம் கடந்து போகும் ஏராளமான காட்சிகளைக் கவிதைக்குள் பிடித்து வியப்பூட்டுகிறார். கிராமத்து வாழ்வியல் காட்சிகள் அவருக்குப் பேரின்பம் தருபவை; இழப்பின் ஏக்கம் பொதிந்த அவை இக்காலகட்டத்தின் தவிர்க்க இயலாக் கூறு.
கரிகாலன் கவிதைகள் வலிமையான அரசியல் பார்வையுடன் இயங்குபவை. நேரடியாகவும் உட்பொதிந்தும் அரசியலை வெளிப்படுத்தாத கவிதைகளே இல்லை. சித்திரிப்புக்கு ஏற்ப எவ்வித அலங்காரமும் இல்லாத விவரிப்பு மொழிநடை. உவமைகூட மிக அரிதாகவே தட்டுப்படும். ஆகவே, சிரமமில்லாமல் வாசகரை உள்ளிழுத்துக் கொள்ளும் எளிமையை இவர் கவிதைகள் கொண்டிருக்கின்றன. ‘உதிரிப் பூக்கள்’ என்னும் கவிதை:
உதிரிப் பூக்கள்
அவன் எடுத்துச் செல்லும்
அந்த மாலை
ஒரு பிணத்திற்கு அணிவிப்பதற்கு
அப்பிணம் உயிரோடிருந்தபோது
அவன் உயரதிகாரியாக இருந்தது
அப்போதுகூட அதன் முகம்
ஒரு பிணம் போலவே இருந்தது
அந்த மாலையைப் பிணத்திற்குச்
சாத்தும்போது முகபாவனை
எப்படியிருக்க வேண்டுமென
ஒத்திகை பார்த்துக்கொள்கிறான்
அவனுடைய இரக்கம் முழுவதும்
தீர்ந்துவிட்டிருக்கக் கூடும்
அப்பிணம் கண் விழித்து
மீண்டும் அதிகாரியாகிவிட்டால்
ஒரு கணத்தில் வேர்த்துவிடுகிறது அவனுக்கு
இல்லை அதற்குள் எல்லாச் சடங்குகளும்
முடிந்து எரித்துவிடுவார்கள்
சமாதானமானபடி
வாகனத்தில் விரைகிறான்
ஒன்றிரண்டு பூக்கள்
மாலையிலிருந்து உதிர்கின்றன.
இக்கவிதை ஒரு சம்பவ விவரிப்பாக அமைந்திருக்கிறது. இழவுச் சம்பவம். ‘அவன் எடுத்துச் செல்லும் அந்த மாலை ஒரு பிணத்திற்கு அணிவிப்பதற்கு’ எனக் கவிதை தொடங்குகிறது. ஒருவன் மாலை ஒன்றை எடுத்துச் செல்கிறான். ஒரு பிணத்திற்கு அணிவிப்பதற்கான மாலை அது. ‘அணிவித்தல்’ என்னும் சொல் இங்கு விசேஷமானது. ‘பிணத்திற்குப் போடுவதற்கு’ என்று கவிதை சொல்லவில்லை. ‘அணிவிப்பதற்கு’ என்கிறார். முக்கியத்துவம் உடைய பிணம் என்பதை உணர்த்தவே அணிவித்தல். திருமணத்தில் மாலை சூடுதலும் சூட்டுதலும். பிணத்திற்கோ மாலை போடுதல். போடுதல். இங்கு அணிவித்தல் என பவ்வியம் கொண்டதாகிறது. அதிகாரத்தின் முன்னான பவ்வியம் அது.
பிணத்திற்கு மாலை போடும் வழக்கம் தமிழர் மரபில் பழைமையானது அல்ல என்றே நினைக்கிறேன். கோடி போடுதல் உண்டு; பிணத்தை எடுத்துச் செல்லும்போது எள்ளும் பொரியும் இறைத்தல் உண்டு. கோடி போடும் வழக்கம் இப்போது அருகிவிட்டது. ஏராளமான செலவு என்பதாலும் அதனால் உறவு விரிசல்கள், மோதல்கள் ஏற்பட்டு இழவு வீடே கலவரமாக மாறும் சூழல் உருவானதாலும் படிப்படியாகக் கோடி தவிர்க்கப்பட்டு சடங்குக்காக ஒன்று அல்லது இரண்டு என நின்றுவிட்டது. கோடிக்குப் பதிலாக மாலை. வெறும் கையோடு இழவு வீட்டுக்குச் செல்லாமல் கையில் மாலையோடு செல்வது மதிப்பிற்குரியதாகவும் ஆகிவிட்டது. பூக்கடை வியாபாரத்தோடும் இதைத் தொடர்புறுத்திப் பார்க்கலாம். பிணத்தை எடுத்துச் செல்லும்போது வழியெல்லாம் இறைக்கப் பூமாலைகள் உதவுகின்றன.
கவிதையில் வரும் பிணம் ஏதோ ஒருவகையில் முக்கியத்துவம் கொண்டது. ஆகவே அவன் மாலையை ‘அணிவிக்க’ எடுத்துச் செல்கிறான். கவிதையின் அடுத்த அடி அந்த முக்கியத்துவம் என்ன என்பதைச் சொல்கிறது. ‘அப்பிணம் உயிரோடிருந்தபோது அவன் உயரதிகாரியாக இருந்தது.’ ஓய்வுக்குப் பின் இறந்திருந்தால் இந்த மாலையும் இழவுக்குப் போதலும் அவசியமில்லாமலும் போயிருக்கக்கூடும். அவனுக்கு உயரதிகாரியாக இருக்கும்போதே இறந்த பிணம். உயிரோடு இருந்தபோதும் அது பிணம்தான். ‘அப்போதுகூட அதன் முகம் ஒரு பிணம் போலவே இருந்தது.’ உயிரோடு இருந்தவரைக் குறிக்க ‘அவர்’ எனச் சொல்லவில்லை. அப்போதும் ‘அது’தான். ஏன் உயரதிகாரிகள் பிணம்போல இருக்கிறார்கள்? அவர்கள் இயல்பாகப் பேசுவதில்லை; சிரிப்பதில்லை. உணர்ச்சியற்று முகத்தை வைத்துக்கொள்வதும் இறுக்கமாக்கிக்கொள்வதும் அதிகாரத்தின் மொழி போலும்.
உயரதிகாரி இடமாற்றலில் சீக்கிரம் கிளம்பிவிட வேண்டும்; விரைவில் ஓய்வு பெற்றுவிட வேண்டும்; அல்லது செத்துப் போக வேண்டும் என நினைக்காத பணியாளர்கள் உண்டா? அப்படியிருக்கையில் பிணத்தைப் பார்க்கும்போதும் அதற்கு மாலை அணிவிக்கும்போதும் மனதில் அவனுக்கு வருத்தம் வரப் போவதில்லை. ஆனால், இழவு வீட்டில் வருத்தத்தைக் காட்டிக்கொள்ள வேண்டுமே. அதற்காக ஒத்திகை பார்க்கிறான். ‘அந்த மாலையைப் பிணத்திற்குச் சாத்தும்போது முகபாவனை எப்படியிருக்க வேண்டுமென ஒத்திகை பார்த்துக்கொள்கிறான்.’ ஏன் இந்த ஒத்திகை? உயரதிகாரி மேல் இருக்கும் வெறுப்பை முகபாவனை காட்டிக்கொடுத்துவிடக் கூடாதல்லவா? ஆனால், அவன் முகத்தில் இரக்கத்தின் சாயல் துளியும் தோன்றவில்லை. ஒத்திகை வீண். ஆம், ‘அவனுடைய இரக்கம் முழுவதும் தீர்ந்துவிட்டிருக்கக் கூடும்’ என்கிறது கவிதை. எத்தனை முயன்றாலும் முகத்தில் இரக்க பாவனை வந்து சேரவில்லை என்றால் மிக மோசமான உயரதிகாரிப் பிணம்தான் அது.
தோல்வியில் முடிந்த ஒத்திகை அது. ஆகவே அவனுக்குப் பயம் வந்துவிடுகிறது. ‘அப்பிணம் கண் விழித்து மீண்டும் அதிகாரியாகிவிட்டால்’ என்று தோன்றுகிறது. உடனே ‘ஒரு கணத்தில் வேர்த்துவிடுகிறது அவனுக்கு.’ எனினும் அடுத்த கணம் சமாதானத்திற்கு ஒரு காரணமும் தோன்றுகிறது. சாவுச் செய்தி வந்து வெகுநேரம் ஆகிவிட்டது. ஆகவே இனி எழ வாய்ப்பில்லை. கண் விழித்து எழுவதற்குள் எல்லாச் சடங்குகளையும் முடித்து எரித்துவிடுவார்கள் என்பது சமாதானம். புதைத்தால்கூட எழுந்து வந்துவிடக்கூடும். எரித்துவிடுவதால் இனி எழ முடியாது. சமாதானமாகி வாகனத்தில் விரைகிறான் அவன். பிணத்தை எடுப்பதற்குள் மாலையை அணிவித்துத் தன் கடமையை ஆற்ற வேண்டுமே. உயரதிகாரியின் குடும்பத்தினர் இருப்பார்கள். அதுகூட முக்கியமல்ல; அலுவலகத்தின் மற்ற பணியாளர்கள் இருப்பார்கள். அவர்களில் அடுத்தடுத்த உயரதிகாரிகளும் இருக்கலாம். அவர்கள் பார்க்க மாலை அணிவிப்பது அவசியம். ஆகவே வாகனம் விரைகிறது.
கவிதை இப்படி முடிகிறது: ‘ஒன்றிரண்டு பூக்கள் மாலையிலிருந்து உதிர்கின்றன.’ வாகனத்தில் செல்லும்போது வைத்திருக்கும் மாலையிலிருந்து ஒன்றிரண்டு பூக்கள் உதிர்கின்றன. இதைச் சொல்லி முடிப்பதன் வழியாகக் கவிதை எதை உணர்த்துகிறது? அவனுக்குள் கொஞ்சம் இரக்கம் சுரக்கிறது என்பதை உதிரும் பூக்கள் காட்டுகின்றனவா? ஒருவர் இறந்த பிறகு அவரைப் பற்றி மோசமான விஷயங்களைப் பேசக் கூடாது என்றொரு மரபை நாம் வைத்திருக்கிறோம். அது மட்டுமல்ல, இறந்தவரை நினைக்கையில் எத்தனை மோசமானவராக இருப்பினும் ‘பாவம்’ என இரக்கம் தோன்றுவதும் வாழ்வின் நிலையாமை பற்றி உணர்வு உருவாவதும் இயல்பானது. அவ்வகையில் உதிரிப் பூக்கள் இரக்கத்தின் துளிகளைக் குறிக்கின்றன என்று எடுத்துக்கொள்ளலாம். நினைத்தாலே நடுக்கம் தரும் உயரதிகாரிப் பிணத்தின் மேல் படாமல் சில உதிரிப் பூக்கள் தப்பித்துக்கொண்டன என்றும் கொள்ளலாம்.
ஒரு சம்பவச் சித்திரிப்பாகிய இக்கவிதை அதிகார எதிர்ப்பு மனநிலையை உட்கொண்டிருக்கிறது. அதிகாரத்தை எதிர்ப்பது மட்டுமல்ல, அதிகாரத்திற்கு ஆட்படாமல் இருப்பது முக்கியம். அப்போதுதான் பிணத்திற்கும் மதிப்புக் கிடைக்கும். அதிகாரம் பிணமான பின் எத்தகைய உணர்வைக் கொடுக்கும் என இவ்விதமான யோசனைகளை விரிக்கிறது கவிதை.
—–
நன்றி: மின்னம்பலம், 2019/06/16