கவிதைப் பூனை!
பெருமாள்முருகன்
நவீன கவிதை – ரசனை சார்ந்த பார்வை
நாயும் பூனையும் மனிதர்களுக்கு நெருக்கமானவை. புறத்தில் நாய், அகத்தில் பூனை. வேட்டையில் உதவியும் வேளாண்மையில் காவலிருந்தும் வீட்டுக்குப் புறத்தே எப்போதும் மனிதரைப் புரப்பது நாய். எனினும் நாய்க்கு வாசல் வரைதான் அனுமதி. பூனையோ வீட்டினுள் உலவும் சகஜீவி. எலி, பாம்பு, பல்லி, பூச்சி ஆகியவற்றிடமிருந்து மனிதரைக் காப்பது பூனை.
அச்சமும் எச்சரிக்கை உணர்வும் பூனையின் இயல்புகள். ஒளிந்தும் ஒடுங்கியும் பதுங்கியும் பதறியும் பொதுவெளியை எதிர்கொள்கிறது பூனை. வீட்டிற்குள்ளோ ஆசுவாசமாகவும் அன்பாகவும் பொறுமையாகவும் நிதானமாகவும் இருக்கிறது அது. எத்தனை அற்புதமான உணவுகளைக் கொடுத்தாலும் அவற்றில் பூனைக்குத் திருப்தி வருவதில்லை. வெளியே சென்று தனக்குரிய இரையை வேட்டையாடித் தின்பதில் அதற்குப் பிரியம் அதிகம்.
வீட்டிற்குள் ஆசுவாசம் கொள்ளும் பூனை
யாரும் நடமாடாத இடங்களையும் நேரத்தையும் தேர்வு செய்து பூனை வெளியே கிளம்பும். இரையைப் பிடித்து உண்டுவிட்டுச் சுவடு தெரியாமல் வீட்டுக்குள் வந்துவிடும். இரையை உண்ணப் பொருத்தமான இடம் அமையாதபோது இரையோடு வீட்டுக்குள் வந்து சாவகாசமாக உண்பதும் உண்டு. சிற்றுயிர்கள் பலவற்றை உண்ணும் எனினும் எலிதான் அதற்கு மிகுவிருப்பம். பூனைக்கும் எலிக்குமான பகை குறித்து ஏராளமான கதைகளும் கற்பனைகளும் நிறைந்திருக்கின்றன.
வீட்டுச் சுவர்களை ஒட்டியும் தெருவோரச் செடிகளுக்குள் புகுந்தும் வேகமாக ஓடும் பூனையைப் பார்க்கலாம். தெருவைக் கடக்க நேர்கையில் ஏதுமற்ற அந்தச் சிறு வெட்டவெளியில் பெரும் பதற்றத்தோடு தாவிச் செல்லும் அது. பொதுவெளி பற்றிய பதற்றத்திலும் வீட்டில் உணரும் ஆசுவாசத்திலும் பூனையின் இயல்பு கொண்டவன் நான். ஆகவே பூனையை எனக்கு மிகவும் பிடிக்கும்.
ஓலை வீட்டில் வசித்த காலத்தில் நாங்கள் வளர்த்த பூனைகள் ஏராளம். ஒரே தட்டில் உண்டும் ஒரே கட்டிலில் உறங்கியும் காலைச் சுற்றித் திரிந்த பூனைகளின் நினைவுகளில் உழலும் காலம் இது. வீடு மாற வேண்டியிருந்த சமயங்களில் ஒருபோதும் பூனை உடன் வந்ததில்லை. புதிய இடம் பற்றிய ஒவ்வாமை. மனிதர்கள் அறிமுகம் ஆனவர்களாக இருந்தபோதும் ஒரு வீட்டை விட்டு இன்னொரு வீட்டுக்கு வந்து வசிப்பதில் பூனைகளுக்கு அசௌகரியம் அதிகம் போலும். எனக்கும் அப்படித்தான்.
பூனைகளைத் துரத்தும் காலம்
எல்லாவற்றிலும் மாற்றம். இன்று வீட்டிற்குள் நாய், வெளியில் பூனை. நாட்டு நாய் ‘தெரு நாய்’ என்னும் பெயர் பூண்டு வெளியிலும் வசிக்கிறது. பூனை வளர்க்கும் வீடுகள் அபூர்வமாகிவிட்டன. பூனைகளை ஒருபோதும் கயிறு போட்டக் கட்ட இயலாது. கயிற்றைப் பிடித்துக்கொண்டு பெருமையாக நகர்வலம் போக முடியாது. ஆகவே பூனைகள் வீட்டை விட்டுத் துரத்துப்பட்டனவோ?
நகரத்துத் தெருக்களில் பம்மிப் பம்மி ஓடும் பூனைகளைப் பார்க்கையில் பரிதாபமாக இருக்கிறது. அவை இப்போது எங்கே வசிக்கின்றன என்றே தெரியவில்லை. கொசுவலை அடித்து இறுகச் சாத்தப்பட்ட ஜன்னல்களும் எப்போதாவது பாதி திறந்து சட்டென மூடப்படும் கதவுகளும் பூனைக்குப் பிடிக்கவில்லை போல. தாவவும் குதிக்கவும் சந்து பொந்துகளில் நுழையவும் வழியற்ற வீடுகளில் பூனையால் வசிக்க இயலவில்லை.
பாடல்பெற்ற பூனைகள்
நாயும் பூனையும் கவிதைகளில் பரவலாக இடம்பெற்றுள்ளன. ஒப்பீட்டு அளவில் நாயைவிடவும் பூனைதான் கவிதையை அதிகமாக ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது என்றே சொல்லலாம். சாதாரணப் பூனையைப் போலவே கவிதைப் பூனையும் எனக்கு மிகவும் பிடித்தமானது. கடந்த நூற்றாண்டில் பூனையைப் பற்றிப் பல கவிஞர்கள் எழுதியுள்ளனர். பூனை பற்றிய கவிதைகளை மட்டும் தொகுத்தால் கணிசமாகத் தேறும். சட்டென நினைவுக்கு வருபவை சில.
சுந்தர ராமசாமி இரண்டு கவிதைகள் எழுதியுள்ளார். ‘வித்தியாசமான மியாவ்’, ‘பூனைகள் பற்றிய ஒரு குறிப்பு’ ஆகியவை. பூனையின் இயல்புகளைப் பற்றி விவரிக்கையில் ‘அவை ரகசியம் சுமந்து வெளிவரும்’ என்று எழுதியிருப்பார். சுகுமாரன் ‘பூனை’ என்றொரு கவிதை எழுதியுள்ளார். அதில் பூனையைப் புகழக் காரணங்களாக ‘உடல் சுத்தம், சூழ்நிலைப் பராமரிப்பு, ரசனையுள்ள திருட்டு, காதற்காலக் கதறல், பொது இடங்களில் நாசூக்கு’ எனப் பட்டியல் தருவார். குவளைக்கண்ணன் எழுதிய கவிதை ‘பூனைப் பெருமாட்டி.’ மோகனரங்கன் எழுதியது ‘பூனை கடாட்சம்.’ நானும் ‘என் வீட்டுப் பூனை’ என்றொரு கவிதை எழுதியுள்ளதை இங்கே அடக்கத்தோடு சொல்லிக்கொள்கிறேன். இவ்விதம் இன்னும் பல.
பூனைக்கு இடம்தாரத இன்றைய கவிதை
ஆனால், இருபத்தோராம் நூற்றாண்டில் எழுத வந்தவர்களின் கவிதைகளில் பூனைக்கு இடம் இல்லை; அல்லது வெகுவாகச் சிறுத்துவிட்டது என்று தோன்றுகிறது. அதற்குக் காரணம் பூனை வீட்டை விட்டுப் பொதுவெளிக்கு வந்துவிட்டதுதானோ என்று யோசித்திருக்கிறேன். பொதுவெளியில் இயங்கும் விலங்குகளைப் பார்க்க முடியும்; கொஞ்சி மகிழ முடியுமா? மடியேறிப் புரளும் பூனையை உணர்ந்த தலைமுறைக்கும் அவ்வப்போது சுவரோரம் ஓடி மறையும் பூனையைக் காணும் பார்வை இன்பம் மட்டுமே பெறும் இந்தத் தலைமுறைக்கும் உள்ள வேறுபாடுதான் கவிதைக்குள்ளிருந்து பூனையை வெளியேற்றிவிட்டதோ?
இன்னும் பூனையை எழுதிக்கொண்டிருப்பவர்கள் மோகனரங்கன் உள்ளிட்ட போன தலைமுறைக்காரர்கள்தான் போலும். அந்தத் தலைமுறையைச் சேர்ந்தவர்தான் கவிஞர் ஜி.எஸ்.தயாளன். மிகக் குறைவாக எழுதுபவர். இதுவரைக்கும் ‘சுவர் முழுக்க எறும்புகள் பரபரக்கின்றன’, ‘வேளிமலைப் பாணன்’ ஆகிய இரு தொகுப்புகள் வெளிவந்துள்ளன.
கவிஞர்கள் உணர்ச்சிப் பெருக்கில் திளைப்பவர்கள் என்னும் எண்ணம் இவரிடம் செல்லுபடியாகாது. ஒவ்வொரு கவிதையும் மிக நிதானத்துடன் எழுதப்பட்டிருக்கும். சொற்கள் ஏறியும் இறங்கியும் காட்டும் வித்தை ஏதும் இவரிடமில்லை. சீரான சமதளத்தில் மேவும் நீரோட்டம் போலச் சொற்கள் அசைந்து நகரும். சில சமயம் சொற்கள் அசையாமல் உறைந்து நிற்பது போலவே தோன்றும். மேற்பரப்பில் அப்படிக் காட்டிக்கொண்டு ஆழத்தில் வேகம் கொள்ளும். இத்தகைய கவிதைகள் பித்துக்கொள்ள வைப்பதில்லை. வாழ்வனுபவங்களை அசை போடச் செய்பவை.
சுய உரிமை அறியாத பூனை
அவர் எழுதிய ‘பூனை’ என்னும் கவிதை (வேளிமலைப் பாணன், ப.29, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், 2014) அப்படித்தான் என் நினைவுகளுக்குள் பதிந்திருந்த பூனைகளை எல்லாம் உசுப்பி வெளியே குதிக்க வைத்தது. மேலும் இக்கவிதைப் பூனை இன்றைய காலத்தைச் சேர்ந்ததாகவும் இருந்ததை அனுமானிக்க முடிந்தது. இது வீட்டுப் பூனை அல்ல. வீட்டை விட்டு வெளியேறிய பூனை. அதாவது வளர்ப்புப் பூனை அல்ல. தானாகப் பிறந்து எப்படியோ வளர்ந்தது. ஒருவகையில் ‘தெருப்பூனை’ என்று சொல்லலாம்.
இப்பூனை வீட்டைச் சுற்றி ஓடுவதையும் ஜன்னலில் குதிப்பதையும் அவ்வப்போது காணலாம். ஆளைக் கண்டால் மிரண்டோடும் பூனை. நம் பழைய ஞாபகத்தில் நாம் அதனிடம் அணுக்கம் காட்டினாலும் அது நம்புவதில்லை. பூனைக்கு ‘இது உன் வீடுதான்’ என்று சொல்லி அன்பு காட்ட விரும்புகிறோம். வீட்டுக்குள் அவ்வப்போது வந்து போகவும் இருக்கவும் அனுமதிக்க விரும்புகிறோம். பிரியத்தோடு அழைக்கிறோம். குழந்தை பூனையின் பட்டுடலைத் தொட்டுப் பார்க்க விரும்புகிறது. ஆனாலும் பூனை நம்மை நம்புவதில்லை. மிரண்டு ஓடிப் போகிறது.
பூனைக்கு மீன் பிடித்தமான உணவு. மீன் வாசனை விரவிய சோற்றை அதன் பார்வைக்கு வைக்கிறோம். என்றாலும் அதற்கு நம் மீது நம்பிக்கை வருவதேயில்லை. வீட்டுக்குள் போய்க் கதவையும் சாத்திவிட்டால் வந்து சோற்றைச் சாப்பிடும். அப்போதும் சத்தம் கேட்டுச் சலனமுறும். அசைவு கண்டு நடுங்கும். இத்துடன் கவிதை நிற்கவில்லை. இன்னும் சில வரிகள். இன்னும் ஒரு காட்சி. அந்த ‘இன்னும்’தான் கவிதையை வேறொரு தளத்திற்கு நகர்த்துகிறது. இப்போது கவிதையைப் பார்ப்போம்.
பூனை
பூனையின் வீடுதான் என்பதைப்
பூனைக்கு எப்படிப் புரிய வைப்பது
சுற்றுச் சுவருக்குள் பம்மி உலவும் பூனை
வீட்டினுள் வருவதில்லை
மனைவியின் வாஸ்வாஸ் அழைப்பிற்கும்
சஹானாவின் பிரியமான தொடுதலிற்கும்
வசமாகாது ஓட்டமெடுக்கும்
மீன் குழம்பு பிசைந்த சோற்றைப்
புறவாசலில் வைத்துக்
கதவையும் மூடினால்தான் சாப்பிடும்
சப்தம் கேட்டுச் சலனமுறும்
அசைவுகள் கண்டு நடுக்கமுறும்
சுய உரிமை அறியாதெனினும்
அழகான பூனை
விருட்டெனச் சன்னலேறிக்
குதித்தோடும் அதே பூனையை
ஒருநாள் நள்ளிரவு
பாத்திரம் சப்தமிட்ட அடுக்களையில் கண்டேன்.
அழகான பூனை என்றும் சுய உரிமை அறியாத பூனை என்றும் கவிதை சொல்கிறது. ஆளைக் கண்டு அஞ்சி ‘விருட்டெனச் சன்னலில் ஏறிக் குதித்தோடும் அதே பூனையை ஒருநாள் நள்ளிரவு பாத்திரம் சப்தமிட்ட அடுக்களையில் கண்டேன்’ எனக் கவிதை முடிகிறது.
‘சுய உரிமை அறியாது’ என்னும் தொடர்தான் இது சாதாரணப் பூனை அல்ல; கவிதைப் பூனை என்பதை நமக்கு உணர்த்துகின்றது. சுய உரிமை அறிந்த பூனையாக இருந்தால் நள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் வர வேண்டியதில்லை; பாத்திரங்களை உருட்ட வேண்டியதில்லை. தைரியத்தோடு பட்டப் பகலில் வந்து சாப்பிடலாம்.
நாம் கொடுக்கும் அன்பை, உரிமையை அறியாத காரணத்தால் அது இரவில் வருகிறதா? நாம் கொடுக்க விரும்பும் அன்பும் உரிமையும் அதைப் பொருத்த வரைக்கும் சந்தேகத்திற்கு உரியவையா? வீட்டுக்குள் உரிமையோடு நுழைந்தாலும் பாத்திரங்களில் வாய் வைக்கும் உரிமையை நாம் கொடுப்போமா? எந்த எல்லையோடு நிறுத்துவோம்?
இல்லை, யாரும் அறியாத நேரத்தில் புகுந்து தனக்கு வேண்டியதை எடுத்துக்கொள்வதுதான் அதன் இயல்பா? தன் சுய உரிமையை அது அப்படித்தான் நமக்கு உணர்த்துகிறதா? வீடு என்பது யாரோ ஒருவருக்கு மட்டும் உரிமையானதாக எப்படி இருக்க முடியும்? கதவும் ஜன்னலும் அமைத்துப் பூட்டுகள் போட்டு வைத்துவிட்டால் அதில் பூனைக்கு உரிமை இல்லையா? ஏன் பூனைக்கு நம்பிக்கையை ஊட்ட நம்மால் முடியவில்லை?
இந்தக் கவிதைப் பூனை இப்படி எத்தனையோ வினாக்களை நமக்குள் எழுப்புகிறது. ‘சுய உரிமை அறிதல்’ என்பது விலங்குகளுக்கு உரிய பண்பு அல்ல; அது மனிதப் பண்பு. ஆகவே வினாக்கள் தோன்றும்போது கவிதைப் பூனை, பூனையாக மட்டுமல்ல, மனித முகம் கொண்டு எழுகிறது.
கவிதைப் பூனை பெண்ணாகிறது; வீட்டுக்கு வந்து தங்கும் விருந்தினராகிறது; புறவாசலோடு நாம் நிறுத்திவிடும் எத்தனையோ மனித முகமாகிறது. வெகுநாள் கழித்து எனக்கு அணுக்கமான சாதாரணப் பூனையாகவும் இருக்கிறது இந்தக் கவிதைப் பூனை.