வெறுங்கைக்குள் அடங்கும் அனுபவம்!
பெருமாள்முருகன்
நவீன கவிதை – ரசனை சார்ந்த பார்வை
தாய்ப்பாசம் பற்றிய திரைப்படங்களும் திரைக்காட்சிகளும் தமிழில் மிகுதி. தாயைப் பற்றிய திரைப்பாடல்களோ நூற்றுக் கணக்கிலானவை. பாசம், தியாகம், உழைப்பு ஆகிய பிம்பங்களைத் தாய் மீது ஏற்றிச் சுரண்டும் ஒருவகைத் தந்திரம் இது என எண்ணியதுண்டு. தாயை இத்தகைய பிம்பத்திலிருந்து விடுவிக்க வேண்டியது அவசியம்; எல்லாக் காலத்திலும் சுமந்துகொண்டே இருப்பது தாயின் வேலையல்ல என்றே கருதுகிறேன். எனினும் இத்தகைய தாய்ச் சித்திரத்திற்கு எப்படி வரவேற்பிருக்கிறது, பார்ப்பவர்கள் எல்லாம் ஏன் நெகிழ்ந்துபோகிறார்கள் என்றும் கேட்டுக்கொள்கிறேன். உண்மையிலேயே நம் சமூகத்தில் தாய் ஏற்கும் பாத்திரம் மிக முக்கியமானதாக இருக்கிறது. பல குடும்பங்களைத் தாங்கிப் பிடிப்பவர் தாய்தான். முன்னேற்றத்திற்குக் காரணமானவர் தாய்தான். பொறுப்பற்ற தந்தைகள் நிறைந்த சமூகம் நமது. ஆனால் பொறுப்பற்ற தாயைக் காண்பது அரிது. தாயைப் பற்றி நெகிழ்வதற்கு நமக்குக் காரணங்கள் இருக்கின்றன.
என் தந்தை கடுமையான உழைப்பாளி. என் அம்மாவின் மீதும் எங்களிடத்தும் மிகுந்த பிரியம் காட்டியவர். குடிக்கு அடிமையாகி உடல் சீர்குலைந்து தம் நாற்பத்தைந்தாம் வயதிலேயே இறந்துபோனார். அவர் இருக்கும்போது அவரையும் குடும்பத்தையும் சேர்த்துக் கவனித்துக்கொண்டவர் அம்மா. இறந்த பிறகு குடும்பத்திற்கான சம்பாத்தியம் உட்பட முழுப் பாரத்தையும் ஏற்றுக்கொண்டார் அம்மா. எங்களைக் கை தூக்கிவிட்டவர் அம்மாதான். அம்மாவும் பொறுப்பற்று இருந்திருந்தால் என்னவாகியிருப்பேன் என யோசிக்குந்தோறும் எனக்குள் பதற்றம் கூடிவிடும். என்னைப் போல் அம்மாவால் மேலேறி வந்தவர்களை அன்றாடம் காண்கிறேன். நெகிழ்ந்த மனங்களைத் தினமும் சந்திக்கிறேன்.
வற்றாத கருப்பொருள்
அம்மாவைப் பற்றி எழுதப்பட்ட கவிதை எத்தகையதாக இருப்பினும் வாசிக்க ஈர்க்கிறது. ஒரு சொல், ஒரு சம்பவம் மனதை நெகிழ்த்தவே செய்கிறது. இலக்கிய நிகழ்வுகளில் மாணவர்கள் கவிதை வாசிப்பார்கள். பத்துப் பேர் வாசித்தால் சரிபாதி அம்மாவைப் பற்றிய கவிதையாகவே இருக்கும். வற்றாத கருப்பொருளாகத் தாய் இருக்கிறார். எத்தனையோ தாய்க் கவிதைகளை வாசித்திருக்கிறேன்; கேட்டுமிருக்கிறேன். நானும் எழுதியிருக்கிறேன். ஏதாவது ஒரு தாய்க் கவிதையைச் சொல்லுங்கள் என்று யாராவது கேட்டால் என் நினைவில் தங்கிச் சட்டென மேலெழுந்து வருவது ஒரே ஒரு கவிதைதான். அதை எழுதியவர் யூமா.வாசுகி. ‘இரவுகளின் நிழற்படம்’ (தமிழினி, சென்னை, 2001) என்னும் தொகுப்பில் உள்ள ‘கைகள்’ கவிதை அது.
யூமா.வாசுகி மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றவர். மலையாளத்திலிருந்து ஏராளமான நூல்களையும் சிறுவர் இலக்கியத்தையும் மொழிபெயர்த்தவர். ‘ரத்த உறவு’ என்னும் புகழ்பெற்ற நாவலை எழுதியவர். சிறுகதை ஆசிரியர். ஓவியர். பத்திரிகையாளர். இலக்கியத்தின் பல தளங்களிலும் குறிப்பிடத்தக்க செயல்பாட்டாளர். எனினும் சாதனைக்குரிய பெருங்கவிஞர் என்பதே அவரது முதல் அடையாளம்.
சொற்பெருக்கின் வீச்சு
அவரது கவிதைகள் உணர்ச்சிப் பெருக்கில் திளைப்பவை. அதற்கேற்பச் சொற்கள் பிரவாகமாகப் பொங்கி வரும் வரம் பெற்றவர். உண்மையில் மொழி ஒரு கவிஞனுக்குச் சேவகம் செய்யும் என்பதை அவரது கவிதைகளை வாசித்து உணரலாம். யாப்பிலக்கணத்தில் எத்தனையோ பேர் கவிதை எழுதியிருந்த போதும் கம்பனுக்குரிய சிறப்பு, மனதின் கற்பனை வேகத்திற்கேற்ப உருவாகித் தடையற்று ஓடும் சொற்பெருக்குத்தான். நவீன கவிதையில் சொற்பெருக்கின் வீச்சை யூமா.வாசுகியிடம் காணலாம். முதல் வரியில் தொடங்கும் கவிதை சிறு தடங்கலோ பிசிறோ இல்லாமல் விரிந்து கடைசிச் சொல்லில் முடியும்போது கிடைக்கும் பரவசம் ஆனந்தம்.
ஆனால், அவர் கவிதைகள் துயரார்ந்தவை. மனிதர்களிடம் அடிப்படை நற்பண்புகள்கூட அழிந்துபோகும் அவலம் கண்டு எழுந்த அறச் சீற்றத் துயரம். மாண்பு அருகி அற்பம் பெருகும் நிலை கண்டு மருகிய பதற்றத் துயரம். பசியைக் குறித்து நவீன கவிதையில் அவரளவு பதிவு செய்தோர் இல்லை. குழந்தைகளின் உலகம் பற்றிய அவரது கவிதைகள் தனித்துவமானவை. ‘அமுதப் பருவம் வலம்புரியாய் அணைந்ததொரு சங்கு’ என்னும் தலைப்புடைய நூல் அவர் எழுதிய காதல் கவிதைகளின் தொகுப்பு.
அவர் எழுதிய பல கவிதைகள் என்னுள் நிறைந்திருக்கின்றன எனினும் மிக எளிதாக எழுதப்பட்டது போலத் தோன்றும் தாய்க் கவிதைக்கு எப்போதும் முன்னுரிமைதான். அவர் கவிதைகளின் இன்னொரு இயல்பு பேச்சுத் தொனி. அவர் சக மனிதர்களோடும் குழந்தைகளோடும் உலகத்து உயிர்களோடும் தொடர்ந்து உரையாடுவதால் இந்தப் பேச்சுத் தொனி கவிதைகளில் அமைந்தது போலும். உரையாடலின் உயிர்ப்பும் ஒருவகைச் சொல் விளையாட்டும் இணைந்தது ‘கைகள்’ என்னும் இந்தத் தாய்க் கவிதை. இதோ:
கைகள்
அம்மாவுக்கு
என் கைகளின் மீது பிரியம் அதிகம்
அவள் காய்ச்சலாகக் கிடக்கையில்
ஒங் கையால ஒரு வாய்
சுடு தண்ணி வச்சுக் கொடய்யா என்பாள்
அச்சில் வந்த என் கவிதையை
ஒங் கையால எழுதினதா இது
என்று வியந்தாள்
வாயக் கசக்குது ஒங் கையால
ரெண்டு வெத்தில வாங்கி வா தம்பி என்பாள்
தெருவில் போகிற ஜோதிடனை
வீட்டிற்குள் அழைத்து
இவங் கையால தாலி கட்டிக்கிற பாக்யவதி
எப்போ வருவாள்
இவங் கை பார்த்துச் சொல்லுமய்யா என்பாள்
படிப்பு முடிந்த கையோடு
சொந்தமென்றிருந்தவர்களிடம் அம்மா சொன்னாள்
தகப்பனில்லாப் புள்ள ஐயா
கைதூக்கி விடணும்
அழுகைக்கான ஒத்திகையோடு
வேலை வேண்டிப் போய்
ஆறுதல் சொன்னவனாய்த் திரும்பியபோது
வெறுங்கையிலிருந்தது
பாதிப் பிராயம்
ஒங் கையால ரெண்டு காசு சம்பாதிச்சு
கால் வவுத்துக் கஞ்சி எப்ப ஊத்தப் போறே
என்று வரும் அம்மாவின் புலம்பல்
இன்னமும்
கையூனிக் கரணம் போடத் தெரியலயே
என்று வருந்துகிறதே தவிர
நான் ஒத்துக்கொள்ளத் தயாராயிருந்தும்
கையாலாகாதவன் என்றென்னை
ஒருபோதும் இகழ்ந்ததில்லை.
‘அம்மாவுக்கு என் கைகளின் மீது பிரியம் அதிகம்’ என்று தொடங்கும் கவிதையின் ஒவ்வொரு தொடரும் கையைக் கொண்டே முடிகிறது. முதலிலும் முடிவிலும் வரும் ‘கை’யும் நடுவில் ஒரே ஒரு தொடரில் வரும் ‘வெறுங்கையும்’ தவிர மற்றவை அம்மாவின் பேச்சிலிருந்து தொகுக்கப்பட்டவை. பேச்சுத் தொகுப்பில் அமைந்த ஒருமையும் அடுக்கும் முறையும் இயைந்து கவிதையாகிற விந்தையை இதில் காணலாம். குழந்தையிடம் ஒவ்வொரு தாயும் ‘ஒங் கையால…’ என்று சொல்லி மகிழ்வது வழக்கம். எத்தனை வளர்ந்த போதும் தாய்க்கு எப்போதும் விவரமில்லாக் குழந்தைதான். கையை முன்வைத்துத் தாயின் அன்பு, எதிர்பார்ப்பு, ஏக்கம், துயரம் எல்லாவற்றையும் கவிதை வெளிப்படுத்துகிறது.
‘அழுகைக்கான ஒத்திகையோடு வேலை வேண்டிப் போய் ஆறுதல் சொன்னவனாய்த் திரும்பியபோது வெறுங்கையிலிருந்தது பாதிப் பிராயம்’ என்னும் ஒரே தொடரில் வாழ்வையே சொல்லிவிட முடிகிறது. அம்மாவிடம் விடைபெற்றுச் செல்லும்போது அழுகைக்கான ஒத்திகை நடக்கிறது. முட்டி முயன்று ஒன்றும் அமையாமல் திரும்பும்போது ஆறுதல் சொல்வதாய்ச் சந்திப்பு அமைகிறது. இரண்டுக்கும் இடையே பாதி ஆயுள் கழிந்து போயிருக்கிறது. நீட்டி முழக்காமல் ஒற்றைத் தொடருக்குள், ‘வெறுங்கைக்குள்’ எல்லாவற்றையும் அடக்க முடிவது கவிதையின் சிறப்பு.
கை என்னும் உறுப்புத்தான் மனிதச் செயல்களில் பெரிதும் பயன்படுவது என்பதாலோ என்னவோ இச்சொல்லுக்குத் தமிழில் பல பொருள்கள் உள்ளன. ‘நைந்து வருந்துதல்’ என்பது முக்கியமான பொருள். துயரத்தின் குறியீடு போலக் கை என்னும் சொல் அமைந்து பல சொற்களோடு முன்னொட்டாகி வழங்கிவருகிறது. ஒருதலைக் காதலைக் குறிக்கும் ‘கைக்கிளை’, இறப்புக்கு இரங்கிப் பாடும் துயர்பாடலாகிய ‘கையறு நிலை’ ஆகியவை மரபில் வழங்குபவை. இக்கவிதையில் ஒலிக்கும் ஒவ்வொரு கையும் துயரப் பொருளையே தருகின்றது.
பேச்சு வழக்கின் கவித்துவ அழகு
இதில் மூன்று மரபுத்தொடர்கள் பயின்று வருகின்றன. ‘கை தூக்கி விடுதல்’, ‘கையூன்றிக் கரணம் போடுதல்’, ‘கையாலாகாதவன்’ ஆகியவை. கையில் தொடங்கும் மரபுத்தொடர்களாகக் கிட்டத்தட்ட நூறு தொடர்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும் ‘தற்காலத் தமிழ் மரபுத்தொடர் அகராதி’யில் (மொழி அறக்கட்டளை, சென்னை, 1997) ‘கை தூக்கிவிடு’ என்பது மட்டுமே இடம் பெற்றுள்ளது. அதற்கு ‘முன்னேற்றத்திற்கு உதவுதல், மோசமான நிலையிலிருந்து மீட்டுக் கொண்டுவருதல்’ ஆகிய பொருள்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கையூன்றிக் கரணம் போடுதல் என்பதற்குப் ‘பிழைக்கக் கற்றுக்கொள்ளுதல்’ எனப் பொருள் சொல்லலாம். ‘கையாலாகாதவன்’ என்பதற்கு ‘இயலாதவன்’ என்று கொள்ளலாம். இந்த மரபுத்தொடர்கள் மொழியின் சிறப்பு. பேச்சு வழக்கும் மரபுத்தொடரும் இடம்பெற்றிருக்கும் இக்கவிதையை மொழிபெயர்க்கவே இயலாது. மொழிபெயர்த்தால் தமிழில் ‘கை’ கொடுக்கும் பொருள்நயமும் சொல்நயமும் சிதறிப் போகும். மொழி அழகு பரிமளிப்பது பேச்சு வழக்கில்தான் என்பதற்கு இந்தக் கவிதையே சான்று.
யாருக்கு எப்படி இருந்தாலும் தானே ஒத்துக்கொள்ளத் தயார் என்றாலும் தாய்க்கு மகன் ஒருபோதும் கையாலாகாதவன் ஆவதில்லை. ‘நான் ஒத்துக்கொள்ளத் தயாராக இருந்தும்’ என்னும் இத்தொடர் கவிதைக்கு முக்கியமானது. ‘கையாலாகாதவன் என்றென்னை ஒருபோதும் இகழ்ந்ததில்லை’ என்று மட்டும் கவிதை முடிந்திருந்தால் இத்தனை வலுச் சேர்ந்திருக்காது. ‘ஒத்துக்கொள்ளத் தயாராக இருக்கும்’ இயல்புதான் முடிவுக்குப் பெரும் வலுவைத் தருகிறது. யார் யாரோ இகழ்கிறார்கள்; இழிவுபடுத்துகிறார்கள் என்பது கவிதையின் தொனிப்பொருள். ஆனால் தாய் இகழவில்லை என்பதே தனிச்சிறப்பு. இகழ்வதும் இழிவுபடுத்துவதும் தாயின் குணமல்ல என்பதுதான் முக்கியம். ‘கைகளின் மீதான பிரியம் அதிகம்’ என்று தொடங்கும் கவிதையில் எங்கும் எப்போதும் அப்பிரியம் குறைந்த சுவடே இல்லை. தாயின் பிரியம் மிகுகிற மாயம். தாயின் பிம்பத்திற்கு வலு சேர்க்கும் இத்தகைய பண்பை வலுவாகப் பிடித்து வைத்திருப்பதால்தான் இக்கவிதை தாய்க் கவிதை வரிசையில் முதலில் நிற்கிறது போலும்.