சுவாமியின் புகழ் பரவட்டும்

You are currently viewing சுவாமியின் புகழ் பரவட்டும்

 

 

2023 நவம்பர் மாத இறுதியில் கேரளத்திலிருந்து எனக்கொரு மின்னஞ்சல் வந்திருந்தது. பிரபோதா அறக்கட்டளை என்னும் அமைப்பு 2024ஆம் ஆண்டு தொடங்கிச் ‘சுவாமி ஆனந்த தீர்த்தர் விருது’ வழங்க இருப்பதாகவும் முதலாமாண்டு விருதை நான் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அம்மின்னஞ்சல் தெரிவித்தது. பெயரில் இருக்கும் ‘சுவாமி’க்கும் நமக்கும் தொடர்பேதும் இல்லையே என்று யோசித்துக் கொண்டிருந்தேன். பதிலேதும் அனுப்பவில்லை.

அடுத்த சில நாட்களில் மலையாளக் கவிஞர் கே.சச்சிதானந்தன் அவர்களிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது. சுவாமி ஆனந்த தீர்த்தர் சுதந்திரப் போராட்ட காலத்து முக்கியமான ஆளுமை எனவும் விருதுத்தொகை குறைவாக இருப்பினும் மதிப்பு மிக்க விருது என்பதால் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் எழுதியிருந்தார். அவர் வாக்குக்கு மறுபேச்சு ஏது? ஏற்றுக் கொள்வதாக உடனே பதில் கொடுத்துவிட்டேன். சுவாமியின் பிறந்த நாளான ஜனவரி 2 அன்று நடத்தும் நிகழ்வில் ஆண்டுதோறும் விருது வழங்க உள்ளனர். 02-01-2024 அன்று கொச்சியில் நடைபெற்ற அருமையான நிகழ்வில் முதல் விருதை மகிழ்ச்சியோடு பெற்றுக்கொண்டேன்.

அந்நிகழ்ச்சிக்காகச் சுவாமியைப் பற்றிய தேடலைத் தொடங்கினேன். கவிஞர் சுகுமாரனிடம் கேட்டதும் அவர் இருதகவல்களைச் சொன்னார். மதுரைக்கு வந்து சில ஆண்டுகள் தலித் மக்களிடையே செயல்பட்டவர் அவர் என்றும் அதைப் பற்றி ஸ்டாலின் ராஜாங்கம் கட்டுரை எழுதியிருக்கிறார் எனவும் தெரிவித்தார். சுவாமியின் மதுரைச் செயல்பாடுகள் குறித்து மலையாளத்தில் தாம் ஒரு கட்டுரை எழுதியிருப்பதாகவும் சொன்னார். ஸ்டாலின் ராஜாங்கத்திடம் பேசியபோது ‘ரொம்ப முக்கியமானவர். அவர் பெயரில் நீங்கள் விருது பெறுவது மகிழ்ச்சி’ என்று சொன்னார். அவர் எழுதிய கட்டுரை காலச்சுவடு இதழில் வெளியாகியிருந்தது. பின்னர் ‘எழுதாக் கிளவி’ நூலிலும் இடம்பெற்றுள்ளது. அதை வாசித்தேன். அப்பகுதி இது:

‘1905ஆம் ஆண்டு ஜனவரி இரண்டாம் நாளில் வடகேரளத்தின் தலைசேரியில் கௌட சரஸ்வதா பிராமணர் குடும்பத்தில் பிறந்த ஆனந்ததீர்த்தர் நாராயணகுரு இயக்கத்தின் பின்புலத்தில் சமூகப் பணியாற்றினார். தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராகச் சட்டரீதியாகவும் போராட்டங்கள் மூலமும் இயங்கிவந்த காந்தியவாதி அவர். இந்த அனுபவத்தின் பின்புலத்தில் தமிழகத்தின் தென்பகுதியில் நிலவிய தீண்டாமை நடைமுறைகளுக்கு எதிராகச் செயற்பட அரிஜன சேவா சங்க மத்திய குழுவால் 1952ஆம் ஆண்டு மதுரைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். தெற்கு, கிழக்கு மாவட்டங்களில் பயணம் செய்து தீண்டாமை வடிவங்களை ஆராய்ந்த அவர், பிறகு மதுரை மேலூர் வட்டாரத்தின் 30 கிராமங்களைத் தேர்வுசெய்து செயற்படத் தொடங்கினார். தொடக்கத்தில் சாதி இந்துக்களின் மனமாற்றத்தை வலியுறுத்திப் பிரசுரங்களை வெளியிட்ட அவர் இதில் காலம் செலவழிப்பதைக் காட்டிலும் சமூகப் பொருளாதார வாழ்வில் தலித்துகளைத் தற்சார்புள்ளவர்களாக மேம்படுத்துவதே சரியானது என்று கருதிச் செயற்படலானார். கோவில் நுழைவு, குளத்தில் நீரெடுத்தல், பொதுவீதியில் சைக்கிளில் செல்லல், டீக்கடை சலூன் ஆகியவற்றில் நுழைதல் போன்ற உரிமைகளுக்காக நிறையப் போராட்டங்களை முன்னெடுத்தார். இவற்றைக் காவல்நிலையப் புகாராகவும் வழக்காகவும் மாற்றிச் சட்டரீதியான வழிமுறைகளிலும் போராடினார். இந்த வட்டாரத்தில் மட்டும் இவ்வகையில் வருடத்திற்கு 400 வழக்குகள் வரை பதிவாயின. மேலூர் மாங்குளத்தில் இவ்வாறான போராட்டம் நடத்த முயன்றபோது தாக்கப்பட்டதால் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மூன்று மாதம் வரையிலும் சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அரசாங்க நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து தலித்துகள் சுயமாகப் பயிர்செய்யவும் உதவினார். ஆனால் மெல்லமெல்ல இவரின் வேலைத்திட்ட அணுகுமுறை தொடர்பாக அரிஜன சேவா சங்கத்திற்குள் ஏற்பட்ட முரணான பார்வையை ஒட்டி அவர் 1958ஆம் ஆண்டு கேரளாவிற்குத் திரும்பினார். தமிழகத்தில் அவர் ஆறு வருடங்கள் பணியாற்றியிருக்கிறார். இக்காலகட்டம் பற்றிய பதிவோ, இவரைப்பற்றிய நினைவுகளோ காப்பாற்றப்படாததால் இவரின் பெயரைக்கூட புதிதாகப் பார்க்கும் நிலை இன்றைக்கு உருவாகி இருக்கிறது.’

(ஸ்டாலின் ராஜாங்கம், வரலாற்றை வழிமறிக்கும் வெகுமக்கள் நினைவுகள், காலச்சுவடு, ஆகஸ்டு 2016)

மதுரை மேலூர் பகுதியைச் சேர்ந்த தலித் மக்கள் நினைவில் சுவாமி நிலைபெற்றிருப்பதைக் கள ஆய்வுத் தகவல்களைக் கொண்டும் ஆங்கில நூல் ஒன்றிலிருந்து திரட்டியும் அந்தச் சிறுபகுதியை ஸ்டாலின் ராஜாங்கம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் சுவாமியைப் பற்றிய பதிவுகள் இல்லாமல் போனாலும் மலையாளத்தில் சில நூல்கள் இருக்கின்றன. அவர் பெயரைக் கொண்டு கலாச்சார மையம் ஒன்றும் செயல்படுகிறது. அதன் சார்பாக அவர் வாழ்க்கைத் தகவல்களைத் தொகுத்துச் செய்த சிறுவெளியீடு பல்லாண்டுகளாகப் புழக்கத்தில் இருக்கிறது. அவை போதுமானவை அல்ல என்றும் அவர் வரலாற்றை விரிவாக எழுத வேண்டும் என்றும் பிரபோதா அறக்கட்டளையினர் இப்போது முயற்சி எடுத்துள்ளனர்.

கொங்கணியைத் தாய்மொழியாகக் கொண்ட பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்தவர் சுவாமி. சென்னை, மாநிலக் கல்லூரியில் படித்து இயற்பியலில் பட்டம் பெற்றுள்ளார். காந்திய ஈடுபாட்டின் காரணமாக அரிஜன சேவையில் ஈடுபட்டார். நாராயண குருவின் கடைசிச் சீடர் சுவாமி என்றும் கூறுகின்றனர். கேரளத்தின் எர்ணாகுளம், திருச்சூர், பையனூர் உள்ளிட்ட பகுதிகளில் சாதி ஒழிப்பை முன்னிறுத்தி பல பணிகளை முன்னெடுத்துள்ளார்.

பெயரைக் கொண்டே தலித் மக்களை அடையாளம் காணும் வழக்கத்தை மாற்ற வேண்டும் என்பதற்காக அம்மக்களின் பெயர்களை மாற்றியுள்ளார். ஆதிக்க சாதியினராக நம்பூதிரிகள், நாயர்கள் வைத்துக் கொள்ளும் பெயர்களையும் கிறித்தவ, இசுலாம் மதப் பெயர்களையும் அம்மக்களுக்குச் சூட்டியுள்ளார். பிரபோதா அறக்கட்டளையின் தலைவராக இருக்கும் உஷா கிரணின் தந்தைக்குச் ‘சுவாமிநாதன்’ என்று பெயர் சூட்டியவர் சுவாமிதானாம்.  ‘இந்து மதத்தைச் சேராதவர்கள் கோயிலுக்குள் பிரவேசிக்கக் கூடாது’ என்று அறிவிப்பு செய்திருந்த கோயில்களுக்கு முன் போராடி அதை நீக்கச் செய்திருக்கிறார். மனிதர்கள் யாரும் கோயிலுக்குள் செல்லலாம் என்பது அவர் கொள்கை.

சுவாமியின் புகழ் பரவட்டும்

சுவாமியின் வாழ்க்கைச் சுருக்கச் சிறுநூலை இப்போது தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளனர். கலாதரன் மொழிபெயர்த்துள்ளார். நவம்பர் 21 சுவாமியின் நினைவுநாள். அதை முன்னிட்டு 21-11-24 அன்று கொச்சியில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ்நூல் வெளியிடப்படுள்ளது. அந்நூலுக்குச் சிறுமுன்னுரை தருமாறு கேட்டனர். அந்த முன்னுரை இது:

‘சுவாமி ஆனந்ததீர்த்தர் வாழ்க்கைக் குறிப்பேடு தமிழில் வெளியாவது முக்கியாமானது. அவருக்குத் தமிழ்நாட்டோடும் நெருங்கிய தொடர்புண்டு. 1952 முதல் 1958 வரை கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் தமிழ்நாட்டில் மதுரையைச் சுற்றிய பகுதியில் தலித் மக்களிடையே பணியாற்றினார். ‘ஹரிஜன சேவா சங்கம்’ மூலம் இந்தப் பணியை மேற்கொண்டார். கொள்கைக்கும் நடைமுறைக்கும் உள்ள வேறுபாடுகளை உணர்ந்திருந்த அவர் தலித் மக்களைத் திரட்டிப் பல்வேறு போராட்டங்களை நடத்தியதோடு சட்டரீதியான முயற்சிகளையும் மேற்கொண்டார்.

பொதுவெளிகளில் நிலவும் சாதிப் பாகுபாட்டைக் களைந்து எல்லோரும் சமம் என்னும் நிலை வர வேண்டும் என்பதே அவரது செயல்பாட்டின் நோக்கம். அதன் காரணமாக உடல்ரீதியான தாக்குதல்களையும் எதிர்கொண்டார். இன்றும் மதுரையின் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் ‘சுவாமி’யை மறக்கவில்லை. சுவாமி என்றும் ஆனந்தன் என்றும் அவர் பெயரைக் குழந்தைகளுக்குச் சூட்டியுள்ளனர். அவர் பெயரால் தெருக்கள் உள்ளன. அந்த அளவு மக்கள் மனதில் இடம்பிடித்திருக்கிறார்.

தீண்டாமை ஒழிப்புக்காக அவர் மேற்கொண்ட செயல்கள் வித்தியாசமானவை. அவற்றில் ஒன்று பெயர் மாற்றம். ஆதிக்க சாதியினருக்கு மட்டுமே உரிய பெயர்கள் என்று கருதி வந்ததை மாற்றினார். தலித் மக்களின் பெயர்கள் உடல் உறுப்புகளைச் சுட்டி இழிவுபடுத்தும் பட்டப்பெயர்களாக இருப்பதைப் பார்த்து அவற்றை மாற்றி அமைத்தார். அதன் மூலம் மக்கள் பெற்ற தன்னம்பிக்கையைச் சிலர் எடுத்துக் கூறியதைக் கேட்டிருக்கிறேன்.

கேரளத்தைக் களமாகக் கொண்டு அவர் பல்லாண்டுகள் செயல்பட்டார். கோயில்களில் ‘இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை’ என்று எழுதி வைத்திருந்ததை நீக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினார். அவர் போராடிய இடங்கள் எல்லாம் மக்கள் தொடர்பானவையாக இருந்தன. தேநீர்க் கடைகள், உணவகங்கள், முடி திருத்தும் இடங்கள், கோயில்கள் என எல்லோருக்குமான பொதுவெளிகள் அவை.

வரலாற்றில் முக்கியமான செயல்களைச் செய்துள்ள சுவாமியின் பெயரால் வழங்கப்படும் விருதை 2024ஆம் ஆண்டு நான் பெற்றுப் பெருமையடைந்தேன். அவர் செயல்களையும் புகழையும் கேரளத்திலும் பரப்ப வேண்டும்; தமிழ்நாட்டிலும் பரப்ப வேண்டும். அதற்கு இந்நூல் உதவும் என்று நம்புகிறேன். இதை மொழிபெயர்த்திருக்கும் நண்பர் கலாதரனுக்குப் பாராட்டுக்கள்.’

—–    23-11-24

Latest comments (2)

ஐயா,
ஆனந்த தீர்த்தர் குருவாயூரில் கோவிலில் உணவு பெற வரிசையில் நின்றபோது அவர் வேறு நபர் என்று கருதி (அவரது இறுதி காலத்தில்) தாக்கப்பட்டு அவதிப்பட்டதை நினைவில் கொண்டு வருகிறது தங்களது பதிவு.
–பொன்மனை வல்சகுமார்