கல்லால் அடித்த குழந்தை!
பெருமாள்முருகன்
நவீன கவிதை – ரசனை சார்ந்த பார்வை
வீட்டின் முகம் என்று எதைச் சொல்லலாம்? நடுத்தர மனத்தில் படிந்துள்ள வீட்டை முன்னிறுத்தி இந்தக் கேள்வியைக் கேட்கிறேன். முன்முகப்பு, சுற்றுச்சுவர், கதவு, வரவேற்பறை என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று நினைவு வரலாம். என்னைப் பொறுத்தவரை தோட்டமே வீட்டின் முகம். பலருக்கும் அதுதான் எண்ணமாக இருக்கும். முழு இடத்தையும் ஆக்கிரமித்து வீடு கட்டுவோர் பலர். புறம், வெளி ஆகியவை தரும் இன்பத்தை அனுபவிக்கும் திறனில்லாத மனங்கள். அப்படிப்பட்ட ஒற்றைச் செடிகூட இல்லாத வீட்டிலும் யாராவது ஒருவர் தொட்டியில் செடி வளர்க்க முயல்கிறார். சுற்றுச்சுவர்களின் மீது தொட்டிகளில் செடிகள் தலை நீட்டுகின்றன. சுவரேறிப் படரும் கொடிகள் அழகு காட்டுகின்றன. அடுக்கு மாடி வீடுகளிலும் ஜன்னலிலோ, நிலா முற்றத்திலோ கொடிகள் ஏறிப் படர்ந்திருக்கின்றன; தொட்டிச் செடிகள் துளிர்த்துத் தெரிகின்றன. வீடு கட்டும் எண்ணம் தோன்றியவுடன் முதலில் ஒரு மரத்தை நடும் வழக்கம் தமிழகத்தின் சில பகுதிகளில் இருக்கிறது. தென்தமிழகம் அப்படிப்பட்ட மனநிலை கொண்டது.
வேறு சில பகுதிகளில் ஏற்கெனவே இருக்கும் மரத்தை வெட்டும் வழக்கம் நிலவுகிறது. எங்கள் பகுதி மரத்தை வெட்டும் மனம் கொண்டது. வெயில் மிகுந்தும் மழை குறைந்தும் காணப்படும் பகுதி எமது. இங்கே மரங்கள் பற்றிய கவனம் கூடுதலாக அல்லவா இருக்க வேண்டும்? ஏன் முரண்? வேளாண் முறை, பொருளாதாரப் பின்னணி ஆகியவற்றை வைத்து யோசித்து ஆராய்ந்தால் இதற்கு விடை கிடைக்கக்கூடும். ஒவ்வொரு பகுதியின் நில அமைப்பு, வாழ்க்கை முறை ஆகியவற்றைப் பொருத்து இத்தகைய மனப்பாங்குகள் வருகின்றன போலும்.
தோட்டத்துக்கு நடுவில் வீடு
சுற்றிலும் தோட்டம் இருக்க நடுவில் சிறிதாய் அமைந்திருக்கும் வீடே என் கனவு. செடிகொடிகளின் முகத்தில் விழிக்காமல் வெறும் சுவர்களைப் பார்த்திருக்க வேண்டிய வீடுகளுக்கு உயிரே இருப்பதில்லை. ஒரே ஒரு மரம் அல்லது செடி இருப்பினும்கூட அதை மையமிட்டு உயிர்ச்சூழல் உருவாகிறது. அதை நாடிப் பூச்சிகள் வருகின்றன; குருவிகள் வருகின்றன. அடர்ந்த இலைகள் கொண்ட செடி தையல் சிட்டுக்குக் கூடு கட்ட இடம் தருகிறது. புள்ளியாய் மலரும் பூக்களை நாடி வரும் வண்டுகளும் தேனீக்களும் அனேகம். அவற்றின் குரல்கள் ஒலிக்கும்போது வீடு உற்சாகத்துடன் பேசத் தொடங்கிவிடுகிறது. பேசும் வீட்டுக்குள் வாழ்வதுதான் மகிழ்ச்சி.
இன்றைய காலம் நுகர்வினால் வடிவமைக்கப்படுகிறது. நுகர்வுக்கு வசதியாக வீடு இருக்க வேண்டிய இடம் பற்றிய அபிப்ராயம் ஏற்படுகிறது. பேருந்து நிலையம், ரயில் நிலையத்திற்கு அருகில் வீடு இருக்க வேண்டும்; கடைகளும் சந்தைகளும் வீட்டுக்கு அருகிலேயே வேண்டும்; வண்டிகள் நிறுத்துவதற்கு வசதி இருக்க வேண்டும். இப்படியான எண்ணங்களுக்கு ஏற்பவே அடுக்கு மாடிகள் உருவாகின்றன. அடுக்கு மாடிகளில் புறம் என்றே ஒன்று இல்லை. இருப்பினும் அது பொதுவானது. தனிப்பட்ட விருப்பங்களை அங்கே செயல்படுத்த முடியாது. ஆகவேதான் பத்தாம் மாடி முற்றத்தில் தொட்டிச் செடி தெரிகிறது. பதிலியைக் கொண்டு நிறைவு காண்கிறது மனம்.
நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னாலான இலக்கியங்களில் காட்டப்படும் வீடுகளில் கொல்லைப்புறம் அல்லது புற(ழ)க்கடை பற்றிய வருணனை வரும். கொல்லைப்புறம் என்பது வீட்டின் பின்பகுதி. சிறு கிணறு, துணி துவைக்கும் கல், குளியலறை, சிறு தோட்டம் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதி கொல்லைப்புறம். அங்கிருக்கும் தோட்டத்தில் பூச்செடிகளும் பழ மரங்களும் இருப்பதுண்டு. கீரை, காய்கறிச் செடிகளுக்கும் இடமுண்டு. ஒன்றிரண்டு தென்னைகள் நிற்கும். வீட்டு முன்றிலில் சில செடிகொடிகள் நின்றாலும் கொல்லைப்புறமே சிறப்பு. பழைய திரைப்படங்களில் கிணற்றுடன் கூடிய இத்தகைய கொல்லைப்புறத்தில் கதாநாயகி பாடி ஆடுவது வழக்கம். ‘படித்தால் மட்டும் போதுமா’ படத்தில் வரும் ‘தண்ணிலவு தேனிறைக்க’ என்னும் பாடல் காட்சி என் நினைவுக்கு வருகிறது. பாலசந்தரின் ‘பாமா விஜயம்’ படத்தின் முன்பகுதிக் காட்சிகளில் பல கொல்லைப்புறம் சார்ந்தவை. அப்படி ஒரு வீட்டின் கொல்லைப்புறம் பற்றிய கவிதை என் மனத்தில் நிலைத்திருக்கிறது. அக்கவிதையை எழுதியவர் உமாபதி.
நூதனமும் புத்துணர்ச்சியும்
உமாபதி எங்களூர்க்காரர். நாமக்கல் மாவட்டம் (பழைய சேலம்) வேலூரைச் சேர்ந்தவர். வங்கிப் பணியால் பல்வேறு ஊர்களில் வாழ்ந்துள்ளார். அவரது ஒரே கவிதைத் தொகுப்பு
‘வெளியிலிருந்து வந்தவன்.’ விருட்சம் வெளியீடு (1991). ‘தெறிகள்’ இலக்கிய இதழை ஆசிரியப் பொறுப்பேற்றுச் சில ஆண்டுகள் நடத்தினார். அவ்விதழில்தான் தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்றான சம்பத்தின் ‘இடைவெளி’ வெளியாயிற்று. கலாப்ரியாவின் ‘சுயம்வரம்’ குறுங்காவியம் வெளியானதும் இவ்விதழில்தான். ‘நெருக்கடி நிலை காலத்தில் அர்த்தமற்ற பல சிரமங்களைத் ‘தெறிகள்’ எதிர்கொள்ள நேரிட்டதும் அந்த அபத்தங்களின் விளைவாக நின்று போனதும் மிகப் பெரிய இழப்பே’ என ராஜமார்த்தாண்டன் குறிப்பிடுகின்றார்.
எழுபது எண்பதுகளில் எழுதப்பட்ட கவிதைகளின் பொதுப்போக்கிலிருந்து விடுபட்ட கவிதை பாணி உமாபதி அவர்களுடையது. ஆரவாரமற்ற தணிந்த தொனியில் எழுதப்பட்ட கவிதைகள். அப்போதைய நவீன கவிதையின் இயல்புகளான சொற்செறிவு, சொற்சிக்கனம், முழுமையற்ற தொடர்கள், எழுவாயைக் கடைசியில் போடும் தொடரமைப்பு ஆகியவற்றைக் கைக்கொண்டு சற்றே தத்துவச் சாயலுடன் தம் கவிதைகளை எழுதியவர் உமாபதி. தொகுப்புக்கு முன்னுரை எழுதியவர் சுந்தர ராமசாமி. பின்னுரையாக அறிமுகம் எழுதியவர் ராஜமார்த்தாண்டன். அழகான அட்டையுடன் ஆர்.பி.பாஸ்கரன் அவர்களின் உள்ளோவியங்களைக் கொண்ட நூல். நெடுங்கவிதை எழுதுவதில் உமாபதிக்கு ஆர்வம் மிகுதி. இத்தொகுப்பிலும் சில நெடுங்கவிதைகள் உள்ளன. சுமார் 1500 வரிகள் கொண்ட ‘உப்பு முதலைகள்’ என்னும் நெடுங்கவிதை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் என ராஜமார்த்தாண்டனின் அறிமுகக் குறிப்பு கூறுகிறது. ஆனால், அக்கவிதை வெளியானதாகத் தெரியவில்லை.
சுந்தர ராமசாமி தம் முன்னுரையில் ‘உமாபதி தன் மொழியைப் படைப்பதில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். நவீனத் தமிழின் ஆரோக்கியமான படைப்புகளின் சாரம் ஊறி வந்தவர். சொற்களின் சேர்மானத்தில் கூடும் நூதனமும் புத்துணர்ச்சியும் அழகும் பல வரிகளில் வருகின்றன. படித்துக்கொண்டு போகும்போது இந்த வரிகள் உருவாக்கும் நூதன அனுபவத்தினால் நம் மனம் அவற்றை அரற்றத் தொடங்கும்’ என்றும் ‘ஒவ்வொன்றினுடையவும் மறுபக்கம் நினைவுக்கு வரும் மனம் இவருடையது. வாழ்வுக்கு எதிராக மரணம். இளமைக்கு எதிராக முதுமை. எளிமைக்கு எதிராகச் சிடுக்கு’ என்றும் சொல்கிறார்.
தொகுப்பில் உள்ள கவிதை இது:
கொல்லைப்புறத்து மாதுளை
எந்த நேரமும் அணில்களின் ஆரவாரம்
அம்மாவிடம் கேட்டபோது
எல்லாம் அந்த மாதுளஞ் செடிக்காக
என்றாள்
அது நமக்குத்தானே அம்மா
சின்ன மாமா நட்டதாகத்தானே சொன்னாய்
அக்கா தினமும் நீர் வார்ப்பாளே.
அம்மா சொன்னாள்
அணில்களுக்கு மாதுளை பிரியம் கண்ணே
அவை வேறு என்னதான் தின்னும்
பாவம்.
அன்று முதல் அணில்களென்றால் காதலெனக்கு
ராமகாதை படித்தபின் கூடித்தான் போச்சு
இன்றுவரை அந்தப் பவள முத்துக்களைத்
தின்று பார்த்ததில்லை நான்
இதில் எனக்கு இன்னும் பிடித்த விஷயம்
ஒரு மாலையின் உல்லாச வேளையில்
மாதுளையைப் பறித்த மூத்த அண்ணனைக்
கல்லால் அடித்ததுதான்.
தலைப்பே கவிதையின் முதற்பொருளாகிய நிலப் பின்னணியைக் காட்டிவிடுகிறது. கவிதைச் சம்பவத்துக்கான நிகழிடம் வீட்டின் பின்புறமாகிய கொல்லைப்புறம். அது தலைப்பில் அமைவதே போதுமானதாயிருக்கிறது. கவிதைக்குள் எங்கும் வரவில்லை. கொல்லைப்புறத்தில் இருக்கும் மாதுளஞ் செடிகள் கவிதையின் கருப்பொருள். அதை உண்ணும் அணிலும் கருப்பொருளாகும். இளமைக் கால நினைவொன்றின் மீளலே கவிதை. சம்பவம் நடக்கும் காலத்தில் கவிதைசொல்லி சிறு பையன் அல்லது பெண். அந்தப் பால்யத்தின் கோணத்திலிருந்து கவிதை விரிகிறது. கொல்லைப்புற மாதுளை என்று தலைப்பு சொல்லிவிட்டதால் நேரடியாக விஷயத்திற்குள் கவிதை நுழைந்துவிடுகிறது. கொல்லைப்புறத்தில் ‘எந்த நேரமும் அணில்களின் ஆரவாரம்.’ மக்கள் வெளியேறிய வீட்டின் முன்புறத்தில் அணில்கள் ஓடி விளையாடுவதைக் கூறும் ‘அணிலாடு முன்றில்’ என்னும் குறுந்தொகைச் சித்திரம் (பாடல் 41) இவ்விடத்தில் நினைவுக்கு வருகிறது. அணில்களைப் பற்றி ‘அம்மாவிடம் கேட்டபோது, எல்லாம் அந்த மாதுளஞ் செடிக்காக என்றாள்’ அம்மா.
குழந்தைக்குச் சந்தேகம். சின்ன மாமா நட்டதாக அம்மா ஏற்கெனவே சொல்லியிருக்கிறாள். தினமும் மாதுளைக்கு அக்காதான் நீர் வார்க்கிறாள். அப்படியானால் அது எப்படி அணில்களுக்குச் சொந்தமாகும்? ‘அது நமக்குத்தானே அம்மா?’ என்று குழந்தை கேட்கிறது. அம்மா பதில் சொல்கிறாள். ‘அம்மா சொன்னாள்’ என்று மட்டுமே கவிதை சொன்னாலும் குழந்தையை அருகில் அழைத்து வாஞ்சையோடு தழுவித் தலை தடவிக் கொஞ்சியபடி பதில் சொன்னாள் என்று நாம் கொள்ள முடியும். ‘அணில்களுக்கு மாதுளை பிரியம் கண்ணே’ என்பதில் வரும் ‘கண்ணே’ என்னும் சொல் குழந்தையிடம் எத்தகைய வாஞ்சையோடு அம்மா பதில் சொல்லியிருப்பாள் என்பதைக் கற்பனை செய்துகொள்ள உதவுகிறது. அம்மா சொல்கிறாள், ‘அணில்கள் வேறு எதைத்தான் தின்னும், பாவம்.’ அணில்களின் மேல் பரிதாபம் ஏற்படும் வகையில் அம்மா சொன்ன சொற்கள் குழந்தையின் மனத்தில் ஆழப் பதிகிறது. கண்ணே, பாவம் ஆகிய சொற்கள் நம் பண்பாட்டு மரபில் பல்வேறு காட்சிகளை விரிக்கும் தன்மை கொண்டவை. ஒற்றைச் சொல்லைப் பற்றிச் செல்லும் மனம் அமைந்தால் அக்காட்சிகளுக்குள் எளிதாகப் பயணம் செய்யலாம்.
அதன் பின் நடந்ததைக் குழந்தையின் கோணத்தில் கவிதை சொல்கிறது. அன்று முதல் அணில்களென்றால் குழந்தைக்குக் காதல். வளர வளரக் காதல் பெருகுகிறதே தவிரக் குறையவில்லை. அக்காதல் ராமகாதை படித்தபின் கூடித்தான் போகிறது. அணிலையும் ராமாயணத்தையும் இணைக்கும் வாய்மொழிக் கதை நமக்குத் தெரிந்ததுதான். இலங்கைக்குச் செல்லக் கடல் மேல் பாலம் கட்டும் வேலை நடைபெற்றபோது அணிலும் தன் பங்களிப்பைச் செய்கிறது. மணலில் புரண்டு பின் நீரில் நனைகிறது. அதன் உடலில் ஒட்டிக் கடல் நீரில் விழுந்த மணலும் பாலம் கட்டப் பயன்படுகிறது. அதன் ஆர்வத்தைக் கண்ட ராமன் அணிலை அழைத்து அதன் முதுகில் தடவிக் கொடுக்கிறான். ராமனின் விரல் தடமே அணிலின் முதுகில் இன்றும் வெள்ளைக் கோடுகளாக உள்ளன.
இந்தக் கதை வாய்மொழி மரபிலானது. ஆகவே ‘ராமகாதை கேட்ட பின்’ என்று கவிஞர் எழுதியிருக்கலாமோ என்று தோன்றுகிறது. கேட்டதெல்லாம் படித்தது போல நினைவில் இருப்பது இயல்புதான். எதைப் படித்தோம், எதைக் கேட்டோம் எனக் குழம்புவதுதான் கதையின் வலு. ‘கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்று கம்பர் எழுதவில்லை என்று யார் சொன்னாலும் மனம் நம்ப மறுக்கிறதல்லவா? இப்படி ஓர் உவமையைக் கம்பரால்தான் சொல்லியிருக்க முடியும் என்று மனம் நம்புகிறதே. அது போலத்தான். பொதுமனத்தில் பதிந்திருக்கும் ஒரு கதையைக் கவிதையின் ஒரு வரி முழுமையாக நினைவுக்குக் கொண்டு வந்துவிடும். அதுதான் இங்கும் நடக்கிறது.
அணில்களுக்குத்தான் மாதுளை என்பது மனத்தில் படிந்துவிட்டதால் மாதுளை முத்துக்களைக் குழந்தை தின்று பார்த்ததே இல்லை. அது மட்டுமல்ல, ‘இன்றுவரை தின்று பார்த்ததில்லை நான்’ என்கிறது கவிதை. குழந்தை வளர்ந்த பிறகும் அம்மாதுளை முத்துக்களைத் தின்னும் ஆவல் தோன்றவில்லை. கொல்லைப்புறத்து மாதுளையின் முத்துக்களைத் தின்று பார்த்ததில்லை என்றும் முடித்துக்கொள்ளலாம். எந்த மாதுளையின் முத்துக்களையும் தின்று பார்த்ததில்லை என்று விரித்தும் கொள்ளலாம். அம்மாவின் சொற்கள் அத்தனை வலுவாகப் பிஞ்சு மனத்தில் பதிந்திருக்கின்றன. இத்தோடு கவிதை முடியவில்லை. இன்னொரு முக்கியமான சம்பவத்தைச் சொல்கிறது. இந்தக் குழந்தை மனம் மாதுளை முத்துக்களைத் தின்று பார்க்க விரும்பவில்லை என்பது மட்டுமல்ல. அணில்களைத் தவிர யாருமே மாதுளையைத் தின்பதை விரும்புவதில்லை. ஒரு மாலையின் உல்லாச வேளையில் மாதுளையைப் பறிக்கிறான் மூத்த அண்ணன். வீட்டில் உள்ளோர் அனைவருமே மாதுளை அணிலுக்குத்தான் என்பதைத் தெரிந்து நடப்பவர்களே. எனினும் அதை மீற ஒரு மாலையின் உல்லாச வேளை அண்ணனுக்கு வாய்க்கிறது. ஆனால் அச்செயல் பிடிக்காமல் கல்லால் அண்ணனை அடிக்கிறது குழந்தை.
பல்லாண்டுகள் கழித்து அதை நினைவுகூரும் கவிமனம் அச்சம்பவத்திற்காக வருந்தவில்லை. மாறாக ‘இதில் எனக்கு இன்னும் பிடித்த விஷயம்’ அந்தக் கல்லால் அடித்ததுதான் என்று சொல்கிறது. வெறும் சம்பவ நினைவுகூரலாக நின்று போகாமல் அச்சம்பவத்தைக் கவித்துவமாக மாற்றுவது ‘இன்னும் பிடித்த விஷயம்’ என்னும் தொடர்தான். பொதுவாகத் தவறு என்று கருதப்படும் ஒரு செயல் சில சூழல்களால் மிகவும் பிடித்தமானதாக அமைந்துவிடும். அணில்களின் மேல் கொண்ட நேசம், அவை உணவுக்கு என்ன செய்யும் என்னும் பரிதாபம் ஆகியவை அண்ணனைக் கல்லால் அடித்ததைக்கூடப் பிடித்தமான விஷயமாக்கிவிடுகின்றன. இந்த மனோநிலையை எட்டுவதும் அதை எடுத்துக் காட்டுவதுமே கவிதையின் அடிப்படை. அதைச் செம்மையாக நிறைவேற்றி இருப்பதால் எனக்கு ‘இன்னும் பிடித்த கவிதை’ இது.