காளமேகத்தின் கலைமகள்

காளமேகத்தின் கலைமகள்
பாடல்:
(மூல வடிவம்)
வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு
வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள் – வெள்ளை
அரியா சனத்தி லரசரோ டென்னைச்
சரியா சனம்வைத்த தாய்.
சந்தி பிரித்த வடிவம்:
வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு
வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள் – வெள்ளை
அரியா சனத்தில் அரசரோ(டு) என்னைச்
சரியா சனம்வைத்த தாய்.
பொருள் முடிபு:
 வெள்ளை அரியாசனத்தில் அரசரோடு என்னைச் சரியாசனம் வைத்த தாய், வெள்ளைக் கலை உடுத்து வெள்ளைப் பணி பூண்டு வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பாள்.
பொழிப்புரை:
தூய சிம்மாசனத்தில் அரசரோடு என்னைச் சமமாக அமர வைத்து எனக்குச் சரியாசனம் வழங்கியவள் கலைமகளாகிய தாய். அவள் வெள்ளை ஆடை உடுத்தி வெள்ளை நிற நகைகள் அணிந்து வெள்ளைத் தாமரைப் பூவில் அமர்ந்திருப்பாள்.
அருஞ்சொற்பொருள்:
கலை – ஆடை; பணி – அணிகலன், நகை; கமலம் – தாமரை; அரியாசனம் – சிம்மாசனம், அரசர் அமரும் சிங்க முகம் கொண்ட பெரிய இருக்கை. சரியாசனம் – சமமான இருக்கை. தாய் – தாயாகிய கலைமகள்.
ஒப்புமை:
வெள்ளைக் கமலத்திலே – அவள் வீற்றிருப்பாள், புகழ் ஏற்றிருப்பாள் (பாரதியார்)
யார் கொடுப்பார் இந்த அரியாசனம் – புவி
அரசோடு எனக்கும் ஒரு சரியாசனம்
(கண்ணதாசன், சரஸ்வதி சபதம் திரைப்பாடல்.)
000
11-06-23