சென்னை, அண்ணாப் பல்கலைக்கழக மாணவிக்கு நேர்ந்த வன்கொடுமை குறித்த அதிர்ச்சி இன்னும் விலகவில்லை. அரசை நம்பக் கூடாது; நீதிமன்றத்தை நம்பலாம் போல. இதற்கு ஆளுங்கட்சிதான் காரணம் என்று எதிர்க்கட்சிகள் நிரூபிக்க முயல்கின்றன. ஆளுங்கட்சியோ தற்காப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுப் பல சொதப்பல்களைச் செய்கிறது. பாலியல் வன்கொடுமை தொடர்பான பிரச்சினை வரும் போதெல்லாம் பொதுப்புத்தி கொண்ட சராசரி மனிதர்களின் குரலுக்கும் நீதிபதிகளின் குரலுக்கும் வித்தியாசம் காண முடியாத வகையில் பெண்களுக்கு அறிவுரை சொல்லும் காட்சிகள் பல சமயங்களில் அரங்கேறியுள்ளன. இப்போது அப்படியல்ல.
‘பெண்கள் ஆண்களிடம் பேசக் கூடாது, பாதிக்கப்பட்ட மாணவி அந்த இடத்துக்குச் சென்றிருக்கக் கூடாது என்றெல்லாம் சொல்வது தவறு. பெண்ணுக்கு முழுச் சுதந்திரம் உள்ளது. காதலிப்பது பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரம்’ என்று நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.லட்சுமி நாராயணன் ஆகியோரைக் கொண்ட அமர்வு கூறியிருக்கிறது. அது மட்டுமல்ல, ‘பாதிக்கப்பட்ட பெண்ணைக் குற்றம் சாட்டுவது போல் முதல் தகவல் அறிக்கை உள்ளது. பெண்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப உடை அணிவதால் தான் இப்படி நடக்கிறது என்பது போல உள்ளது’ என்றும் காவல்துறையைக் கண்டித்திருக்கின்றனர்.
பெண் காவல் அதிகாரிகள் மூவர் கொண்ட குழுவை விசாரணைக்கு நியமித்தும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முதல் தகவல் அறிக்கையைப் பொதுவில் வெளியிட்டுப் பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளிப்படுத்தியதற்காக அப்பெண்ணுக்கு இருபத்தைந்து லட்சம் வழங்க வேண்டும் எனவும் இலவசக் கல்வி உள்ளிட்ட அனைத்துக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் சிறப்பான ஆணைகளை நீதிபதிகள் அமர்வு பிறப்பித்துள்ளது பெரிதும் வரவேற்க வேண்டிய செய்தி. நவீனப் பார்வை கொண்ட நீதிபதிகள் இத்தகைய வழக்குகளை விசாரித்தால் நல்ல முடிவுகள் கிடைக்கும் என்பதற்கு இது சான்று.
இந்தச் சம்பவம் குறித்த செய்தியை அறிந்ததும் எனக்குப் பல நினைவுகள் ஓடின. அவற்றில் ஒன்று சில ஆண்டுகளுக்கு முன் நான் எழுதி ‘மாயம்’ நூலில் இடம்பெற்ற ‘முத்தம்’ என்னும் சிறுகதை. இக்கதையைக் குறிப்பிட்டு நண்பர் வினோத் ராஜ் தம் முகநூல் பதிவில் கீழ்வருமாறு எழுதியிருந்தார்:
‘பெருமாள்முருகனின் ‘மாயம்’ சிறுகதைத் தொகுப்பில், ‘முத்தம்’ என்றொரு சிறுகதை உண்டு. மலையொன்றில், தனிமையில் சந்திக்க வரும் இளங்காதலர்களை இலக்காக வைத்து, அவர்களைச் செல்போனில் படம் பிடித்து மிரட்டிப் பணம் பறிப்பதையே தொழிலாகக் கொண்டிருப்பான் ஒருவன். அந்தக் கதையில், பணத்துக்காக மட்டுமே அதைச் செய்துக்கொண்டிருக்கும் அவன், ஒரு கட்டத்தில் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்வோம் என முடிவெடுத்து ஓர் இளம்பெண்ணிடம் அத்துமீற முயல்வான். அதை மையமாகக் கொண்ட கதை அது.
முதன்முதலாக அந்தக் கதையை வாசித்தபோது ஒரு பதற்றம் தன்னியல்பாக வாசிக்க வாசிக்கத் தொடர்ந்தது. இப்படியும் ஒருவன் இருப்பானா? இப்படியும் நடக்குமா? என்றெல்லாம் தோன்றியது. கற்பனையில், எத்தனை சாத்தியங்கள் இருக்கிறதோ அத்தனையும் நடந்தேறும் காலம் இது. அந்தக் கதையில் வரும் நபரைப் போன்ற மனிதர்கள், நம்மைச் சுற்றிச் சூழவே இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு செய்தியைப் பார்த்தேன்.
சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில், மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருக்கிறார். வளாகத்தினுள் நண்பரைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்த மாணவியை அடையாளம் தெரியாத ஒருவன் மிரட்டிப் பாலியல் துன்புறுத்தல் செய்திருக்கிறான்.’ (Vinoth Raj முகநூல் பதிவு, 25-12-24).
அந்தக் கதையை நினைவிலிருந்து அவர் எடுத்துக் காட்டியிருக்கிறார். அக்கதை முழுமையான கற்பனை அல்ல. தமிழ்நாடு சிறுசிறு குன்றுகளும் மலைத்தொடர்களும் அமைந்த இயற்கைச் சூழலைக் கொண்டது. குன்றுதோறும் குமரன் இருக்கிறான். கரடுகள் எனப்படும் மொட்டைப் பாறைக் குன்றுகளில் பெருமாள் கோயில் கொண்டிருக்கிறார். இவற்றில் சிறுவனமோ புதர்க்காடோ அங்கங்கே இருக்கும். கோயிலுக்குச் செல்லும் படிகள் தவிர்த்து மலையைச் சுற்றிலும் ஒற்றையடிப் பாதைகள் செல்லும். அவை காதலர்கள் கண்டுபிடித்து வைத்திருக்கும் இடங்கள். இத்தகைய இடங்களில் நடந்த பல சம்பவங்களைக் கேள்விப்பட்டிருக்கிறேன். அவற்றின் தாக்கத்தில் எழுதிய கதைதான் ‘முத்தம்.’
ஆண்களும் பெண்களும் இன்று கல்வி கற்கவும் பணிக்காகவும் வெளியுலகிற்கு வருகின்றனர். நகரத்து மனிதர்கள் மட்டுமல்ல, கிராமத்தவர்களும் நகரத்திற்கு வருகிறார்கள். முந்தைய காலம் போல ஒரே கிராமத்திற்குள் தம் வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் தலைமுறை அல்ல. கிராமத்திலிருந்து தினமும் சாரிசாரியாக நகரத்தை நோக்கி வரும் இருபாலரையும் காணலாம். அதன் காரணமாக ஆணும் பெண்ணும் சந்திப்பதும் பேசிக்கொள்வதும் நட்பாவதும் காதலிப்பதும் இயல்பாகியுள்ளன.
முந்தைய தலைமுறையின் விழுமியங்களை நவீன வாழ்வுக்கு ஏற்றிப் பார்க்கும் பழமை மனங்களுக்கு இவை உவப்பாக இல்லை. ஆணும் பெண்ணும் பேசினால் உறவு கொள்வதைப் பற்றித்தான் பேசுவார்கள், இருவரும் சேர்ந்து நடந்து போனால் உறவு கொள்ளத்தான் செல்வார்கள் என்று நம்புகிற முடைநாற்ற மனம் இன்னும் பலருக்கு இருக்கிறது. அவை அவர்களின் தனிப்பட்ட விஷயம், உரிமை என்னும் பார்வைக்குச் சமூகம் பழகவில்லை. அதை ஒழுக்கக் கேடு என்றுதான் பார்க்கிறது. ஆணும் பெண்ணும் சம்பந்தப்பட்டிருந்தாலும் பெண் மீதுதான் குற்றம் சேர்கிறது.
கிராமத்துக் கல்லூரிகளில் ஆசிரியராகப் பணியாற்றியவன் நான். அருகில் இருக்கும் ஊர் மக்களுக்குக் கல்லூரியைப் பற்றிய நல்லெண்ணம் சிறிதும் இருந்ததில்லை. தம் பிள்ளைகளை இந்தக் கல்லூரியில் சேர்க்க மாட்டேன் என்று என்னிடமே சொன்னவர்கள் உண்டு. பையன்களும் பெண்களும் ஜோடி போட்டுக் கொண்டு பேசியபடி சாலையில் நடந்து போகிறார்கள், கைகளைப் பற்றிக் கொள்கிறார்கள், தொட்டுப் பேசுகிறார்கள், சேர்ந்து சிரிக்கிறார்கள் என்றெல்லாம் காரணம் சொல்வார்கள். ‘காலம் கெட்டுப் போச்சு’ என்பது ஏகோபித்த கருத்து.
பதின்மூன்று பதினான்கு வயதில் எதிர்பாலினர் மீது ஈர்ப்பு வருவது இயல்பான விஷயம். அதை எல்லோரும் கடந்துதான் வந்திருப்பார்கள். ஆனால் அதைத் தவறு என்று கற்பித்து வைத்திருக்கிறோம். ஆகவே இளையோர் தம் ஈர்ப்பை வெளிப்படுத்திக் கொள்ளத் தயங்குகிறார்கள். வளர்ந்தோருக்கான வயது எனப் பதினெட்டை வைத்திருக்கிறோம். அந்த வயதிலாவது காதலிப்பதை அனுமதிக்கிறோமா? இல்லை. ஆகவே தம் உணர்ச்சிகளை மறைத்துக் கொள்வதும் மறைவில் வடிகால் தேடுவதும் வழக்கமாகி இருக்கிறது.
இப்போது காதலிப்பதற்கான வாய்ப்பு கூடுதல். காதலர்கள் சந்தித்து அருகருகே அமர்ந்து உரையாடுவதற்கோ கையைப் பற்றிக் கொள்வதற்கோ ஆசையாய் ஒரு முத்தமிட்டுக் கொள்வதற்கோ இடமில்லை. அத்தகைய பொதுவெளிகளை நாம் உருவாக்கவில்லை. நமக்குக் கிடைத்திருக்கும் பொதுவெளிகள் எல்லாம் யாராலோ எந்நேரமும் கண்காணிக்கப் படுவனவாகவே உள்ளன. காதலர்களைக் கண்டால் எந்தச் சம்பந்தமும் இல்லாதவர்கள் கூடக் கோபிக்கிறார்கள். இழிவாகப் பேசுவார்கள்.
அதன் காரணமாகக் காதலர்கள் புதர்களையும் அடர்ந்த இருட்பகுதிகளையும் நாடிச் செல்கிறார்கள். அவற்றைக் கவனித்து வைத்திருக்கும் சமூக விரோதிகள் சிலர் தனியாகவோ கூட்டாகவோ சென்று அச்சுறுத்திக் காதலர்களிடம் இருக்கும் பொருட்களைப் பறிக்கிறார்கள். அந்தச் சந்தர்ப்பத்தில் ஆணை மிரட்டிப் பணிய வைத்துவிட்டுத் தனித்திருக்கும் பெண்ணிடம் வன்முறையில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் வெளியில் சொல்வதில்லை. சொன்னால் குடும்பம், சமூகம் உள்ளிட்ட அனைத்தும் சேர்ந்து அப்பெண்ணையே குற்றம் சாட்டும். அது சமூக விரோதிகளுக்குத் தைரியம் கொடுக்கிறது.
காதல், காமம் பற்றியும் பெண்ணைப் பற்றியுமான கருத்தோட்டங்களில் மாற்றம் வர வேண்டும். அவற்றை இயல்பென்று அங்கீகரிக்கும் மனநிலை உருவாக வேண்டும். காதலை எதிர்க்கும் சாதிய மனோபாவம் அழிய வேண்டும். ஆண் என்னும் திமிர் அடங்க வேண்டும். அதுவரைக்கும் இப்படி எத்தனை செய்திகளைக் கேட்டு அதிர்ச்சி அடையப் போகிறோமோ?
‘முத்தம்’ கதையின் நாயகன் கொஞ்சம் நல்லவன். அதனால் கதை இப்படி முடிகிறது:
‘தோள் மேலிருந்த முந்தானையில் குத்தியிருந்த ஊக்குகளை வேர்த்து வழியும் விரல்களால் கழற்றிவிட்டு அவள் சேலையை மெல்ல அவிழ்க்கும்போது அவளையே பார்த்தான். ஈர்க்கும் உடம்புதான். தான் உணரப் போகும் முதல் உடம்பு இது என்னும் எண்ணம் தோன்றியது. நல்ல அழகி என்றும் நினைத்தான். அவளை இறுக அணைத்துக்கொள்ள வேண்டும் போல உடல் தவித்தது. தன் புதருக்குக் கூட்டிக்கொண்டு போய்விடலாம் என்று நினைத்தான். வருவாளா, உயிரே போனாலும் வர மாட்டேன் என்று வசனம் பேசுவாளா? கத்தியை அவன் கழுத்துக்கு மாற்றினால் மசிந்துவிடுவாள். சில நொடிகளில் அவனுக்குள் திட்டங்கள் அடுத்தடுத்து உருவாயின. சேலையைக் கீழே முழுக்க அவிழ்க்காமல் குனிந்து அவன் கால்களில் சுற்றப் போனவள் ஏறெடுத்து முருகேசுவின் முகத்தைப் பார்த்தாள்.
‘அண்ணா உட்ருண்ணா. இன்னைக்கு இவனுக்குப் பொறந்த நாளுண்ணா. எதுனா நல்ல பரிசாக் குடுக்கலாம்னு பாத்தா எங்கிட்ட எதுவும் இல்ல. வாங்கப் பணமில்லைண்ணா. அதான் ஆசையா ரொம்ப நாளாக் கேக்கறானேன்னு ஒரே ஒரு முத்தம் மட்டும் குடுத்தண்ணா… மத்தபடி நான் அந்த மாதிரி பொண்ணில்லண்ணா….’ என்றாள். அவள் அழுகை கூடிற்று. ‘இதுதான் மொத முத்தம்ணா… அவன் ஒதடு இன்னம் ஒட்டிக்கிட்டு இருக்கற மாதிரியே இருக்குதுண்ணா…’ என்று சொல்லிக் குனிந்துகொண்டாள். அவள் விசும்பல் ஒலி மட்டும் கேட்டது.
ஒருநொடி நிதானித்து அவள் மயிரை விட்டுத் தள்ளிய முருகேசு ‘போய்த் தொலைங்க’ என்று சொல்லிவிட்டுச் சட்டெனத் தன் வழியில் ஓடிப் புதருக்குள் மறைந்து போனான்.’
—– 30-12-24
அவசியமான நேரத்தில் அவசியமான பதிவு.
ஒரு நொடி நிதானித்த முருகேசு மாதிரி எல்லோரும் இருந்தட்டாங்கனா யாருக்கும் எந்த காதலர்களுக்கும், நண்பர்களுக்கும் பிரச்சனை இல்லைங்க ஐயா. யதார்த்தத்தை தங்களின் புனைவில் சுட்டிக்காட்டிய விதம் அருமை.