1966ஆம் ஆண்டு அக்டோபர் 15 அன்று பிறந்தேன். அந்த ஆண்டு புரட்டாசி மாதம் சனிக்கிழமையில் தொடங்கியது. ஆகவே ஐந்து சனிக்கிழமையும் புரட்டாசியிலேயே வந்தன. ஒன்றாம் தேதி முதல் சனி. 29 ஐந்தாம் சனி. புரட்டாசியில் ஐந்து சனிக்கிழமை வருவது அபூர்வம். ஐந்தாறு ஆண்டுக்கு ஒருமுறை அப்படி வரும். அக்டோபர் 15உம் புரட்டாசி 29உம் இணைந்து சனிக்கிழமையாக இருக்கும். ‘இன்னைக்குத்தான் நீ பொறந்த’ என்று அம்மா தவறாமல் சொல்வார். இப்படி அம்மா சொல்வதால் நான் பிறந்தது புரட்டாசி மாதம் ஐந்தாம் சனிக்கிழமை என்பது சிறுவயதிலேயே தெரியும். ஆண்டும் தெரியாது; ஆங்கிலத் தேதியும் தெரியாது; தமிழ்த்தேதியும் தெரியாது. எல்லாவற்றையும் இணைத்துப் புரிந்துகொள்ளும் அறிவு சிறுவயதில் ஏது?
அப்போது பிறப்பைப் பதிவு செய்யும் வழக்கம் இல்லை. பிறப்புச் சான்றிதழும் கிடையாது. இந்த பிரிகேஜி, எல்கேஜி எதுவும் இல்லாத காலம். ஒன்றாம் வகுப்பில் சேர ஐந்து வயது முடிந்திருக்க வேண்டும். பள்ளிச் சேர்க்கை நடக்கும் ஜூன் மாதத்தில் எனக்கு நாலரை வயதுதான். அதனால் பள்ளியில் சேர்க்கவில்லை. 1971 ஜூன் மாதச் செவ்வாய்க் கிழமை ஒன்றில் எங்களூர்ச் சந்தையில் செலவுப் பொருட்கள் வாங்கப் போகும்போது அம்மா என்னையும் உடனழைத்துச் சென்றார். திரும்பும்போது தலையில் சந்தைக் கூடை; இடுப்பில் நான். வெகுதூரம் நடக்க முடியாததால் என்னையும் தூக்கி வைத்துக்கொண்டார்.
வழியில் தான் அண்ணன் படிக்கும் இராஜாக்கவுண்டம் பாளையம் நகராட்சித் தொடக்கப் பள்ளி. ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். பள்ளி முடிவதற்கு இன்னும் கொஞ்ச நேரம்தான் இருந்தது. கடைசி மணி நேரம் விளையாடுவதற்கு விடுவார்கள். அப்போதே சொல்லிக் கூட்டிப் போய்விடலாம் என்பது அம்மாவின் திட்டம். அவனையும் கூட்டிக்கொண்டு போனால் கொஞ்ச தூரம் சந்தைக்கூடையைச் சுமக்க ஆள் கிடைக்கும். அங்கிருந்து எங்கள் வீடு செல்ல கிட்டத்தட்ட நான்கு கல் தூரம். பள்ளிக்கு எதிரே இருந்த வேம்படியில் கூடையையும் என்னையும் இறக்கி வைத்துவிட்டு உட்கார்ந்தார். அவன் வருகைக்காகக் காத்திருந்தோம்.
பள்ளியில் இரண்டு கட்டிடம் உண்டு. ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, மதிய உணவுக்கூடம் ஆகியவை இருந்த கட்டிடம் ஒன்று. மூன்று, நான்கு, ஐந்து ஆகிய வகுப்புகள் இன்னொரு கட்டிடத்தில் இருந்தன. இரண்டுக்கும் நடுவில் சிறுதோட்டம். ஒன்றாம் வகுப்பு ஆசிரியர் பத்மா டீச்சர் என் அம்மாவுக்கு நன்கு தெரிந்தவர். அம்மாவுக்கும் அவருக்கும் ஒரேவயதுதான். பத்மா டீச்சருக்கு எங்கள் ஊரில் சொந்தக்காரர்களும் உண்டு. நாங்கள் மரத்தடியில் உட்கார்ந்திருந்த சமயத்தில் ஒன்றாம் வகுப்புக் கட்டிடத்தில் இருந்து ஏதோ வேலையாக இன்னொரு கட்டிடத்திற்கு டீச்சர் போனார். மரத்தடியில் உட்கார்ந்திருந்த எங்களைப் பார்த்ததும் வந்து அம்மாவிடம் பேசினார். என் மேல் டீச்சரின் அருட்கடாட்சம் விழுந்தது.
‘இவனப் பள்ளிக்கூடத்துல சேக்கலயா?’ என்று கேட்டார்.
‘அஞ்சு முடியலியே’ என்றார் அம்மா.
‘இன்னம் ஒருவருசம் ஊட்டுல வெச்சிருக்கப் போறயா?’
என்றபடி என்னை அருகில் அழைத்த டீச்சர் என் வலக்கையை எடுத்துத் தலைமேல் வைத்து அடுத்த பக்கக் காதைத் தொடச் சொன்னார். நடுவிரல் காதில் பட்டும் படாமல் நின்றது. சற்றே கையை முன்பக்கம் சரித்துத் தொடும்படி செய்தார். என் அண்ணனுக்குப் பள்ளியில் ‘குள்ள ராமசாமி’ என்று பெயர். அவன் தம்பியும் குள்ளமாகத்தானே இருப்பான்?
‘சார்கிட்ட நான் பேசிக்கறன். குள்ள ராமசாமி தம்பின்னு சொன்னா சேத்துக்குவாரு. நீ அஞ்சு வயசு முடிஞ்சுடுச்சுன்னு மட்டும் சொல்லு’ என்று அம்மாவிடம் சொன்னார் டீச்சர்.
சந்தைக் கூடையோடு தலைமையாசிரியர் அறைக்குச் சென்றோம். அவரிடம் டீச்சர் பேசியதோடு சரி. அம்மாவை அவர் எதுவும் கேட்கவில்லை. என்னையும் காதைத் தொடச் சொல்லவில்லை. பெயரை மட்டும் அம்மாவிடம் கேட்டு எழுதிய டீச்சர் பிறந்த நாளை அவரே எழுதிக்கொண்டார். என்ன மாதம், தேதி போட்டார் என்று தெரியாது. ஐந்தாம் வகுப்பு முடித்து மாற்றுச் சான்றிதழ் வாங்கிக் கொண்டு போய் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் சேரும்போது பார்த்தேன். 18 மார்ச் 1966 என்று பிறந்த நாள் எழுதியிருந்தது. ஏழு மாதம் முன்னதாகப் போட்டு டீச்சர் எழுதியிருந்தார். அதுதான் என் பிறந்த நாள் என்று கொஞ்ச காலம் நம்பியிருந்தேன். அதைச் சொன்னால் அம்மா திட்டுவார்.
‘பெத்தவ எனக்குத் தெரியாதா? பொரட்டாசி மாசந்தான் பொறந்த. பங்குனின்னு அந்த பத்மா டீச்சர் எழுதீட்டா. அதுக்கென்ன பண்றது?’
ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது வகுப்பு நண்பன் ஒருவன் தன் பிறந்த நாள் அன்று கோயிலுக்குப் போய்விட்டு வந்து எல்லோருக்கும் ஆரஞ்சு மிட்டாய் கொடுத்தான். அப்போதுதான் பிறந்த நாளை இப்படியெல்லாம் கொண்டாடலாம் போல என்று தெரிந்தது. அந்த வருசம் என் பிறந்த நாளுக்கும் மிட்டாய் கொடுக்க வேண்டும் என ஆசையாக இருந்தது. வீட்டுக்கு வந்து என் பிறந்த நாளைச் சரியாகச் சொல்லும்படி கேட்டு அழுது அடம் பிடித்தேன். காரியம் சாதிக்க உண்ணாவிரதம் இருப்பது என் சிறுவயதுப் பிடிவாதம். அன்றைக்கு இரவு உணவு உண்ணவில்லை.
வெளியூரில் சோடாக்கடை வைத்திருந்த அப்பன் அன்றிரவு தாமதமாகத்தான் வீட்டுக்கு வந்தார். தலைகண்ட போதை. எப்படியிருந்தாலும் ‘பசவ சோறு தின்னாங்களா?’ என்று விசாரிப்பது அவர் வழக்கம். அன்றைக்கும் விசாரித்தார். அம்மா விவரத்தைச் சொன்னதும் பசிமயக்கத்தில் கிறங்கித் தூங்காமல் கிடந்த என்னை வந்து கட்டித் தூக்கினார். சாராய வாடை பிடிக்காமல் ‘உடுப்பா’ என்று துள்ளி விடுபட்டேன்.
அப்பன் சொன்னார், ‘உனக்கும் உங்கண்ணனுக்கும் பொறந்த தேதி குறிச்சுக் குடுத்து ஜோசியகாரன் குறிப்பு எழுதி வெச்சிருக்கறான். அவனுக்குக் காசு குடுக்கல. எங்காச்சும் சந்த சாரியில பாத்தா வந்து வாங்கிக்கன்னு சொல்லுவான். நாந்தான் போவுல. நாளைக்கே வாங்கிக்கிட்டு வந்து குடுக்கறன். நீ படிச்சுப் பாத்துத் தெரிஞ்சுக்கோ.’
‘குறிப்பு’ என்பது ஜாதகத்தைக் குறிக்கும் வட்டார வழக்குச் சொல். பொதுவழக்கில் இதற்குத் தமிழ்ச்சொல் ஏதுமில்லை என்றுதான் நினைக்கிறேன். கொங்குப் பகுதியில் ‘குறிப்பு’தான் பல காலமாக வழங்கி வருகிறது. பேச்சில் ‘குறுப்புப் பாக்கப் போறன்’, ‘குறுப்பு எழுதி வெச்சிருக்கறயா?’, ‘அந்தக் காலத்துல வசதி இருக்கறவங்க குறுப்பு எழுதி வெப்பாங்க. நம்மளுக்கெல்லாம் குறுப்பு ஏது?’ என்றெல்லாம் தாராளமாக இச்சொல் புழங்கும். பல ஆண்டுகளுக்கு முன் எழுதி ஜோதிடர் வீட்டில் உறங்கும் என் குறிப்பை வாங்கினால் பிறந்த நாள் தெரிந்துவிடும். இப்படி எளிய வழி ஒன்று இருப்பதைக் கேட்டதும் மகிழ்ச்சியாயிற்று. ஆனால் பல ஆண்டுகளாக வாங்காத குறிப்பை ஜோதிடர் பாதுகாப்பாக வைத்திருப்பாரா?
அடுத்த நாள் அப்பனுடன் நானும் கிளம்பிவிட்டேன். ஆளுக்கொரு மிதிவண்டி. அவர் கடை வைத்திருந்த கரிச்சிபாளையம் என்னும் ஊருக்குப் போகும் வழியில் முதன்மைச் சாலையிலிருந்து பிரிந்து எங்கோ உள்ளே கூட்டிப் போனார். அந்தக் கிராமத்தின் பெயர் இப்போது நினைவில் இல்லை. அங்கே ஓலையும் அதன் மேல் கம்மந்தட்டையும் வேய்ந்திருந்த ஒருவீட்டுத் திண்ணையில் ஜோதிடர் இருந்தார். அவரிடம் குறிப்புப் பார்க்க எதிர்த் திண்ணையில் சிலர் உட்கார்ந்திருந்தனர்.
‘உன்னாட்டம் இருந்தா நாங்கெல்லாம் எப்பிடிப்பா பொழைக்கறது? வட்டி போட்டுக் காசு குடு’ என்று சிரித்தும் திட்டியும் வரவேற்ற ஜோதிடர் வீட்டுக்குள் போய் மழைக்காகிதப் பைக்குள் போட்டு வைத்திருந்த இரண்டு குறிப்பு நோட்டுக்களையும் எடுத்து வந்து கொடுத்தார். அவரிடம் ஏதோ பேரம் பேசி ஒருதொகையைக் கொடுத்துவிட்டு அப்பன் திரும்பினார். ஜோதிடரிடமே பிறந்த நாளைக் கேட்கலாமா என்று நினைத்தேன். அவரிடம் ஜாதகம் பார்க்க ஆட்கள் காத்திருந்தனர். இந்த அவசரத்தில் பார்த்துச் சொல்வாரா என்று தெரியாது. ‘படிச்ச பையந்தான? நீயே படிச்சுக்க மாட்டயா?’ என்று கேட்டுவிட்டால் அவமானமாகப் போய்விடுமே என்று தயக்கமாகவும் இருந்தது.
அப்பன் அப்படியே கடைக்குப் போய்விட்டார். வீட்டுக்கு வந்ததும் ஜாதக நோட்டைப் பிரித்து ஜோதிடர் சாய்த்துச் சாய்த்தும் அங்கங்கே கூட்டெழுத்தாகவும் எழுதியிருந்த கிறுக்கலை மெதுவாக வாசித்தேன். அதில் என் பிறந்த நாளைப் பற்றிய குறிப்பு இரண்டு இடங்களில் காணப்பட்டது.
‘நிகழும் பராபவா வருஷம் புரட்டாசி மாதம் 29ந்தேதி சனிக்கிழமை காலை 8 மணி 35 நிமிஷத்திற்கு கூட்டப்பள்ளியில் இருக்கும் பெருமாள் கவுண்டர் மனைவி பெருமாய் அம்மாளுக்கு பூர்வ புண்ய குமாரன் ஜனனம்.’
‘…இங்கிலீஸ் 1966ம் வருஷம் அக்டோபர் மாதம் 15ந் தேதிக்குச் சரியான தமிள் பரபவா வருஷம் நாமசென்மச்சரம் தட்சிணாயனம் புண்ணிய காலமாகிய வஸந்த ருது காலை கன்னியா மதாமாகிய புரட்டாசி மாதம் 29ந் தேதி சனிக்கிழமை அன்ரு காலை 8 மணி 35 நிமிஷத்திற்கு… சுபதினத்தில் மகாள. ள. ஸ்ரீ கூட்டப்பள்ளியில் இருக்கும் பெருமாள் கவுண்டர் அவர்கள் குடும்ப சவுபாக்கிய பதியாகிய பெருமாய் அம்மாளுக்கு கெற்ப்பமாகிய பார்க்கடலில் பள்ளிகொண்ட திவ்ய பூரணச் சந்திரன் உதயமானது போல் பூர்வ புண்ணிய குமாரன் ஜன்னம்.’
‘திவ்ய பூரணச் சந்திரன் உதயமானது போல்’ பிறந்தேனாம். அன்றைய வானில் ஏதேனும் புதிய நட்சத்திரம் உதித்துக் கண்சிமிட்டியதோ என்னவோ. ஜாதகம் மூலமாகப் பிறந்த நாளை மட்டுமல்ல, என் இறப்பு நாளையும் தெரிந்துகொண்டேன். ஜாதகத்தின் ஒருபக்க முடிவில் எழுதியிருந்த வாசகம் இது:
‘இந்த லெக்குனத்தை சுபர்களாகிய சந்திரன், புதன், குரு, சுக்கிரன் இவர்கள் பார்க்கில் 90 வயது வரையிலும் இருந்து ஆனி மாதம் சுக்கில பட்சம் துவாதச திதி சனிவாரமும் பொருந்திய மாலை வேளையில் நிச்சயமாய் இறந்து போவான்.’
இறப்பும் சனிக்கிழமையில் தான். பிறந்தது புரட்டாசிச் சனி. இறப்பது ஆனிச் சனி. பிறப்பு முதல் இறப்பு வரை சனி விடாது போல. பிறந்தது காலை வேளை. இறப்பது மாலை வேளை. ஆனால் தொண்ணூறு வயது ஆயுள் இருக்கிறது என்று மகிழ்ச்சியடைய முடியாதாம். அதற்கு முன் ஒவ்வொரு வருசத்திலும் கண்டம் இருக்கிறதாம். இத்தனாம் வயதில் குளிர் ஜுரம் வரும், இந்த வயதில் விபத்து ஏற்படும் என்றெல்லாம் கண்டத்தையும் விரிவாக எழுதியிருந்தார் ஜோதிடர். அவற்றை எல்லாம் ஒருவழியாகக் கடந்து வந்தால் இது கடைசி நாளாம்.
நான் ஜோதிடத்தை நம்புவன் அல்ல. அதைப் பொய்ப்பிக்க வேண்டுமானால் தொண்ணூறாம் வயது ஆனி மாதத்தைக் கடந்து வாழ வேண்டும். ஆசையாகத்தான் இருக்கிறது. நீண்ட காலம் வாழ வேண்டும் என்று யாருக்குத்தான் ஆசை இருக்காது? ‘நூறாண்டு வாழ்க!’ என்று யாரேனும் சொன்னால் ‘எனக்குத் தொண்ணூறு தான்’ என்று மனதிற்குள் சொல்லிக் கொள்வேன். கஞ்சக் கடவுளே, வாழ்த்துக்காவது இன்னும் பத்து வருசம் கூட்டி நூறு வயது கொடுத்திருக்கக் கூடாதா?
—– 15-10-2024
Comments are closed.