மனதில் உறுதி வேண்டும்

You are currently viewing மனதில் உறுதி வேண்டும்

 

 

தமிழில் பிழையின்றி எழுதுதல் தொடர்பாக இணையத்தில் குறிப்புகள் தரும் தமிழாசிரியர் ஒருவர்  ‘மனம்’ என்னும் சொல் பற்றிப் பேசியதைக் கேட்டேன்.  ‘மனம் + அத்து + இல் = மனத்தில்’ என்று வருவதுதான் சரி என்கிறார். ‘மனதில்’ என்பதைப் பெருமளவு பரப்பியது பாரதியார் எழுதிய பாடல்தான்.

மனதில் உறுதி வேண்டும்

வாக்கினிலே இனிமை வேண்டும்

இதில் வரும் ‘மனதில்’ என்பது தவறு; மனத்தில் உறுதி வேண்டும் என்பதே சரி என்கிறார். ‘மனத்தில் உறுதி வேண்டும்’ என்று சொல்லிப் பார்க்கிறேன். ஓசை நயமாக இல்லை. ‘மனதில் உறுதி வேண்டும்’ என்பது இலகுவாக இருக்கிறது. ‘மனத்தில் உறுதி வேண்டும்’ என்று அழுத்தமாகச் சொன்னால் தானே உறுதி வரும் என்று சொல்வோரும் இருக்கலாம். எனக்கென்னவோ  ‘மனதில் உறுதியே’ நன்றாக இருக்கிறது.

இப்பாடலைச் ‘சிந்துபைரவி’ படத்தில் ஜேசுதாஸ் பாடியிருக்கிறார். ‘மனதில் உறுதி வேண்டும்’ என்றொரு திரைப்படத்திற்கும் கே.பாலசந்தர் தலைப்பிட்டார். கர்நாடக சங்கீதப் பாடகர்கள் பலரும் இப்பாடலைப் பாடியுள்ளனர். திரைப்பாடல்களில் மனது, மனதை, மனதில் ஆகியவை சாதாரணமாக இடம்பெற்றிருக்கின்றன. அ.மருதகாசி எழுதிய ‘கண்ணை நம்பாதே’ பாடலில் ‘என் மனதை நானறிவேன்’ என்று ஒருவரி வரும்.  ‘என் மனது ஒன்றுதான் உன்மீது ஞாபகம்’,  ‘எங்கே எங்கே என் மனது அது அங்கே இருந்தால் தந்துவிடு’,  ‘என் மனதைக் கொள்ளையடித்தவளே’ என்று எத்தனையோ பாடல்கள்.

வழக்கிலும் திரைப்பாடல்களிலும் ‘மனசு’ ஏராளம். ‘மனசாரச் சொல்லு’ என்று கேட்பதுண்டு. ‘மனதார வாழ்த்துகிறேன்’ என்பதும் பெருவாரியான வழக்குத்தான். ‘பொண்ணுக்குத் தங்க மனசு’ என்றொரு பாடலும் உண்டு. அதே தலைப்பில் திரைப்படமும் வந்தது. ‘மனசுக்கேத்த மகராசா’ எனத் திரைப்படமும் வந்திருக்கிறது. மனசுக்கும் பல சான்றுகள் தரலாம். இவையெல்லாம் பிழைகள் என்றால் ஒருபோதும் திருத்த முடியாது. எங்கெல்லாம் சென்று திருத்துவது? யாரையெல்லாம் திருத்துவது? தமிழ்ப் பேரகராதியில் மனசு, மனது, மனம் ஆகிய மூன்று சொற்களும் இடம்பெற்றுள்ளன.

மனதில் உறுதி வேண்டும்

நான் ‘மனதில்’ என்றுதான் எழுதி வருகிறேன். என் எழுத்தில் ‘மனத்தில்’ என்று எங்கேனும் இருக்குமானால் மெய்ப்புத் திருத்துநர் செய்த வேலையாக இருக்கக் கூடும். என் நூல்கள் சிலவற்றுக்குச் செம்மையராகச் செயல்பட்ட நஞ்சுண்டனுடன் இதைப் பற்றி ஒருமுறை பேச்சு வந்தது.

‘நீங்கள் தமிழாசிரியர். நீங்களே மனதில் என்று பிழையாக எழுதலாமா?’ என்று அவர்  கேட்டார்.

‘மூலச்சொல்லை மனம் என்றுதான் கொள்ள வேண்டுமா? மனது என்றெடுத்துக் கொண்டால் என்ன?’ என்றேன்.

‘மனது பேச்சு வழக்குத்தானே?’

‘அப்படியானால் மனசு?’

‘ஆம். மனதுதான் மனசு என்று பேச்சு வழக்கில் வந்திருக்க வேண்டும்.  மனம் என்பது?’

‘ஒரு சொல்லுக்கு இருவடிவம் இருக்கக் கூடாதா? மனத்தில் என்பதன் மூலம் மனம். மனதில் என்பதன் மூலம் மனது.’

என் விளக்கத்தை அவர் ஏற்றுக்கொண்டு சொன்னார்.

‘சுந்தர ராமசாமிகூட மனதில் என்றுதான் எழுதுகிறார். அதை மனத்தில் என்று மாற்றலாமா எனக் கேட்டேன். மனதில் என்றே இருக்கட்டும் எனச் சொல்லிவிட்டார். அவர் விளக்கம் சொல்லவில்லை.’

‘ஏற்றுக்கொண்டீர்களே, உங்களுக்குப் பெரிய மனது’ என்றேன்.

சிரித்தார். இவ்விஷயத்தில் தமிழாசிரியர்களும் மனது வைத்தால் நல்லது.

—–   20-11-24

Latest comments (4)

தியடோர் பாஸ்கரன்

”கள்வனின் காதலி’ படத்தில் செளந்தரராஜன் இந்த பாடலை பாடியுள்ளார்.

நா. முத்துநிலவன்

மனதார / மனசார வாழ்த்தி வரவேற்கிறேன் அய்யா! இந்தக் கருத்தையே நானும் எனது “தமிழ் இனிது” நூலில் எழுதியிருக்கிறேன். நன்றி.