தமிழ் அறிக: சொன்னது நீதானா?

 

 

தமிழ் அறிக: சொன்னது நீதானா?

தலைப்பைப் பார்த்துத் தேர்தல் காலக் கேள்வி இது என்று யாரும் கருதிவிட வேண்டாம். அரசியல்வாதியைப் பார்த்து மக்கள் கேட்கும் கேள்வி போலவோ ஒரு அரசியல்வாதி இன்னொரு அரசியல்வாதியை நோக்கிக் கேட்கும் கேள்வி போலவோ தொனிப்பது தற்செயல். ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்திற்காகக் கண்ணதாசன் எழுதிய பிரபல பாடல் ‘சொன்னது நீதானா?’ என்பது எல்லோருக்கும் தெரியும். அதைத் தலைப்பாக்கியிருக்கிறேன். அவ்வளவுதான். தேர்தல் பற்றிச் சமூக ஊடகங்களில் பேசினாலே எச்சரிக்கை, நீக்கம் என்றெல்லாம் நடவடிக்கைகள் வருகின்றன என்கிறார்களே? நமக்கெதற்கு அந்த வம்பெல்லாம்? ஆகவே இது வேறு பேச்சு.

000

தமிழ் அறிக: சொன்னது நீதானா?

ஒருதொடரில் இடம்பெறும் சொற்கள் முன்பின் மாறுவதால் பொருள் குழப்பம் ஏற்படுவதுண்டு. சூழல் சார்ந்து பொருளைப் புரிந்து கொள்ளலாம் என்றாலும் சரியான இடத்தில் சொற்களைப் பொருத்துவது அத்தனை சிரமமல்ல. எழுதியதை இரண்டாம் முறை வாசித்துப் பார்த்தால் இச்சிறு குழப்பத்தைச் சரிசெய்து விடலாம். செம்மையரோ பிழை திருத்துநரோ இருந்தால் அவர்கள் சரிப்படுத்தலாம். ஆனால் மொழிச் செம்மையில் நாம் குறைந்த அளவுகூட கவனம் செலுத்துவதில்லை.

இன்று ஒருநூலை வாசித்துக் கொண்டிருந்தேன். அதில் ஒருபத்தி இப்படித் தொடங்கியது:

‘அவள் சொன்னதைச் சரியாகச் செய்தாள்.’

இந்தத் தொடரை மட்டும் வாசிக்கும் ஒருவர் என்ன பொருள் கொள்ள முடியும்?  ‘தான்  ஏதோ செய்யப் போவதாக அவள் சொல்லியிருக்கிறாள்; சொன்னபடி சரியாகச் செய்தாள்’ என்றுதானே பொருள் வரும்? முதல் பத்தியைக் கவனமின்றி வாசித்து வந்திருந்தாலும் இப்படித்தான் பொருள் கொள்ள வாய்ப்பிருக்கிறது. நான் ஓரளவு கவனத்தோடுதான் வாசித்து வந்தேன். என்றாலும் இவ்வரியைப் படித்ததும் ஐயம் ஏற்பட்டது. சொன்னது யார்? அவளா? இன்னொருவரா? கதையில் இருவருக்கான உரையாடல் வந்து கொண்டிருந்தது. ஆகவே இந்த ஐயம். ‘சொன்னது நீதானா?’ என்று கதையில் வரும் இருவரையும் பார்த்துக் கேட்க வேண்டியதுதான்.

மீண்டும் முதல் பத்திக்குப் போனேன். ‘இப்படிச் செய்’ என்று ஒருவர் சொல்லும் கட்டளைத் தொடர் முதல் பத்தியில் இருந்தது. அவர் சொன்னதை அவள் சரியாகச் செய்தாள். சொல்முறை தன்மையில் அமைந்த கதை. இருபத்திக்கும் இணைப்பு கொடுத்தால் அந்தத் தொடர் இப்படி அமைய வேண்டும்:

‘சொன்னதை அவள் சரியாகச் செய்தாள்.’

இன்னும் தெளிவு வேண்டுமானால் இப்படி அமையலாம்:

‘நான் சொன்னதை அவள் சரியாகச் செய்தாள்.’

அக்கதையில் ‘அவள்’ ஏற்கனவே அறிமுகமானவள். ஆகவே அவளை விட்டுவிட்டும் தொடரை அமைக்கலாம்.

‘நான் சொன்னதைச் சரியாகச் செய்தாள்.’

இன்னொரு முறையிலும் எழுதுவோர் உண்டு. இவ்விதம்:

‘அவள் நான் சொன்னதைச் சரியாகச் செய்தாள்.’

‘அவள்’ என்பதை அடுத்து ‘நான்’ வருவது இயல்பாகத் தோன்றவில்லை. ‘அவள்’ என்பதை அடுத்து ஒரு காற்புள்ளி போடுவோரும் உண்டு. எதுவும் பிழை இல்லை என்றும் வாதிடலாம். நானும் பிழை என்று சொல்ல வரவில்லை. என் தேர்வு இதுவாகத்தான் இருக்கும்: ‘நான் சொன்னதைச் சரியாகச் செய்தாள்.’

—–   31-03-24

Add your first comment to this post

Comments are closed.