கூளமாதாரி : மயிலன் ஜி சின்னப்பன் முன்னுரை

You are currently viewing கூளமாதாரி : மயிலன் ஜி சின்னப்பன் முன்னுரை

 

 

2000ஆம் ஆண்டு ‘கூளமாதாரி’ நாவல் ‘தமிழினி’ பதிப்பகம் மூலமாக வெளியாயிற்று. அதன் பிறகு 2007 முதல் தொடர்ந்து காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டு வருகிறது. இப்போது பத்தொன்பதாம் பதிப்பு வந்திருக்கிறது. அது மட்டுமல்ல,  ‘தமிழ் கிளாசிக் நாவல்’ வரிசையில் இடம்பெற்றிருக்கிறது. இப்பதிப்புக்கு ரோஹிணி மணி அழகிய அட்டை வடிவமைத்திருக்கிறார். எழுத்தாளர் மயிலன் ஜி சின்னப்பன் அருமையான முன்னுரை எழுதியிருக்கிறார். ரோஹிணி மணிக்கும் மயிலனுக்கும் காலச்சுவடு பதிப்பகத்திற்கும் நன்றி. அம்முன்னுரை இது.

உள்ளிருந்தே மீண்டெழாத உதிரிகள்

ஏதிலிகளின் துயரங்களைக் கலைப் படைப்பிற்குள் கொண்டுவருவதற்கு எதிரான குரல்கள் தொடர்ந்து முழங்கிக்கொண்டுதான் இருக்கின்றன. அப்படியான படைப்புகளை வெறும் உணர்வுச் சுரண்டல் என்று தேக்கிவிடும் விமர்சனப் பார்வையைத் தாண்டி, வேறொன்றை அக்குரல்கள் முன்வைக்கின்றன. கலை வடிவம் சமூகத்தில் அரசியற்படுத்த வேண்டும் என்ற அளவிலான நியாயங்களும் தருக்கங்களும் அவற்றில் உண்டு; கறாரான நிறுவைகளும் கூட. அவை ஒரு பக்கம். புனைவுக்கான ‘வலிந்த யத்தனங்களை’ மறுத்து, சரிநிலைகளுக்குச் சிரத்தையெடுக்காமல், அசல்தன்மையைப் பற்றிக்கொண்டு இயங்கும் படைப்புகள் மறுபக்கம். (‘நடப்பது இதுதான்’ என்ற அடைப்பிற்குள் வைத்துத் தம் உள்நோக்கங்களை மீண்டும் மீண்டும் பதிவுசெய்து சமூக முரண்பாடுகளை மலினப்படுத்தும் படைப்புகளைச் சொல்லவில்லை; அவற்றை இலக்கியமாகக் கூட ஏற்க வேண்டியதில்லை.) இயல்புவாதத்தின் சத்தியத்தை மதிக்கும் படைப்புகளுக்கு அவற்றிலிருக்கும் உயிர்ப்புதான் முதலீடு. அக்கதைகளிலிருக்கும் உண்மையை ‘நீதி’யை நோக்கிச் சிரமப்பட்டு இழுக்க வேண்டியதில்லை; அது மிக நுண்மையாக அத்திசையைத்தான் கைகாட்டிக்கொண்டிருக்கும். இவ்விடத்தில், ‘கூளமாதாரி’ போதனைக்கான சாயைகூட இல்லாமல் மெய்மையின் வார்ப்பாக நிற்கிறது. அடிமைப்படுத்தப்பட்ட ஒருவனுக்குக் கைவிலங்குகளை உடைத்துக்கொண்டு வெளியேறும் சந்தர்ப்பங்கள் சாத்தியமா என்ற கேள்வியைவிட, மரபுவழி மழுங்கடிப்பில் நொதித்துப் போயிருக்கும் மனத்திற்கு வெளியேறும் சிந்தனை முதலில் சாத்தியமா என்ற கேள்வியையே இப்படைப்பு முன்வைப்பதாக எடுத்துக்கொள்ளலாம். இந்தக் கேள்வியையே கூட அரசியல்படுத்தலுக்கு எதிராக அர்த்தப்படுத்துவதற்கான இடுக்குவெளி உண்டுதான். பாசாங்கான தீர்வுக்கோ உடனடி எதிரீடுக்கோ மாறாக யதார்த்தக் கூறுமுறை அதன் வெளிப்பாட்டுத் தளத்தில் சாவதானமான குரலாகவே ஒலித்தாலும், அதை வலிமையற்றதென வரையறுக்க முடியாது.

ஆடு மேய்க்கும் சக்கிலியர் சாதி பதின்மச் சிறுவர்களைப் பற்றிய ஆவணப் புனைவில் அவர்கள் புழங்கும் மேய்ச்சல் நிலமான மேட்டுக்காடு அச்சிறுவர்கள்மீது உண்டாக்கும் தாக்கத்தை நாவலின் முதற்பகுதி பேசுகிறது. தூக்குப்போசியில் நீராகாரத்தை எடுத்துக்கொண்டு ஆடுகளை ஓட்டிக்கொண்டு நடக்கும் கூளையனுக்கு ஒவ்வொரு நாளும் சிறையிலிருந்து விடுபட்டு வந்திருக்கும் உணர்வையே அந்தத் திறந்தவெளி கொடுக்கிறது. பண்ணைய வேலையிலிருக்கும் வீட்டில் தான் கையாளப்படும் விதம்குறித்த முழுச் சுதாரிப்பும் அவனுக்கு உண்டு. அவற்றை அசைபோட்டு ஏற்றுக்கொண்டு தனக்குள் செரித்துக்கொள்வதை அப்பெருவெளிதான் அவனுக்குச் சாத்தியப்படுத்துகிறது.

ஆடுகளை வெறும் அஃறிணைகளாகச் கொள்ளாமல் அவற்றோடு உரையாடுவதும் அவை தான் பேசுவதைத் திருத்தமாகப் புரிந்துகொள்ளுமென அவன் நம்பத் தலைப்படுவதும்கூட ஒரு விதத்தில், தன் கட்டுப்பாட்டிலிருப்பவற்றின் மதிப்பைப் பெருக்கியுணர்ந்து அதன் வழியே மனத்தளவில் தான் அடையக்கூடிய அதிகாரப் பெருமிதத்தை ருசிக்கத்தானெனக் கொள்ள முடிகிறது. தன் பண்ணையக்காரியின் ஆணவக் குரல் ஓரிரு இடங்களில் தன்னிடமே வெளிப்படுவதையும் உணருகிறான். அது அவனுக்குக் கணப்பொழுதிலான மனவேற்றத்தைக் கொடுக்கிறது. காயமும் களிம்புமாகப் பின்னிக்கிடக்கும் வாழ்வு. தன் அண்ணன் சொரக்காயனைவிட ஒப்பீட்டளவில் சுலபமான வேலையில் இருப்பதான நிறைவை வவுறிக்கு அந்தப் பெருவெளிதான்கொடுக்கிறது; குத்தும் வசைகளால் நோகடிக்கப் பட்டாலும் மேய்ச்சல் நிலம் அளிக்கும் விடுதலை அவற்றை நீர்த்துப்போகச்செய்கிறது; தணிவை அன்றாடச் சங்கதியாக்கி விடுகிறது. கூளையனுக்கும் வவுறிக்குமிடையிலான அணுக்கத்தையும் கூட ஒரு மௌனக் காரணியாக நின்று அந்த வெட்டை வெளிதான் கனியவைக்கிறது. சிறு துவார ஒளி இருட்டறையின் சித்திரவதையை மறக்கடித்து, எதிர்ப்பதற்கோ தப்பித்து வெளியேறுவதற்கோ முகாந்திரமே இல்லாமல்போகச் செய்கிறது.

நெருக்கடி மனநிலைக்கான எளிய மீறலாக உடல் வேட்கைதான் இருக்க முடியும் என்ற விதத்தில் அச்சிறுவர்களுக்குள் அரும்புநிலை விரசம் ஒட்டியே இருக்கிறது. கூளையனுக்கு வவுறி மேலிருக்கும் பிரியம் அவனால் அடையக்கூடிய எல்லையின் ஆசுவாசத்துடனும் நிதானத்துடனும் இருக்கிறது. ஆனால் நெடும்பனுக்கு செவிடி மேலிருப்பது, எப்போதும் வெடிக்கத் தயாராக இருக்கும் தகிப்புடனே இருக்கிறது.

பண்ணைக்காரக் கிழவனுக்கு மலம் அள்ளித் துப்புரவு செய்யும் தினசரியில் நெடும்பனின் மனவார்ப்பு பாழாக்கப்பட்டிருக்கிறது. அப்பனும் ஆத்தாளும் ஆளுக்கொரு பக்கமாக அறுத்துக்கொண்டு போக அனாதியானவனை ஆளாக்கியிருக்கும் பாட்டி பண்ணைக் காரருக்குப் பீயள்ளுவது பாக்கியம் என நெடும்பனின் கண்ணைக் கட்டுகிறாள். அடிமைத்தனத்தை மனமுவந்து ஏற்பவளுக்கும் மல அண்டாவிற்கும் நடுவே தெளிவான நிலைப்பாடென எதுவும் அவனுக்குக் கிடைக்க மறுக்கிறது. கூடவே மேய்ச்சல் காட்டில் மொண்டியின் ஆளுகைக்குள் மற்ற சிறுவர்கள் கட்டுப்பட்டிருக்க வேண்டும் என்ற நிலை இருக்கிறது. செவிடியை மொண்டி சொந்தங்கொண்டாடும் அழுத்தம் நெடும்பனை மறுபக்கம் நசுக்குகிறது. அவர்களிருவரும் மற்றவர்களை ஒதுக்கியனுப்பிவிட்டுச் சம்போகிக்கிறார்களென ரகசிய வெறி கொள்கிறான். எதிர்ப்போ சவாலோ இருந்துகொண்டேயிருக்க, செவிடியுடன் கிடைக்கப்பெறும் அரிய தருணத்தை அவசரமாகத் தனதாக்கிக்கொள்ள வேண்டும் என்ற தத்தளிப்புடனே அவளை அணுகுகிறான். அவ்விதத்தில், அவனொருவனுக்குத்தான் மேய்ச்சல் நிலத்திலும் நிலைகொள்ள முடியாத அல்லாட்டம் நீடிக்கிறது. அந்த நிறைவின்மையை அனுபவிக்கும் ஒரே சிறுவனாகக் கதையில் அவன் மட்டுமே வருகிறான். அவன் ஒருவனே எல்லோருக்குமே வரக்கூடிய இக்கட்டான சூழ்நிலையில் ஊரைவிட்டு ஓடிப்போகத் துணிகிறான். பட்டியிலிருக்கும் ஆடு களவாடப்பட்டபோதும் தேங்காய்த் திருட்டு விஷயத்தில் கையும் களவுமாகச் சிக்கிக்கொண்ட பின்னரும் கூளையனால் ஊரை விட்டு ஓடிப்போவதைச் சிந்திக்க முடியாமல் போவதற்கு எத்தனை இன்னலையும் மழுங்கடிக்கும் இடமாக அவனுக்கு மேய்ச்சல் காடு இருக்கிறது; வவுறியின் அண்மை இருக்கிறது.

பண்ணையார்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு இந்த மேய்ச்சல்காரச் சிறுவர்கள் தங்கள் கட்டுப்பாட்டிலிருக்கும் அஃறிணைகள் அல்லது அந்நிலையிலினும் சற்றே மேலானவர்கள். பள்ளி முடித்த கையோடு செல்வனும் மணியும் காட்டுக்கு வந்து ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் இவர்களுடன் விளையாடுகிறார்கள் – நட்பின் அணுகல் அதில் கொஞ்சமாகத் தொனிக்கிறது; தோற்கும் நிலை வந்தால் அதட்டி அடிபணியச்செய்கிறார்கள்; அவ்வப்போது அடித்து நிறைவுகொள்கிறார்கள்; கூசுமளவிற்குக் காமக்கேலி செய்கிறார்கள் – பதில்கேலி வந்தால் உடனே வசையளவிலேனும் அதைத் தீர்த்துக்கொள்கிறார்கள்; சிறுமிகளை வக்கிரத்துடன் தீண்டுகிறார்கள்; அதையே இச்சிறுவர்களை மனத்தளவில் சிறுத்துப்போகச் செய்யும் கருவியாக்குகிறார்கள். அவர்களுக்குக் கிடைத்திருப்பது ரத்தமும் சதையுமுள்ள விளையாட்டு பொம்மைகள். இச்சிறுவர்களுக்குப் பெயர்களும்கூட ஏதோவொரு உடற்பிழற்வையொட்டித்தான் – கூளையன், வவுறி, நெடும்பன், மொண்டி, செவிடி – இவையெல்லாம் எவர் அளித்த பெயர்கள்? வவுறிக்கு ராமாயி என்ற பெயர் – அப்படி அழைக்கப்படுவது ஒருகட்டத்தில் அவளுக்கே விநோதமாக இருக்கிறது. இயற்பெயர்கள் அழிக்கப்பட்டதோடு உரியவர்களே அதை மறந்தும்போயிருக்கிறார்கள். பெயர் கொடுக்கும் சிறு செருக்கும் அனுமதிக்கப்படவில்லை என்பதைக்கூட உணராத வாழ்க்கைதான் அவர்களுக்கு நிந்திக்கப்பட்டிருக்கிறது. கொத்தடிமைகள் இப்படித்தான் மழுக்கையாக்கப்படுகிறார்கள்.

கூளமாதாரி : மயிலன் ஜி சின்னப்பன் முன்னுரை

நாவலின் இரண்டாம் பகுதியான கொழிமண்ணில், புனைவின் சௌகரியத்தோடு கூளையனும் செல்வனும் தனித்திருக்கும் சந்தர்ப்பங்கள் நிகழ்கின்றன. காட்டில் பட்டிபோட்டு இரவுக் காவலுக்கு இருவரும் படுத்திருக்கும்போது செல்வனுக்குப் புறவுலகப் பாவனைகளுக்கான அழுத்தம் இல்லாததன் நெகிழ்வும் கூளையனுக்குச் செல்வன் தன்னை மட்டுமே சார்ந்திருப்பதைப் போன்ற உள்வயமான சிறு மமதையும் எட்டிப்பார்க்கின்றன. அதனூடாகவே இருவருக்குமிடையிலான உறவுச் சாத்தியப்பாடுகளின் மேலடுக்குகளைக் களைந்து நம்மால் உள்ளே செல்ல முடிகிறது. பட்டியின் உள் கொட்டகைத் தரையில் ஆட்டுப் புழுக்கையில் படுக்க மனமின்றி வாசலில் படுத்திருப்பவனைப் பயந்துபோயிருக்கும் செல்வன் உள்ளே அழைத்துக் கட்டிலில் படுக்கவைத்துக்கொள்ளும் இடமும் கள் இறக்கி வரும்போது நிர்வாணத்தை செல்வன் பரிகசிக்க அவனுடைய காற்சட்டையை அவிழ்த்துவிட்டுத் துரத்திப் பிடித்து விளையாடும் இடமும் பெருமழையும் ஆடிக்காற்றும் பட்டியைப் பிய்த்தெறியும் இரவில் அரண்டு அழுதுகொண்டிருக்கும் செல்வனைக் கட்டி அரவணைக்கும் தருணமும் அவ்வுறவின் இலைமறைவையும் அதன் தணலையும் ஒருங்கே தொழிற்படுத்துபவை. எல்லாவற்றையும் சொல்லிச் செல்வதைப் போல தோற்றமளிக்கும் படைப்பில், சொல்லாமல் விடுபடும் தருணங்கள் ரகசியச் கிசுகிசுப்புகளாக உடன்வருகின்றன.

வீரனை வெட்டுக்கு ஆயத்தப்படுத்தும்போது கூளையன் தவித்துப்போகிறான். அதே புழுக்கமும் தவிப்பும் மாற்றேதும் குறையாமல் வீரனின் கறி தனக்குப் பொருட்படுத்தப்படவில்லை எனும்போதும் வெளிப்படுகின்றன. தன்னுடைய நிலையை ஊன்றி யோசிக்க அவனுக்கு அவ்விடத்தில் ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. போலவே, பட்டியிலிருக்கும் பூங்குட்டி களவாடப்படுவதற்கு செல்வனின் தடையீடுதான் காரணம் எனினும், எப்படியும் தன்னைத்தான் பண்ணைக்காரர் – பனங்காய் பொறுக்கிக் கிடைத்த ஐம்பது ரூபாயை அப்படியே அவனிடம் திருப்பிக் கொடுக்கும் கவுண்ட முதலாளிதான் எனினும் – பழிதீர்ப்பார் என்பதில் அவனுக்குத் துளியும் ஐயம் இருக்கவில்லை. களவுபோன இரவில் செல்வன் கொடுத்த சத்திய வார்த்தைகளுக்கு அப்பனுக்கு எதிரில் யாதொரு மதிப்பும் இராது என்பதும் கூளையனுக்குத் தெரியும். எல்லாம் மீண்டும் மீண்டும் யோசித்துப்பார்த்தும் அனுபவித்தும் புரிந்துகொண்ட உண்மைகள். ஆனால் இந்தப் புரிதல்கள் கொடுக்கும் திறப்பு வெளியே தள்ள உந்தாமல் ஏற்பை இயல்பாக்கவே முயலுகிறது.

தேங்காய்த் திருட்டுக்குக் கொடுக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து நியாயம் விசாரிக்க வரும் அம்மையப்பனை நாலு வார்த்தையில் இணங்கவைப்பது பண்ணைக்கார மரபுக்கு மிகச் சுலபமாக இருக்கிறது. கண்மூடித்தனமான அதிகாரம் மட்டுமல்ல; சமயத்திற்குத் தகுந்த தந்திர வார்த்தைகளும்கூடச் சாதி மரபுக்கு அடக்கியாளும் கருவிகள்தான். சாராயச் சுரணையில் இருந்தாலும் அப்பங்காரனின் கோபம், எதிர்த்து அடுத்த படி மேலே வைக்காமல் சுலபத்தில் தணிந்துபோகிறது. கூளையன் இந்தக் காட்சியை ஒரு பெருந்தோல்வியின் சாட்சியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறான். ஏதோ ஒரு சிறிய கீறல் அங்குதான் விழுகிறது. நெடும்பன் ஓடிப்போய்ப் பிடிப்பட்டு வருவதும் திருட்டுப் பழிக்குத் தனக்குக் கிடைத்திருக்கும் தண்டனையும் ஏதோ ஒரு புள்ளியில் அவனுக்குள் தெளிவில்லாமல் இணைகின்றன. மாட்டுக்கறிச் சோறுக்காக நிபந்தனையுடன் அனுப்பிவைக்கப்படும் நாளில் மேய்ச்சல் காட்டில் இல்லாமல் தன்னுடைய கூட்டில் தன்னை நிறுத்தி யோசிக்கும்போது கொஞ்சமாகத் துலக்கம் கிடைக்கிறது; அதுவே மீண்டும் அவனைப் பண்ணை வீட்டிற்குப் போகவிடாமல் ஓரிரு நாட்களேனும் நிறுத்திவைக்கிறது. அடிபணியச் சொல்லும் அப்பனின் வார்த்தைகளை மனத்தளவிலேனும் எதிர்க்க முற்படுகிறான். எவ்வளவு எழுந்தாலும் நிர்ப்பந்தங்களின் சுழலுக்குள்தான் மீண்டும் விழ வேண்டியிருக்கிறது. சொல்லப்போனால், எழவேயில்லை; அதற்கான சிறு பொறி உருவாவதற்குள்ளாகவே அணைந்து போகிறது. சாதி இந்துகளுக்கு எதிரான பட்டியலினத்தின் பாடு, நிறுத்தி நிதானிப்பதற்கோ சிந்திப்பதற்கோ மார்க்கமின்றி நிர்ணயங்களின் சுழலுக்குள் அவர்கள் சிக்கிக்கொண்டிருப்பதன் விளைவென்பதையே கூளையனின் உலகம் காட்சிப்படுத்துகிறது.

காயங்களுக்கான நிவாரணம் கிடைக்கும் விதத்திலேயே அதற்கான வடுக்கள் மிஞ்சுகின்றன. நசுக்கப்பட்ட உணர்வோடு தேங்கியிருக்கும் கூளையனுக்குப் பாட்டி வீட்டில் அனுபவித்த ஒரு நாள் தூக்கமும் சோளக்காடு வாங்கிய வேலைக் கூலியும் அதுவரையில் அவன் அனுபவித்திராத தேற்றத்தை அளிக்கின்றன. அவற்றோடுதான் பட்டிப்பொங்கல் நாளில் செல்வனை அவன் எதிர்கொள்ள நேர்கிறது. அந்தக் குறைந்தபட்சத் தேற்றமே பட்டியில் பதறியடித்து எழாமல் அவனைச் சற்றுக் கூடுதலாக உறங்கச்செய்கிறது; செல்வனிடம் வஞ்சிக்கப்பட்ட கிடாக் காசைச் சொல்லிக்காட்ட உந்துகிறது. செல்வனின் சாதிக் கொம்புகளைச் சீவிவிட அந்தச் சிறு உரசலேகூடப் போதுமாக இருக்கிறது. குளிப்பாட்டுவற்காகக் கிணற்றில் தூக்கிப்போடப்படும் ஆடுகளிடம் செல்வனின் அதிகார மயக்கம் வெளிப்பட ஆரம்பிக்கிறது; அது போதையளிக்கிறது – பித்தேறிப்போய் கூளையனிடம் பாய்கிறான். தேற்றத்தின் தெளிவுடன் இருப்பவனும் சீண்டப்பட்ட தற்பெருமித வெறியுடன் இருப்பவனும் – அவர்களுக்கிடையில் சாத்தியப்படக் கூடிய நட்பையும் நெருக்கத்தையும் அதன் நினைவுகளையும் தாண்டியுமே – சாதித் துருவத்தின் மாதிரிகளாக எதிரெதிரே நிற்கும் புள்ளிக்கு இறுதியில் வந்தடைகிறோம். கூளையனின் எதிர்ப்பு முதலில் வார்த்தைகளாகவும் பின்னர் உடல்ரீதியிலான தாக்குதலாகவும் வெளிப்படுகிறது. இரண்டுமே சொல்லப்போனால், அவனையே மீறிய பெருவெடிப்புகளாகத்தான் நிகழ்கின்றன. குறைந்தபட்சம், வினை மட்டுமேனும் பிரக்ஞையின்றி மனத்தின் மறையிடுக்குகளிலிருந்து நடந்துவிடுகிறது. நினைத்ததை மீறிய வசைச் சொல்லும், நினைத்ததை மீறிய மூர்க்கமும் கணப் பொழுதுக்குள் நடந்து முடிந்தவை. கொத்தடிமை வாழ்க்கை அவனுக்குள் தேக்கிவைத்திருந்து எதுவென அறியுமிடத்தில் கூளையனுமே பேதலித்துப்போகிறான். தன்னிடமே கண்ட உண்மை உண்டாக்கிய அதிர்ச்சியும் நடுக்கமுமே முடிவற்ற அடரிருளின் ஆழத்திற்குள் அவனை அமிழ்த்துகிறது.

கூளமாதாரி எனும் இப்புதினத்தில், பதின்மச் சிறுவர்களின் புரிதலின் அளவீடுகளிலேயே படிநிலைகள் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. என்றாலும், அந்த வயதிற்கேயான கட்டுப்பாடற்ற எதிர்வினைகள் முளையிலேயே நசுக்கப்படும் உண்மைத்தன்மையின் புழுக்கத்தையும் நெருக்கடியையும், அவை உண்டாக்கும் ஆற்றாமையையும் பதியச் செய்வதே படைப்பின் நோக்கமாக இருக்க முடியும்.  கவுண்டர் / சக்கிலியர் எனும் பதச்சோற்றை எடுத்துக்கொண்டு இடைச்சாதிகள் / பட்டியலினத்தவர் என்ற இருமையைப் பட்டவர்த்தனமாகப் பேசி, இப்பிரதேசத்தின் பிரதான அரசியல் சித்தாந்தத்தின் முழுமையின்மையையும் அது வழுவுமிடங்களையும் நுண்மையாகவும் பிடிவாதமற்ற ஒழுங்குடனும் ஆவணப்படுத்தியுள்ளார் பெருமாள்முருகன். கலைத்துறையில் பட்டியல் சமூகத்தின் ‘எதிர்க்குரல்கள்’ பெருகிவரும் இந்தத் தசாப்தத்தில், சாதியடுக்கின் நீட்சியான கொத்தடிமை முறையையும் அது பதின்மத்திலிருப்போரை எப்படி அவருவருக்கென நிச்சயிக்கப்பட்ட திசையிலிருந்து விலகிவிடாமல் கண்ணைக் கட்டி முன்னே நகர்த்தியது என்பதையும் நிறுத்திப் பேசும் கருவிகளில் ஒன்றாக இப்புதினம் நிலைத்திருக்கிறது. வெளியாகிக் கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகள் கடந்து, காலச்சுவடு பதிப்பகத்தின் செவ்வியல் வரிசை நூலாக இப்போது வருகிறது. சமூக மாற்றம் நிகழும் எதிர்காலத்தில் இந்நூலின் நித்தியத்தன்மை இன்னுமே ஆழமான அர்த்தங்களைத் தாங்கி நிற்கும்.

சூரப்பள்ளம் – பட்டுக்கோட்டை                                                                                                               மயிலன் ஜி சின்னப்பன்

30.07.2024

நூல் விவரம்: கூளமாதாரி, 2024, காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், பத்தொன்பதாம் பதிப்பு, காலச்சுவடு தமிழ் கிளாசிக் நாவல் வரிசை, விலை ரூ.390/-

—–  15-12-24

Latest comments (1)

25 ஆண்டுகள் கடந்து நல்ல விமர்சன அறிமுகத்தோடு நூல் மறுபதிப்பு கண்டிருப்பது மகிழ்ச்சி.. வாழ்த்துகள். ஐயா…