தமிழ் அறிக : நனவும் நினைவும்

 

தமிழ் அறிக : நனவும் நினைவும்

தமிழ்நாட்டு முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் 2023ஆம் புத்தாண்டுக்கான வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அச்செய்தி இணைய இதழ்களில் வந்துள்ளது.  ‘மின்னம்பலம்’ இதழ் (31-12-22) ‘கனவை நினைவாக்க உழைக்க வேண்டும்: முதல்வர் புத்தாண்டு வாழ்த்து’ எனத் தலைப்பிட்டிருந்தது. உள்ளே ‘உயரிய லட்சியங்களை அடையக் கனவு காண வேண்டும். அந்தக் கனவை நினைவாக்க உழைக்க வேண்டும்’ என்றிருந்தது. தினத்தந்தியும் (02-01-23) ‘உயரிய லட்சியங்களை அடையக் கனவு காண வேண்டும். அந்த கனவை நினைவாக்க உழைக்க வேண்டும்’ என்றே வெளியிட்டிருந்தது.  ‘ஜீ தமிழ் நியூஸ்’ உள்ளிட்ட சிலவற்றிலும் இந்தத் தொடர்கள் மாற்றமில்லாமல் இருந்தன. செய்தித் தொடர்புத்துறையின் வெளியீட்டிலும் அப்படித்தான். முதல்வரின் செய்தி, காட்சி வடிவில் ட்விட்டரிலும் யுடியூப்பிலும் இருந்தது. அதைக் கேட்டேன்.  ‘உயரிய லட்சியங்களை அடையக் கனவு காணணும். அந்தக் கனவ நனவாக்க உழைக்கணும்’ என்று அவர் பேசுகிறார். அவர் பேச்சில் ‘நினைவு’ இல்லை; ‘நனவு’தான் இருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன் நோபிள் ஹோண்டா விளம்பரம் ஒன்று எங்கெங்கும் காணப்பட்டது. அதில் ஒரே ஒரு தமிழ்த்தொடர் பெரிய எழுத்தில் ‘கனவு நினைவாக’ என்றிருக்கும். ‘கனவு நினைவாக என்ன செய்ய வேண்டும்?’, ‘நமது கனவுகள் நினைவாக’,  ‘கனவு நினைவாகப் போகிறது’, ‘கனவு நினைவாக வாழ்த்துக்கள்’, ‘கனவு நினைவாகக் காயம் பொறுத்திரு’ என்றெல்லாம் இணையத்தில் தொடர்கள் கொட்டிக் கிடக்கின்றன. ‘கனவு நனவாகும்’ என ‘நனவு’ என்பதைப் பயன்படுத்திய செய்திகளும் இருக்கின்றன. முதல்வரின் வாழ்த்தை   ‘தினமணி’ நாளிதழ் ‘அந்தக் கனவை நனவாக்க உழைக்க வேண்டும்’ என அச்சிட்டுள்ளது. இவ்வாறு ‘நனவைப்’ பயன்படுத்துபவை மிகக் குறைவு. நினைவா நனவா? எது சரி?

இறந்த காலத்தைச் சேர்ந்தவை நம் மனதில், மூளையில் தங்கிவிடுவது நினைவு. எண்ணம், ஆலோசனை, ஞாபகம், பாவனை முதலிய பொருள்களைத் தமிழ்ப் பேரகராதி, தமிழ் தமிழ் அகரமுதலி ஆகியவை தருகின்றன. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில்  ‘நினைவு’க்கு மூன்று பொருள்கள்  உள்ளன. (ஒன்றை அல்லது ஒருவரைப் பற்றி) மனத்தில் தங்கியிருக்கும் பதிவுகள்; ஞாபகம், மனத்தில் ஒன்றைப் பதிவாக இருத்திக் கொள்ளும் இடம், சுய உணர்வு; பிரக்ஞை. அகராதிகளின் அடிப்படையில் பொதுவாக நினைவு என்பது இறந்த கால மனப்பதிவு எனலாம்.

நினைவுக்கு மாற்றுச் சொல்லல்ல நனவு. அது தனிச்சொல். ‘நனவிற் பாடிய நல்லிசைக் கபிலன்’ (பதிற்றுப்பத்து, 85:12), நனவினான் நலம் வாட (கலித்தொகை, 35),    ‘நனவோ கனவோ என்பதை அறியேன்’ (மணிமேகலை, 8:21) எனப் பழந்தமிழ் இலக்கியங்களிலேயே இச்சொல் இடம்பெறுகின்றது. இவற்றைச் சுட்டும் தமிழ்ப் பேரகராதி மெய்ம்மை, பகல், சாக்கிரம் ஆகிய பொருள்களைத் தருகின்றது. சாக்கிரம் என்பது விழிப்பு. தமிழ் தமிழ் அகரமுதலியில் மெய்ம்மை, விழிப்பு, நினைவு முதலிய பொருள்கள் உள்ளன. நனவுக்கு ‘நினைவு’ எனப் பொருள் வரும் இடம் எது எனத் தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் நனவுக்கு வரும் பல பொருள்களுள் நினைவும் ஒன்று. ஆனால் நினைவு என்னும் சொல் நனவுப் பொருளில் வருவதில்லை.  க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி ‘(கனவு என்பதற்கு எதிரிடையாகக் கூறும்போது) நிஜ வாழ்வில் நடக்கக்கூடியதாக இருப்பது’ எனப் பொருள் கொடுக்கிறது. தமிழ்ப் பேரகராதியும் ‘Wakefulness, opp. to kaṉavu’ என ஆங்கிலத்தில் தருகிறது. பொதுவாகக் கனவுக்கு எதிர்ச்சொல்லாக நனவு பயன்படுகிறது. கற்பனையானது கனவு; நடைமுறைக்கு மாறானது கனவு. உண்மை நனவு; நடைமுறை  நனவு.

‘உயரிய லட்சியங்களை அடையக் கனவு காணணும். அந்தக் கனவ நனவாக்க உழைக்கணும்’ என்று முதல்வர் சொல்கிறார். கனவு கண்டால் மட்டும் போதாது. கனவு சாத்தியமாக வேண்டும் என்றால், நடைமுறைக்கு வர வேண்டும் என்றால், அதை வாழ்வில் அனுபவிக்க வேண்டுமானால் உழைக்க வேண்டும். கனவாகவே இருந்தால் பயனில்லை. அது நனவாக வேண்டும். அதாவது நடைமுறைக்கு வர வேண்டும். முதல்வரின் தொடர், எழுத்தில் வரும்போது ‘அந்தக் கனவை நினைவாக்க உழைக்க வேண்டும்’ என்றாகிவிடுகிறது. முதல்வர் பொருத்தமான சொல்லாகிய ‘நனவு’ என்பதையே பயன்படுத்தியுள்ளார். ஆனால் எழுதுவோர் நனவை நினைவாக்கிவிட்டனர். ஏற்கனவே எழுத்து வடிவில் ‘கனவை நினைவாக்க’ என்பது போன்ற பயன்பாடுகள் இருப்பதால் ஏற்பட்ட குழப்பம்.

தமிழ் அறிக : நனவும் நினைவும்

நவீன இலக்கியத்தில் ‘நனவு’ தொடர்ந்து பொருத்தமாகவே பயன்பட்டு வருகிறது. உளவியலில் வரும் conscious mind, unconscious mind ஆகியவற்றைத் தமிழில் நனவு மனம், நனவிலி மனம் எனக் குறிப்பிடுகிறோம். Stream of consciousness என்னும் இலக்கிய உத்தியை ‘நனவோடை’ என்கிறோம். இச்சொற்கள் எல்லாம் ‘நனவு’ என்பதிலிருந்து உருவான கலைச்சொற்கள்.  தம் சமகாலத்து எழுத்தாளுமைகளான நண்பர்களைக் குறித்த நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும் விதமாக ‘நினைவோடை’ என்னும் தலைப்பில் சுந்தர ராமசாமி சில நூல்களை எழுதியுள்ளார். நனவோடையின் சாயல் என்பதை உணர்ந்து வைத்த தலைப்பு அது.  அப்படியல்லாமல்  ‘நினைவோடை உத்தி’ என்று தவறாக எழுதுவோரும் உண்டு. சிங்கப்பூரைப் பற்றி  ஷாநவாஸ் எழுதியுள்ள நூல் ‘நனவு தேசம்.’ பொதுவாகச் சிங்கப்பூரைக் கனவு தேசமாகச் சொல்வது வழக்கம். அதற்கு எதிரான வகையில் நடைமுறை சார்ந்து சிங்கப்பூரைக் காட்டும் கட்டுரைகளைக் கொண்ட நூல் இது.

கனவுக்கு அதே ஓசை கொண்ட நல்ல எதிர்ச்சொல் நனவு. நெடுங்காலமாகப் புழங்கி வரும் வரலாறு உடையது. அது நவீனமாகச் சில கலைச்சொற்களை உருவாக்கும் தன்மையும் கொண்டது. பிறிதொரு சொல்லைப் பதிலியாக்க முடியாத அளவு ஆற்றலோடு விளங்குகிறது. ஆகவே ‘நனவு’ வர வேண்டிய இடங்களில் ‘நினைவு’ என்று எழுதுவதைத் தவிர்க்க வேண்டும். இரண்டும் வெவ்வேறு பொருளுள்ள சொற்கள் என்பதை உணர்ந்து பயன்படுத்த வேண்டும். இல்லையேல் ‘நனவு’ என்னும் சங்க இலக்கியப் பழஞ்சொல் நினைவில் மட்டும் வாழ்வதாக மாறிவிடும். ஒவ்வொரு சொல்லும் மொழிக்கு வளம்.

—–   02-01-23