தொல்காப்பியம் எழுத்ததிகாரப் பாட வேறுபாடுகள்: சகரக் கிளவி
இலக்கிய நூல்களில் காணப்படும் பாட வேறுபாடுகளின் எண்ணிக்கையைவிட இலக்கண நூல்களிலான பாட வேறுபாடுகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அதற்கு முக்கியமான காரணமாக இலக்கண நூல்களின் வழக்குப் பயிற்சி இலக்கிய நூல்களைவிடக் குறைவாக இருப்பதே என வெ.பழனியப்பன் (ப.14) கூறுகிறார். இலக்கணத்தைத் துறைசார் அறிஞர்கள் மட்டுமே மிகுதியாகக் கற்பதை இன்றும் காணலாம். எனினும் இலக்கண நூல்களிலும் குறிப்பிடத்தக்க பாட வேறுபாடுகள் அமைந்துள்ளன. இளம்பூரணர் உரைப் பதிப்பை அடிப்படையாகக் கொண்டு எழுத்ததிகாரப் பாட வேறுபாடுகளை வெ.பழனியப்பன் பட்டியலிட்டுள்ளார். மொத்த நூற்பாக்கள் 483. பாட வேறுபாடு இல்லாதவை 411. பாட வேறுபாடு காணப்படுபவை 72. வேறுபடும் இடங்கள் 83. வேறுபாட்டு எண்ணிக்கை 93. இவற்றில் பொருள் வேறுபாடு தரும் பாட வேறுபாடுகள் 22. பாட வேறுபாடு காணப்படும் எழுபத்திரண்டு நூற்பாக்களில் பெரிதும் விவாதத்திற்கு உள்ளாக்கப்படும் ஒரே ஒரு நூற்பாவை மட்டும் பார்க்கலாம். எழுத்ததிகார மொழிமரபு இயலில் ‘மொழி முதல் எழுத்துக்களை’ விவரிக்கும் பகுதி
கதநபம வெனும் ஆவைந்து எழுத்தும்
எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே (61)
என்னும் நூற்பாவோடு தொடங்குகிறது. பன்னிரண்டு உயிரெழுத்துக்களோடும் இணைந்து மொழிமுதல் வருபவை கதநபம என்னும் ஐந்து மெய்யெழுத்துக்கள் என்பது இந்நூற்பாவின் பொருள். இதனை அடுத்த நூற்பா:
சகரக் கிளவியும் அவற்றோர் அற்றே
அ ஐ ஔ எனும் மூன்றலங் கடையே (62)
அ ஐ ஔ ஆகிய மூன்றோடும் சேர்ந்து சகரம் மொழிமுதல் வாராது. பிற ஒன்பது உயிர்களோடும் இணைந்து மொழிமுதல் வரும் என்பது இந்நூற்பாவின் பொருள். இந்நூற்பாவிற்கு இளம்பூரணர் தரும் விளக்கம்:
சகரமாகிய எழுத்தும் மேற்சொல்லப்பட்டவை போல எல்லாவுயிரோடும் மொழிக்கு
முதலாம். அ ஐ ஔ என்னும் மூன்றும் அல்லாதவிடத்து.
எ-டு: சாலை, சிலை, சீறுக, சுரும்பு, சூழ்க, செய்கை, சேவடி, சொறுக, சோறு
என வரும்.
சகடம் எனவும் சையம் எனவும் விலக்கினவும் வருமால் எனின் அவற்றுள் ஆரியச்
சிதைவல்லாதன ‘கடிசொல் இல்லை’ என்பதனாற் கொள்க. (ப.139)
சகரத்தோடு ஒன்பது உயிர்கள் இணைந்து வரும் உயிர்மெய் எழுத்துக்கள் மொழிமுதலாகும் என்பதற்கான சான்றுகளை இளம்பூரணர் கொடுத்துள்ளார். சகடம், சையம் ஆகிய சொற்களும் இலக்கிய வழக்கில் பயின்று வந்துள்ளமையையும் அவர் கவனத்தில் கொண்டுள்ளார். அவற்றின் வருகையை இரண்டு காரணங்களைக் கொண்டு விளக்குகிறார். முதலாவது ‘ஆரியச் சிதைவு’ என்பது. அதாவது விதிக்கு முரணாக அ ஐ ஔ ஆகியவற்றோடு சேர்ந்து ச சை சௌ ஆகிய எழுத்துக்கள் மொழிமுதலாகும் என்றால் அவை சமஸ்கிருதச் சொற்களின் சிதைவாக இருக்கக்கூடும் என்பது அவர் கருத்து. இரண்டாவதாக அவர் கூறும் காரணம் தொல்காப்பியக் கருத்தை அடியொற்றியதாகும். அவ்வாறு வருபவை தமிழ்ச் சொற்களாக இருக்கும் என்றால் எவ்விதம் கொள்வது என்னும் வினாவுக்கு விடையாகத் தொல்காப்பிய நூற்பாவாகிய ‘கடிசொல் இல்லை காலத்துப் படினே’ என்பதை மேற்கோள் காட்டி அவ்விதிப்படி அமையும் எனக் கூறுகிறார். ச, சை, சௌ ஆகிய எழுத்துக்களை முதலாகக் கொண்ட சொற்கள் இலக்கிய வழக்காக வருவதைக் கருத்தில் கொண்டு இளம்பூரணர் இவ்விளக்கத்தைத் தருகிறார்.
இந்நூற்பாவுக்கு நச்சினார்க்கினியர் உரை வருமாறு:
சகரமாகிய தனி மெய்யும் முற்கூறியவை போல எல்லாவுயிரோடுங்கூடி
மொழிக்கு முதலாம், அகர ஐகார ஔகாரம் என்று சொல்லப்பட்ட மூன்று
உயிரும் அல்லாதவிடத்து.
எ-டு: சாந்து, சிற்றில், சீற்றம், சுரை, சூரல், செக்கு, சேவல், சொல், சோறு என
வரும். சட்டி, சகடம், சமழ்ப்பு என்றாற் போல்வன ‘கடிசொல் இல்லை’
என்பதனாற் கொள்க. சையம், சௌரியம் என்பவற்றை வடசொல் என மறுக்க.
(ப.139)
இளம்பூரணரை ஒட்டியே நச்சினார்க்கினியரின் கருத்தும் அமைந்துள்ளது. சான்றுச் சொற்கள் வேறுபட்டுள்ளன. விளக்கத்தில் இளம்பூரணர் ஆரியச் சிதைவு, கடிசொல்லாகிய தமிழ்ச் சொல் ஆகியவற்றைப் பிரித்துக் கொடுக்கவில்லை. நச்சினார்க்கினியர் அவ்விரண்டையும் பிரித்துத் தெளிவுபடுத்தியுள்ளார். சட்டி, சகடம், சமழ்ப்பு ஆகியவை தமிழ்ச் சொற்கள். தொல்காப்பியருக்குப் பிறகு மொழிக்குள் வந்த கடிசொற்கள். சையம், சௌரியம் ஆகியவை வடசொற்கள். சகரத்தை முதலாகக் கொண்ட சொற்கள் மொழியில் வருவதை ஏற்றுக்கொள்ளும் நச்சினார்க்கினியர் சை, சௌ ஆகியவை தமிழில் மொழி முதலாக வருவதில்லை என்கிறார். அவ்வாறு வருபவை வடசொற்கள் என்று பிரித்து அவற்றை மறுக்க வேண்டும் என்பது அவர் கருத்து. ச, சை, சௌ ஆகியவை மொழிமுதல் வரும் என்னும் கருத்து நச்சினார்க்கினியர் காலத்தில் உருவாகிவிட்டது என்பதை அறிய முடிகிறது. அக்கருத்து உள்ளவர்களுக்குப் பதில் கூறும் விதமாகவே நச்சினார்க்கினியரின் விளக்கம் அமைகிறது. ‘வடசொல் என மறுக்க’ என்பது அக்காலத்தில் நிலவிய கருத்தை அவர் மறுத்துரைப்பதன் வெளிப்பாடு. அனேகமாக நேமிநாதம், நன்னூல் ஆகிய நூல்களின் கருத்தையே மறுத்துரைக்கிறார் எனலாம். அந்நூல்களின் காலத்திற்குப் பிற்பட்டவர் நச்சினார்க்கினியர்.
இக்கால உரையாசிரியராகிய பாவலரேறு ச.பாலசுந்தரத்தின் கருத்தும் இளம்பூரணர், நச்சினார்க்கினியர் ஆகியோருடையதை ஒத்தே அமைகின்றது. சகரம் மொழிமுதல் வரும் என்பதையும் சை, சௌ ஆகியவை வடசொற்களிலேயே வரும் என்பதையும் அவரும் விளக்கியுள்ளார். (ப.107)
இந்நூற்பாவிற்கான விளக்கமாக வேங்கடராசுலு ரெட்டியார் எழுதியுள்ள நீண்ட பகுதி வருமாறு:
‘சமழ்மை (நாலடியார் 72), சழக்கு (பெரியாழ்வார் திருமொழி 5.1.2) என்றாற் போல்வன பிற்காலத்தன. சையம், சௌரியம் போலவன வடமொழிச் சொற்கள்.
நன்னூலாரும் நேமிநாதரும் ச, சை, சௌ இம்மூன்றும் மொழிமுதல் வரும் என்றனர். சை, சௌ எழுத்துக்கள் முதற்கண் உள்ள மொழிகள் தமிழில் இல்லன வாகலின் அவர் கொள்கை பொருந்தாது என்றும் சமழ்ப்பு, சழக்கு என்பன போலப் பிற்காலத்து வழங்கிய தமிழ் மொழிகளைக் ‘கடிசொல் இல்லை காலத்துப் படினே’ என்பதனால் தழுவிக் கொள்ளுதல் தகும் என்றுங் கொண்டு இலக்கண விளக்க நூலார் ‘சை சௌ இவ்விரண்டும் மொழிமுதற்கண் வாரா’ என்றார் (இலக்கண விளக்கம் 27 உரை). அவர் கொள்கையே பொருத்தம் உடையது. பிறர் கூறியவாறாயின் ரதம், லோகபாலர் என்னும் சொற்கள் செய்யுட்களில் வழங்கப்பட்டிருத்தலின் ர, ல முதலிய பிற பலவும் மொழிமுதற்கண் வரும் எனல் வேண்டும். அவையெல்லாம் தமிழ்ச் சொற்களல்ல வாகலின் அவை மொழிமுதற்கண் வரும் என்று கூறுதல் தக்கதன்றாதல் போலவே சை, சௌக்கள் முதற்கண் வரும் என்றலும் தக்கதன்று.
மயிலைநாதர் ‘சுட்டியா’ என்னும் சூத்திரத்தின் (நன்.106) உரையில்
சரிசமழ்ப்புச் சட்டி சருகு சவடி
சளிசகடு சட்டை சவளி – சவிசரடு
சந்து சதங்கை சழக்காதி யீரிடத்தும்
வந்ததனால் சம்முதலும் வை
என்னும் செய்யுளைக் காட்டி சகரம் மொழிமுதற்கண் வரும் என்றார். இச்சொற்கள் ஆசிரியர் காலத்தில் வழங்கியிருக்குமேல் அவர் சகரத்தை விலக்கார். ‘அ ஐ ஔ எனும் மூன்றலங்கடை’ என்று கூறுதலின் ஆசிரியர் காலத்தில் சகர அகரமும் மொழிமுதற்கண் வழங்கவில்லை என்பது தேற்றம். தபு, உரிஞ் என்று ஒவ்வொரு மொழியில் மட்டும் ஈற்றில் நிற்கும் எழுத்தினைக் கூறியவர் சகர முதன் மொழிகள் பல வழங்கியிருக்குமேல் அதனை விலக்குவாரல்லர்.
சத்தான் என்று வழங்கற்பாலதாகிய சொல் ‘செத்தான்’ என்று வழங்குகின்றது. தெலுங்கிலும் கன்னடத்திலும் மலையாளத்திலும் முறையே சச்செனு, சத்தனு, சத்து என்று வழங்குகின்றது. இவற்றால் தமிழில் சகர அகரம் மொழிமுதற்கண் பண்டு சகர எகரச் சாயையில் ஒலித்ததாகும் என்பது உய்த்துணரக் கூடும். (ப.140)
தொல்காப்பியரின் கருத்தைப் பிற்கால இலக்கணக் கருத்துக்களோடு ஒப்பிட்டு விவாதிக்கும் ரெட்டியார், தொல்காப்பியர் காலத்தில் சகரம் மொழிமுதல் வழங்கியிருக்காது என்று திறம்பட விளக்குகிறார். தொல்காப்பியர் தமிழ்ச் சொற்களையே கணக்கில் கொண்டு இலக்கணம் வகுத்துள்ளார். சமஸ்கிருதச் சொற்கள் தமிழில் வந்து வழங்கும் முறைக்குத் தனியாக இலக்கணம் உள்ளது. எனவே ரெட்டியாரின் இவ்வாதம் பொருந்தி அமைகிறது.
தொல்காப்பியரை ஒட்டிய காலத்து இலக்கியமாகிய சங்க இலக்கியத்தில் இடம்பெறும் சகர மொழிமுதல் சொற்கள் வருமாறு: சகடம், சங்கம், சடை, சண்பகம், சதுக்கம், சந்தம், சந்தனம், சந்தி, சந்து, சமம், சமழ்ப்பு, சமன், சமைப்பு, சரணத்தர், சருமம், சலதாரி, சலம், சவட்டி, சனம் ஆகியவை. இவற்றுள் சகடம், சமழ்ப்பு ஆகியவற்றையே தமிழ்ச் சொற்களாக நச்சினார்க்கினியர் முதலியோர் கருதியுள்ளனர். பிற சொற்கள் வடசொற்கள் ஆகும். சை என்னும் எழுத்தில் ‘சையம்’ மட்டும் பரிபாடலில் வந்துள்ளது. இச்சொல் வடசொல் என்பது தெளிவு. சௌ என்பதை மொழிமுதலாகக் கொண்ட சொற்கள் சங்க இலக்கியத்தில் இல்லை. ஆகவே சங்க இலக்கியத்திலேயே சகரம் மொழிமுதலாக வரத் தொடங்கியுள்ளது எனலாம். சி, செ, சே முதலிய எழுத்துக்களோடு ஒப்பிடும்போது சகரத்தை முதலாகக் கொண்டவை வடசொற்களையும் உள்ளிட்டு மிகமிகக் குறைவே. இக்கருத்தில் அக்கால உரையாசிரியர்களும் இக்கால அறிஞர்களும் தெளிவாக உள்ளனர்.
எனினும் இக்கருத்தில் மாறுபடும் மிக முக்கியமான அறிஞர் நா.தேவநேயப் பாவாணர் ஆவார். இந்நூற்பாவுக்குப் பாவாணரே பாட வேறுபாடும் காட்டுகின்றார். அவரது விளக்கம் வருமாறு:
சகரம் மொழிமுதல் வாராதென்று கூறுவது தமிழுக்குச் சற்றும் பொருந்தாது. ‘அ ஐ ஔ எனும் மூன்றலங்கடையே’ என்னும் நூற்பா அடிக்கு ‘அவை ஔ என்னும் ஒன்றலங்கடையே’ என்ற பாட வேறுபாடும் உள்ளது. சக்கட்டி, சக்கை, சகடு, சட்டை, சடசட, சடை, சடைவு, சண்டி, சண்டு, சண்டை, சணல், சதுப்பு, சப்பட்டை, சப்பென்று, சப்பாணி, சப்பு, சப்பை, சம்பு, சம்மட்டி, சமட்டு, சமம், சமழ், சமை, சரடு, சரள், சரி, சருகு, சருச்சரை, சரேலென, சல்லடை, சல்லரி, சல்லி, சலசல, சலங்கை, சலி, சவ்வு, சவம், சவர், சவை, சளி, சளக்கென, சழக்கு, சள்ளென, சள்ளை, சளை, சற்று, சறுக்கு, சன்னம் முதலிய நூற்றுக்கு மேற்பட்ட தனித்தமிழ்ச் சொற்கள் அடிப்படையானவும் தொன்று தொட்டவும் இன்றியமையாதனவும் வேரூன்றினவும் சேரி வழக்கினவுமாயிருக்க, அவற்றைப் பிற்காலத்தன என்று கொள்ளுவது பெருந்தவறாகும். சக்கை, சட்டி, சண்டு, சண்டை, சதை, சப்பு, சவி, சற்று, சறுக்கு முதலிய சொற்கள் எத்துணை எளிமையும் இயல்புமானவை என்பது சொல்லாமலே விளங்கும். சண்டு, சருகு முதலிய சில சொற்கள் பண்டு சகர முதலனவாயிருத்தல் கூடுமெனினும் சக்கு, சடார், சரட்டு, சலசல, சரேல், சவ்வு, சளக்கு, சளார், சல் முதலிய ஒலிக்குறிப்புச் சொற்களும் அவற்றினடிப் பிறந்தவும் துவக்கந் தொட்டுச் சகர முதலனவாயே இருந்திருத்தல் வேண்டும். சாப்பிடு என்னும் உலக வழக்கெளிமைச் சொல் சப்பு என்னும் மூலத்தினின்றே தோன்றியதாகும். சப்பு + இடு = சப்பிடு – சாப்பிடு. சுவை என்னும் சொல்லும் சவை என்பதன் திரிபாகவே தோன்றுகின்றது. செத்தான் என்னும் இறந்த கால வினைமுற்று பண்டைக் காலத்தில் ‘சத்தான்’ என்றே இருந்திருத்தல் வேண்டும். ஒ.நோ. காண் – கண்டான், நோ – நொந்தான். நெடின் முதலான வினைப்பகுதி இறந்த கால முற்றில் முதல் குறுகும்போது இனக்குறிலாய்க் குறுகுவதே மரபு. தெலுங்கிலும் சச்சினாடு (செத்தான்), சச்சிப் போயினாடு (செத்துப் போனான்) என்றே சொல்வர். மேலும் முழுமுதல் அரணமும் வருபகை பேணார் ஆரெயிலும் அமைத்துக் கொண்ட தொல்காப்பியர் காலத் தமிழர் சட்டி செய்யத் தெரியாதிருந்தனர் என்பது பெருநகைக் கிடமானதாகும். சட்டி என்பது சமையலுக்கு இன்றியமையாததும் எளிநிலையானதும் மறு பெயரற்றதுமான கலவகை.
சரி சமழ்ப்புச் சட்டி… வை’
என்பது நன்னூல் மயிலைநாதர் உரை மேற்கோள். (ப.141)
‘அவை ஔ என்னும் ஒன்றலங்கடையே’ என்னும் பாட வேறுபாடு இருப்பதாகக் கூறும் பாவாணர் சகரம் மொழிமுதல் ஆகும் சொற்களுக்குப் பல சான்றுகள் தருகிறார். சை மொழிமுதல் ஆதற்குச் சான்று ஏதும் தரவில்லை. சகர மொழிமுதல் சொற்கள் பிற்காலத்தனவாக இருக்க இயலாது என்றும் வாதிடுகின்றார். சட்டி என்னும் சொல்லைக் கொண்டு அது மறுபெயரற்ற சொல் என்றும் அது பிற்காலத்தில்தான் உருவாகியிருக்கும் என்றால் தமிழர்க்குச் சட்டி செய்யத் தெரியாதா என்றும் கேள்வி எழுப்புகிறார். அவர் கேள்விகளில் தருக்கமும் பொருத்தமும் உள்ளன போல் தோன்றுகின்றது.
செப்பு, பானை ஆகிய சொற்கள் பாண்டங்களைக் குறிக்கச் சங்க இலக்கியத்தில் வழங்கியுள்ளன. ஆனால் சட்டி என்னும் சொல் இல்லை. இச்சொல்லின் முதல் பதிவு நச்சினார்க்கினியராலேயே நிகழ்ந்துள்ளது. தொல்காப்பிய உரையில் அச்சொல்லைக் காட்டுவதன்றிப் பெரும்பாணாற்றுப்படை உரையிலும் அச்சொல்லைக் கையாண்டுள்ளார். ‘கார் அகல்’ (377) என்பதற்குக் ‘கரிதாகிய சட்டி’ என அவர் பொருள் உரைக்கின்றார். ‘சட்டியிலே கிடந்த அப்பம்’ என அதனை விளக்கியும் சொல்கிறார். இங்கு அகல் என்னும் பெயர்ச்சொல்லிற்குச் சட்டி எனப் பொருள் உரைத்துள்ளார். இன்றும் அகல் என்பது மண்பாண்டங்களுள் ஒன்றாகிய விளக்கைக் குறித்து வழங்கி வருகிறது. சட்டிக்கு வழங்கி வந்த அப்பெயர் பின்னர் விளக்கைக் குறிப்பதாகப் பொருள் மாற்றம் பெற்றிருக்கலாம். சட்டியைக் குறிக்கும் வேறு பெயர்கள் பதிவாகாமலும் போயிருக்கலாம். சட்டி என்னும் சொல் இல்லை என்றால் தமிழர்க்குச் சட்டி செய்யத் தெரியாது என்று அர்த்தமாகிவிடாது. அதற்கு வேறு காரணங்களையே சிந்திக்க வேண்டும்.
பாவாணரின் வாதம் உணர்ச்சியும் மிகு தமிழ்ப் பற்றும் கொண்டதாகும். அவ்வேகத்தில் அவர் வினாக்களை எழுப்புகின்றார். தம் வாதத்தை மட்டும் வைக்காமல் அதற்கு ஆதாரம் தேடும் வகையில் ‘அவை ஔ என்னும் ஒன்றலங்கடையே’ எனப் பாட வேறுபாடு உள்ளதாகக் கூறுகின்றார். எச்சுவடியில் அப்பாட வேறுபாட்டை அவர் கண்டார் என்பது குறித்த விவரம் ஏதும் தரவில்லை. அவ்வளவு முக்கியமான பாட வேறுபாடு கொண்ட சுவடியைப் பாதுகாப்பதுடன் ஆதாரமாகும் தன்மையுள்ள அதனை அனைவரும் அறியும் வகையில் காட்சிப்படுத்தியிருக்க வேண்டியதும் அவசியம். சகரம் மொழிமுதலாகும் என்னும் தம் கருத்துக்கு ஏற்ப அவரே இட்டுக்கட்டிக்கொண்ட பாட வேறுபாடுதான் அது. இளம்பூரணர், நச்சினார்க்கினியர் ஆகிய அக்கால உரையாசிரியர்கள் குறிப்பிடாத பாடம் ஒன்றைப் புதிதாக எச்சுவடியில் இருந்து இவர் கண்டார் என்பதற்கு எவ்வகை ஆதாரமும் இல்லை.
அவர் இப்படி ஒரு பாட வேறுபாடு உள்ளது என எழுதி வைத்திருப்பதால் பின் வந்தவர்கள் அதையும் ஒரு பாட வேறுபாடாக எடுத்துக்கொள்ளும் வழக்கம் தோன்றிவிட்டது. பாட வேறுபாடுகள் குறித்து ஆய்வு செய்துள்ள வெ.பழனியப்பன் தம் நூலில் பாவாணர் குறிப்பிடும் பாட வேறுபாட்டைக் கணக்கில் கொண்டு ஆராய்ந்துள்ளார். முடிவாக ‘சகரம் மொழி முதலில் பயின்று வருவதற்குச் சான்றுகள் உள்ளனவே தவிர சை, சௌ ஆகியன மொழி முதலில் பயின்றமைக்குரிய சான்றுகள் இல. காட்டப்படும் சொற்களில் பல வட சொற்களாகவே அமைந்துள்ளன. எனவே தொல்காப்பியர் தன் கால மொழி வழக்கிற்கு ஏற்ப இலக்கணம் செய்துள்ளார் எனக் கொண்டு ‘அ ஐ ஔ எனும் மூன்றலங்கடையே’ என்ற பாடத்தையே பொருந்துவதாகக் கொள்ளலாம்’ (ப.175-176) எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால் சுவடிகளைக் கொண்டு ஆராய்ந்தவர்கள் இப்பாட வேறுபாட்டைப் பொருட்படுத்துவதில்லை. கே.எம்.வேங்கடராமையா, ச.வே.சுப்பிரமணியன், ப.வெ.நாகராசன் ஆகியோரைப் பதிப்பாசிரியராகக் கொண்டு ‘பன்னாட்டுத் திராவிட மொழியியற் கழகம்’ வெளியிட்டுள்ள ‘தொல்காப்பியம் மூலம் : பாட வேறுபாடுகள் – ஆழ்நோக்காய்வு’ என்னும் நூல் தொல்காப்பியச் சுவடிகளை ஆதாரமாகக் கொண்டு பாட வேறுபாடுகளை ஆராய்ந்து பதிப்பிக்கப் பட்டதாகும். அச்சுப் பதிப்புகளையும் நிறுவனச் சுவடிகளையும் ஒப்பிட்டு ஆராய்ந்துள்ள இப்பதிப்பில் மேற்குறிப்பிட்ட நூற்பாவுக்குரிய அடிக்குறிப்பு கீழ்வருமாறு காணப்படுகின்றது.
பதிப்பு 30இல் இந்நூற்பாவிற்கு “ ‘அவைஔ என்னும் ஒன்றலங் கடையே’ என்ற பாட வேறுபாடும் உள்ளது” எனப் பாவாணர் எழுதுகிறார். ஆனால் எந்தச் சுவடியிலும் பதிப்பிலும் இப்பாடம் காணப்பெறவில்லை. இது அவர் திருத்தம். (ப.13)
சுவடிகளை ஆராய்ந்தவர்கள் ‘இது அவர் திருத்தம்’ எனத் தெளிவாகச் சுட்டிக் காட்டியுள்ளனர். பாவாணரின் தமிழ்ப் பற்று செய்த திருத்தம் எனச் சற்றே இதை விரிவுபடுத்தலாம். சகரம் மொழிமுதல் வராமல் இருந்தது; தொல்காப்பியருக்குப் பிறகே அது மொழிமுதல் வரத் தொடங்கியது என்பதால் தமிழின் பெருமைக்கோ பழமைக்கோ எந்தக் குறைவும் நேர்ந்துவிடாது. பற்றின் காரணமாகச் செய்யப்படும் திருத்தங்களுக்கு ஆதாரம் என்னும் மதிப்புக் கிடைப்பதில்லை. மேலும் திருத்தம் செய்தவரின் பிற செயல்கள் மீதும் ஐயம் உருவாக இத்தகைய திருத்தங்கள் காரணமாகிவிடும் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
————–
பயன்பட்ட நூல்கள்:
1. ஆ.சிவலிங்கனார் (ப.ஆ.), 1981, தொல்காப்பியம் உரைவளம் எழுத்ததிகாரம் – மொழி மரபு, சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
2. ச.பாலசுந்தரம் (உ.ஆ.), 2012, தொல்காப்பியம் எழுத்ததிகாரம் ஆராய்ச்சிக் காண்டிகையுரை, சேலம்: பெரியார் பல்கலைக்கழகம்.
3. வெ.பழனியப்பன், 1990, தமிழ் நூல்களில் பாட வேறுபாடுகள், அண்ணாமலை நகர்: அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
4. கே.எம்.வேங்கடராமையா முதலியோர் (ப.ஆ.), 1996, தொல்காப்பிய மூலம் : பாட வேறுபாடுகள் – ஆழ்நோக்காய்வு, திருவனந்தபுரம்: பன்னாட்டுத் திராவிட மொழியியற் கழகம்.
5. பெ.மாதையன், 2007, சங்க இலக்கியச் சொல்லடைவு, தஞ்சாவூர்: தமிழ்ப் பல்கலைக்கழகம்.
6. உ.வே.சாமிநாதையர் (ப.ஆ.), 1950, பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியருரையும், சென்னை: கபீர் அச்சுக்கூடம், நான்காம் பதிப்பு.
Add your first comment to this post