தமிழ் அறிக:

 

 

தமிழ் அறிக:ம.இலெ.தங்கப்பா – எம்.எல்.தங்கப்பா ஆகலாமா?

மறைந்த தமிழறிஞர் ம.இலெ.தங்கப்பா அவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பாக்களைச் சாகித்திய அகாதமி நூலாக வெளியிட்டுள்ளது. புதுவை யுகபாரதி தொகுப்பாசிரியராக உள்ள அந்நூலின் தலைப்பு ‘எம்.எல்.தங்கப்பாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பாக்கள்’ என்று அமைந்திருக்கிறது. அந்நூலுக்கான மதிப்புரை நிகழ்ச்சி வரும் ஜூன் 15 அன்று சென்னையில் நடைபெற உள்ளது. முனைவர் வாணி அறிவாளன் அவர்கள் நூலைப் பற்றிப் பேச உள்ளார். அந்நிகழ்வுக்கான அழைப்பிதழையும் சாகித்திய அகாதமி வெளியிட்டுள்ளது.

காலமெல்லாம் தம் பெயரை ம.இலெ.தங்கப்பா என எழுதி வந்த தமிழ் உணர்வாளரின் முன்னெழுத்துக்கள் ‘எம்.எல்.’ என்று மாற்றப்பட்டிருப்பது மிகுந்த வருத்தத்தைத் தருகிறது. இதன் பின்னணியில் என்ன நடந்தது என்பது தெரியவில்லை. அரசு சார்ந்த நிறுவனத்தின் எவ்விடத்திலும் தவறு நேரலாம். எழுத்தர் நிலையில் ஏற்பட்ட தவறாகவும் இருக்கலாம். திட்டமிட்டு நிகழ்ந்த தவறாகவும் இருக்கலாம். அதை அத்தனை எளிதாகக் கண்டறிய இயலாது. எப்படியிருந்தாலும் இது அவ்வறிஞருக்குச் செய்யும் அவமரியாதை என்றே கருதச் செய்கிறது.

முன்னெழுத்தை எப்படிப் போடுவது என்பது அத்தனை முக்கியமான பிரச்சினையா என்று தோன்றலாம். மிகவும் முக்கியமான பிரச்சினைதான். முதலாவது, நூலாசிரியர் தம் பெயரை எவ்வாறு எழுதினாரோ அவ்வாறே நூலில் போட வேண்டும் என்பது அனைவரும் அறிந்த அறம்.  அடுத்தது, தம் முன்னெழுத்தை இப்படித்தான் போட வேண்டும் என்பதில் தமிழ் உணர்வாளர்கள் பலருக்கு நல்ல கவனம் உண்டு. தங்கப்பா அப்படிப்பட்டவர். அவர் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

முன்னெழுத்தை ஆங்கிலத்தில் போடும் வழக்கம் இந்திய மொழிகளில் இருக்கின்றது. அது காலனிய அடிமைத்தனத்தின் எச்சம். என் பெயரை ‘P.முருகன்’ என்று யாரேனும் எழுதினால் என்னால் ஏற்றுக்கொள்ள இயலாது.  ‘பெ’ என்பதை ஆங்கிலமாக்கி ‘P’ என்றெழுதிப் பின்னர் அதை ஒலிபெயர்த்து ‘பி’ என்றாக்கிப் ‘பி.முருகன்’ என எழுதுவதைச் சகித்துக் கொள்ளவே இயலாது. பெ.முருகன் என்றெழுதலாம்; P.Murugan என்றெழுதலாம். P.முருகன், பி.முருகன் ஆகியவை அபத்தம்.  ‘பெ.Murugan’ என்று எழுதுவதை நாம் ஏற்றுக்கொள்வோமா?

தம் முன்னெழுத்தை ஆங்கிலமாக்கிப் பின்னர் ஆங்கில எழுத்தை ஒலிபெயர்த்து எழுதும் வழக்கம் நெடுங்காலமாகவே எழுத்தாளர்களிடம் இருக்கிறது. நான் பெரிதும் மதிக்கும் எழுத்தாளர் ‘ஆர்.ஷண்முகசுந்தரம்’ பெயர் அப்படி அமைந்ததுதான். ரசிகமணியின் பெயர் ‘டி.கே.சிதம்பரநாத முதலியார்.’ எம்.வி.வெங்கட்ராம், கே.சி.எஸ்.அருணாசலம், ஜி.நாகராஜன் என இவ்வரிசையில்  இன்னும் பலர் உண்டு. இதில் இடம்பெறும் சமகால  எழுத்தாளர்களின் பெயர்களைச் சொல்லி வம்பை விலைக்கு வாங்க விரும்பவில்லை. அது அவர்கள் விருப்பம்; உரிமை. அவ்வாறு நிறையப் பெயர்கள் உள்ளன. வந்தவிடத்துக் கண்டுகொள்க.

கு.ப.ராஜகோபாலன், கு.ப.சேது அம்மாள்,  தி.ஜானகிராமன், பெ.கோ.சுந்தரராஜன், கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், லா.ச.ராமாமிர்தம், பா.செயப்பிரகாசம், தொ.பரமசிவன் என்றொரு அருமையான  முன்னோடி வரிசையும் நம்மிடம் உள்ளது. அவ்வரிசையில் சோ.தர்மன், பா.திருச்செந்தாழை, ந.ஜெயபாஸ்கரன்,  பா.தேவேந்திர பூபதி, கோ.ரகுபதி, ஆ.இரா.வேங்கடாசலபதி, ச.தமிழ்ச்செல்வன், க.வை.பழனிசாமி,  பழ.அதியமான், ப.சரவணன், மு. குலசேகரன், பா.வெங்கடேசன் எனப் பல பெயர்களைக் காண்கிறேன். அவை உவப்பளிக்கின்றன.

ம.இலெ.தங்கப்பாவின் நூலில் ‘எம்.எல்.தங்கப்பா’ என்றிருப்பதை அவர் வாரிசுகள் ஏற்றுக்கொள்ளக் கூடாது. நூலை விற்பனை செய்ய வேண்டாம் எனவும் பெயரைச் சரியாக அச்சிட்டே வெளியிட வேண்டும் எனவும் சாகித்திய அகாதமியை அவர்கள் வலியுறுத்த வேண்டும்.

000    09-06-23