காலச்சுவடு 2022, ஜனவரி இதழில் ஸ்டாலின் ராஜாங்கம் எழுதிய ‘பொங்கல் பண்டிகையில் நீத்தார் சடங்கு’ என்னும் கட்டுரை வெளியாகியிருந்தது. அவரது ‘பண்பாட்டின் பலகணி’ என்னும் நூலிலும் அக்கட்டுரை இடம்பெற்றுள்ளது. பொங்கல் பண்டிகையை இயற்கை வழிபாட்டோடு மட்டும் தொடர்புபடுத்தக் கூடாது என்பதையும் அதில் நிலவும் நீத்தார் வழிபாட்டுச் சடங்குக் கூறுகளையும் கள ஆய்வுத் தகவல்களை முன்வைத்துப் பேசியுள்ளார். இது விரிவாக விவாதிக்க வேண்டிய விஷயம். இன்னும் பல கள ஆய்வுத் தரவுகளும் தேவை. அதையொட்டிக் கொங்குப் பகுதித் தகவல்கள் சிலவற்றையும் என் கருத்துக்கள் சிலவற்றையும் முன்வைக்க எண்ணம்.
தை முதல் நாள் தொடங்கித் ‘தமிழர் திருநாள்’ எனப்படும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ‘தமிழர் திருநாள்’ என்னும் பெயரும் கொண்டாட்ட நெறிமுறைகளும் இருபதாம் நூற்றாண்டுத் திராவிட இயக்க, தமிழ்த் தேசிய அரசியல் சார்ந்து கட்டமைக்கப்பட்டவை. இப்பண்டிகையின் பொதுக்கூறுகளை எடுத்து இந்திந்த நாள், இன்னின்ன வகைக் கொண்டாட்டம் என்று வரையறுத்த வரலாற்றை அறிய விரிவான ஆய்வு வேண்டும். அதற்கு எழுத்துச் சான்றுகள் கிடைக்கும்.
1921ஆம் ஆண்டு மறைமலையடிகள் தலைமை தாங்கச் சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று தமிழறிஞர்கள் தீர்மானித்ததாகவும் திருவள்ளுவர் ஆண்டை முடிவு செய்ததாகவும் தெரிகிறது. பின்னர் 1937ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் திரு.வி.க. உள்ளிட்ட தமிழறிஞர்கள் ‘பொங்கலே தமிழர் திருநாள்’ என்றுரைக்கப் பெரியாரும் அதை ஏற்றுக்கொண்டதாகத் தகவல் தெரிகிறது.
1949ஆம் ஆண்டு பொங்கல் வாழ்த்துத் தெரிவித்த பெரியார் ‘…மக்கள் இன்பத்துக்குப் பண்டிகை ஒரு சாதனமாக இருப்பதால் தமிழர்கள் அவர்களது குடும்பம் கூடிக்குலாவி இன்பமடைய ஏதாவது ஒரு பண்டிகை வேண்டுமே அதற்கென்ன செய்வது என்று கேட்ட காலத்தில், பொங்கல் பண்டிகையைத் தமிழர் பண்டிகையாகக் கொண்டாடலாம் என்று சுயமரியாதை இயக்கம் விடை கூறிற்று. அக்கூற்றுக்கு ஏற்ப இந்த 10 ஆண்டில் பொங்கல் பண்டிகை தமிழர்கள் இடையில் ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்து இன்று தீபாவளிப் பண்டிகைக்கு மேலாகத் தமிழ்நாட்டில் மக்கள் கொண்டாட ஆளாகிவிட்டார்கள்’ என்று சொல்கிறார்.
பொங்கலைத் தமிழர் திருநாளாகச் சுயமரியாதை இயக்கம் ஏற்றுக்கொண்டது என்கிறார். 1949க்குப் பிறகு ஒவ்வோர் ஆண்டும் பெரியார் பொங்கல் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். அவற்றையும் அறிஞர் அண்ணா உள்ளிட்டோர் தெரிவித்த வாழ்த்துக்களையும் தொகுத்துப் பார்த்தால் இன்னும் விரிவான செய்திகள் கிடைக்கும். அதே போல போகி, சூரியன் பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என்னும் வரையறைகள் யாரால் செய்யப்பட்டன என்பது தெரியவில்லை. மக்கள் வழக்கிலிருந்த கொண்டாட்ட முறைகளை வைத்துத்தான் இந்த வரையறை உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஏன் இந்தப் பண்டிகையைத் தமிழர் திருநாளாக உருவகித்தார்கள்? தீபாவளிக்கு நரகாசுரன் கதை சொல்லப்படுவது போல எல்லாப் பண்டிகைகளுக்கும் ஏதேனும் புராணக் கதை வழங்குகிறது. புராணக் கதைகள் அனைத்துமே வடமொழி சார்ந்தவை, ஆரியர்களால் உருவாக்கப்பட்டவை என்பது திராவிட இயக்கக் கருத்தியல். குறிப்பாக அத்தகைய கதை கொண்ட தீபாவளியைத் திராவிடர்களுக்கு எதிரான பண்டிகை என்று கருதினர். தீபாவளியைக் கொண்டாடக் கூடாது என்றும் அதற்கு மாற்றாகப் பொங்கலைக் கொண்டாட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
1959ஆம் ஆண்டு வாழ்த்தில் ‘தமிழர் விழா (பண்டிகை) என்பதாக நான் எதைச் சொல்ல முடியும்? ஏதாவது ஒன்று வேண்டுமே? அதை நாம் கற்பிப்பது என்பதும், எளிதில் ஆகக் கூடியது அல்லவே என்று கருதிப் பொங்கல் பண்டிகை என்பதைத் தமிழன் விழாவாகக் கொண்டாடலாம் என்று முப்பது ஆண்டு களுக்கு முன் நான் கூறினேன். மற்றும் யாராவது கூறியும் இருக்கலாம். இந்தப் பண்டிகையும் அறுவடைத் திருவிழா என்ற கருத்தில் தானேயொழிய, சங்கராந்திப் பண்டிகை, போகிப் பண்டிகை, இந்திர விழா என்று சொல்லப்படும் கருத்தில் அல்ல’ என்று பெரியார் கூறுகிறார்.
எந்தப் புராணக் கதைக்கும் உட்படாத பண்டிகையாகத் திராவிட இயக்கம் பொங்கலைக் கண்டடைந்தது. சங்கராந்தி, போகி, இந்திர விழா எனக் கூறுவதை ஏற்கக் கூடாது என்றும் கருதியுள்ளனர். ‘போகி’ அப்படியே தானிருக்கிறது. மேலும் கதை உருவாக்கும் முயற்சிகள் இப்போதும் தொடர்ந்து நடக்கத்தான் செய்கின்றன. பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டம் தமிழ்நாடு முழுவதும் ஒரேமாதிரி இல்லாததால் கதை கட்டும் முயற்சிகள் பலிக்கவில்லை போலும். அல்லது நவீன காலத்தில் புராணக் கதை உருவாக்குவது அத்தனை எளிதல்ல என்றும் சொல்லலாம். ஆனால் இப்பண்டிகையை விழுங்குவதற்கு இந்துத்துவம் விடாமுயற்சி செய்கிறது என்பதற்கு இவ்வாண்டு ஆளுநர் ரவி வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்தே சான்று.
பொங்கல் வாழ்த்து அனுப்பும் வழக்கத்தைத் தோற்றுவித்தவர் கலைக்களஞ்சியப் பதிப்பாசிரியர் பெ.தூரன். சமூக ஊடகங்கள் வராத வரைக்கும் விதவிதமான ஓவியங்கள் அச்சிட்ட பொங்கல் வாழ்த்து அட்டைகளை அனுப்புவது பெருவழக்காக இருந்தது. திராவிட இயக்கம் மட்டுமல்ல, தமிழ் உணர்வாளர்களும் சேர்ந்து கட்டமைத்த பண்டிகை பொங்கல் என்பதை இதுவும் உணர்த்தும். பொங்கல் பண்டிகையின் பன்முகத்தன்மையைக் கருத்தில் கொண்டுதான் திராவிட இயக்கம் இதை ‘அறுவடைத் திருநாள்’ என்று வரையறுத்தது. உலகம் முழுவதும் ஏதோ ஒருவகையில் அறுவடைத் திருநாள் கொண்டாடப்படுகிறது.
2010ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தென்கொரியாவுக்குச் சென்று ஒருமாதம் தங்கியிருந்தேன். நான் தங்கியிருந்தது தென்கொரியாவின் தலைநகரான சியோலிலிருந்து மூன்று மணி நேரப் பேருந்து பயணத் தூரத்தில் இருந்த கிராமம். அங்கே ‘தோஜி’ என்னும் எழுத்தாளர் உறைவிட முகாம். திடுமென்று ஒருநாள் அடுத்து வரும் நான்கைந்து நாட்களுக்குச் சுயமாகச் சமையல் செய்துகொள்ள வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். பணியாற்றுவோர் எல்லோருக்கும் விடுமுறை. முகாமில் தங்கியிருந்த முப்பது பேரில் பாதிப்பேர் கொரிய எழுத்தாளர்கள். அவர்களும் தம் ஊருக்குக் கிளம்பிவிட்டார்கள். வெளிநாட்டு எழுத்தாளர்கள் மட்டுமே இருந்தோம். சமைக்கத் தெரியாதே என்று சிலர் கவலைப்பட்டனர். எழுதுவதில் தீவிரமாக ஈடுபட்டிருந்த சிலர் ‘நேரம் வீணாகுமே’ என்று கருதினர்.
செப்டம்பர் மாதம் கொரியாவில் அறுவடைத் திருநாள் கொண்டாட்டம். மூன்றுநாள் கொண்டாட்டம் எனினும் ஒருவாரம் நாடே விடுமுறையில் இருக்கிறது. வெளியூரில் பணியாற்றுபவர்கள் சொந்த ஊரை நோக்கிச் செல்கிறார்கள். அக்கிராமத்தை ஒட்டிச் செல்லும் புறவழிச்சாலைக்குச் சென்று வேடிக்கை பார்த்தோம். கொரியாவில் இருசக்கர வாகனம் அரிது. ஒவ்வொரு தனிநபரும் கார் வைத்திருப்பார்கள். பொருளாதாரம் அதற்கு இடம் கொடுக்கிறது. கார்தான் பாதுகாப்பு என்றும் சொல்கிறார்கள். புறவழிச் சாலை முழுக்க எள் போட இடமின்றிக் கார்களின் நெருக்கம். சொந்த ஊர் நோக்கிச் செல்லும் மக்கள் குவியலால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகச் செய்திகளும் வந்தன.
அந்நாட்களில் சடங்குகள், வழிபாடுகள் எல்லாம் நடக்கின்றன. கொண்டாட்டத்தை உணவின் மூலம் வெளிப்படுத்துவதே இயல்பு. விதவிதமான பலகாரங்கள், பண்டங்கள் செய்து உண்கிறார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகைக் கொண்டாட்டம்; அதற்கேற்ற உணவு வகைகள். அங்கிருந்த பொருட்களைக் கொண்டு என்ன சமைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும்போதே அங்கு பணியாற்றுவோர், அக்கிராம மக்கள் ஆகியோரிடமிருந்து விதவிதமான உணவு வகைகள் உறைவிட முகாமுக்கு வந்து சேர்ந்துவிட்டன. ஒருநாள் கொடுத்ததே மிகுதியாக இருந்தது. குளிர்பதனப் பெட்டியில் வைத்து அடுத்து வரும் நாட்களைச் சமாளித்துவிடலாம் என்றிருந்தால் ஒவ்வொரு நாளும் உணவு வகைகள் வந்து கொண்டேயிருந்தன. உண்டு தீரவில்லை.
தமிழ்நாட்டுப் பொங்கலும் அறுவடைத் திருநாள் என்பதில் சந்தேகமில்லை. தமிழ்நாட்டுக் கொண்டாட்ட முறைகளையும் தென்கொரிய முறைகளையும் ஒப்பிட்டு எழுதலாம் என்று நினைத்திருந்தேன். இயலவில்லை. தரவுகளைச் சேர்த்திருந்த குறிப்பேட்டை இப்போது கண்டடைய முடியவில்லை. ஆனால் இரண்டுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. சூரியனுக்கு வைத்துப் படைப்பதை ‘வாசப் பொங்கல்’ என்று எங்கள் ஊரில் சொல்வோம். எல்லோரும் வாசப் பொங்கல் வைப்பதில்லை. நகரத்தில் உள்ளவர்கள் வைப்பார்கள். ஆடுமாடு இல்லாதவர்கள் வைப்பார்கள். கிராமத்தில் எல்லாச் சாதியாரும் ஆடுமாடு வைத்திருப்பார்கள். ஒரு வெள்ளாட்டுக் குட்டியாவது இல்லாத வீடு இருக்காது. ஆகவே மாட்டுப்பொங்கல்தான் எல்லோருக்குமானது. அதற்குப் பட்டிப் பொங்கல் என்று பெயர்.
எனினும் எல்லோரும் ஒரேமாதிரி பொங்கலைக் கொண்டாடுவதில்லை. ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு வகைப் பொங்கல் கொண்டாட்டம். பொங்கல் பண்டிகையில் நீத்தார் வழிபாட்டுக் கூறுகள் இருப்பதை விளக்க ஸ்டாலின் ராஜாங்கம் சில சான்றுகளைத் தேடி எடுத்துக் காட்டுகின்றார். நாமக்கல், கரூர் மாவட்டங்களில் நேரடிச் சான்றுகளே இருக்கின்றன. இரண்டு சாதியினர் நேரடியாக முன்னோர் வழிபாடாகவே பொங்கலைக் கொண்டாடுகின்றனர். அவற்றை விரிவாக எழுதுகிறேன்.
—– 17-01-25
புதிய தகவல்கள் நிறைய பெற்றேன். தென்கொரிய ,தமிழக பொங்கலை ஒப்பிட்டு விரைவில் எழுதுங்கள் ஐயா.
போகி என்று சொல்லப்படும் நாளை இன்றைக்கும் காப்புக்கட்டு என்று சொல்வதே கிராமப்புறங்களில் பெருவழக்காக இருக்கிறது. மறுநாள் பெரும்பொங்கல்
தான். சூரியன் பொங்கல் என்றெல்லாம் பின்னாட்களில் தான் கேள்விப்பட்டோம்.
கரூர் மாவட்டத்தில் இன்றும் எனது கிராமத்தில், முன்னோர்களை தை முதல் நாளில் வழிபடும் வழக்கம் பின்பற்றப்படுகிறது.
அன்றைய தினத்தில் பொங்கல் வைத்து, அவர்களுக்கு பிடித்த வண்ணத்தில் ஆடைகளை வாங்கி, படையிலிட்டு, காகத்திற்கு அன்னம் படைப்பார்கள். காகத்திற்கு இட்ட அன்னத்தை உண்டு விட்டால் அந்த வருடம் மிகச் சிறப்பாக, அமையும் என்று நம்புகின்றனர்.
எங்கள் கிராமத்தில் முன்னோர்களை வழிபடும் விதமாகத் (தைப்)பொங்கல்( அல்லது) பெரும்பொங்கல் முதல் நாள்.
வேட்டி சட்டை (ஆண்கள்)
புடவை (பெண்கள்)
வைத்து வழிபாடு செய்வது வழக்கம்.
பொங்கலைக் குறித்த சிறந்த பதிவு. தருமபுரி மாவட்டத்தில் ராணிமூக்கனூர் ஓசல்லி கிராமத்தில் ஊரே கூடி அம்மன் கோவிலுக்கு அருகாமையில் பொங்கல் வைத்து மேளதாளத்துடன் ஊர்வலமாகச் செல்கின்றனர். ஒவ்வொரு சாதியினரும் வெவ்வேறு விதமாகக் கொண்டாடுகின்றனர். நீங்கள் விரிவாக எழுதுங்கள்.